ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த
ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம்
நான்காம் ப்ரகரணம்
219. (1) பரபரனாய்நின்ற வளவேழ்வைப்பாமவையுள் உம்பர் வானவரதிபதி, மயர்வறமன்னி மனம் வைக்கத் திருத்தி (2) மறக்குமென்று நல்கிவிடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன் என்சொல்லி மறப்பனோ என்னும்படி தத்த்வஜ்ஞரானவர் (3) சுடரடியெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி (4) வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷ குணபரித்யாக ஸமர்ப்பணக்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஶித்து, (5) எளிதாக அவதரித்துப் பிழைகளை ஸஹித்துப் புரையறக் கலந்து அல்பஸந்துஷ்டனாய் அம்ருதமே ஔஷதமாக்கி, (6) நீர்புரையத் தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்திகணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு, (7) எளிமையும் இனிமையுமுண்டு, தொழுதால் அரும் பயனாயதரும், உத்யோகத்தே வினைகளும் மாளும், அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வுகொண்டு நலம் செய்வதென்று தாம் மயர்வறமதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதற்பத்தில்.
இதில் முதல் பத்தாலே ஸர்வஸ்மாத்பரனான ஸர்வேஶ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அஜ்ஞாநத்தை வாஸநையோடே போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுத்து இன்னமும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடுமென்று இவர்பக்கல் தனக்குண்டான ஸ்நேஹத்தாலே விடாதே இவருடைய ஹ்ருதயகமலத்திலே ஸுப்ரதிஷ்டிதனாய்க் கொண்டு நிரந்தரவாஸம் பண்ண இவரும் அத்தாலே ஸம்ஶயவிபர்யயவிஸ்ம்ருதி ரஹிதமான தத்த்வஜ்ஞாநத்தை உடையராய் அவருடைய குணங்களைத் தம்முடைய திருவுள்ளத்தோடே அநுபவித்து இவ்விஷயம் தனியே அநுபவிக்க வொண்ணாமையாலே ஸம்ஸாரிகளையும் பார்த்து த்யாஜ்யமான ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷங்களையும் அதினுடைய த்யாகப்ரகாரத்தையும் உபாதேயமான பகவத்விஷயம் நிரதிஶய போக்யமாயd இருக்கும் என்னுமத்தையும் அவனுடைய பஜநீயத்வத்தையும் பஜநத்துக்கு ஆலம்பநமான மந்த்ரத்தையும் உபதேஶித்து அந்த பஜநீயனுடைய ஸௌலப்யம் அபராதஸஹத்வம் ஶீலவத்தை ஸ்வாராததை ஆஶ்ரயணரஸ்யதை ஆர்ஜவம் ஸாத்ம்யபோகப்ரதத்வம் பரபக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டுகிற ஸாம்யம் இப்படிப்பட்ட குணங்களையும் பஜநத்தினுடைய ஸுகரத்வ ரஸ்யதைகளையும் பஜிக்கவே ஸர்வபலங்களும் ஸித்திக்கும் என்னுமிடத்தையும் பஜநோபக்ரமத்திலே பஜநவிரோதியடைய நஶிக்கும் என்னுமிடத்தையும் அறிவித்து இப்படியான பின்பு ஸ்ரீகீதையில் அவன் அருளிச் செய்த பக்திமார்கத்திலே நின்று தேவதாந்தரங்கள் பக்கல் பரத்வஶங்காநிவ்ருத்தி பூர்வகமாக அவன் விஷயமான ஜ்ஞாநத்தைக் கொண்டு அவன் பக்கலிலே அநந்யப்ரயோஜந பக்தியைப் பண்ணுங்கோள் என்று தமக்கு ஸர்வேஶ்வரன் மயர்வறமதிநலம் அருளினாப்போலே தாம் ஸம்ஸாரிகளுக்கு அஜ்ஞாந நிவ்ருத்திபூர்வகமாக ஜ்ஞாநபக்திகளை உபதேஶித்து அவனுடைய பஜநத்திலே மூட்டுகிறார் என்கிறார்.
(1) (பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள் உம்பர்வானவரதிபதி) “முழுதுண்ட பரபரன்” (திருவாய்மொழி.1-1-8) “ஆய்நின்ற பரபரன்” (திருவாய்மொழி.1-1-11) “வளவேழுலகின் முதலாய வானோரிறை” (திருவாய்மொழி.1-5-1) “வைப்பாம் மருந்தாம்” (திருவாய்மொழி.1-7-2) “நலத்தால் உயர்ந்துயர்ந்து அப்பாலவன்” (திருவாய்மொழி.1-7-2) “அவையுள் தனிமுதல்” (திருவாய்மொழி.1-9-1) “உம்பர் வானவர் ஆதியஞ்சோதி” (திருவாய்மொழி.1-10-9) ”அயர்வறும் அமரர்களதிபதி” (திருவாய்மொழி.1-1-1) என்று ஸகலஜகத் ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹார கர்த்ருத்வத்தாலும் உபயவிபூதி யோகத்தாலும் உபயவிபூதி நாயகத்வத்தாலும் ப்ராப்யப்ராபகத்வத்தாலும் அபரிச்சேத்யாநந்த யுக்ததையாலும் ஸர்வஶரீரித்வத்தாலும் ஸர்வஶப்தவாச்யத்வத்தாலும் நித்யஸூரி நிர்வாஹகத்வத்தாலும் பரத்வப்ரதிபாதகமான “உளன் சுடர்மிகு சுருதி” (திருவாய்மொழி.1-1-7) என்கிறபடியே வேதாந்தவேத்யத்வத்தாலும் “திருவுடையடிகள்” (திருவாய்மொழி.6-8-11) என்று ஶ்ரிய:பதித்வத்தாலும் “என் செய்யதாமரைக்கண்பெருமானார்” (திருவாய்மொழி.1-4-2) என்று புண்டரீகாக்ஷத்வத்தாலும் “ஓடும்புள்ளேறி” (திருவாய்மொழி.1-8-1) என்று கருட வாஹநத்வத்தாலும் அத ஏவ ஸர்வஸ்மாத்பரனான ஸர்வேஶ்வரன் (மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி) “மயர்வற மதிநலம் அருளினன்” (திருவாய்மொழி.1-1-1) “மயர்வற என் மனத்தே மன்னினான்” (திருவாய்மொழி.1-7-4) என்று ஜ்ஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாநமான அஜ்ஞாநத்தை இவர்க்கு வாஸநையோடே போக்கி நிர்ஹேதுக க்ருபையாலே பக்திரூபாபந்நஜ்ஞாநத்தைக் கொடுத்து இவர் திருவுள்ளத்திலே புகுந்து “சார்ந்த இருவல்வினைகளும் சரித்து மாயப்பற்றறுத்துத் தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி” (திருவாய்மொழி.1-5-10) என்கிறபடியே இவருடைய புண்யபாபரூப கர்மத்தை ஸவாஸநமாகப் போக்கி “அருவினையேன்” (திருவாய்மொழி.1-5-1) என்று அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகன்றவிடத்திலும் தன் ஶீலவத்தையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு இவர் தாமே “மாயோன்” (திருவாய்மொழி.1-5-8) என்று தன்பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாகத் திருத்துவாரைப்போலே திருத்தி,
(2) (மறக்குமென்று நல்கி விடாதே மன்ன) “மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு” (திருவாய்மொழி.1-10-10) “நல்கி என்னை விடான்” (திருவாய்மொழி.1-10-8) “மறப்பற என்னுள்ளே மன்னினான்” (திருவாய்மொழி.1-10-10) என்று சொல்லுகிறபடியே இவரின்னம் நம்மை விஸ்மரிக்கக்கூடுமென்று நிரதிஶய வ்யாமோஹத்தைப் பண்ணி இவரை விடாதே இருட்டறையிலே புகுவார் சிலர் விளக்கேற்றிக் கொண்டு புகுருமாபோலே அழகிய திருக்கண்களோடே இவர் திருவுள்ளத்தே புக்கு நிரந்தர வாஸம் பண்ண (அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்வஜ்ஞரானவர்) “பெருநிலங்கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன்” (திருவாய்மொழி.1-3-10) “மாயப்பிறவி மயர்வறுதேன்” (திருவாய்மொழி.1-7-3) “எம்பிரானை என்சொல்லி மறப்பனோ” (திருவாய்மொழி.1-10-9) என்று வர்ஷுகவலாஹகம்போலே ஶ்யாமமான திருமேனியை உடையவனுடைய திருவுலகளந்தg அருளின திருவடிகளை ஒருக்காலும் விஸ்மரியேன், நிரதிஶய போக்யனான அவனை ஸதா அநுபவித்து ஆஶ்சர்யமான ஜந்மமடியாக வருகிற அஜ்ஞாநத்தைப் போக்கப் பெற்றேன்; எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி ஸம்ஶய விபர்யய விஸ்ம்ருதிகளில்லாதபடி தத்வஜ்ஞாநத்தை உடையரான இவர்,
(3) (சுடரடி எம்பிரானை விடாது கண்டாயே நீயும் நானும் என்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி) “துயரறுசுடரடி தொழுதெழு என் மனனே” (திருவாய்மொழி.1-1-1) “எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே” (திருவாய்மொழி.1-10-3) “மலராள் மணவாளனைத் துஞ்சும்போதும் விடாது தொடர் கண்டாய்” (திருவாய்மொழி.1-10-4) “கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று” (திருவாய்மொழி.1-10-5) “நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான்” (திருவாய்மொழி .1-10-6) என்று நிரவதிகதேஜோரூபமான அவன் திருவடிகளிலே நித்யகைங்கர்யம் பண்ணி உஜ்ஜீவிக்கப்பார்; எனக்கு பவ்யமான நெஞ்சே, நமக்கு உபகாரகனான அவனைத் தொழப்பாராய், ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரனை நான் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகலும்போதும் நீ விடாதே கிடாய், அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடி கண்டாயே, நீயும் நானும் அயோக்யத அநுஸந்தாநம் பண்ணி அகலாதிருக்கப்பெறில் அநாதிகாலார்ஜிதமான கர்மம் இதர விஷயப்ராவண்யம் ப்ரயோஜநாந்தரஶ்ரத்தை உபாயாந்தரஸங்கம் அயோக்யதாநுஸந்தாநம் தொடக்கமான விரோதிகள் நம்மைக் கிட்டாதபடி பண்ணுமென்று திருவுள்ளத்தைப் பார்த்து உபதேஶித்துத் தம்முடைய திருவுள்ளமும் தாமும் கூட அவனுடைய குணங்களை அநுபவித்து இப்படித் திருவுள்ளத்தோடேகூட அநுபவித்த அநுபவம் தனியநுபவிக்க வொண்ணாமையாலும் “ஏக ஸ்வாது ந புஞ்ஜீத” (பார.உத்.ப.32-53) என்று இவர் தனியநுபவிக்க வல்லரல்லாமையாலும் ஸம்பந்தம் ஸர்வஸாதாரணமாகையாலும் இவர் பராநர்த்தம் பொறாதபடியான பரம க்ருபாவான்களாகையாலும் இவ்வநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாக வேணுமென்று ஸம்ஸாரிகளையும் பார்த்து
(4) (வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷகுணபரித்யாக ஸமர்ப்பணக்ரமத்தை ஸாலம்பநமந்தரமாக உபதேஶித்து) வீடுமின் முற்றத்திலே “வீடுமின் முற்றவும்” (திருவாய்மொழி.1-2-1) என்று த்யாஜ்யஸ்வரூபத்தையும் “மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்” (திருவாய்..1-2-2) என்று அதினுடைய அல்பாஸ்த்திரத்வாதி தோஷத்தையும் “நீர் நுமதென்றிவை வேர்முதல் மாய்த்து” (திருவாய்மொழி.1-2-3) என்று அவற்றினுடைய பரித்யாகக்ரமத்தையும் “வீடுடையான்” (திருவாய்மொழி.1-2-2) என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும் “எல்லையிலந்நலம்” (திருவாய்மொழி.1-2-5) என்று அவ்வஸ்துவினுடைய குணத்தையும் “வீடுசெய்ம்மின்” (திருவாய்மொழி.1-2-1) என்றும் “இறைசேர்மின்” (திருவாய்மொழி.1-2-3) என்றும் “இறை பற்று” (திருவாய்மொழி.1-2-5) என்றும் “திண்கழல் சேரே” (திருவாய்மொழி.1-2-10) என்றும் அவ்விஷயத்திலே ஆத்மாவை ஸமர்ப்பிக்கும் க்ரமத்தையும் “வண்புகழ் நாரணன்” (திருவாய்மொழி.1-2-10) என்று அந்த ஸமர்ப்பணத்துக்கு ஆலம்பநமான திருமந்த்ரத்தோடே உபதேஶித்து,
(5) (எளிதாக வந்தவதரித்து) “பலபிறப்பாய் எளிவருமியல்வினன்” (திருவாய்மொழி.1-3-2) என்று அவன் அதீந்த்ரியன் என்று இறாயாதபடி ராமக்ருஷ்ணாதிரூபேண வந்தவதரித்து ஆஶ்ரயிப்பார்க்கு ஸுலபனாய் அப்படியவதரித்து ஸுலபனானவன் ஆஶ்ரிதருடைய அபராதங்களைக் கண்டு கைவிடுமோ என்னில் அங்ஙனன்று (பிழைகளை ஸஹித்து) “என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” (திருவாய்மொழி.1-4-7) என்று அபராத ஸஹனாயிருக்கும். (புரையறக் கலந்து) அவன் அபராதஸஹனானாலும் “அருவினையேன (திருவாய்மொழி.1-5-1) என்று இவன்தான் அயோக்யாநுஸந்தானம் பண்ணியகலிலும் “திசைகளெல்லாம் திருவடியால் தாயோன் தானோர் ஒருவனே” (திருவாய்மொழி.1-5-3) என்றும் “நெய்யூண் மருந்தோ மாயோனே” (திருவாய்மொழி.1-5-8) என்றும் தன் செல்லாமையையும் இவரோடே புரையறக் கலக்கிற ஶீலத்தையும் காட்டி இவரைச் சேர்த்துக்கொள்ளுந்தனை ஶீலவானாய் இப்படி சேர்த்துக் கொண்டால் ஆஶ்ரயணமரிதாயிருக்குமோ என்னில் (அல்பஸந்துஷ்டனாய்) அவன் இவனிட்டது கொண்டு வயிறு வளர்க்க வேண்டாதபடி அவாப்தஸமஸ்தகாமனாய் ஶ்ரிய:பதியாயிருக்கையாலே “புரிவதுவும் புகை பூவே” (திருவாய்மொழி.1-6-1) என்று த்ரவ்யநியதி அதிகாரிநியதியில்லாதபடி ஆஶ்ரயணம் ஸுகரமாம்படி அல்பஸந்துஷ்டனாய் அவ்வாஶ்ரயணந்தான் தேவையாயிருக்குமோ என்னில் (அம்ருதமே ஔஷதமாக்கி) “தூயவமுதைப் பருகிப் பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே” (திருவாய்மொழி. 1-7-3) என்று நிரதிஶயபோக்யனான அவனுடைய ஆஶ்ரயணமாகையாலே ஸம்ஸாரவ்யாதி பேஷஜமான அவ்வாஶ்ரயணம் தானே இனிதாம்படி பண்ணி அப்படி ஆஶ்ரயிக்குமிடத்தில் இவர்களைத் தன் நினைவுக்கீடாக நியமித்துப் பரிமாறுவித்துக் கொள்ளுமோ என்னில்
(6) (நீர்புரையத் தன்னை நியமித்து) “நீடு நின்றவை ஆடுமம்மானே” (திருவாய்மொழி. 1-8-1) என்றும் “அம்மானாய்ப் பின்னும் எம்மாண்புமானான்” (திருவாய்மொழி.1-8-2) என்றும் “நீர்புரைவண்ணன்” (திருவாய்மொழி.1-8-11) என்றும் சொல்லுகிறபடியே மேட்டிலே நீரை விரகாலே ஏத்துவாரைப் போலே இவர்களுடைய செவ்வைக்கேடு செவ்வையாம்படி தன்னைச் செவ்வியனாக நியமித்து இப்படிப் பரிமாறுமிடத்தில் குளப்படியிலே கடலை மடுத்தாப்போலே நலக்கேடுகெடும்படி பரிமாறுமோவென்னில் (போகத்தை ஸாத்மிப்பித்து) “சூழலுளானே” (திருவாய்மொழி.1-9-1) என்று தொடங்கி “உச்சியுளானே” (திருவாய்மொழி.1-9-10) என்று ஸாத்மிக்க ஸாத்மிக்கத் தன்னை அநுபவிப்பித்து (பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு) இப்படி அநுபவிக்குமிடத்தில் “கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்” (திருவாய்மொழி.1-10-2) என்று பரபக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகம் கொடுக்கிற அவனுடைய ஆஶ்ரயணத்துக்கு,
(7) (எளிமையும் இனிமையுமுண்டு) “பத்துடையடியவர்க்கு எளியவன்” (திருவாய்..1-3-1)” அமுதிலுமாற்ற இனியன்” (திருவாய்மொழி.1-6-6) என்று ஆஶ்ரயணந்தான் எளிதுமாய் இனிதுமாய் இருக்கும்; இத்தால் அபேக்ஷித்த பலங்கள் ஸித்திக்குமோ என்னில் (தொழுதால் அரும்பயனாய தரும்) “அவனைத் தொழுதால் வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றியாக்கம் தரும்” (திருவாய்மொழி.1-6-8) “தருமவரும் பயனாய” (திருவாய்..1-6-9) என்று அவனை பஜித்தால் ப்ராப்திப்ரதிபந்தகங்களையும் நிஶ்ஶேஷமாகப் போக்கி அழிவில்லாத பெறுதற்கரிய ப்ரயோஜநங்களையும் தரும். பஜித்தாலன்றோ தருவது, பஜந விரோதி குவாலாகவுண்டே” என்னில் (உத்யோகத்தே வினைகளும் மாளும்) “நாளுநின்றடு நமபழமை அங்கொடு வினையுடனே மாளும்” (திருவாய்மொழி.1-3-8) என்று நாள்தோறும் நின்று இவ்வாத்மாவை முடிக்கிற அநாதியான அதிக்ரூரமான கர்மங்கள் பஜநோபக்ரமத்திலே நஶிக்கும்; ஆனால் பஜநோபாயமேதென்னில் (அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசைமலமற உணர்வு கொண்டு நலம் செய்வதென்று) பிணக்கறவித்யாதி. “அம்பகவன் வணக்குடைத் தவநெறி வழிநின்று” (திருவாய்மொழி.1-3-5) என்று பாஹ்யமான ஷட் ஸமயங்களுக்கும் வைதிகஸமயத்துக்கும் தன்னில்தானுண்டான பிணக்கறும்படி வேத மார்க்கத்தை யதா நிரூபணம் பண்ணியருளிச்செய்தவனுமாய் நிரவதிகவாத்ஸல்யத்தை உடையனாய் ஜ்ஞாநாதிகுணபரிபூர்ணனான க்ருஷ்ணன் திருத்தேர்த்தட்டிலே அர்ஜுந வ்யாஜத்தாலே ஸ்ரீகீதாமுகத்ததாலே “பக்த்யா து அநந்யயா ஶக்ய:” (கீதை.11-54) என்றும் “மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு” (கீதை.9-34) என்றும் அருளிச்செய்த பக்திமார்க்கத்திலே நின்று “நும்மிருபசையறுத்து” (திருவாய்.1-3-7) என்றும் “மனனகமலமறக் கழுவி” (திருவாய்.1-3-8) என்றும் தேவதாந்தரங்களில் பண்ணுகிற பரத்வஶங்கையற்று இவனோ அவர்களோ ஆஶ்ரயணீயரென்று ஸம்ஶயாக்ராந்த ராகாதே வாஸநையோடே விட்டு அவனுடை உணர்வு கொண்டு தத்விஷயஜ்ஞாநத்தைக் கொண்டு “நன்றென நலம் செய்வது” (திருவாய்மொழி.1-3-7) என்று அநந்யப்ரயோஜந பக்தியைப் பண்ணுங்கோளென்று. (தாம் மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதல் பத்தில்) ஸர்வேஶ்வரன் தமக்கு மயர்வற மதிநலமருளினாப் போலே தாம் ஸம்ஸாரிகளுக்குத் தம்முடைய க்ருபையாலே தத்வஹிதபுருஷார்த்த விஷயமாக அஜ்ஞாநத்தைப் போக்கி ஜ்ஞாநபக்திகளை உபதேஶித்து பகவத் பஜநத்திலே மூட்டுகிறார் என்கிறார்.
220. (1) சோராத மூவா வேர்முதலாய் உலகம் படைத்தவனென்கிற சிதசித்த்ரய த்ரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க உள்ளம் தேறித் தூமனம் மருளிலென்னும் ஜ்ஞாந பலமான ஒளிக்கொண்ட மோக்ஷம் தேடிவாட, (2) உலராமலாவிசேர்ந்து சிக்கெனப் புகுந்து ஸம்பந்திகளும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபயாநுகுணமாக்கினவர், (3) ஆஶ்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபலப்ரதத்வ காரணத்வ ஶேஷஶாயித்வ ஶ்ரிய:பதித்வ ஸௌலப்யாதி களைத் திண்ணன் அணைவதென்று வெளியிட்டு, (4) கள்வாதீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும் காட்டி, (5) புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷஸாதந து:க்காநந்தரஸம் முன்னாக விதிக்கிற அந்தர்கத குணோபாஸநத்தை, (6) மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக் கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல் செய்யும் க்ஷேத்ரவாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷிண கதிசிந்தநாத்யங்கயுக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்.
இரண்டாம் பத்தில் ஸர்வகாரணபூதனான ஸர்வேஶ்வரன் கீழிற்பத்திலே இவ்வாழ்வார்க்கு அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ணி அவனாலே தத்த ஜ்ஞாநரான இவர் அந்த ஜ்ஞாநத்துக்குப் பலமான மோக்ஷத்தை அப்போதே பெறவேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே அவஸந்நராக இவருடைய அவஸாதமெல்லாம் தீரும்படி அவன் வந்து ஸம்ஶ்லேஷித்து அந்த ஸம்ஶ்லேஷத்தாலே வந்த ப்ரீதியை உடையனாய் அந்த ப்ரீதியை இவரொருவர் அளவில் பர்யவஸியாதே இவரோடு ஸம்பந்தஸம்பந்தமுடையாரளவும் வெள்ளமிட்டு அந்த ப்ரீதியாலே பரமபுருஷார்த்த லக்ஷணமான மோக்ஷத்தை இவர்க்கு அவன் கொடுக்கத்தேட அந்த மோக்ஷத்தை அவனுடைய ஶேஷித்வத்துக்கும் தம்முடைய ஶேஷத்வத்துக்கும் அநுகுணமாம்படி நிஷ்கர்ஷித்த இவர் ஆஶ்ரயணீயனான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனவான லக்ஷணங்களையும் வெளியிட்டு ஸம்ஸாரிகள் து:க்கநிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷஸுகப்ராப்திக்கு ஸாதநமாக விதிக்கப்பட்ட ஸ்வரூபாந்தர்கதமான குணோபாஸநத்தை நிஷித்தாநுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக க்ஷேத்ரவாஸாத்யங்கங்களோடே கூட்டுகிறார் என்கிறார்.
(1) (சோராத மூவா வேர்முதலாய் உலகம் படைத்தவன்” என்கிற சிதசித்ரய த்ரிவித காரணமானவன்) “சோராத எப்பொருட்கும் ஆதியாஞ்சோதி” (திருவாய்மொழி.2-1-11) “மூவாத் தனிமுதலாய்” (திருவாய்..2-8-5) “எப்பொருட்கும் வேர்முதலாய் வித்தாய்” (திருவாய். 2-8-10) “பொருளென்றிவ்வுலகம் படைத்தவன்” (திருவாய்மொழி.2-10-11) என்று பத்த முக்த நித்யாத்மகமான சித்ரயத்துக்கும் ஶுத்தஸத்வ மிஶ்ரஸத்வ ஸத்வஶூந்யமென்கிற அசித்ரயத்துக்கும் நித்யவிபூதியிலே அப்ராக்ருத த்ரவ்யவிஶிஷ்டனாய்க் கொண்டு உபாதாநமாயும் இச்சாவிஶிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும் விநியோக விஶிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும் லீலாவிபூதியில் ஸூக்ஷ்மசிதசித்விஶிஷ்டவேஷத்தாலே உபாதாநமாயும் ஸங்கல்பவிஶிஷ்டனாய்க் கொண்டு நிமித்தமாயும் ஜ்ஞாநஶக்த்யாதி விஶிஷ்டனாய்க் கொண்டு ஸஹகாரியாயும் போருகையாலே ஸர்வத்துக்கும் நிமித்த உபாதாநஸஹகாரிகளான த்ரிவிதகாரணமும் தானேயான ஸர்வேஶ்வரன் (அறியாதன வறிவிக்க உள்ளம் தேறி) “அறியாதன அறிவித்த அத்தா” (திருவாய்மொழி.2-3-2) என்று இவர்க்கு அஜ்ஞாதமான தத்த்வஹிதபுருஷார்த்தங்களை விஶதமாக அறிவிக்க, “அடியை அடைந்துள்ளம் தேறி” (திருவாய்மொழி.2-6-8) அத்தாலே இவரும் அவனைக் கிட்டி நெஞ்சிலே தெளிவை உடையராய் (தூமனம் மருளிலென்னும் ஞானபலமான) “தூமனத்தனனாய்” (திருவாய்மொழி. 2-7-8) “மருளில் வண்குருகூர் வண்சடகோபன்” (திருவாய்மொழி.2-10-11) என்று மோக்ஷைகஹேதுவாய் பரிஶுத்தமான அந்த:கரணத்தை உடையராய் அவனுடைய கல்யாணகுண விஷயமான அஜ்ஞாந கந்தமில்லாதபடி கீழ்ப்பத்தில் பிறந்த தம்முடைய ஜ்ஞானத்துக்குப் பலமான (ஒளிக்கொண்ட மோக்ஷம் தேடி வாட) “களிப்பும் கவர்வுமித்யாதி ஒளிக்கொண்ட சோதியமாய் அடியார்கள் குழாங்களையுடன் கூடுவதென்று கொலோ” (திருவாய்மொழி .2-3-10) என்று ப்ராக்ருதபதார்த்தங்களினுடைய லாபாலாபங்களினால் வருகிற க்லேஶஹர்ஷங்களுமற்று ஷட்பாவவிகாரரஹிதமாய் நிரவதிகதேஜோரூபமாய் அப்ராக்ருதமுமாயிருக்கிற விக்ரஹத்தையுடையோமுமாய் அவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்றிருக்கிற நித்யஸூரிகளுடைய திரளோடே கூடப்பெறுவதெப்போதோ என்று அந்த மோக்ஷத்தை ஆசைப்பட்டவர்க்கு அப்போதே கிடையாமையாலே “நாடி நாடி வாடும்” (திருவாய்மொழி. 2-4-1) என்று தேடிப் பெறாமையாலே ஆஶ்ரயத்தை இழந்த தளிர்போலே இவர் வாட,
(2) (உலராமல் ஆவிசேர்ந்து) “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (திருவாய்மொழி. 2-4-7) என்கிற இவர் தாபமாறும்படி “அந்தாமத்தன்பு செய்து என்னாவிசேரம்மான்” (திருவாய்மொழி.2-5-1) என்கிறபடியே பரமபதத்திலே பண்ணும் வ்யாமோஹத்தை இவர்பக்கலிலே பண்ணி கமர் பிளந்த தறையிலே நீரைப் பாய்ச்சுவாரைப் போலே இவருடைய தாபமாறும்படி இவரோடே நிரதிசய ஸம்ஶ்லேஷத்தைப் பண்ணி (சிக்கெனப் புகுந்து) “சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கெனப் புகுந்தான்” (திருவாய்மொழி.2-6-2) என்கிறபடியே அத்யல்பமாயிருப்பதொரு பதார்த்தமும் தன்பக்கலிலே நின்றும் பிரிகதிர்ப்பட்டு நோவுபடாதபடி ஸர்வலோகங்களையும் தன்னுடைய ஸங்கல்பஸஹஸ்ரைகதேஶத்திலே வைத்து இனி ஒருக்காலும் பேராதபடிபுகுந்து (ஸம்பந்திகளையும் சேர்தல் மாற்றினரென்ன வாழ்வித்து) “எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியாவெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்” (திருவாய்..2-7-1) என்று இவருடைய ஸம்பந்தஸம்பந்திகளையும் ஸம்ஸாராந் முக்தராம்படி பண்ணி “எமரேழ் எழுபிறப்பும் மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” (திருவாய்மொழி.2-7-1) என்று என்னுடைய ஸம்பந்தமே ஹேதுவாக என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளும் கேசவன் தமராம்படி “நாராயணனாலே” (திருவாய்மொழி.2-7-1) என்கிற மாசதிரைப் பெற்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகாநின்றது என்று இவர் தாமே ஆஶ்சர்யப்படும்படி இவரை வாழ்வித்து,
(உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மாவீட்டை உபயாநுகுணமாக்கினவர்) “நீந்தும் துயரில்லா வீடு” (திருவாய்மொழி.2-8-2) “கெடலில் வீடு” (திருவாய்மொழி.2-9-11) “எம்மாவீடு” (திருவாய்மொழி.2-9-1) என்று து:க்க கந்த ரஹிதமாய் அநர்த்தகந்தமில்லாததாய் எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்தை இவர்க்கு உபகரிக்கத் தேட எனக்கென்று உபகரிக்கில் மோக்ஷம் அஹங்கார கர்ப்பமாகையாலே ஐஶ்வர்யகைவல்யங்களோபாதி ஸ்வரூபவிருத்தமாகையாலே அது த்யாஜ்யம்; எனக்கு மோக்ஷம் தரப்பார்த்ததாகில் “நின் செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை அம்மா அடியேன் வேண்டுவதீதே” (திருவாய்மொழி. 2-9-1) என்று அகவாய் சிவந்து புறவாய் கருத்து பரமபூஜ்யமாய் பரமபோக்யமாய் ஶேஷியானவனுடைய திருவடிகளை ஶேஷபூதனானவன் தலையிலே கொக்குவாயும் படுகண்ணியும்போலே சடக்கெனச் சேர்க்கவேணும்; ஶேஷியான உன்பக்கல் ஶேஷபூதனான நான் அபேக்ஷித்துப் பெறுவதுமிது; “தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே” (திருவாய்..2-9-4) என்று உபயஸ்வரூபத்துக்கநுகுணமாக புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்த இவர்,
(3) (ஆஶ்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) ஆஶ்ரயணீயனான வனுக்கு முதற்பத்தில் சொல்லப்பட்ட ஸர்வஸ்மாத் பரத்வத்தை நிலைபெறுத்துவனவான (ஸகலபலப்ரதத்வ காரணத்வ ஶேஷஶாயித்வ ஶ்ரிய:பதித்வ ஸௌலப்யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளியிட்டு) ஸகல பலப்ரதத்வம் முதலான பரத்வலக்ஷணங்களை “வீடுமுதல் முழுதுமாய்”.(2-2-1) மோக்ஷ ப்ரப்ருத்யஶேஷபுருஷார்த்த ப்ரதனாகையாலே ஸகலபலப்ரதத்வம் “தேவும் எப்பொருளும்” (திருவாய்மொழி. 2-2-4) “கருத்தில் வருத்தித்த மாயப்பிரான்” (திருவாய்.2-2-8) “ஆக்கினான் தெய்வ உலகுகளே” (திருவாய்மொழி.2-2-9) என்று ஸர்வகாரணத்வம், “ஆழியம்பள்ளியாரே” (திருவாய்மொழி.2-2-6) என்று லக்ஷணையாலே அநந்தஶாயித்வம் “பூமகள்தன்னை வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து” (திருவாய்மொழி. 2-2-3) என்று ஶ்ரிய:பதித்வம், “கண்ணன்கண்” (திருவாய்மொழி.2-2-1) “கோபால கோளரி” (திருவாய்மொழி. 2-2-2) என்கிற அவதார ஸௌலப்யம் இப்படி இவ்வர்த்தங்களை திண்ணன் வீட்டிலும், “அணைவதரவணைமேல்” என்று ஶேஷஶாயித்வம், “பூம்பாவையாகம் புணர்வது” (திருவாய்மொழி.2-8-1) என்று ஶ்ரிய:பதித்வம், “இருவரவர் முதலும் தானே” (திருவாய்மொழி.2-8-1) என்று காரணத்வம், “இணைவனாம் எப்பொருட்கும்” (திருவாய்மொழி.2-8-1) என்று அவதாரப்ரயுக்தமான ஸௌலப்யம், “வீடுமுதலாம்” (திருவாய்மொழி.2-8-1) என்று ஸகலபலப்ரதத்வம் என்கிற இவற்றை அணைவது அரவணையிலும் வெளியிட்டு,
(4) (கள்வா தீர்த்தன் என்று வசந ப்ரத்யக்ஷங்களும் காட்டி) “கள்வா” (திருவாய்மொழி. 2-2-10) என்கிற பாட்டாலே, அவதரித்து உன்னுடைய பரத்வம் தெரியாதபடி நின்றாயேயாகிலும் எங்களுக்குக் காரணபூதனான ஶேஷி நீயே என்று தேவதாந்தரங்களில் தலைவனான ப்ரஹ்மாதிகளே தங்களுக்குக் காக்ஷிகொடுக்கைக்கு பெரியதிருவடியை மேல்கொண்டு புறப்பட்டால் அவனுடைய திருவடிகளிலே விழுந்து கூப்பிடாநிற்பர்கள் என்று இவ்வர்த்தத்துக்கு வசநத்தையும் “தீர்த்தன் உலகளந்த” (திருவாய்மொழி.2-8-6) என்கிறபாட்டிலே ஒரு அஸ்த்ரலாபத்துக்கு ஒரு தேவதையை உபாஸிக்கவேணுமென்று அர்ஜுநன் சொல்ல அப்பூவை என் காலிலே பொகடென்று க்ருஷ்ணன் அருளிச்செய்ய “பார்த்தோ விஜேதா மதுஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்பித சித்ரபுஷ்பம் ததேவ கங்காதர மௌலிமத்யே ததர்ஶ வீர: க்ருத நிஶ்சயார்த்த:” என்கிறபடியே தீர்த்தபூதனான ஸர்வேஶ்வரனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளிலே அப்பூவைப் பணிமாறி அவற்றோடு ஸஜாதீயமானவையன்றிக்கே அவைதன்னையே பாடே பக்கலிலேயன்றிக்கே ருத்ரன் தலைமேலே ஆப்தவாக்யத்தால் அன்றிக்கே தானே ப்ரத்யக்ஷித்துப் பேரளவுடை யனான அர்ஜுநன் நிர்ணயித்த பரத்வம் மந்தமதிகளாலே இன்று ஆராயும்படி இருந்ததோ என்கிற ப்ரத்யக்ஷத்தையும் காட்டி,
(5) (புலனைந்தென்று ஸம்ஸாரமோக்ஷஸாதந து:க்காநந்தரஸம் முன்னாக விதிக்கிற அந்தர்குணோபாஸநத்தை) “புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்” (திருவாய்.2-8-4) என்று பரிச்சிந்நவஸ்து க்ராஹகமான இந்த்ரியவஶ்யராகை தவிர்ந்து நன்மைக்கு முடிவில்லாதேயிருக்கிற நாட்டிலே புகவேண்டியிருப்பீர் “அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலமுந்து சீரில் படிமின்” (திருவாய்மொழி. 2-8-4) என்று தடுமாறி முடியும்படி அஸுரவர்க்கத்தை அழியச்செய்தவனுடைய கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோளென்று ஸம்ஸாரது:க்கநிவ்ருத்திபூர்வகமான மோக்ஷாநந்தரஸ ப்ராப்திக்கு ஸாதனமாக விதிக்கப் படுவதாயிருக்கிற “தஸ்மிந்யதந்தஸ் ததுபாஸிதவ்யம்” (தைத்திரீய உபநிஷத்) என்று ப்ரஹ்ம ஸ்வரூபாந்தர்கதமான அபஹதபாப்மத்வாதி குணவிஶிஷ்டவஸ்து உபாஸநத்தை,
(6) (மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக் கீழ்மைவலம் சூதுஞ்செய்து இளமை கெடாமல்) “சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது” (திருவாய்மொழி.2-10-2) “திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி” (திருவாய்மொழி.2-10-5) “வல்வினை மூழ்கி” (திருவாய்மொழி.2-10-9) “நரகழுந்தி” (திருவாய்மொழி.2-10-7) “கீழ்மை செய்து” (திருவாய்மொழி.2-10-6) “வலங்கழித்து” (திருவாய்மொழி.2-10-8) “சூதென்று களவும் சூதும் செய்து” (திருவாய்மொழி.2-10-10) “கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்” (திருவாய்மொழி.2-10-12) என்று உபாஸநவிரோதியான இதரவிஷயப்ராவண்யத்தாலே பாபங்களைக் கூடுபூரித்து அவற்றிலே மறுநனைய மூழ்கி அழுந்தி தாழ்வுபட்டு பலத்தைப் பாழேபோக்கி பஶ்யதோஹரனாய் க்ருத்ரிமனாய் பால்யத்தைப் பாழே போக்காதே செய்யும் க்ஷேத்ரவாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷிண கதிசிந்தநாதி அங்கயுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில். “பால்ய ஏவ சரேத் தர்மம்” என்றும் “தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஶ்ரேயஸே ஸதா” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்.1-17-75) என்றும் சொல்லுகிறபடியே பால்யத்திலே கர்த்தவ்யமான “சார்வது சதிரே” (திருவாய்மொழி.2-10-1) “போதவிழ் மலையே புகுவது பொருளே” (திருவாய்மொழி.2-10-10) என்று க்ஷேத்ரவாஸம் “பதியதுவேத்தியெழுவது” (திருவாய்மொழி.2-10-2) என்று ஸங்கீர்த்தநம் “தொழக்கருதுவதே” (திருவாய்மொழி.2-10-9) என்று அஞ்ஜலி, “வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே” (திருவாய்மொழி.2-10-8) என்று ப்ரதக்ஷிணம் “நெறிபட அதுவே நினைவது நலமே” (திருவாய்மொழி.2-10-6) என்று கதிசிந்தநம் என்கிற இவை முதலான உபாஸநாங்கத்தோடே சேர்க்கிறார் இரண்டாம் பத்தில் என்கிறார்.
221. (1) முழுதுமாய் எங்கணு மொழிவற அருவாகி நின்று தோய்விலனாம் ஸர்வ வ்யாபகன் தீர்ந்தவடியார்களைத் தாளிணைக் கீழ்க் கொள்ளும் தன் படிக்கும், (2) நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி அலமருகின்றேன், வேரற வரிந்து எந்நாளெங்குவந்து தலைப் பெய்வனென்று கழித்துப் புகும் தம் காதலுக்கும் ஸத்ருஶமாகக்கண்டு கொள்ளென்னும், (3) ஊனமில் மோக்ஷ பலமான முடிச்சோதியிலநுபவத்தாலே நித்யவஸ்து நீடுபெற்று அவச்சேதமற்ற அடிமை செய்ய வேண்டும்படி ஸர்வாத்மபாவத்தைப் புகழ்ந்து, (4) சொல்லிப் பாடியேத்திப் பிதற்றியெழுந்தும் பறந்தும் துள்ளிக் குனித்துத் தடுகுட்டக்கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதியுகள, தம்மடியாரென்ன உடன் கூடும் ஸாத்யம் வளர, (5) பைகொள் பாம்புபோலே இந்த்ரியவ்ருத்தி நியமமறப் பாட வந்த கவியன்றிக்கே படைத்தான் ஶ்லோக க்ருத்தாய், (6) குறை முட்டுப் பரிவிடர் துயர் துன்பமல்லல் துக்கம் தளர்வு கேடுகளின்றி அம்ருதாநந்தமக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதலென்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாமென்றவை பரத்வமாம்படி, (7) அவனாகும் ஸௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி வழியைத் தருமவன் நிற்க இழியக் கருதுவதென்னாவது? வேண்டிற்றெல்லாம் தரும், தன்னாகவே கொள்ளும், கவிசொல்ல வம்மினென்று (8) முக்தைஶ்வர்யத்தை முன்னிட்டு ஶ்வ வ்ருத்தியை மாற்றி ஸ்வவ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்.
மூன்றாம் பத்தாலே “தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஶத்” (தைத்திரீய உபநிஷத்) என்கிறபடியே கார்யமான சேதநாசேதநங்களையடைய வ்யாபித்து தத்கததோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கையாலே ஸர்வவ்யாபகனான ஸர்வேஶ்வரன் கீழ்ப் பத்தாலே “இவர் உபயாநுகுணமாக நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலமான தன்னுடைய விக்ரஹாநுபவத்தை இவரைப் பண்ணுவிப்பிக்க இவரும் அநுபவித்து தரித்து அநுபவஜநிதப்ரீதிப்ரகர்ஷத்தாலே ஸர்வவித கைங்கர்யங்களும் செய்யவேண்டும்படியான அபிநிவேஶத்தையுடையராய்த் தம்முடைய அபிநிவேஶாநுகுணமாக அவன் காட்டிக்கொடுத்த அவனுடைய ஸர்வாத்மபாவத்தைப் பேசி அத்தாலே வந்த ப்ரீதியையுடையராய் அது அவனளவில் பர்யவஸியாதே பாகவதஶேஷத்வத்தில் எல்லையளவும் சென்று அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான பகவத் வைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலே தாமும் தம்முடைய கரணக்ராமங்களும் சேதநஸமாதியாலே அநுபவிக்க வேண்டும்படியான பெருவிடாயை உடையராய் இதரஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணராய் அவ்வளவேயன்றிக்கே பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹகரணராய் பகவதநுபவத்துக்குத் தமக்கொரு ப்ரதிஹதி தொடக்கமானவையுமற்று நிரதிஶய ஆநந்தயுக்தரானவர் புண்டரீகாக்ஷனாய் ஸூரி ஸேவ்யனானவவனை நம்மாலே ஆஶ்ரயிக்கப்போமோ என்று ஸம்ஸாரிகள் அஞ்சிக் கைவாங்காதே மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி கீழிரண்டு பத்தாலும் உபதேஶித்த அவதார ஸௌலப்யம் பரத்வ ஸ்தாநீயமாம்படி அர்ச்சாவதார ஸௌலப்யத்தையும் உபதேஶித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஶவிஶேஷப்ராப்தியைப் பண்ணுவிக்குமவனையொழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழவிழிகை நிஷ்ப்ரயோஜநம்; ஆனபின்பு நீங்கள் ஸகலபலப்ரதனுமாய் ஸாம்யாபத்தியைக் கொடுப்பானுமாயிருக்கிற அவன் விஷயத்திலே வாசிகமான அடிமை செய்யுங்கோளென்று நிஹீநதமமான இதரஸேவையை நிவர்த்திப்பித்துத் தம்முடைய வ்ருத்தியான வாசிக கைங்கர்யத்திலே மூட்டுகிறார் என்கிறார்
- (முழுதுமாயெங்கணு மொழிவற அருவாகிநின்று தோய்விலனாம் ஸர்வவ்யாபகன்)
“முழுதுமாய் முழுதியன்றாய்” (திருவாய்மொழி.3-1-8) “ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்(திருவாய்.3-2-4) “எஞ்ஞான்றுமெங்கும் ஒழிவற நிறைந்துநின்ற மெய்ஞ் ஞானச் சோதி” (திருவாய்மொழி.3-2-7) “அளவுடை ஐம்புலன்களறியாவகையால் அருவாகி நிற்கும் யாவையும் யாவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்” (திருவாய்மொழி.3-10-10) என்று தேஶகால வஸ்துக்களாலே பரிச்சேதிக்கவொண்ணாதபடி கார்யமான ஸகலசேதநாசேதநங்களையும் வ்யாபித்து “அநஶ்நந்நந்யோ அபிசாகஶீதி” (கடோபநிஷத்) என்கிறபடியே தத்கததோஷைரஸம்ஸ்ப்ருஷ்டனாய் இப்படி ஸர்வ வ்யாபகனான ஸர்வேஶ்வரன் (தீர்ந்தவடியார்களைத் தாளிணைக்கீழ்க் கொள்ளும் தன்படிக்கும்) “தீர்ந்தவடியர் தம்மைத் திருத்திப்பணி கொள்ளவல்ல ஆர்ந்தபுகழச்சுதனை” (திருவாய்மொழி.3-5-11) என்று தன்னையே உபாயோபேயங்களென்று நிஷ்கர்ஷித்தவர்களை “சன்மசன்மாந்தரம் காத்தடியார்களைக் கொண்டுபோய்த் தன்மைபெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளுமப்பனை” (திருவாய்மொழி.3-7-7) என்று இனியொரு ஜந்ம பரம்பரைகளிலே போகாதபடி ரக்ஷித்து ஆரப்தஶரீராவஸாநத்திலே அர்ச்சிராதிமார்க்கத்தாலே தேஶ விஶேஷத்திலே கொடுபோய் ஸ்வஸ்வரூபப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து தனக்குப் பாதோபதாநமாக இட்டுக்கொள்ளும்படியான ஶேஷியான தன்னுடைய ஔதார்யத்துக்கும்,
(2) (நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி அலமருகின்றேன் வேரறவரிந்து எந்நாளெங்கு வந்து தலைப்பெய்வன் என்று கழித்துப் புகும் தம் காதலுக்கும்) “அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்” (திருவாய்மொழி.3-2-1) “பன்மாமாயப் பல்பிறவில் படிகின்ற யான்” (திருவாய்மொழி.3-2-2) “பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா” (திருவாய்.3-2-3) “வினையியல் பிறப்பழுந்தி கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத்தலமருகின்றேன்” (திருவாய்மொழி.3-2-7) என்று ஸ்ருஷ்டிகாலத்திலே உன்னை வழிபடுகைக்குடலாக நீ ஶரீரத்தைக் கொடுக்க நான் அதின்வழியேபோய் அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்டு ப்ரக்ருதிகார்யமான தேவ மநுஷ்யாதி ஶரீரங்களிலே அவகாஹித்து ஹேயமான ஶரீரத்துக்கடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற கர்மமடியாக மீண்டும் பாபத்திலே கொடுபோய் மூட்டக்கடவதான ஜந்மபரம்பரைகளிலேயழுந்தி என்னால் அடியறுக்கவொண்ணாதே அடிகாணவொண்ணாதே புகுரவழிதெரியுமத்தனை யொழிய புறப்படவழிதெரியாதிருப்பதாயிருக்கிற பாபமாகிற மிடைந்த தூற்றிலே கிடந்து உன்னை ப்ராபிக்கைக்கீடான வழி காணாதே கூப்பிட்டு அலமருவா நின்றேன்; “வினைகளை வேரறப் பாய்ந்து” (திருவாய்மொழி.3-2-1) “தொன்மாவல்வினைத் தொடர்களை முதலரிந்து” (திருவாய்மொழி.3-2-2) என்று அநாதியாய், மஹத்தாய், என்னாலே போக்கிக் கொள்ள வொண்ணாதபடி வலிதாய் ஶ்ருங்கலாஞ்சலமா(?)யிருக்கிற பாபஸமூஹங்களை உச்சிவேரோடே யரிந்து பொகட்டு “எந்நாள் யானுன்னை இனிவந்து கூடுவனே” (திருவாய்மொழி.3-2-1) “எங்கு வந்து அணுகிற்பனே” (திருவாய்மொழி.3-2-5) “எங்கினித் தலைப்பெய்வனே” (திருவாய்மொழி.3-2-9) என்று நான் உன்னைக் கிட்டுவது, ஒரு நாள் அறுதியிட்டுத்தரவேணும், நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன், கிட்டுகை என்று ஒரு பொருளுண்டோ என்று ஶரீரஸம்பந்தத்துக்கு நொந்து அதிலுண்டான அருசியோடே “காயம் கழித்து அவன் தாளிணைக்கீழ்ப் புகும் காதலன்” (திருவாய்மொழி.3-9-8) என்று பகவத் குணாநுபவத்தோடே காலக்ஷேபத்தைப் பண்ணி ஶரீரத்தை விட்டு அவன் திருவடிகளிலே புகவேணும் என்னும்படியான ஶேஷபூதரான தம்முடைய ஆசைக்கு (ஸத்ருஶமாகக் கண்டு கொள் என்னும்) உபயஸ்வரூபத்துக்கும் அநுகுணமாக “வானவர் நாட்டையும் நீ கண்டுகொள்” (திருவாய்மொழி.3-9-9) என்று ஈஶ்வரன் காட்டிக் கொடுக்கிற,
(3) (ஊனமில் மோக்ஷ பலமான முடிச்சோதியில் அநுபவத்தாலே நித்யவஸ்து நீடு பெற்று) “ஊனமில் மோக்கமென்கோ” (திருவாய்மொழி.3-4-7) என்று ப்ரகாரமான ஆத்மாநுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும் செல்ல அநுபவிக்கையாலே ஸ்வரூபாநுரூபமாகக் கீழில் பத்தில் அறுதியிட்ட பரம புருஷார்த்தலக்ஷண மோக்ஷத்துக்குப் பலமான “முடிச்சோதி” (திருவாய்மொழி.3-1) என்கிற திருவாய்மொழியில் விக்ரஹவைலக்ஷண்யத்தையும் ஆபரணங்களினுடைய சேர்த்தியையும் அநுபவித்து அவை பரிச்சேதித்தநுபவிக்க வொண்ணாதொழிய இது கரண ஸங்கோசத்தாலேயோ என்றதிஶங்கை பண்ணின இவருடைய அதிஶங்கையை வஸ்து வைலக்ஷண்யநிபந்தநமென்னுமிடத்தைக் காட்டி நிவ்ருத்தமாக்க அவ்வநுபவத்தாலே “பெற்றது நீடுயிர்” (திருவாய்மொழி.3-2-10) என்கிறபடியே நித்யவஸ்து ஸத்தை பெற்று, ஸத்தாகார்யமும் பலிக்க வேண்டுகையாலே அவச்சேதமற்று அடிமை செய்யவேண்டும்படி “ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய” (திருவாய்மொழி.3-3-1) என்கிற பாட்டின்படியே தேஶகாலாவஸ்த்தா ப்ரகாரங்களை இட்டு அவச்சேதியாதபடி ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்த்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேஶத்தாலே (ஸர்வாத்மபாவத்தைப் புகழ்ந்து) புகழுநல் ஒருவனிலே (திருவாய்மொழி.3-4) பூதங்கள் பௌதிகங்கள் உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்கள் காநாதி ஶப்தராஶிகள் மோக்ஷாதி புருஷார்த்தங்கள் ஜகத்துக்கு ப்ரதாநரான ப்ரஹ்மருத்ராதிகள் இவற்றுக்கடைய காரணமான ப்ரக்ருதிபுருஷார்த்தங்கள் ஆக இவற்றையடைய விபூதியாகவுடையனாய் இவைதனக்குள்ளே அந்தராத்மதயா வ்யாபித்து தத்கததோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கிறபடியைப் பேசி அநுபவித்து அவ்வநுபவத்தாலே ப்ரீதராய்,
(4) (சொல்லிப்பாடி ஏத்திப் பிதற்றி யெழுந்தும் பறந்தும் துள்ளிக் குனித்துத் தடுகுட்டக் கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதியுகள) “எம்மானைச் சொல்லிப்பாடி” (திருவாய்மொழி.3-5-1) “பண்கள் தலைக்கொள்ளப் பாடி” (திருவாய்.3-5-2) ”முனிவின்றியேத்தி” (திருவாய்மொழி. 3-5-6) “பேர்பல சொல்லிப் பிதற்றி” (திருவாய்.3-5-8) “எழுந்தும்பரந்தும் துள்ளாதார்” (திருவாய்மொழி.3-5-1) “ஏத்திக் குனிப்பார்” (திருவாய்.3-5-6) “தடுகுட்டமாய்” (திருவாய்மொழி.3-5-3) “கும்பிடு நட்டமிட்டாடி” (திருவாய்மொழி.3-5-4) “உலோகர் சிரிக்க நின்றாடி உள்ளங்குழைந்து நைய” (திருவாய்..3-5-8) என்று வாசிக காயிக மாநஸங்களினாலே களித்து அந்த ப்ரீதி தலைமண்டையிட்டு (தம்மடியாரென்று உடன்கூடும் ஸாத்யம் வளர) இப்படியுண்டான ப்ரீதி அவ்வளவில் பர்யவஸியாதே “தம்மடியாரடியார் தமக்கடியார் அடியார்தம் அடியார் அடியோங்களே” (திருவாய்..3-7-10) என்று ஶேஷத்வத்தினுடைய எல்லையிலே நிற்கும்படி “அடியார்குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ” (திருவாய்..2-3-10) என்று கீழில் பத்திலே ப்ரார்த்தித்த பாகவதஶேஷத்வமாகிற புருஷார்த்தம் அதினுடைய எல்லையளவாக வளர,
(5) (பைகொள் பாம்புபோலே இந்த்ரியவ்ருத்தி நியமமற) “பைகொள் பாம்பேறி உறைபரனே” (திருவாய்மொழி 3-8-4) என்று திருவனந்தாழ்வான் சக்ஷுஶ்ரவா: என்கிறபடியே ஒரு கரணத்தாலே மற்றைக் கரணத்தில் கார்யமும் கொள்ளுமாபோலே “நெடியானே என்று கிடக்குமென் நெஞ்சமே” (திருவாய்மொழி.3-8-1) “வஞ்சனே என்னுமெப்போதும் என் வாசகமே” (திருவாய்மொழி. 3-8-2) “ஆனாயர் தாயவனே என்று தடவுமென் கைகளே” (திருவாய்.3-8-3) என்றித்யாதிகளாலே கரணம் சேதந ஸமாதியாலே கரணாந்தரப்ரவ்ருத்தியையும் ஆசைப்படும்படியான பெரு விடாயை உடையராய் (பாடவந்த கவியன்றிக்கே படைத்தான் ஶ்லோகக்ருத்தாய்) “வாய்கொண்டு மானிடம்பாடவந்த கவியேனல்லேன்” (திருவாய்.3-9-9) என்று இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹகரணராய் “ஒன்றியொன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு” (திருவாய்மொழி.3-9-10) என்று ஜகத்ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே தம்முடைய ஜீவநத்துக்கு க்ருஷிபண்ணின ஸர்வேஶ்வரன் விஷயத்திலே “அஹம் ஶ்லோகக்ருத் அஹம் ஶ்லோக க்ருத்” (தைத்திரீய உபநிஷத்) என்கிற உபநிஷத்தின்படியே கவிபாடுமவருமாய்,
(6) (குறை முட்டுப் பரிவிடர் துயர் துன்பமல்லல் துக்கம் தளர்வு கேடுகளின்றி அம்ருதாந்த மக்நரானவர்) தேஶவிஶேஷத்தில் போயநுபவிக்கப் பெற்றிலேன் என்கிற குறைவில்லை; இவ்வநுபவத்துக்கு எனக்கொரு ப்ரதிஹதியில்லை, ஏகதேஶமும் மநோது:கமில்லை; வகுத்தஶேஷி என்று பற்றுகையாலே எனக்கொரு து:க்கமில்லை. ருசிமுன்னாக தேஶவிஶேஷப்ராப்தி பண்ணுகிற எனக்கு வைதிகபுத்ரர்களைப் போலே மீளில் செய்வதென் என்கிற து:க்கமில்லை; இங்கே அவனுடைய கல்யாணகுணங்களை நெருங்க புஜித்த எனக்கொரு தேஶவிஶேத்திலே போகப்பெற்றிலேன் என்கிற து:க்கமில்லை; இவ்விபூதி அவனுடைய லீலை என்றறிந்த எனக்கு ஒரு தளர்த்தியில்லை; எனக்காக ஸர்வவ்யாபகனாய் இருக்கிறவனை பற்றின எனக்கொரு கேடில்லை. அவனுடைய லீலாவிபூத்யந்வயமாகில் செய்வதென் என்கிற அல்லலில்லை; ஆஶ்சர்யபூதனான க்ருஷ்ணனைப் பற்றின எனக்கொரு கேடில்லை; என்றிப்படித் தாமே சொல்லும்படி அம்ருதரான முக்தர் பகவதநுபவத்தால் ஆநந்திக்குமா போலே அவ்வாநந்த ஸாகரத்திலே மக்நரான இவர், (செய்யதாமரைக் கண்ணன் அமரர் குலமுதல் என்று அஞ்சாதபடி) “செய்யதாமரைக் கண்ணனாய்” (திருவாய்மொழி.3-6-1) “எஞ்சலிலமரர் குலமுதல்” (திருவாய்மொழி.3-6-9) “அஞ்சிநீர் உலகத்துள்ளீர்கள்” (திருவாய்மொழி.3-6-9) என்று புண்டரீகாக்ஷனான ஸர்வேஶ்வரன் ஞானஸங்கோசமில்லாத நித்யஸூரிகளுடைய திரளுக்கு நிர்வாஹகனன்றோ, ஸம்ஸாரிகளான நம்மாலே அவனை ஆஶ்ரயிக்கப் போமோ என்றஞ்சவேண்டாதபடி (எளிவருமிணைவனாம் என்றவை பரத்வமாம்படி) “எளிவரும் இயல்வினன்” (திருவாய்..1-3-2) “இணைவனாம் எப்பொருட்கும்” (திருவாய்மொழி.2-8-1) என்று பத்துடையடியவரிலும் அணைவது அரவணையிலும் வெளியிட்ட அவதார ஸௌலப்யம் பரத்வஸ்த்தாநீயமாம்படி,
(7) (அவனாகும் ஸௌலப்யகாஷ்டையைக் காட்டி) “நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே” (திருவாய்மொழி.3-6-9) என்று மநஸ்ஸாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினிகோள் அபரிச்சேத்ய மஹிமனான ஸர்வேஶ்வரன் அதைத் தனக்கஸாதாரண விக்ரஹமாக விரும்பும் என்று “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்” (கீதை 4-11) என்றும் “அர்ச்யஸ்ஸர்வ ஸஹிஷ்ணு: அர்ச்சகபராதீநாகிலாத்ம ஸ்த்திதி:” (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 74) என்கிற அர்ச்சாவதார ஸௌலப்யத்தைக் காட்டி (வழியைத் தருமவன் நிற்க இழியக்கருதுவது என்னாவது) “ஒழிவொன்றில்லாத இத்யாதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே” (திருவாய்மொழி.3-9-3) என்று யாவதாத்மபாவி பகவதநுபவத்தோடே வர்த்திக்கிற தேஶத்தையும் அவ்வநுபவம் தான் ஒரு சிறாங்கை என்னும்படியான அர்ச்சிராதி மார்க்கத்தையும் அத்தேஶவிஶேஷத்தையும் ப்ராபிக்கிற உபாயத்தையும் தருகிறவன் நம்மை ஒரு சொல் சொல்லுவாரோ என்று அவஸரப்ரதீக்ஷனாய் நிற்க அவனை விட்டு ஒரு சொல்லுக்குப் பாத்தம்போராதானாய் அசித்ப்ராயனாய் நீர்க்குமிழிபோலே உடைந்து போகிற க்ஷுத்ரமநுஷ்யனைக் கவிபாடி முன்பு நின்ற நிலையிலுங்காட்டில் தாழவிழிய நினைக்கிற இத்தாலே என்ன ப்ரயோஜநமுண்டு? அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள், அபிமதம் பெற்றிலிகோள்; (வேண்டிற்றெல்லாம் தரும்) “ஸகலபலப்ரதோ ஹி விஷ்ணு:” (விஷ்ணுதர்மம். 43-47) என்கிறபடியே ஸர்வாபேக்ஷிதங்களையும் கொடுக்கும் (தன்னாகவே கொள்ளும்) “பரமம் ஸாம்யமுபைதி” (முண்டகோபநிஷத்) என்கிறபடியே தன்னோடு ஸாம்யாபத்தியைக் கொடுக்கும், தனக்கநந்யார்ஹஶேஷமாக்கிக் கொள்ளும் (கவிசொல்லவம்மின் என்று) இதுக்கு நீங்கள் செய்யவேண்டுவதொன்றும் இல்லை. இதரரை ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களைப் பாழே போக்காதே வாய் படைத்த ப்ரயோஜநம் போரும்படி இவ்விஷயத்திலே ஸ்தோத்ரம் பண்ண வாருங்கோளென்று,
(8) (முக்தைஶ்வர்யத்தை முன்னிட்டு) “ஹாவு ஹாவு ஹாவு அஹமந்நமஹமந்நம் அஹமந்நம்” (தைத்திரீயோபநிஷத்) என்று முக்தருடைய ஐஶ்வர்யமான வாசிக கைங்கர்யத்தை முன்னிட்டு (ஶ்வவ்ருத்தியை மாற்றி ஸ்வவ்ருத்தியிலே மூட்டுகிறார்) “ஸேவா ஶ்வவ்ருத்திராக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜயேத்” (மநுஸ்ம்ருதி) என்று அப்ராப்தவிஷயத்திலே ஸேவை நிஹீநதரமாகையாலே அந்த ஶ்வவ்ருத்தியை மாற்றி “சாயாவாஸத்வமநுகச்சேத்” (மூலஸம்ஹிதை) என்றும் “ஸா கிமர்த்தம் ந ஸேவ்யதே” (விஹகேஶ்வர ஸம்ஹிதை. 24-14) என்றும் விதிக்கப்படுகிற ப்ராப்த விஷயத்திலே புகழுநல்லொருனில்படியே தம்முடைய வாசிகவ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் என்கிறார்.
222. (1) ஈசனை ஈசன் ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வ்யாப்தி, நிறம்பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வநியந்தா, ஒழிவில் காலத்துக்குச் சேரப் பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கிப் (2) போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையல் ஏறியபித்தாய், (3) தேஶதூரத்துக்குக் கூவியும் கொள்ளாயென்றது தீர, கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட, வீவிலின்பம் கூட்டினையென்று முக்தபோக மாநஸப்ராப்திபலமான தேவதாந்தர ஆத்மாத்மீய லோகயாத்ரைஶ்வர்ய அக்ஷரங்களில் வைராக்யம், உன்னித்து, உயிருடம்பினால் கொடு உலகம் வேட்கை யெல்லாம் ஒழிந்தேனென்னவுடையரானவர், (4) ஒருநாயகமென்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்மாநுபவ அல்பாஸ்த்திரத்வ ஸாவதிகத்வாதிகளையும், (5) ஆடு கள்ளிறைச்சி கரும்செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந்தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையை யும், (6) பேசநின்ற தேவதாஜ்ஞாநாஶக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும், (7) இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டிமத தமோ நிஷ்டதையையும் சொல்லி, ஓடிக் கண்டீர் (8) கண்டும் தெளியகில்லீர் அறிந்தோடுமின் ஆட்செய்வதே உறுவதாவதென்று விரக்தி பூர்வகமாக ஆஶ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம்பத்தில்.
நாலாம் பத்திலே கீழ்ச்சொன்ன வ்யாப்தி ஆகாஶவ்யாப்திபோல் அன்றிக்கே “அந்த: ப்ரவிஷ்டஶ்ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” (ஆரணம்.3-20) என்றும் “ஆத்மாநமந்தரோ யமயதி” (ப்ருஹதாரண்யகம்) என்றும் “ஶாஸ்தா விஷ்ணுரஶேஷஸ்ய ஜகதோ யோஹ்ருதிஸ்திதி:” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்.1-17-20) என்றும் சொல்லுகிறபடியே அந்த வ்யாப்தி நிறம்பெறும்படி ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களினுடையவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானிட்ட வழக்காம்படி நியமித்துக் கொண்டு போருகையாலே ஸர்வநியந்தாவான ஸர்வேஶ்வரன் கீழ் ஒழிவில் காலத்தில் கைங்கர்யாபிநிவேஶம் போலே தேஶகால விப்ரக்ருஷ்டமான அபதாநங்களை தத்தேஶகாலவிஶிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று இவர்க்குக் காலோபாதியைக் கழித்து ஸமகாலமாக்கி யநுபவிப்பித்து இவருடைய இழவைத் தீர்த்து இவருடைய கரணத்ரய வ்யாபாரத்தையும் யோக்யமாக்கிக் கொள்ள அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று ஸத்ருஶ பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்த்தங்களையும் அவனென்று பிச்சேறி தேஶவிஶேஷத்திலே அநுபவத்தை யாசைப்பட்டுக் கூப்பிட்ட இவர்க்கு அவ்விழவும் தீரும்படி “ஶ்ரியாஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ” (லைங்கம்) என்கிறபடியே தேஶவிஶேஷத்திலே பெரியபிராட்டியாரும் தானுமே போக்தாக்களாயிருக்கிற இருப்பை ப்ரத்யக்ஷாநுபவம்போலே அநுபவத்துக்கு விஷயமாக்க இவருமநுபவித்து மாநஸாநுபவமாகையாலே தத்பலமான பகவத் வ்யதிரிக்தங்களான தேவதாந்தரம் முதலானவற்றிலே வைராக்யத்தை உடையராயிருக்கிற இவரை ஐஶ்வர்யகைவல்யங்களினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷங்களையும் நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு க்ஷுத்ரதேவதாபஜனம் பண்ணுகிற இதினுடைய தண்மையையும் ப்ரஶம்ஸாபரமான வாக்யங்களாலே சொல்லப்பட்டு பகவத்விபூதிபூதராய் இருக்கச் செய்தே இவனோடே விகல்பிக்கலாம்படி அவனாலே தத்தமான ஐஶ்வர்யத்தை உடையராயிருக்கிற ப்ரஹ்மருத்ரர்களுடைய அஜ்ஞாந அஶக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும், பாஹ்யகுத்ருஷ்டி மதங்களினுடைய தமோநிஷ்டதைகளையும் வெளியிட்டு தேவதாந்தரங்களை ஆஶ்ரயித்து தத்பலமும் பெற்றுப் போனிகோள்; ஸர்வேஶ்வரனுடைய ஜகந்நிகரணாதி ஸர்வ சேஷ்டிதங்களாலும் ஸர்வேஶ்வரனே ரக்ஷகன் அல்லாதாரடைய ரக்ஷ்யபூதரென்னும் அர்த்தத்தை வியாஸபராஶராதிகளுடைய வசநங்களாலே கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள்; இப்படி நீங்கள் தேறாதிருக்கைக்கடி அவனிட்டவழக்காயிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தம்; தத்விமோசநோபாயம் அவன் திருவடிகளே என்றறிந்து ஆஶ்ரயித்துத் தப்பப் பாருங்கோள், அவன் திருவடிகளில் கைங்கர்யமே உங்களுக்குச் சீரிய புருஷார்த்தம் என்று ப்ரயோஜநாந்தரங்களுடையவும் தேவதாந்தரங்களினுடையவும் விரக்தி முன்னாக பரதேவதை ஸர்வேஶ்வரனே என்றும் தத்விஷயகைங்கர்யமே பரம ப்ரயோஜநமென்றும் உபதேஶித்து பகவத்ஸமாஶ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்.
(1) (ஈசனை ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வ்யாப்தி நிறம்பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வநியந்தா) “மறுகலிலீசனை” (திருவாய்மொழி.4-1-10) ”ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த” (திருவாய்மொழி. 4-3-2) “ஈசன்பாலோர் அவம் பறைதல்” (திருவாய் மொழி.4-10-4) என்று நியந்த்ருவாசகமான ஶப்தத்தாலே சொல்லும்படி “ஏர்கொளேழுலகமும் துன்னி முற்றுமாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்” (திருவாய்மொழி 4-3-8) “வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றான்” (திருவாய்மொழி.4-5-9) “ஆயே இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே” (திருவாய்மொழி. 4-9-7) என்று கீழ்ப்பத்தில் சொன்ன வ்யாப்தி ஆகாஶவ்யாப்தி போலன்றிக்கே அது நிறம்பெறும்படி “வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்ல” (திருவாய்மொழி.4-5-1) என்னும்படி உபயவிபூதியும் தன் நியமனத்திலேயாம்படி தன் ஆஜ்ஞையை நடத்துகிற ஸர்வ நியந்தாவான ஸர்வேஶ்வரன் (ஒழிவில்காலத்துக்குச் சேர பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கி) “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி” (திருவாய்மொழி.3-3-1) என்று ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் அடிமை செய்யவேணுமென்று கீழ்க்கழிந்தகாலத்தில் அடிமையையும் ஆசைப்பட்டதுக்கு ஒக்க தேஶகாலவிப்ரக்ருஷ்டங்களாயிருக்கிற அவனுடைய அபதானங்களை “மாதர்மாமண் மடந்தை பொருட்டு இத்யாதி ஓதும் மால் எய்தினள்” (திருவாய்மொழி.4-2-6) என்று தத்தேஶகாலவிஶிஷ்டமாக அநுபவிக்கவேணுமென்று பிச்சேறும்படியான இவருடைய சாபல்யத்துக்குச்சேர காலோபாதியைக் கழித்து வர்த்தமாநகாலம் போலே ஸமகாலமாக்கி அநுபவிப்பித்து,
(2) (போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையலேறிய பித்தாய்) “பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவைவீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே” (திருவாய்மொழி 4-3-1)என்று; “பூசுஞ்சாந்தென் நெஞ்சமே இத்யாதி ஏகமூர்த்திக்கே” (திருவாய்மொழி. 4-3-2) என்று விரோதிநிரஸநம் பண்ணுகிற அவதார காலங்களிலே உதவி புஷ்பாத்யுபகரணங்களைக் கொண்டு ஶிஶிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனேயாகிலும் ஸர்வநியந்தாவாய் ப்ரளயாத்யாபத்ஸகனானவன் தன்னுடைய அத்விதீயமான விக்ரஹத்துக்கு என்னுடைய கரணத்ரயவ்யாபாரத்தையும் தனக்கு போக்யமாகக் கொள்ளுவதே என்று இவர்தாமே ஈடுபடும்படி இவருடைய இழவுதீர்த்த அவனுடைய ப்ரணயித்வகுணத்திலே “காதல் மையலேறினேன்” (திருவாய்..4-3-9) என்கிறபடியே அவன்பக்கல் உண்டான ப்ராவண்யாதிஶயத்தாலே அறிவழிய அது வெள்ளக் கேடாகாதபடி அவன் அல்பம் பேர நிற்க அவனோடு ஸத்ருஶபதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்தங்களையும் அவனென்று ப்ரமித்து “என் பெண்கொடி ஏறிய பித்தே” (திருவாய்மொழி.4-4-6) என்று பிச்சேறி,
(3) (தேஶ தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட) “கோலமேனி காணவாராய் கூவியும் கொள்ளாயே” (திருவாய்மொழி. 4-7-1) என்று உன்னுடைய வடிவழகை வந்தநுபவிப்பித்தருளுதல் அங்கே அருளப்பாடிடுதல் செய்கிறிலை என்று தேஶவிஶேஷத்தில் அநுபவத்தை ஆசைப்பட்டுக் கூப்பிட்ட இவருக்கு “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டசதிர் கண்டொழிந்தேன்” (திருவாய்மொழி.4-9-10) என்று நித்யவிபூதியிலே பெரியபிராட்டியாரும் நீயுமே போக்தாக்களாய் அவ்விபூதியிலுள்ளாரடைய போகோபகரண கோடியிலேயாம்படி கண்டுவைத்த கட்டளையை நான் கண்டேன் என்று கீழ் காலோபாதியைக் கழித்து ஸமகாலமாக்கினாப்போலே அவ்விபூதியிலநுபவத்தை இங்கேயிருந்தே அநுபவிக்கலாம்படி ஒரு போகியாக ப்ரகாஶிப்பிக்க, (வீவிலின்பம் கூட்டினை என்று முக்தபோகம்) “வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே” (திருவாய்மொழி. 4-5-3) என்று அவனைக் கிட்டி நிரதிஶயாநந்தியாகப் பெற்றேன், “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே” (திருவாய்மொழி.4-9-8) என்று ஸ்வயத்நத்தாலே கிட்டுவார்க்குக் கிட்டவரிதாய் இருக்கிற திருவடிகளை உன்னருளாலே பெறவிருக்கிற நான் பெற்றநுபவிக்கும்படி கூட்டினாய், நானும் கண்டு அநுபவிக்கப் பெற்றேன் என்று பேசும்படியான முக்தபோகமான இவ்வநுபவம் மாநஸாநுபவமாய் அந்த மாநஸப்ராப்திக்குப் பலமான (தேவதாந்தராத்மாத்மீய லோகயாத்ர ஐஶ்வர்ய அக்ஷரங்களில் வைராக்யம் உன்னித்து இருடம்பினால் கொடுவுலகம் வேட்கையெல்லாம் ஒழிந்தேனென்ன உடையரானவர்) “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்” (திருவாய்மொழி.4-6-10) என்று தன்னெஞ்சாலே துதித்து ஒரு தேவதைக்கு மூச்சுண்டென்று தொழுதறியாள் என்று தேவதாந்தரவிஷயமான வைராக்யத்தையும் “உயிரினால் குறைவிலமே” (திருவாய்மொழி.4-8-10) “உடம்பினால் குறைவிலமே” (திருவாய். 4-8-9) என்று ஆத்மாத்மீயங்களில் வைராக்யத்தையும் “கொடுவுலகம் காட்டேல்” (திருவாய். .4-9-7) என்று லோக யாத்ரையில் வைராக்யத்தையும் “வேட்கை எல்லாம் விடுத்து” (திருவாய்மொழி.4-9-9) என்று ஐஶ்வர்யத்தில் வைராக்யத்தையும் “சிற்றின்பம் ஒழிந்தேன்” (திருவாய்மொழி.4-9-10) என்று அக்ஷரமென்று சொல்லப்படுகிற ஆத்மாநுபவத்தில் வைராக்யத்தையும் உடையரான இவர்,
(4) (ஒருநாயகம் என்று ராஜ்ய ஸ்வர்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வஸாவதிகத்வாதி களையும்) ஒரு நாயகத்திலே “ஒரு நாயகமாய் ஓட உலகுடனாண்டவர் பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்” (திருவாய்மொழி.4-1-1) என்று “ராஜ்யம் நாம மஹா வ்யாதி: அசிகித்ஸ்யோ விநாஶந: ப்ராதரம் வா ஸுதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா:” என்கிறபடியே ராஜ்யைஶ்வர்யத்தினுடைய அல்பதையையும் “குடிமன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்” (திருவாய்மொழி.4-1-9) என்றும் “க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶந்தி” (கீதை.9-21) என்று ஸ்வர்க்காநுபவத்தினுடைய அஸ்திரத்வத்தையும் “இறுகலிறப்பு” (திருவாய்மொழி.4-1-10) என்று ஆத்மாநுபவத்தினுடைய ஸாவதிகத்வத்தையும்,
(5) (ஆடு கள்ளிறைச்சி கருஞ்செஞ் சோறாகிற நிந்த்யங்களாலே இளந்தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும்) “அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும் கள்ளும்பராய்” (திருவாய்..4-6-7) “அங்கோர் கள்ளுமிறைச்சியும் தூவேன்மின்” (திருவாய்மொழி.4-6-3) “கருஞ் சோறும் மற்றைச்செஞ்சோறும்” (திருவாய்..4-6-4) என்று “த்ரவ்யம் நிந்த்ய ஸுராதிதைவதமதி க்ஷுத்ரஞ்ச பாஹ்யாகமோ த்ருஷ்டிர் தேவலகாஶ்ச தேஶிகஜநா திக் திக் திகேஷாம் க்ரமம் வேதா வேதநாஶ்ச தேஶிகஜநா ஸத்வஞ்ச வேதாந்தகம் ப்ரஹம ஸ்ரீதரமத்ர வேதவிஹிதந் நிஜீவ ஜீவாதவே” என்கிறபடியே நிந்த்யபதார்த்தங்களைக் கொண்டு “நீரணங்காடும் இளம் தெய்வம்” (திருவாய்மொழி.4-6-2) என்று க்ஷுத்ரதேவதைகளுக்கு “கள்ளிழைத்தென் பயன்” (திருவாய்மொழி.4-6-4) என்று அவ்வோ தேவதைகள் ஸந்நிதி பண்ணுகிற ஸ்தலங்களிலே இடுகிற இது “நீரணங்காடுதல் கீழ்மையே” (திருவாய்மொழி,4-6-8) என்று நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு க்ஷுத்ரதேவதா பஜநம் பண்ணுகை நிஹீநமென்னுமத்தையும்,
(6) பேசநின்ற தேவதாஜ்ஞாநாஶக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும்) “பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் நாயகனவனே கபாலநன்மோக்கத்துக் கண்டுகொண்மின்” (திருவாய்.4-10-4) என்று ப்ரஶம்ஸாபரமான வாக்யங்களாலும் தாமஸ புராணங்களாலும் பேசப்பட்டு அவற்றுக்கு முட்டுப் பொறுத்து நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய “வாமாங்குஷ்டநகாக்ரேணஶ்சிந்நம் தஸ்ய ஶிரோ மயா” என்றும் “யஸ்மாதநபராதஸ்ய ஶிரஶ்சிந்நம் த்வயா மம, தஸ்மாச்சாபஸமாயுக்த: கபாலீ த்வம் பவிஷ்யஸி தத்ர நாராயணஶ்ஸ்ரீமாந் மயா பிக்ஷாம் ப்ரயாசித: விஷ்ணுப்ரஸாதாத் ஸுஶ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா” (மாத்ஸ்யபுராணம்) என்றும் சொல்லுகிறபடியே ப்ரஹ்மா ருத்ரனாலே தலையறுப்புண்டு ஶோச்யனாகையாலும் ருத்ரன் குருவினுடை ஶிரஶ்சேதநத்தாலே பாதகியாய் ஸர்வேஶ்வரன் பக்கலிலே ஸாபேக்ஷனாக, அந்த ஸர்வேஶ்வரன் அந்த ப்ரஹ்மாவினுடைய ஶோகத்தையும் போக்கி ருத்ரனுடைய ஶாபத்தையும் போக்கினான் என்கையாலே இவர்கள் அந்யோந்யம் தங்களுக்கு வருகிற க்லேஶம் அறியாமையாலும் வந்தக்லேஶம் தாங்கள் தாங்கள் தவிர்த்துக் கொள்ளமாட்டாத அஶக்தியாலும் இவை போமிடத்தில் ஸர்வேஶ்வரனே போக்க வேண்டும்படியான ஸாபேக்ஷதையாலும் இப்படி மஹாபாரத வசநஸித்தமாக அஜ்ஞாநாஶக்தி ஸாபேக்ஷங்களை யும். ஆதி ஶப்தத்தாலே அவர்களுடைய கர்மவஶ்யதைiயையும்,
(7) . (இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி தமோநிஷ்டதையையும் சொல்லி) “இலிங்கத்திட்ட புராணத்தீரும்” (திருவாய்மொழி. 4-10-5) என்றும், “விளம்புமாறு சமயமும்” (திருவாய்மொழி 4-10-9) என்றும் சொல்லுகிறவிவை “யந்மயஞ்ச ஜகத்ஸர்வம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம். 1-1-5) என்று ப்ரஶ்நம் பண்ண “விஷ்ணோஸ் ஸகாஶாதுத்பூதம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்.1-1-41) என்று கோல்விழுக்காட்டிலே உத்தரமாகை அன்றிக்கே எருமையை யானையாகக் கவிபாடவேணும் என்பாரைப் போலே இலிங்கம் என்று ஒரு வ்யக்தியை நிர்தேஶித்து, இதுக்கு உத்கர்ஷம் தேடிச் சொல்லவேணுமென்று கேட்கிறவனும் தமோபிபூதனாய்க் கேட்கச் சொல்லுகிறவர்களும் தமோபிபூதராய்ச் சொல்ல லிங்கவிஷயமாக உத்கர்ஷம் தேடியிட்ட குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளென்ன, ப்ரமாணாநுகூலமான தர்க்கமல்லாமையாலே கேவலம் உக்திஸாரமான பாஹ்யருடையவும் மதங்களென்ன, இவை “யா வேதபாஹ்யா ஸ்ம்ருதய: யாச்ச காச்ச குத்ருஷ்டய: தாஸ்ஸர்வா நிஷ்ப்பலா: ப்ரேத்ய தமோநிஷ்டாஹி தா: ஸ்ம்ருதா:” (மநுஸ்ம்ருதி.12-95) என்கிறபடியே தமோநிஷ்டங்களென்னு மிடத்தையும் சொல்லி, (ஓடிக் கண்டீர்) “ஓடியோடி வழியேறிக் கண்டீர்;” (திருவாய்மொழி .4-10-10) ”கதாகதம் காமகாமா லபந்தே” (கீதை.9-21) என்கிறபடியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது கர்ப்பத்தேற வருவதாய்க் கொண்டு அநேக ஜந்மங்கள் தேவதாந்தரங்களை ஸப்ரகாரமாக த்ரிவிதகரணங்களாலும் ஆஶ்ரயித்து அவ்வாஶ்ரயணமும் முடிய நடத்தி தத் பலமும் கண்டிகோள்;
(8) (கண்டும் தெளியகில்லீர்) இவனுடைய ஜகந்நிகரணாதி திவ்யசேஷ்டிதங்களை ஶாஸ்த்ரத்வாரா ப்ரத்யக்ஷித்தும் இவனே ஸர்வஸமாஶ்ரயணீயனென்று தெளிய மாட்டுகிறிலிகோள். (அறிந்தறிந்தோடுமின்) உங்களை இங்ஙனே வைத்தது ஸதஸத்கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்மங்களை அநுபவிக்கக் கடவதான ஶாஸ்த்ரமர்யாதை அழியுமென்று. “மம மாயா துரத்யயா” (கீதை.7-14) என்கிறபடியே இதுவும் அவனுடைய மாயை என்று அறிந்தும், “மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” (கீதை .7-14) என்கிறபடியே மாயா தரணோபாயம் அவன் திருவடிகளை யாஶ்ரயிக்கையே என்றறிந்து அவனையாஶ்ரயித்துத் தப்பப் பாருங்கோள். (ஆட்செய்வதே உறுவதாவதென்று) “நீள்குடக் கூத்தனுக்காட்செய்வதே உறுவது” (திருவாய்மொழி.4-10-10) என்று ஆஶ்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனுக்கு அடிமை செய்கையே இவ்வாத்மாவுக்குச் சீரியதும் ஸுஶகமும் என்று (விரக்திபூர்வகமாக ஆஶ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில்) ப்ரயோஜநாந்தரங்கள் க்ஷுத்ர தேவதைகள் பாஹ்யகுத்ருஷ்டிகள் என்கிற இவற்றிலுண்டான விரக்தி பூர்வகமாக ஜகத்காரணத்வாதி களான ப்ரமாணோபபத்திகளாலே பகவத் ஸமாஶ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஶித்து ருசிப்பிக்கிறார் என்கிறார் நாலாம் பத்தால்.
223. (1) ஆவாவென்று தானே தன்னடியார்க்குச் செய்யும் தொல்லருளென்று பரத்வாதிகளையுடையவன் எவ்விடத்தானென்னும் பாவியர்க்கும் இருகரையுமழிக்கும் க்ருபாப்ரவாஹ முடையவன் பொய் கூத்து வஞ்சக்களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்திபல பரமாத்மராகம், (2) பேரமர் பின்னின்று கழியமிக்கு யானேயென்ன வாய்ந்தாற்ற கில்லாது நீராய் மெலிய ஊடுபுக்கு வளர, (3) விஷ வ்ருக்ஷபலங்கள் கைகூடினவர் அடிமை புக்காரையும் ஆட்செய்வாரையும் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர்குழாங்களைக் கண்டு காப்பிட்டு ப்ரஹ்லாத விபீஷணர் சொற்கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து, (4) தேஶ காலதோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள், நீங்கள் நிறுத்துகிற வர்களை தேவதைகளாக நிறுத்தினவனை, (5) மேவிப் பரம்புமவரோடொக்கத் தொழில் யுகதோஷமில்லையாமென்று விஷ்ணுபக்திபரராக்கிக் கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி ஸித்தாஞ்ஜநத்தையிடுகிறார் அஞ்சாம்பத்தில்.
கீழ்ச்சொன்ன பரத்வாதிகளால் வந்த அவனுடைய உத்கர்ஷத்தையும் தம்முடைய நிகர்ஷத்தையுமநுஸந்தித்து அகல்வாரளவிலும் மேல்விழுந்து விஷயீகரிக்கும்படி பரம க்ருபாவானான ஸர்வேஶ்வரன் கீழிவர்க்குப் பிறப்பித்த விரக்திபலமான ஸ்வவிஷயமான பக்தியை பரம்பரயா அபிவ்ருத்தமாக்க அந்த பக்தியையும் பாகவதஸமாகமத்தையும் உடையரான இவர் திருத்தின தம்மையும், திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களையும் காண்கைக்கு வந்த நித்யஸூரிகளையும், ஶ்வேதத்வீபவாஸிகளான ஸித்தரையும் கண்டு மங்களாஶாஸநம் பண்ணி, திருந்தாத ஆஸுரப்ரக்ருதிகளையும் பகவத்பாகவத வைபவத்தையும் உபதேஶித்துத் திருத்தி பாகவதஸமாஜம் தர்ஶநீயமாம்படியான ஜ்ஞாநம் பிறந்தார்க்கும் ப்ராப்ய த்வரைக்கு அடியான பக்தியையும் உபதேஶித்துத் தலைக்கட்டுகிறார் என்கிறார்.
(1) (ஆவாவித்யாதி) “ஆவாவென்றருள்செய்து” (திருவாய்..5-1-9) என்றும், “தானே இன்னருள் செய்து” (திருவாய்மொழி.5-1-10) என்றும் “கலியுகமொன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள்செய்யும்” (திருவாய்..5-2-11) என்றும் “தொல்லருள் நல்வினையால்” (திருவாய்மொழி.5-9-10) என்றும் சொல்லுகையாலே “அம்மானாழிப்பிரான் அவனெவ்விடத்தான் யானார் எம்மா பாவியற்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்” (திருவாய்மொழி.5-1-7) என்று கையும் திருவாழியுமான வழகை நித்யஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டு அங்குள்ளார் பரிமாறவிருக்கிறவன் எவ்வளவிலே, நித்யஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகான நான் எவ்வளவிலேன்; கீழ்ச்சொன்ன அவனுடைய பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதிகளாலே வந்த உத்கர்ஷத்தையும் தங்களுடைய நிகர்ஷத்தையும் அநுஸந்தித்து அகலும்படியான எத்தனையேனும் மஹாபாபிகள் அளவிலும் ஐயோ ஐயோவென்று அர்த்தித்வ நிரபேக்ஷமாக தன்பக்கலிலே ந்யஸ்தபரரானார்க்கு காலதோஷம் தட்டாதபடி பண்ணும் ஸ்வாபாவிக க்ருபையை உடையனாகையாலே “விதிவாய்க்கின்று வாய்க்கும்” (திருவாய்மொழி.5-1-7) என்கிறபடியே தன்னுடைய நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யமாகிற கரையையும் இவனுடைய ஔபாதிக ஸ்வாதந்த்ர்யமாகிற கரையும் அழியப் பெருகும்படியான க்ருபாப்ரவாஹத்தையுடைய ஸர்வேஶ்வரன். (பொய்க்கூத்து வஞ்சக்களவு தவிர) “பொய்யே கைம்மை சொல்லி” (திருவாய்மொழி.5-1-1) என்றும் “என்றென்றே சில கூத்துச் சொல்ல” (திருவாய்மொழி.5-1-2) என்றும் “என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே” (திருவாய்மொழி.5-1-3) என்கிறபடியே மெய்கலவாத பெரும் பொய்களைச் சொல்லி ஸர்வஜ்ஞனாய் ஸர்வாந்தர்யாமியான உன்னையும் பகட்டும் க்ருத்ரிமயுக்தமான மநஸ்iஸத் தவிர்ந்தே என்று இவர் தவிரும்படி. (முற்றவும் தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்திபல பரமாத்மராகம்) “என்னை முற்றவும் தானானான்” (திருவாய்மொழி.5-1-10) என்று எனக்கு ஸர்வவித போக்யமுமான “உன்னை விட்டென் கொள்வன் “ (திருவாய்மொழி.5-1-3) என்று நான் விட்டவன்றும் விடமாட்டாத உன்னை யொழிய துராராதமாய் ஆராதித்தாலும் கிடைப்பது ஒன்றில்லாத விஷயத்தைப் பற்றவோ என்று இவர்தாமே பேசும்படி “கண்டசதிர் கண்டொழிந்தேன்” (திருவாய்மொழி.4-9-10 ) என்கிறபடியே தன்னுடைய போக்யதையாலே ஸ்வவ்யதிரிக்தங்களை யுபேக்ஷிக்கும்படி கீழில் பத்தில் பிறந்த விரக்திக்குப் பலமான “பரமாத்மநி யோ ரக்த: விரக்த: அபரமாத்மநி” (பார்ஹஸ்பத்யஸ்ம்ருதி) என்கிறபடியே அபரமாத்மவிஷயமான விரக்திக்குப் பலமான பரமாத்மவிஷய ராகம்.
(2) (பேரமர் இத்யாதி ஊடுபுக்கு வளர) “பேரமர் காதல்” (திருவாய்மொழி.5-3-4) “பின்னின்ற காதல்” (திருவாய்மொழி 5-4-6) என்று அபரிச்சேத்யமாய்ப் பொருந்திப் பிடரி பிடித்துக்கொண்டு நின்று நெஞ்சை முடிப்பதாய்க் “கழிய மிக்கதோர் காதலளிவள்” (திருவாய்மொழி.5-5-10) என்று பார்ஶ்வஸ்த்தரும் பேசும்படி மிகவும் கை கழிந்து, (யானேயென்னவாய்ந்து) “கடல் ஞாலம் செய்தேனும் யானே” (திருவாய்..5-6-1) என்றும் “வாய்ந்த வழுதி வளநாடன்” (திருவாய்..5-6-11) என்றும், “துஷ்டகாளிய” இத்யாதி. இப்படி இவனுடைய ஜகத் காரணத்வாதி அத்புத கர்மங்களை நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே அவனை பாவித்துப் பேசும்படி கிட்டி (ஆற்றகில்லாது) “உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்” (திருவாய்மொழி.5-7-71) என்று அவனையொழிய ஒரு ப்ரகாரத்தாலும் ஆற்றமாட்டாதபடியாய், (நீராய்) “ஆராவமுதே அடியேனுடலம் நீராய்” (திருவாய்..5-8-1) என்று போக்யதாதிஶயத்தாலே வந்த ப்ராவண்யத்தாலே அநுபவ உபகரணமான ஶரீரம் ஶிதிலமாம்படியாய், , (மெலிய)“வைகலும் வினையேன் மெலிய” (திருவாய்..5-9-1) அதுதான் ஒருநாளன்றிக்கே ஸர்வகாலமும் மெலியும் படியாய், (ஊடுபுக்கு வளர) “நிறந்தனூடுபுக்கெனதாவியை உருக்கி” (திருவாய்மொழி.5-10-1) என்று மர்மத்திலே புக்கு ஆத்மாவை த்ரவத்ரவ்யமாக்கி முடிக்கும்படி அபிவ்ருத்தமாய்,
(3) (விஷவ்ருக்ஷ பலங்கள் கைகூடினவர்) “ஸம்ஸாரவிஷவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே கதாசித் கேஶவே பக்திஸ் தத்பக்தைர்வா ஸமாகம:” என்கிறபடியே ஸம்ஸாரவிஷவ்ருக்ஷ பலம் இப்படிப்பட்ட பகவத்பக்தியும் பாகவத ஸமாகமமான இவை இரண்டும் கைபுகுந்தவிவர். (அடிமை புக்காரையும் ஆட்செய்வாரையுங் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு) ஒன்றுந்தேவிலே “பாடியாடிப் பரவிச்செல்மின்கள்” (திருவாய்மொழி.4-10-2) “தெய்வம் மற்றில்லை” (திருவாய்மொழி.4-10-3) “நாயகனவனே” (திருவாய்மொழி.4-10-4) “ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி.4-10-5) “அறிந்தோடுமினோ” (திருவாய்மொழி.4-10-6) “ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கடிமை புகுவதுவே” (திருவாய்மொழி. 4-10-7) “உளங்கொள் ஞானத்து வைம்மின்” (திருவாய்மொழி 4-10-9)”ஆட்செய்வதே உறுவதாவது” (திருவாய்மொழி.4-10-10) என்று இப்படி உபதேஶிக்கக் கேட்டுத் திருந்தி அடிமை புக்க ஸ்ரீவைஷ்ணவர்களையும் “ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன்” (திருவாய்மொழி.4-10-11) என்று இப்படித் திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும் காண்கைக்கு வந்த “வைகுந்தன் பூதங்களேயாய்” (திருவாய்..5-2-5) “தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்” (திருவாய்மொழி.5-2-4) “தேவர்கள் தாமும் புகுந்து குழுமித் தேவர் குழாங்கள்” (திருவாய்மொழி.5-2-3) என்று லோகாந்தரமான ஸ்ரீவைகுண்டத்திலே நின்றும் போந்தவர்களுமாய் த்வீபாந்தரமான க்ஷீராப்தியில் நின்றும் போந்தவர்களுமான நித்யஸூரிகளான திரள்களை “கண்டோம் கண்டோம் கண்டோம்” (திருவாய்மொழி.5-2-2) என்று கண்ணுக்கினயதாயிருக்கையாலே கண்டோம் என்று பலகாலும் சொல்லும்படி கண்டு “பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி.5-2-1) என்று அத்திரள் அபிவ்ருத்தமாயிடுக என்று மங்களாஶாஸநம் பண்ணின இவர். (ப்ரஹ்லாத விபீஷணர் சொல்கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து) “அரக்கரசுரர் பிறந்தீர் உள்ளீரேல்” (திருவாய்மொழி.5-2-5) என்று “த்வய்யஸ்தி மய்யஸ்தி” என்று ப்ரஹ்லாதாழ்வான் உபதேஶிக்கக் கேட்டுத் திருந்தாத ஆஸுரப்ரக்ருதியான ஹிரண்யன் போல்வாரையும், “ப்ரதீயதாம் தாஶரதாய மைதிலீ” (ரா.யு.14-34) என்று ஸ்ரீவிபீஷணப் பெருமாளுடைய உபதேஶம் கேட்டுத் திருந்தாத ராக்ஷஸப்ரக்ருதியான ராவணன் போல்வாரையும் தேடிப்பிடித்து.
(4) (தேஶகாலதோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்) “கொன்றுயிருண்ணும் விசாதி பகை பசி தீயனவெல்லாம் நின்றிவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்” (திருவாய்மொழி.5-2-6) என்றும் “திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து” (திருவாய்மொழி.5-2-3) என்றும் சொல்லுகிறபடியே ஶரீரத்தை முடித்து ப்ராணாபஹாரம் பண்ணக் கடவதான வ்யாதி பகை பசி முதலான தேஹதோஷமும் “பவிஷ்யத்யதரோத்தரம்” என்கிறபடியே பதார்த்தஸ்வபாவங்கள் வேறுபட்டுவரக் கடவதான கலிப்ரயுக்தமான கால தோஷமும் தங்கள் ஸஞ்சாரத்தாலே போம்படி “இரியப் புகுந்திசைபாடி எங்குமிடங்கொண்டனவே” (திருவாய்மொழி.5-2-3) என்கிறபடியே பகவதநுபவப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பெரிய ஆராவாரத்தையுடைத்தாம்படி விபரீதர்க்கு இடமில்லாதபடி விஸ்ம்ருதராய்க் கொண்டு “மறுத்திருமார்வனவன்தன் பூதங்கள் கீதங்கள்பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்மினீரே” (திருவாய்,.5-2-8) என்று ஶ்ரிய:பதியாய் ஸ்ரீவத்ஸ வக்ஷஸ்தலனான ஸர்வேஶ்வரனுடைய குணங்களைத் தங்களுக்கு ஸத்தாதாரகமாக உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்த விபூதி ஸ்வபாவத்தாலே வந்த வெறுப்பற்று எங்கும் விஸ்த்ருதரானார்கள். அவர்களை அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு கிட்டி நீங்கள் உஜ்ஜீவியுங்கோள்; அவ்வளவு போகமாட்டாதே தேவதாந்தர ப்ராவண்யத்தாலே பகவத் வைபவமறிகைக்கீடான அளவிலிகளாகில் (நீங்கள் நிறுத்து கிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவன்) “நிறுத்தி நும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்” (திருவாய்மொழி.5-2-7) என்றும் அஸதஸ்யமாகையாலே பிறரறியாதபடி ராஜஸ தாமஸ யுக்தமான உங்கள் நெஞ்சாலே அவற்றுக்கு ஸ்வத:உத்கர்ஷமில்லாமையாலே நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி த்யாநம் பண்ணுகிற தேவதைகளை “நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வநாயகன் தானே” (திருவாய்மொழி.5-2-8) என்று ராஜாவானவன் ஊர்தோறும் விடைச் சேவகரை நிறுத்துமாபோலே உங்களுக்காஶ்ரயணீயராக நிறுத்தினான் அந்த ஸர்வேஶ்வரன் தானே; அவனை,
(5) (மேவிப் பரம்புமவரோடொக்கத் தொழில் யுகதோஷமில்லையாமென்று) “நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத் தொக்கவமரர் குழாங்கள் கண்ணன் திரு மூர்த்தியை மேவி மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகமொன்றுமில்லை” (திருவாய்மொழி.5-2-10) என்று ப்ரஹ்மேந்த்ரருத்ராதிகளான தேவதா ஸமூஹங்கள் ஸர்வஸுலபனான ஸர்வேஶ்வரனுடைய ஶுபாஶ்ரயமான விக்ரஹத்தை ஆஶ்ரயித்துத் தங்கள் லோகங்களிலே விஸ்த்ருதரானார்கள்; அவர்களைப் போலே நீங்களும் அவனையாஶ்ரயிக்கப் பெறில் விபரீதப்ரவர்த்தகமான யுகதோஷம் உங்களுக்குத் தட்டாதென்று (விஷ்ணுபக்தி பரராக்கி) என்றிப்படி உபதேஶித்து “விஷ்ணுபக்தி பரோதேவ: விபரீதஸ்ததாஸுர:” என்று பகவத்பக்தியுக்தராம்படி திருத்தி, (கண்ணுக்கினியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக்காணும் பக்தி ஸித்தாஞ்ஜனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்) –
“கண்ணுக்கினியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர்” (திருவாய்மொழி.5-2-2) என்று பாகவத ஸமாஜ தர்ஶனம் இனிதாம்படி அவ்விஷயத்தில் சாபலமுடையார்க்கு “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே” (திருவாய்..5-5-2) என்று உபாயதஶையிலே நின்று ப்ராப்யதஶையிலே நிற்கிற தம்மைப் பொடியும்படியான அவர்களுடைய உபாயாத்யவஸாய ஜ்ஞாநத்தின்மேலே “மநஸி விலஸிதாக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந” (ஸ்ரீகுணரத்நகோசம்.12) என்கிறபடியே ப்ராப்ய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த பக்தியை உபதேஶிக்கிறார் என்கிறார் அஞ்சாம் பத்தில்.
224. (1) என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மினென்று கருணையாலே ஸர்வலோகபூதேப்ய: என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலும் ஆகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற ஶரண்யன் (2) அஜ்ஞாநாஶக்தி யாதாத்ம்ய ஜ்ஞாநங்களளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணரா யென்னும்படி மெய்யமர் பக்தி பூமபலமாகவும் அநந்யகதித்வமுடைய தமக்குப் (3) பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டு ஏகசிந்தையராய் திர்யக்குக்களையிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து விளம்பரோஷம் உபாயத்தாலேயழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க, பலித்தவாறே ஸப்ரகாரமாக ஸக்ருத் கரணீயமென்று புராண பௌராணிகள் த்யாஜ்யாம்ஶமாக்கின (5) சிதசித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களைக் கைவலிந்து கைகழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய ஶேஷமாக்கியும் புறத்திட்டுக் காட்டியென்று ப்ரஸங்கிக்கில் முடியும்படி விட்டு, (6) தந்தை தாய் உண்ணும்சோறு மாநிதி பூவையாவையுமொன்றேயாக்கி, (7) தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரிவிக்கிரமனாகக் குறள்கோலப் பிரானாய் அடியை மூன்றையிரந்த வன்கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தடவந்த தடந்தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும்படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு அகலகில்லேனென்று பூர்வ வாக்யமநுஸந்தித்தவர் (10) பிணக்கறத் தொடங்கி வேதப் புனித விறுதி சொன்ன ஸாத்யோபாய ஶ்ரவண ஸஶோக ஸஜாதீயர்க்குத் (11) தந்தனன் மற்றோர் களைகணிலம் புகுந்தேனென்று ஸ்வஸித்தோபாய நிஷ்டையை உக்த்யநுஷ்டாநங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில்
தன்னுடைய பரமக்ருபையாலே ஸர்வரும் வந்தாஶ்ரயிக்கும்படி இருக்கிற ஸர்வஶரண்யனான ஸர்வேஶ்வரன் பக்திபாரவஶ்யத்தாலே அநந்யகதிகளான இவர்க்குத் தன் திருவடிகளே நிரபேக்ஷோபாயமென்னுமிடத்தைக் காட்டிக் கொடுத்த அந்த உபாயத்திலே விச்சேதமில்லாதபடி வ்யவஸாயத்தையுடையராய்த் தம்முடைய வ்யவஸாயத்தை கடகர் முகத்தாலே அவனுக்கறிவித்துத் தம்முடைய விளம்பாக்ஷமத்வத்தால் வந்த இன்னாப்பைப் பரிஹரித்தவனுடைய ஸாமர்த்யத்தை அநுஸந்தித்து குணாநுபவத்துக்குப் பண்ணின ப்ரபத்தியும் பலித்தவாறே ப்ராப்திக்குப் ப்ரபத்தி பண்ணுவதாக ஸித்தோபாயஸ்வீகாரம் இதரோபாயத்யாகபூர்வகமாக வேண்டுகையாலே பௌராணிகவசந ப்ரக்ரிiயாலே உபாயவிரோதிகளான த்யாஜ்யங்களை வாஸனையோடே அவற்றினுடைய ப்ரஸங்கமும் அஸஹ்யமாம்படி விட்டு விட்டவையெல்லாம் தமக்கு ப்ராப்த விஷயமே ஆக்கி நிரதிஶயமான பரபக்தியோடே திருவுலகளந்த ஸர்வஸுலபமான திருவடிகளை நித்யஸூரிகளும் வந்து அனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு பூர்வவாக்ய ப்ரக்ரியையாலே ஶரணம் புக்கவர் பத்துடையடியவரிலே தொடங்கி அஞ்சாம்பத்தளவாக உபதேஶித்த பக்த்யுபாயத்தினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தானத்தாலே ஶோகம் ஜநிக்கும்படியான அதிகாரம் பிறந்தவர்களுக்குத் தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஶிப்பிக்கிறார் என்கிறார்.
(1) (என்னையும் இத்யாதி ஶரண்யனென்கிறதளவாக) “ஏறு சேவகனார்க்கு என்னையும் உளளென்மின்களே” (திருவாய்மொழி.6-1-10) “யாவர்க்கும் வன் சரணே” (திருவாய்மொழி.6-3-7) “வன்சரண் சுரர்க்காய்” (திருவாய்மொழி.6-3-8) என்று ஆர்த்தரக்ஷணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரக்ஷ்யவர்க்கத்திலே நானுமொருத்தியுளள் என்று சொல்லுங்கோள் என்றும், திருவிண்ணகரிலே நின்றருளினவனுடைய திருவடிகளல்லது ஸர்வர்க்கும் வலியரக்ஷை இல்லை; தேவர்களுக்கும் வலிய ரக்ஷை என்று இவர்தாமே பேசும்படி “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்” (திருவாய்மொழ. 6-10-11) என்று நமக்கு ஶேஷபூதராயுள்ளாரெல்லாரும் நம்மடியின் கீழே அநந்யப்ரயோஜநராய்ப் புகுந்து உஜ்ஜீவியுங்கோள் என்று அவன்தானே அருளிச்செய்யும்படியான க்ருபையாலே (ஸர்வலோக பூதேப்ய: என்கிறவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல்) “ஸர்வலோக ஶரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபஸ்த்திதம்” (ரா.யு. 17-14) என்றும், “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத்வ்ரதம் மம” (ரா.யு.18-33) என்றும் சொல்லுகிற ஶரணாகதனுடையவும் ஶரண்யனுடையவும் உக்தி ஸமுத்ரகோஷம் போலே நிரர்த்தகமாகாதபடியாகவும், கண்டாதுபரியாகாதபடியாகவும் “வானவர் வானவர் கோனொடும் நமன்றெழும் திருவேங்கடம்” (திருவாய்மொழி.3-3-7) என்றும் “வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடம்” (முதல் திருவந்தாதி.26) என்றும் “வானரமும் வேடுமுடை வேங்கடம்” (நான்முகன் திருவந்தாதி.47) என்றும் “கண்டு வணங்கும் களிறு” (மூன்றாம் திருவந்தாதி.70) என்றும் சொல்லுகிறபடியே நித்யஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குகளோடு வாசியற ஆஶ்ரயிக்கலாம்படி நிற்கையாலே தன்னுடைய ஸமாஶ்ரயணீயத்வம் ஶிலாலிகிதமாம்படி திருமலையிலே எழுந்தருளி நிற்கிற அநாலோசித விஶேஷாஶேஷலோகஶரண்யனான ஸர்வேஶ்வரன்,
(2) (அஜ்ஞாந அஶக்தியித்யாதி அநந்ய கதித்வமுடைய தமக்கு) “அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா ஸ்வபக்தேர் பூம்நா வா ஜகதி கதிமந்யா விதுஷாம் கதிர் கம்யஶ்சாஸௌ ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமநோ: ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவாந் ஶௌநகமுநி:” (பட்டர் ஸ்ரீஸூக்தி) என்று உபாயாந்தரங்களை அறிகைக்கும் அநுஷ்டிக்கைக்கும் ஈடான ஜ்ஞாநஶக்திகளில்லாத அளவால் வந்த அந்த உபாயாந்தரங்களில் அந்வயமேயன்றிக்கே ஸ்வரூபபாரதந்த்ர்யத்தாலே பகவதேக ரக்ஷ்யமாகையொழிய வ்யதிரிக்தோபாயங்கள் ஸ்வரூபவிருத்தங்கள் என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” (திருவாய்மொழி.5-8-3) என்று வ்யதிரிக்தோபாயங்கள் ஸ்வரூபவிருத்தங்கள் என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” (திருவாய்மொழி.5-8-3) என்று அவற்றிலுண்டான அநந்வயத்தளவன்றிக்கே, “அங்குற்றேனல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமல்லேன்” (திருவாய்மொழி.5-7-2) “என் நான் செய்கேன்” (திருவாய்மொழி.5-8-3) “புணரா நின்ற மரமேழ் எய்த ஒரு வில்வலவாவோ” (திருவாய்மொழி.6-10-5) என்று நித்யஸூரிகள் ஸம்ஸாரத்திலே உலாவினாப்போலே ஸித்தஸாதநம் பண்ணி வர்த்திக்கிறேன் அல்லேன் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுகிறவர்களிலே ஒருவனாய் வர்த்திக்கிறேனல்லேன், அன்றிக்கே உன்னை அநுபவிக்கிற நித்யஸூரிகளிலே ஒருவனாய் அங்கே வர்த்திக்கிறேன் அல்லேன் உன்னை ஒழிய ஶப்தாதி விஷயாநுபவம் பண்ணுகிற ஸம்ஸாரிகளிலேயாய் இங்கே வர்த்திக்கிறேனல்லேன். உன்னுடைய ஸௌந்தர்யாதிகளிலே ஈடுபட்டு உன்னைத்தான் வேணுமென்று ஆசையாலே பலஹீநனாய்த் தளர்ந்து இனி உபாயாநுஷ்டாநம் பண்ண க்ஷமனல்லேன்; உன் திருவடிகளைக் கிட்டுகைக்கு என்னால் செய்யலாவதில்லை; எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தியுண்டு? உன்னுடைய ரக்ஷணத்திலே அதிஶங்கை பண்ணின மஹாராஜருடைய ஶங்காநிராகரணார்த்தமாக இலக்குக் குறிக்கவொண்ணாதபடி திரண்டு நின்ற மராமரங்கள் ஏழையும் எய்த ஏகவீரனே ஓ என்று கூப்பிடும்படி “மெய்யமர் காதல்” (திருவாய்மொழி.6-8-2) என்று அவனுடைய திருமேனியோடே அமரவேண்டும் படியாய்த் தம்முடம்போடே அவனமர வேண்டும்படியாய் ஸத்யமாய்ப் பொருந்தி ஸ்வரூப அநுபந்தியாய் கீழில் பத்தில் தமக்குப் பிறந்த பக்தி பாரவஶ்யத்தினுடைய பலமாகவுமாம். உபாயாந்தரத்துக்கன்றிக்கே “களைகண் மற்றிலேன்” (திருவாய்மொழி.5-8-8) என்னும்படி அநந்யகதித்வமுடைய இவர் தமக்கு,
(3) (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டு ஏகசிந்தையராய்) “ஆறெனெக்கு நின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய்” (திருவாய்..5-7-10) என்று தன் திருவடிகளே ஸஹாயாந்தர நிரபேக்ஷமான ஸாதநமென்னுமிடத்தைக் காட்டிக் கொடுக்க; “கழல்களவையே சரணாகக் கொண்ட” (திருவாய்மொழி.5-8-11) என்றும், “அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” (திருவாய்மொழி.5-9-11) என்றும், “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறுமேகசிந்தையனாய்” (திருவாய்மொழி.5-10-11) என்றும் சொல்லுகிறபடியே விரோதி நிரஸந ஶீலனாயிருக்கிறவன் திருவடிகளே நிரபேக்ஷோபாயமென்கிற ஏகரூபமான வ்யவஸாயத்தையுடையராய், (திர்யக்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல்பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் வினையாட்டியேன் காதன்மை கைகள் கூப்பிச்சொல்லீர் “(திருவாய்மொழி.6-1-1) என்றும், “சேவகனார்க்கென்னையுமுளளென்மின்களே” (திருவாய்மொழி.6-1-10) என்றும் பெற்றல்லது தரியாத அதிமாத்ர ப்ராவண்ய முடையராயிருக்கச் செய்தேயும், ஸ்வரக்ஷணத்தில் அந்வயமில்லாத அத்யந்தபாரதந்த்ர்யத்தினாலே ததேக ரக்ஷ்யமாயிருக்குமென்கிற தம்முடைய கருத்தை, ஶுத்தஸ்வபாவராய் ஶாகாஸஞ்சாரிகளாய் மதுகரப்ரக்ருதிகளாய் பக்ஷபாதிகளாய் ஷட்பதநிஷ்டரான கடகரையிட்டறிவித்து (விளம்பரோஷமுபாயத்தாலே யழிய) இப்படியறிவித்த விடத்திலும் அவன் தாழ்க்க அத்தால் வந்த ப்ரணயரோஷத்தாலே, அவன் வந்து மேல் விழுந்தவளவிலும், “போகுநம்பீ “ (திருவாய்மொழி.6-2-2) “கழகமேறேல் நம்பீ “(திருவாய்மொழி.6-2-6) என்று அவனை உபேக்ஷித்து அவன் முகம் பாராமல் இருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அவனும் தன்னுடைய போகவிரோதி யாகையாலே “அழித்தாயுன் திருவடியால்” (திருவாய்மொழி.6-2-9) என்கிறபடியே அந்த அநாதராந்யபரதைகளை தனக்கும் சரமோபாயமான திருவடிகளாலே உபலக்ஷிதமான விக்ரஹவைலக்ஷண்யத்தாலே குலைத்த அவனோடே சேர்ந்து.
(4) (உருகாமல் வலித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே) “உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்” (திருவாய்.6-2-9) என்றிப்படி அல்லோம் என்ற நம்மைச் சேர்த்துக் கொண்டதோராஶ்சர்யமிருந்தபடியென் என்றுருக, இதுதொன்று கண்டோ ஆஶ்சர்யப்படுகிறீர், தன்னில்தான் சேராதபடி விலக்ஷணங்களானவை நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர் என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தை நல்குரவுஞ்செல்விலே காட்டி உருகாதபடி வலிக்கப் பண்ண இவரும் “நல்குரவும்” என்று தொடங்கி “திருவிண்ணகர்க் கண்டேனே” (திருவாய்மொழி.6-3-1) என்று அத்தைக் கண்டு தேறினவிதுவும் குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி.6-4-1) என்று தொடங்கி “திருவிண்ணகர்க் கண்டேனே” (திருவாய்மொழி.6-3-1) என்று அத்தைக் கண்டு தேறின இதுவும் குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி.6-4-1) என்று தொடங்கி நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே” (திருவாய்மொழி.6-4-10) என்னும்படி க்ருஷ்ணகுணசேஷ்டிதங்களை எனக்கார் பிறர் நாயகரே” (திருவாய்மொழி.6-4-10) என்னும்படி க்ருஷ்ணகுணசேஷ்டிதங்களை தரித்து நின்று அநுபவிக்கலாம்படி பலித்தவாறே. `உருகாமல் வரித்தும்’ என்று பாடமான போது பிறந்தவாற்றிலே உன்னைப் பிரிந்த தஶையிலே உன்னுடைய குணாநுஸந்தாநம் பண்ணி தரிக்கலாமோ வென்று பாராநின்றேன்; “ஊடுபுக்கெனதாவியை நின்று நின்றுருக்கி உண்கின்ற” (திருவாய்மொழி.5-10-10) என்று அவைதானே ஶிதிலமாக்கா நின்றன, தரித்து நின்று குணாநுஸந்தாநம் பண்ணும்படி பண்ணியருளவேணுமென்றும் “மற்றோர் களைகணிலம் காண்மின்களே” (திருவாய்மொழி.6-3-10) “(நாகணைமிசை நம்பிரான்?) சரணே சரண்” (திருவாய்மொழி.5-10-11) என்று உபாய வரணம் பண்ணி அந்த வரணமும் என்ன குறையெனக்கென்று தொடங்கி “விண்மிசைத் தனதாமமே புக மேவிய சோதி தன்தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன்” (திருவாய்மொழி.6-4-10) என்று க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை திவாராத்ர விபாகமற ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு பேசப் பெற்ற எனக்கு என்ன குறையுண்டு, பொய்யாஸநம் இடுவார் மல்லரையிட்டு நெருக்கத் தேடுவார் எதிரம்பு கோர்ப்பாராய்க் கொண்டு இருக்கிற இந்த விபூதியிலிராதே “கதஸ் ஸ்வம்ஸ்த்தாநமுத்தமம்” என்கிறபடியே பரிவரேயான நிர்பயஸ்த்தாநத்திலே எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து முறையிலே கிட்டப் பெற்றவெனக்கு வேறு நிர்வாஹகருண்டோ என்றும்; கர்விக்க வேண்டும்படி பலித்தவாறே என்றுமாம். (ஸப்ரகாரமாக ஸக்ருத் கரணீயமென்று) இதரோபாயத்யாகமாகிற ப்ரகாரத்தோடே ஸித்தஸாதநஸ்வீகாரம் “ஸக்ருதேவ” (ரா.யு.18-33) என்கிறபடியே ஒருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து.
(5) (புராணபௌராணிகர் தயாஜ்யாம்ஶமாக்கின சிதசித் ப்ராப்ய ப்ராபக ஆபாஸங்களை) புராணேதிஹாஸங்களும் அவற்றை உள்ளபடியறிகையாலே பௌராணிகரான உடையவரும் “பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந், ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி க்ருஹாணிச, ஸர்வதர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய ஸார்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந்” (சரணாகதி கத்யம்) , “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச, பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநி வை த்யக்த்வா புத்ராம்ஶ்ச தாராம் ச ராகவம் ஶரணம் கத:” (ரா.யு.19.5), என்று த்யாஜ்யாம்ஶமாக்கினவற்றில் பித்ராதிகளான சேதநருடைய ரக்ஷணம் “மாத்ருதேவோ பவ” (திருவாய்மொழி.6-2-2) இத்யாதிப்படியே ஸாதநாந்தரத்துக்கு உபகாரகமாகையாலே ப்ராபகங்களாயும் அவர்களுடைய வியோகம் அஸஹ்யமாம்படி ப்ரியவிஷயமாகையாலே ப்ராப்யங்களாயுமிருக்கையாலும்; ரத்நாதிகள் உபாயாந்தரத்துக்கு தாநாதிமுகத்தாலே ஸஹகாரிகளாயிருக்கையாலே ப்ராபகங்களாயும் தன்னை யழியமாறியும் இவற்றை ஆர்ஜிக்க வேண்டும்படி ஸ்வயம் ப்ரயோஜநங்களாகையாலே ப்ராப்யங்களாயும் இருக்கிற இந்த ப்ராப்யப்ராபகாபாஸங்களை; ஸாக்ஷாத் ப்ராப்யப்ராபகங்கள் அல்லாமையாலே ஆபாஸங்கள் என்கிறது. (கைவலிந்து கைகழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும்) “நம்மைக் கை வலிந்து” (திருவாய்மொழி.6-5-7) “இழந்தது சங்கே” (திருவாய்மொழி.6-6-1) “இதெல்லாம் கிடக்க இனிப் போய் எம்மையொன்றும் நினைத்திலளே” (திருவாய்மொழி.6-7-9) “இன்றெனக்குதவாதகன்ற” (திருவாய்மொழி.6-7-6) என்று சிதசித் வர்க்கமான இவற்றைக் கைவிட்டும், உறங்கினவன் கையிலே எலுமிச்சம் பழம் போலே ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே தன்கையில் நின்றும் நெகிழும்படி கண்டு “ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய” (சரணாகதி கத்யம்) என்கிறபடியே இவற்றை மதியாமல் அகன்றும் (ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய ஶேஷமாக்கியும்) “பொன்னுலகாளீரோ” (திருவாய்மொழி.6-8-1) “நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ” (திருவாய்மொழி.6-8-2) “ஓடிவந்தென் குழல்மேலொளி மாமலர் ஊதீரோ” (திருவாய்மொழி.6-8-3) என்று கீழ் தாம் விட்டவிடத்திலும் தம்மை விடாதபடி பற்றிக் கிடக்கிற ஆத்மாத்மீயங்களை பகவத்விஷயத்தில் உபகாரகரானவர்களுக்கு “ஸத் குருப்யோ நிவேதயேத்” என்கிறபடியே ஸமர்ப்பித்து. (புறத்திட்டுக்காட்டி என்று ப்ரஸங்கிக்கில் முடியும்படி விட்டு) “புறத்திட்டின்னம் கெடுப்பாயோ பலநீகாட்டிப்படுப்பாயோ” (திருவாய்..6-9-8) என்று ஸம்ஸாரிகளுக்கு போக்யமான ஶப்தாதி விஷயங்களினுடைய தர்ஶநத்திலே ஸத்தாஹாநி பிறக்கும்படி அஸஹ்யமாய் இருக்கையாலே அவற்றைவிட்டு,
(6) (தந்தைதாயுண்ணுஞ் சோறுமாநிதி பூவையாவையுமொன்றேயாக்கி) “பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநி வை” (ரா.யு.19-5) என்றும், “த்வமேவ மாதாச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஶ்ச குருஸ் த்வமேவ, த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ” (சரணாகதி கத்யம்) என்றும் “வாஸுதேவஸ் ஸர்வம்” (கீதை.7-) என்றும் “மாதா பிதா ப்ராதா நிவாஸஶ்ஶரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:” (ஸு.உ.) என்றும் சொல்லுகிறபடியே “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த” (திருவாய்மொழி.6-5-11) என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதா பித்ரு ப்ரப்ருதிகளான ஸர்வவிதபந்துவும் என்றும், “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” (திருவாய்..6-7-1) என்று தாரகபோஷக போக்யங்களெல்லாம் ஸர்வ ஸுலபனான கருஷ்ணனே என்றும், “வைத்தமாநிதியாம் மதுசூதனையே அலற்றி” (திருவாய்மொழி.6-7-11) என்று ஆபத் ரக்ஷகமாகச் சேமித்துவைத்த அக்ஷயமான நிதியும் விரோதி நிரஸநஶீலனான அவனே என்றும், “பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவியெழும்” (திருவாய்மொழி 6-7-3) என்று லீலோபகரணங்களால் பிறக்கும் ரஸமெல்லாம் ஶ்ரிய:பதியினுடைய திருநாமங்களைச் சொல்லவே உண்டாகா நின்றது என்றும், இப்படி கீழ் விட்டவையெல்லாம் பகவத்விஷய மொன்றிலுமேயாக்கி,
(7) (தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே) “கோலத் திருமாமகளோடு உன்னைக்கூடாதே சாலப்பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ” (திருவாய்மொழி 6-9-10) “தீயோடுடன் சேர் மெழுகாயுலகில் திரிவேனோ” (திருவாய்..6-9-6) “கூவிக்கொள்ளுங்காலம் இன்னம் குறுகாதோ” (திருவாய்மொழி.6-9-9) “புணரேய் நின்ற மரம் இண்டின் நடுவே போன முதல்வாவோ” (திருவாய்மொழி.6-10-5) என்று ஸர்வப்ரகார ரக்ஷகனாய் பெரிய பிராட்டியாரோடேயிருக்கிற உன்னைக் கிட்டப்பெறாதே ஸம்ஸாரத்திலே இருந்து எத்தனைகாலம் இப்படியே அவஸந்நனாகக் கடவேன் என்றும், த்ரிவிக்ரமாபதாநம் பண்ணின உன்னைக் காண ஆசைப்பட்டுக் கிடையாமையாலே அக்நிஸகாஶத்தில் மெழுகுபோலே ஸம்ஸாரத்திலே இப்படி எத்தனை காலம் திரியக்கடவேன் என்றும், ஸர்வஸுலபமாய் நிரதிஶயபோக்யமான உன் திருவடிகளிலே என்னை அருளப்பாடிடுங்காலம் இன்னமணித்தாகாதோ என்றும், யமளார்ஜுநங்களின் நடுவே போன ஸர்வகாரணபூதனே என்றும் உன் திருவடிகள் மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே ப்ரத்யக்ஷமாகக் கிட்டுவதென்றோ என்கிற ஆர்த்தியோடே (ப்ரபத்தி முக்யாதிகாரமான பரமார்த்தியை உடையராய்)
(8) (த்ரிவிக்ரமனென்று தொடங்கி தடந்தாமரை யென்கிறதளவாக) “லோக விக்ராந்த சரணௌ ஶரணம் தே(அ)வ்ரஜம் விபோ” என்று ஸம்ஸாரிகளுடைய தோஷங்களை போக்யமாகக் கொண்டு அவர்களுடைய தண்மை பாராதே “தலை விளாக் கொண்ட எந்தாய்” என்கிறபடியே ஒரு நீராகவும் அவர்கள் தாங்களே நேரில் காணும்படி வடிவைக் காட்டி திருவடிகளை எல்லாருடைய தலைகளிலும் வைக்கையாலே ஆஶ்ரயணத்துக்கு உபயோகியான வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸௌலப்யங்களும், “தே” என்று தன்பேறாகச் செய்கைக்குறுப்பான ஸ்வாமித்வமும், “விபோ” என்று கார்யத்துக்கு உபயோகியான ஞானஶக்திகளும் த்ரிவிக்ரமாபதாநத்திலே ப்ரகாஶிக்கையாலே “தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்” “மாண்குறள் கோலப்பிரான்” (திருவாய்.5-9-6) “அடியை மூன்றை இரந்தவாறும்” (திருவாய்மொழி.5-10-9) “மின்கொள்சேர் புரிநூல் குறளாய் அகல்ஞாலம் கொண்ட வன்கள்வன்” (திருவாய்மொழி.6-1-11) என்றும் ஸூரிபோக்யனாய் ஸர்வஸ்வாமி யானவன் த்ரிவிக்ரமாபதாநம் பண்ணுகைக்காகப் பெருவிலையனான அழகைச் சிறாங்கித்து அனுபவிக்கலாம்படி வாமநவேஷபரிக்ரஹம் பண்ணி மஹாபலியுடைய யஜ்ஞ வாடத்திலே சென்று மூன்றடியென்றிரந்து ப்ரஹ்மசாரி வேஷத்தோடே நிற்கிற மஹாவஞ்சகன், “காண்மின்களுலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த” (திருவாய்மொழி.6-3-11) நோக்குவித்யை காட்டுவாரைப்போலே லௌகிகர் ப்ரத்யக்ஷிக்கும்படி “அகல்கொள் திசை வையமளந்த மாயன்” (திருவாய்மொழி. 6-4-6) “திசைஞாலம்தாவியளந்ததும்” (திருவாய்மொழி 6-5-3) “வையமளந்த மணாளன்” (திருவாய்மொழி.6-6-1) “மண்ணும் விண்ணும் கொண்ட மாயவம்மான்” (திருவாய்மொழி. 6-9-2) “ஓரடியால் எல்லாவுலகும் தடவந்த” (திருவாய்மொழி 6-9-6) “தாவிவையம் கொண்ட தடந்தாமரைகட்கே” (திருவாய்மொழி..6-9-9) என்று விஸ்த்ருதமாய் திக்குகளோடே கூடின பூமியையும் உபரிதநலோகங்களையும் தென்றல் உலாவினாப்போலே ஸுகதரமாம்படி எங்குமொக்கப் பரப்பி அளந்துகொண்ட நிரதிஶய போக்யமாய் அதிஸுகுமாரமான திருவடிகள்.
(9) (இணைத்தாமரைகள் காண இமையோரும் வரும்படி சென்றுசேர்ந்த உலகத்திலதத்தே கண்டு) “எந்நாளே நாம் மண்ணளந்த” (திருவாய்..6-10-6) இத்யாதி திருவுலகளந்தருளின ஸர்வ ஸுலபமாய் நிரதிஶய போக்யமாய்ச் சேர்த்தியழகை யுடைத்தான திருவடிகளை நாம் காண்பதெப்போதோ என்று நித்யஸூரிகளும் வந்தநுபவிக்க ஆசைப்பட்டுவரும்படி “அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை” (திருவாய்மொழி.3-3-8) என்று திருவுலகளந்தருளின ஶ்ரமந்தீர அச்செயலாலே ஸர்வஸ்மாத்பரனானவன் விடாயர் மடுவிலே சேருமாப்போலே உகந்து நிற்கிற “உலகுக்குத் திலதமாய் நின்ற திருவேங்கடம்” (திருவாய்..6-10-1) என்று ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு முக்யமான ஆபரணமாயிருக்கிற திருமலையிலே கண்டு (அகலகில்லேன் என்று பூர்வவாக்ய ப்ரக்ரியையாலே அநுஸந்தித்தவர்) “அகலகில்லேன் இறையும்” (திருவாய்மொழி.6-10-10) இத்யாதி. புருஷகாரபூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு வாத்ஸல்யாதி குணங்களை அநுஸந்தித்துக் கொண்டு தம்முடைய அநந்யகதித்வ அநுஸந்தாந பூர்வகமாக பூர்வவாக்யப்ரக்ரியையாலே பூர்ண ப்ரபதநம் பண்ணினவர்,
(10) (பிணக்கறத் தொடங்கி வேதப்புனிதவிருக்கை நாவில் கொண்டு) “பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து ஞானவிதி பிழையாமே அச்சுதன் தன்னை மேவித் தொழுதுய்ம்மினீர்கள்” (திருவாய்.5-2-9) என்கிறதளவாகக் கீழுபதேஶித்த ஸாத்ய ஸாதந பக்தி ஶ்ரவணத்தாலே அதினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தாநத்தாலும் ஸ்வபாரதந்த்ர்ய அநுஸந்தானத்தா லும் ஶோகம் பிறக்கையாலே தம்முடைய ப்ரபத்திநிஷ்டை துணையாம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு
(11) (தந்தனன் களைகணிலம் புகுந்தேனென்று ஸ்வஸித்தோபாய நிஷ்டையை உக்த்யநுஷ்டாங்களாலே காட்டுகிறார் என்கிறார்) “தந்தனன் தனதாள் நிழலே” (திருவாய்மொழி.6-3-9) “திருவிண்ணகர் மன்னுபிரான் கழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே” (திருவாய்மொழி.6-3-10) என்கிற தம்முடைய உக்தியாலும் “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து” (திருவாய்மொழி.6-10-11) என்கிற தம்முடைய அநுஷ்டானத்தாலும் தமக்கிந்த ஸித்தோபாயத்திலுண்டான நிஷ்டையை ப்ரகாஶிப்பிக்கிறார் என்கிறார் ஆறாம் பத்தில்.
225. (1) எண்ணிலாக் குணங்கள் பாலதுன்ப வேறவன் மாயாப் பல்யோகு செய்தி யென்னும் ஆஶ்சர்ய ஶக்தி யோகத்தாலே (2) தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம் புற்பா எறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல ஸர்வஶக்தி பாதமகலகில்லாத தம்மை (3) அகற்றுமவற்றின் நடுவேயிருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஓவென்று ஸாதனபலமான ஆக்ரோஶத்தோடே பழியிட்டுக் (4) கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியைக் கோயில் திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கித் தேற்ற வொண்ணாதபடி (5) தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பலாதாநம் மற்றும் கற்பாரிழவிலே சுவறிப் (6) பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து, சூழவும் பகைமுகம் செய்ய, எடுப்பும் சாய்ப்புமான க்லேஶம் நடக்க உபாயாதிகாரதோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்ரியைக் கேட்க, (7) ஐச்சமாக இருத்தி உறக்கொண்ட ஸ்வபர ப்ரயோஜநத்தை அருளிச்செய்ய, என்சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பெதிர் எதுவுமென்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8) தன்சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்கவிருந்த நிலத்தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காநகோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர், (9) சரமோபாய பரரானார்க்கு நீணகரமது, துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம் உள்ளித் தொழுமின் என்று ப்ராப்ய ஸாதநாவதியை ப்ரீதியாலே ப்ரகாஶிப்பிக்கிறார் ஏழாம் பத்தில்.
இப்படி ப்ரபந்நரான இவர்களுடைய அநிஷ்டநிவ்ருத்திபூர்வகமாக இஷ்டப்ராப்தியை பண்ணுகைக்கீடான ஆஶ்சர்யமான ஜ்ஞாநஶக்த்யாதி யுக்தனாகையாலே யதாஜ்ஞாநம் பிறந்தவர்களுக்குக் கொடுக்கக் கடவதான பரமபதத்தைத் தானே உபாயமாய்க் கொண்டு கொடுக்குமிடத்தில் ஶத்ருவுக்கும் திர்யக்ஸ்த்தாவரங்களுக்குமுட்படக் கொடுக்கவல்ல ஸர்வஶக்தியான ஸர்வேஶ்வரன் தன் திருவடிகளிலே ஸாங்கப்ரபதநம் பண்ணின தம்மை விஷயாந்தரங்களிலே மூட்டி நஶிப்பிக்கக் கடவதான இந்த்ரியங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக் கண்டு விஷண்ணராய்க் கூப்பிட்டு தம் தஶை தாம் பேசமாட்டாதே அபஹ்ருதசித்தராக அவன் தன் விஜயத்தைக் காட்டி தரிப்பிக்க அந்த தரிப்பும் ஸம்ஸாரிகளிழவை நினைத்துச் சுவறிப் பழையவார்த்தியே தலையெடுத்து அநுபாவ்ய விஷயம் ஸ்ம்ருதி விஷயமாய் ஒருமுகஞ்செய்து நலிய நோவுபட்டு இப்படி க்லேஶப்படுகிற இவர் உபாயபூதனாயிருக்கிற உனக்கு ஜ்ஞாநஶக்திகளில் குறைவற்றிருக்க எனக்கு ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறைவற்றிருக்க என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக்கடியென் என்று அவனைக் கேட்க அவனும் நமக்கும் நம்மடியார்க்கும் திருவாய்மொழிபாடுகைக்கு வைத்தோங்காணும் என்று தான் இவரை வைத்ததுக்கு ஹேதுவை அருளிச்செய்ய முதலாழ்வார்கள் வ்யாஸாதிகள் கவிபாடுகைக்கு உண்டாயிருக்க நம்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளுவதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்குப் ப்ரத்யுபகாரம் தேடிக் காணாமையாலே திருவாறன்விளையிலே அவன் பெரியபிராட்டியாரோடே கூட எழுந்தருளியிருக்கிற விருப்பிலே திருவாய்மொழி பாடி அடிமை செய்யப் பாரித்து அங்கே தம்முடைய திருவுள்ளம் ப்ரவணமாகையாலே பரமபதத்திலிருப்பை உபேக்ஷிக்கும்படியான ப்ரகாரத்தை உடையரான இவர் கீழ் தம்முடைய உபாயத்தில் நிஷ்டையை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு அந்த திருவாறன்விளையில் நின்றருளினவனுடைய திருவடிகளே உபாயம் அத்தேஶமே ப்ராப்யம் என்று தாமறுதியிட்ட ப்ராப்யப்ராபகங்களினுடைய முடிவைத் தம்முடைய திருவுள்ளத்தில் உகப்பாலே வெளியிடுகிறார் என்கிறார்.
(1) (எண்ணிலாக் குணங்கள் இத்யாதி) ஆஶ்சர்யயோகத்தாலே “எண்ணிலாப் பெருமாயனே” (திருவாய்மொழி.7-1-1) “குணங்கள் கொண்ட மூர்த்தியோர் மூவராய்ப் படைத்தளித்துக் கெடுக்கும்” (திருவாய்மொழி.7-1-11) “பாலதுன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்” (திருவாய்மொழி.7-2-7) “ஊழிதோறூழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையங்காக்கும்” (திருவாய்மொழி.7-3-11) “மாயா வாமனனே” (திருவாய்மொழி.8-8-1) “உள்ளப்பல்யோகு செய்தி” (திருவாய்மொழி.7-8-4) என்று எண்ணிறந்த கல்யாண குணங்களை உடையனாய் ஸத்வாதிகுணப்ரசுரமான மூர்த்திகளைக் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுமவனாய் இடமறிந்து ஸுகது:க்கங்களை ஸங்கல்பிக்குமவனாய் ஆஶ்ரித ரக்ஷணார்த்தமாகக் கல்பந்தோறும் திருமேனியும் சேஷ்டிதங்களும் வேறுபடக் கொள்ளுமவனுமாய் ஆஶ்சர்யசேஷ்டிதங்களை உடையவனுமாய் ஸர்வருடையவும் ரக்ஷணோபாயசிந்தை பண்ணுமவனுமாய் இப்படி உபாயக்ருத்யத்துக்கு அபேக்ஷிதமான ஆஶ்சர்யஶக்தி யோகத்தை உடையவனாகையாலே,
(2) (தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்ப்ராபகத்வம் புற்பாவெறும்பு பகைவனுக்குமாக்க வல்ல ஸர்வஶக்தி) “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதிசெய்யும் தெளிவுற்ற கண்ணன்” (திருவாய்மொழி.7-5-11) “ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்” (திருவாய்மொழி.7-6-10) என்று ப்ராப்யமும் ப்ராபகமும் தானேயென்று அத்யவஸித்துப் பின்பு நாட்டார் செயல் கண்டாதல் உக்த்யாபாஸங்கள் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு நிரதிஶயாநந்தமாய் ஒருவராலும் ஸ்வயத்நத்தாலே ப்ராபிக்கவொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத் தன்னருளாலே கொடுக்கைக்குத் தான் உபாயமாமிடத்தில் “புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்” (திருவாய்மொழி.7-5-1) என்றும் “நாட்டை அளித்துய்யச் செய்து” (திருவாய்மொழி.7-5-2) என்றும் “சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பாலடைந்த” (திருவாய்மொழி.7-5-3) என்றும் முதலிலே ஜ்ஞாநலேஶமில்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும் ப்ராதிகூல்யத்திலே முதிர நின்ற ஶத்ருவுக்கும் கொடுக்கவல்லனாம்படி ஸர்வஶக்தியுக்தனான ஸர்வேஶ்வரன் (பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுனபாதம் அகலகில்லேனிறையும்” (திருவாய்மொழி. 6-10-9) என்று தன் திருவடிகளை க்ஷணகாலம் அகல ஶக்தரன்றியிலே “அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” (திருவாய்மொழி.6-10-10) என்று ஶரணம் புகுந்த தம்மை,
(3) (அகற்றுமவற்றின் நடுவே இருத்தக் கண்டு) “அகற்ற நீ வைத்த மாய வல்லைம்புலன்களாமவை” (திருவாய்மொழி.5-7-8) என்று பகவத்விஷயத்தைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்த்ரியங்களின் நடுவே வைக்கக் கண்டு (நலிவான் சுமடு தந்தாய் ஓவென்று ஸாதநபலமான ஆக்ரோஶத்தோடே பழியிட்டு) “நலிவான் இன்னமெண்ணுகின்றாய்” (திருவாய்மொழி.7-1-1) ”அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்” (திருவாய்மொழி.7-1-10) “விண்ணுளார் பெருமானேயோ” (திருவாய்மொழி. 7-1-5) “முன் பரவை கடைந்தமுதம் கொண்ட மூர்த்தீயோ” (திருவாய்மொழி.7-1-10) என்று வ்யவதாந விளம்பமில்லாத உபாயத்தைக் கீழே பரிக்ரஹிக்கையாலே ப்ரதிகூலமான ஸம்ஸாரத்திலே பொருந்தாமையோடே தம் தலையிலுள்ளதையும் அவன் தலையிலே ஏறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்த வாராகையாலே “ஶாகாம்ருகா ராவணஸாயகார்த்தா ஜக்முஶ்ஶரண்யம் ஶரணம் ஸ ராமம்” (ரா.யு..59-44) என்கிறபடியே இவரும் அவன் பரமபதத்தில் இருப்புங் குலைந்து வந்து விஷயீகரிக்கும்படி பெரிய ஆக்ரோஶத்தோடே அவன்மேலே பழியாம்படி கூப்பிட்டு,
(4) (கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோயில் திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கி) “கங்குலும் பகலும் கண்டுயில் அறியாள்” (திருவாய்மொழி.7-2-1) “இட்டகால் இட்டகையளாய் இருக்கும்” (திருவாய்மொழி.7-2-4), “சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும்” (திருவாய்மொழி.7-2-5) என்று திவாராத்ர விபாகமற அரதியாய்த் துடிக்கும்படி அடைவுகெட்ட ஆர்த்தியை “திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே” (திருவாய்மொழி.7-2-1) “என் செய்திட்டாய்” (திருவாய்மொழி.7-2-3) “என் சிந்தித்தாயே” (திருவாய்மொழி. 7-2-4) “என் செய்கேன் என் திருமகட்கே” (திருவாய்மொழி.7-2-8) என்று திருவாசலிலே பெண்பிள்ளையைப் பொகட்டுக் கூச்சுமுறை தவிர்ந்து அவன்தன்னையே கேட்டுக கூப்பிடும்படியான ஆர்த்தியாலே வந்த அவஸ்தாபேதத்தையுடையராய்,
(5) (தேற்ற ஒண்ணாதபடி தோற்று) “அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா கண்ணபிரானுக்கென் பெண்மை தோற்றேன்” (திருவாய்.7-3-9) என்று பார்ஶ்வஸ்தராலும் தேற்றி தரிப்பிக்க வொண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்த்ர்யத்தையுமிழந்து (ஒன்றி நிற்கப் பண்ணின பலாதாநம்) இப்படியிருக்கிற இவரை தரிப்பிக்கைக்காக ஈஶ்வரன் தன்னுடைய விஜயபரம்பரைகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய் “குன்றமெடுத்தபிரானடியாரொடும் ஒன்றி நின்ற சடகோபன்” (திருவாய்மொழி 7-4-11) என்று அவனுடைய விஜய பரம்பரைகளிலே தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களோடே ஒரு சேர்த்தியாக நிற்கும்படி பலாதாநம் பண்ணி (மற்றும் கற்பாரிழவிலே சுவறி) “கற்பாரிராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ” (திருவாய்மொழி.7-5-1) என்று “அபவரகே ஹிரண்யநிதிம் நிதாய உபரிஸஞ்சரந்தோ ந த்ரக்ஷ்யந்தி” என்கிறபடியே அவதாரப்ரயுக்த ஸௌலப்யத்தை உடையனாய் ப்ரியபரனுமாய் தான் அங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷபர்யந்தம் நடத்துமவனுமாயிருக்கு மிவனை ஸம்ஸாரிகள் இழப்பதே என்று அவர்களுடைய இழவை அநுஸந்தித்து அதிலே அந்த பலாதாநமும் சுவறி,
(6) (பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து) “பாமருமூவுலகும் படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி “தனியேன் தனியாளாவோ” (திருவாய்மொழி.7-6-1) என்று அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக் கூப்பிடும்படி முன்புற்றை உண்ணிலாவியில் தனிமைக் கூப்பீடே மீண்டும் தலையெடுத்து (சூழவும் பகை முகஞ்செய்ய) “சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் இணைக்கூற்றங்கொலோ அறியேன்” (திருவாய்மொழி.7-7-1) “கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே” (திருவாய்மொழி.7-7-8) என்று முன்பு அநுபூதமான அவனுடைய முகத்தில் அவயவஶோபையானது விஶத ஸ்ம்ருதிவிஷயமாய்க் கொண்டு பாதிக்க நலிவுபட்டு (எடுப்பும் சாய்ப்புமான க்லேஶம் நடக்க) தம்முடைய ஆர்த்தியாலே வருகிற எடுப்பும் அவனுடைய குணாநுஸந்தாநத்தாலே வந்த சாய்ப்புமாய்க் கொண்டு க்லேஶமானது உருவ நடக்க (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்ரியைக் கேட்க) உபாயபூதனாயிருக்கிற உனக்கு அஜ்ஞாநாஶக்திகளாகிற தோஷமின்றிக்கேயிருக்க ஶரணாகதனான எனக்கு ஆகிஞ்சந்யாநந்யகதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாய் இருக்கையாலே அதிகாரத்திலே தோஷமின்றிக்கே இருக்க “பாசங்கள் நீக்கி இத்யாதி மாயங்கள் செய்து வைத்தி” (திருவாய்மொழி.7-7-5) என்று ஸம்ஸாரத்தில் ஸங்கத்தை வாஸநையோடே அறுத்து உனக்கநந்யார்ஹஶேஷமாக்கிக் கொண்டு பின்பு என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆஶ்சர்யத்தை அருளிச்செய்யவேணுமென்று கேட்க.
(7) (ஐச்சிகமாக இருத்தியறக்கொண்ட ஸ்வபரப்ரயோஜநத்தை அருளிச் செய்ய) அவன் நமக்கும் நம்முடையார்க்கும் உம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொள்ளுகைக்காக நம்முடைய இச்சையாலே வைத்தோம் காணும் என்று வைத்ததுக்கு ஹேதுவை அருளிச்செய்ய (என் சொல்லி எந்நாள் பார்விண்ணீரிறப்பெதிர் எதுவும் என்கிற உபகாரஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராஶரர் வால்மீகி ப்ரப்ருதிகள் முதலாழ்வார்கள் அளவு உண்டாயிருக்கத் தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட உபகாரத்தை அநுஸந்தித்து “என் சொல்லி நிற்பனோ” “எந்நாள் சிந்தித்தார்வனோ” (திருவாய்மொழி.7-9-7) “பார் விண்ணீர் முற்றுங் கலந்து பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி.7-9-7) “இறப்பெதிர் காலம் பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி.7-9-9) என்று எங்ஙனே நான் தரையில் கால் பாவுவது அவ்வுபகாரத்தைக் காலதத்வமுள்ளதனையும் அநுஸந்தித்தாலும் பர்யாப்தனாகிறிலேன். ஸகலஸ்தலங்களிலு முண்டாயிருக்கிற ஸகல சேதநருடைய வாகாத்உபகரணங்களை நான் ஒருவனுமே உடையேனுமாய் காலத்ரயத்திலும் பேசி அநுபவித்தாலும் பர்யாப்தனாகிறிலேன். “உதவிக்கைம்மாறு இத்யாதி. எதுவுமொன்றுமில்லை செய்வது இங்குமங்கே” (திருவாய்..7-9-10) இதுக்கு ப்ரத்யுபகாரம் பண்ணுமிடத்தில் ஆத்மாவும் ததீயமாயறிகையாலே உபயவிபூதியிலும் செய்யலாவது ஒன்றில்லை என்னும்படியான உபகாரஸ்ம்ருதியை உடையராய்,
(8) (தன்சரிதை கேள்வியாகாமல் இன்பம் பயக்கவிருந்த நிலத்தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காநகோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர்) “செம்பவளத் திரள்வாய்த் தன்சரிதை கேட்டான்” (பெருமாள் திருமொழி.10-8) என்று நாச்சியாரையொழிய பெருமாள் தாமே தனியிருந்த இடத்தே ஸ்ரீராமாயணம் கேட்பித்த குஶலவர்களைப் போலன்றிக்கே “இன்பம் பயக்கவெழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை இன்பம் பயக்க நிலத்தேவர் குழுவணங்கும் சிந்தைமகிழ் திருவாறன்விளை” (திருவாய்மொழி.7-10-1) என்று ஆநந்தமயனான அவன்தனக்குமாநந்தவர்தகையான பிராட்டியும் ஸர்வேஶ்வரனுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதிநாயகத்வத்தால் வந்த வேறுபாடெல்லாம் தோற்ற எழுந்தருளியிருக்கிற அவனை கரணத்ரயத்தாலும் அநுபவிக்கிற பூஸுரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திரட்சியையுடைத்தான திருவாறன்விளையிலே ப்ரத்யுபகமாரமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்யப் பாரித்து (காநகோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர்) “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரானறியும் திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்” (திருவாய்மொழி.7-10-10) என்று அந்தத் திருவாறன் விளையிலே தம்முடைய நெஞ்சு ப்ரவணமாகையாலே “ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரியோபநிஷத்) என்று ஸாமகாநம் பண்ணுகிற பரமபதத்தில் கோஷ்டியையும் அயர்வறுமமரர்கள் அதிபதியாய் ஸர்வருடைய ஹ்ருதயமும் அறியும்படி ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனாயிருக்கிற அவனும்கூட அறியும்படி விஸ்மரித்த இவர்,
(9) (சரமோபாயபரானார்க்கு) கீழ் தாமருளிச்செய்யக் கேட்ட ஸித்தஸாதநத்தாலே தத்பரரானார்க்கு (நீணகரமது துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம் உள்ளித்தொழுமின் என்று ப்ராப்ய ஸாதநாவதியை ப்ரீதியாலே ப்ரகாஶிப்பிக்கிறார்) “நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனை ஆயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம் உள்ளித் தொழுமின் தொண்டீர்” (திருவாய்மொழி.7-10-7) என்று நிரதிஶய போக்யமான திருவாறன்விளையாகிற மஹாநகரமே ப்ராப்யம், அங்கெழுந்தருளியிருக்கிற உஷாநிருத்த கடகனானவனுடைய திருவடிகளே ப்ராபகம், இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை, ஆகையால் இவ்வர்த்தத்தில் ருசியுடையராய் புத்தி பண்ணுங்கோள் என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயமென்றும் ப்ராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதாரஸுலபனானவன் திருவடிகளே என்றும் இவ்வர்த்தத்தைத் தம்முடைய திருவுள்ளத்திலுகப்பாலே வெளியிடுகிறார் என்கிறார்.
226. (1) தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்னும்படி ஶக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளையுடைய ஸத்யகாமன் கொண்ட வாக்வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் ஶங்கையும் அச்சமும்தீர, (2) தலைச்சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக வேந்தர் தலைவன் கந்யகாதாநம் போலே ஆரத்தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப் பணைத்து (3) ஜந்மபாஶம்விட்டு ஆத்வாரம் ஆளுமாளார் என்று பரிந்து அநுரூபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தஶையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து, (4) தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷபோகமாக்கினவன் (5) மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய் மறுவலிடாமல் சிறியேனென்றதின் பெருமையைக் காட்ட (6) தேஹாதிகளில் பரமாய், நின்று நினைக்கில் லக்ஷ்மீ துல்யமாய் அவர்க்கே குடிகளாம் பரதந்த்ரஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர் (7) ஸ்வஸாதந ஸாத்யஸ்தர் இருகரையராகாமல் மண்ணவரும் வானவரும் நண்ணுமத்தையே குறிக் கொண்மின் உள்ளத்தென்று ப்ராப்யைக பரராக்குகிறார் எட்டாம் பத்தில்.
இப்படிப்பட்ட ஶக்தி தன்னாலே நித்யமாக கல்பிதமான போக்ய போகோபகரண போகஸ்தாநங்களை உடையனாகையாலே ஸத்யகாமனான ஸர்வேஶ்வரன் கீழ் தம்மைக் கொண்ட வாசிகமான அடிமையையும் விஸ்மரித்து பகவதலாபத்தாலே கலங்கி அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதிஶங்கை பண்ணி ஸம்ஸாரதோஷாநுஸந்தாநத்தாலே அஞ்சின இவரை தரிப்பிக்கைக்காக பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க அத்தாலே க்ருதஜ்ஞராய் அதுக்குப் பலமாக அவர் ஆத்மஸமர்ப்பணம் பண்ண அத்தாலே பெறாப்பேறு பெற்றானாய் இவர்க்குண்டான ஆத்மகுணங்களாலே ப்ரீதனாய் இவர் திருவுள்ளத்திலே இருந்து நிரதிஶயமாக அநுபவிப்பித்து இவர் இனி அயோக்யரென்று அகலாதபடி ஆத்மஸ்வரூப வைலக்ஷண்யத்தை ப்ரகாஶிப்பிக்க, அதனுடைய யாதாத்ம்யத்தை அநுஸந்தித்த இவர் கீழ் தம்முடைய ப்ராப்யப்ராபகங்களைக் கேட்டு உகந்தவர்களுக்கு ப்ராப்யமொன்றும் ப்ராபகம் ஒன்றுமாகாதபடி ப்ராப்யமொன்றிலுமே தத்பரராக்குகிறார்.
- (தேவிமார் பணியா நேர்பட்ட நல்லகோட்பாடென்னும்படி ஶக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளையுடைய ஸத்யகாமன்) “தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட்செய்வார்” (திருவாய். 8-1-1) “பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் அணியார் ஆழியும் சங்குமேந்துமவர்” (திருவாய்மொழி 8-3-6) “நேர்பட்ட நிறைமூவுலகுக்கும் நாயகன்” (திருவாய்மொழி. 8-9-11) “நல்லகோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான்நிறைந்த அல்லிக்கமலக் கண்ணன்” (திருவாய்மொழி.8-10-11) என்று லக்ஷ்மீப்ரப்ருதி திவ்ய மஹிஷி களுக்கு வல்லபனாய், நித்யஸூரிகளை அடிமை கொள்ளுமவனுமாய், அவர்களுடைய ஸ்தோத்ராதிகளுக்கு விஷயபூதனுமாய், போக்யாதிகளால் குறைவற்றுக் கட்டளைப்பட்ட லோகத்ரயத்துக்கும் நிர்வாஹகனுமாய் இருக்குமென்கையாலே கீழ்ச்சொன்ன ஶக்தி தன்னாலே நித்யமாகக் கல்பிக்கப்பட்ட பத்நீபரிஜநஸ்தாந போக்ய போகோபகரணங்களை உடைய ப்ரக்ருதியாலே தனக்கென்று தேடவேண்டாதபடி நித்யமான போகத்தை உடையனாகையாலே ஸத்வகாமனான ஸர்வேஶ்வரன். (கொண்ட வாக் வ்ருத்தியை மறப்பிக்கும்) கீழும் கைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ள வைத்தோம் என்று அவன் கொண்ட வாசிகமான அடிமையையும் விஸ்மரிப்பிக்கவற்றான (கலக்கமும் ஶங்கையும் அச்சமும் தீர) “காணுமாறருளாய் என்றென்றே கலங்கி” (திருவாய்மொழி.8-1-2) “அறிவொன்றும் சங்கிப்பன்” (திருவாய். .8-1-7) “நரகம் நானடைதல் நன்றுமஞ்சுவன்” (திருவாய்மொழி 8-1-9) என்று பகவதலாபத்தாலே கலங்கி பகவத் குணங்களிலும், ஸ்வரூபத்திலும் அதிஶங்கை பண்ணி ஸம்ஸாரதோஷாநுஸந்தானத் தாலே அஞ்சின இவர்க்கு அவையும் நிவ்ருத்தமாம்படி.
(2) (தலைச்சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பலப்ரத்யுபகாரமாக) “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்து” (திருவாய்மொழி 5-7-10) “தந்தனன் தனதாள் நிழலே” (திருவாய்மொழி 6-3-9) என்று உபாயமாக முன்னிவர்க்கு உபகரித்த தன் திருவடிகளை “தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த” (திருவாய்மொழி 8-1-10) என்று விஶதஸ்ம்ருதி விஷயமாக்க அத்தை அநுஸந்தித்து அத்தால் வந்த க்ருதஜ்ஞதைக்குப் பலம் ஸத்ருஶப்ரத்யுபகாரம் பண்ணுகையாலே “உதவிக்கைமாறு என்னுயிர் என்னவுற்றெண்ணில் அதுவுமற்றாங்கவன் தன்னது” (திருவாய்மொழி 7-9-10) என்று கீழ் ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத் தேடி பகவதீயத்வாகாராநுஸந்தானத்தாலே நிவ்ருத்தரானவர் இங்கு உபகாரஸ்ம்ருதியாலே வந்த கலக்கத்தாலே (வேந்தர் தலைவன் கந்யகாதாநம் போலே ஆரத்தழுவியறவிலை செய்த) “வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர்” (பெரியாழ்வார் திருமொழி 4-1-2) என்கிறபடியே க்ஷத்ரியாக்ரேஸரனாய் ஜ்ஞாநாதிகனான ஜநகசக்ரவர்த்தி மாஹேஶ்வரமான தநுர்பங்கம் பண்ணின பெருமாளுடைய ஆண்பிள்ளைத்தனத்தைக் கண்டு கலங்கி “விஷ்ணோஸ்ரீரநபாயிநீ” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-17) “அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா” (ரா.) என்கிறபடியே ப்ருதக்ஸித்தி அநர்ஹையாய் ததர்த்தமாக “ராகவத்வே அபவத் ஸீதா” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-9-144) என்றவனுடைய அவதாராநுகூலமாக அவதரித்து நாச்சியாரை “இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” (ரா.பா. 73-26) என்று கந்யகாதாநமாக ஸமர்ப்பித்தாப்போலே “பேருதவிக் கைம்மாறா தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன்” (திருவாய்மொழி 8-1-10) என்று ஸமர்ப்பணோந்முகரானவளவிலே தாளும் தோளுமாகப் பணைத்தவந்த ஆத்மவஸ்துவை அவனுக்கு ப்ரத்யுபகாரமாக ஸமர்ப்பிக்க ஆத்மலாபத்தாலே தன்னதல்லாததொன்றை அதீவ விளங்கிப் பணைத்து அவனும் “அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா” (ரா.ஆ. 37-18) என்று அவளைப் பெற்று விளங்கினாப்போலே “சோதி” (திருவாய்மொழி 8-1-10) என்று இவர் பேசும்படி இவருடைய ஆத்மலாபத்தாலே தன்னதல்லாத தொன்றைப் பெற்றாப் போலே அதீவ உஜ்வலனாய் “தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய் தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” (திருவாய்மொழி 8-1-10) என்னும்படி அந்த ப்ரீதியாலே ஶதஶாகமாகப் பணைத்து,
(3) (ஜந்மபாசம் விட்டு ஆத்வாரம் ஆளுமாளார் என்று பரிந்து அநுரூபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தஶையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து) அந்த நாச்சியார் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஜந்மபூமியான மிதிலையை நினையாதாப்போலே “பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு” (திருவாய்மொழி.8-2-11) என்கிறபடியே இவரும் திருவடிகளைக் கிட்டுகையிலுண்டான ஸங்கத்தாலே புறம்புண்டான வலிய ஸங்கங்களை நிஶ்ஶேஷமாக விட்டு, “ஆத்வாரமநுவவ்ராஜ மங்களாந்யபி தத்யுஷீ” (ரா.அ.14-21) என்று அவள் பெருமாளுடைய அழகுக்குப் பரிந்து மங்களாசாஸனம் பண்ணினாப்போலே “ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்” (திருவாய்மொழி 8-3-3) என்று இவரும் ரக்ஷணபரிகரமாய் அஸாதாரணமான திவ்யாயுதங்களும் சுமையாம்படியான அவனுடைய ஸௌகுமார்யத்தைக் கண்டு பரிந்து பெருமாளுடைய ஶௌர்யாதிகளைக் கண்டு துல்யஶீலேத்யாதிப்படியே ஶீலாதிகளால் “அநுரூபஸ்வைநாத:” என்கிறபடியே அவள்தனக்கு அநுரூபமான பெருமாளோடே பொருந்தினாப் போலே இவரும் “திருச்சிற்றாற்றங்கரை செல்சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி “அமர்ந்த மாயோனை முக்கணம்மானை நான்முகனை அமர்ந்தேனே” (திருவாய்மொழி 8-4-4) என்று அவனுடைய ஶௌர்யாதிகளை அநுஸந்தித்து நிர்ப்பயராய்ப் பொருந்தி அநுபவித்து விஶ்லேஷதஶையில் அவள் “ஹிமஹதநளிநீவ நஷ்டஶோபா வ்யஸந பரம்பரயாதிபீட்ய மாதா ஸஹசரரஹிதேவ சக்ரவாகீ ஜநக ஸுதா க்ருபணாம் தஶாம் ப்ரபந்நா” (ரா.ஸு.16-30) என்று நிர்க்ருணரும் இரங்கும்படியான தஶையை ப்ராப்தையானாப்போலே இவரும் “காணவாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” (திருவாய்மொழி 8-5-2) அவனைக் காண ஆசைப்பட்டு எங்கும் பார்த்துக் கூப்பிடுகையாலே நீர்ப்பசையறும்படியாக உலர்ந்து இப்படிப்பட்ட ஜநககுல ஸுந்தரியான நாச்சியாருடைய குணங்களை இவர்பக்கலிலே காண்கையாலே நிரதிஶய ப்ரீதியுக்தனாய்,
(4) (தித்திக்க உள்ளே உறைந்து) “உள்ளுந்தோறும் தித்திப்பான் ஒருக்கடுத்துள்ளே உறையும்பிரான்” (திருவாய்மொழி 8-6-3) என்று அநுஸந்தாந தஶைகள் தோறும் நிரதிஶய போக்யனாய்க் கொண்டு இவர் திருவுள்ளத்திலே நித்யவாஸம் பண்ணி (கண்டுகொண்டிருந்து அமாநுஷபோகமாக்கினவன்) “இருந்தான் கண்டு கொண்டு” என்று தரித்ரனானவனுக்கு நிதிலாபமுண்டானாப்போலே இவரைப் பெற்ற ப்ரீதியாலே பார்த்துக் கொண்டிருந்து “ஸமா த்வாதஶ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஶநே, புஞ்ஜாநாமாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ” (ரா.ஸு.33-17) என்று அவன் விஶ்லேஷித்த தஶையிலும் வ்ருத்தகீர்த்தநம் பண்ணி தரிக்கலாம்படி அவளை அநுபவிப்பித்தாப் போலே இவரையும் “தருந்தானருள்தானினி யானறியேன்” (திருவாய்மொழி 8-7-2) என்றும், “மூவுலகும் பொருளல்ல” (திருவாய்மொழி 8-7-3) என்றும் “செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே” (திருவாய்மொழி 8-7-7) என்றும் இவர்தாமே பேசும்படி இவரை அப்ராக்ருதபோகங்களை புஜிப்பித்தவன் ,
(5) (மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினைநோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட) “மருள்தானீதோ” (திருவாய்மொழி 8-7-3) “பின்னை யார்க்கவன்தன்றைக் கொடுக்கும்” (திருவாய்மொழி 8-7-6) “அருள்தானினி யானறியேன்” (திருவாய்மொழி 8-7-3) என்கிற உகப்புச் செல்லா நிற்கச் செய்தே “சிறியேன்” (திருவாய்மொழி 8-7-8) என்று தம்முடைய சிறுமையை அநுஸந்திக்க அவ்வளவில் வளவேழுலகில் “களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் அருவினையேன்” (திருவாய்மொழி 1-5-1), “வணங்கினால் உன் பெருமை மாசூணாதோ மாயோனே” (திருவாய்மொழி 1-5-2) என்றும், “அடியேன் காண்பானலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே” (திருவாய்மொழி 1-5-7) என்றும், “சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்” (திருவாய்மொழி 1-7-1) என்றும் இப்படி மும்மறுவலிட்ட அயோக்யதாநுஸந்தாந வ்யாதிக்குத் தப்பின இவர் மீண்டும் மறுவலிட்டு “சிறியேன்” (திருவாய்மொழி 8-7-8) என்று இவர் அகலில் செய்வதென் என்று கலங்கி, இவர் இப்படி அகலுகிறது வந்தேறியான அசித்ஸம்பந்தத்தையிட்டு இது நமக்கநர்ஹமென்றிறே இதினுடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகலவொண்ணாதே என்று நமக்கு ஸ்ரீகௌஸ்துபத்தோபாதி தேஜஸ்கரமாய் ஸ்ரீஸ்தநம் போலே போக்யமாய் அப்ராக்ருதாதி களைப் போலே(?) அப்ருதக்ஸித்தமாய் அநந்யார்ஹஶேஷமாய்க் காணும் உம்முடைய ஆத்மவஸ்து இருப்பது என்று ஸ்வரூபவைலக்ஷண்யத்தைக் காட்டிக் கொடுக்க,
(6) (தேஹாதிகளில் பரமாய்) அவ்வாத்மவஸ்துவை “யானும் தானாய் ஒழிந்தானை” (திருவாய்மொழி 8-8-4) என்கிறபடியே அவனுடைய அபிமாநாந்தர்பூதமாம்படி அப்ருதக்ஸித்த விஶேஷணமாய் “தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து” (திருவாய்மொழி 8-8-4) என்னும்படி ஆநந்தரூபமாகையாலே அவனுக்கு நிரதிஶயபோக்யமாய் “சென்று சென்று பரம் பரமாய்” (திருவாய்மொழி 8-8-5) என்கிறபடியே தேஹேந்த்ரியாதி விலக்ஷணமாய் (நின்று நிiனைக்கில் லக்ஷ்மீதுல்யமாய்) “நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்” (திருவாய்மொழி 8-9-5) “அருமாயன்பேரன்றிப் பேச்சிலள்” (திருவாய்மொழி 8-9-1) அன்றி மற்றோருபாயமென்” (திருவாய்மொழி 8-9-10) என்று யதா நிரூபணம் பண்ணில் பிராட்டிமாரோபாதி அநந்யார்ஹமாய் அவ்வளவில் பர்யவஸியாதே (அவர்க்கே குடிகளாய் பரதந்த்ரஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்) “மாகாயாம் பூக்கள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா அடியார்தம் அடியார்ரடியார் எங்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்லகோட்பாடே ஊழிதோறூழி வாய்க்க தமியேற்கு” (திருவாய். 8-10-10) என்று விலக்ஷண விக்ரஹயுக்தனான ஸர்வேஶ்வரனுக்குப் பிரியா அடிமை செய்கிற பாகவதர்களுடைய ஶேஷத்வத்தின் எல்லையிலே நிற்கிறவர்களே எனக்கு ஶேஷிகள், என்னோடு ஸம்பந்தமுடையாரும் நானும் அவர்களுக்கு க்ரியா விக்ரய அர்ஹமாம் படியான பாரதந்த்ர்யம் காலம்தத்த்வம் உள்ளளதனையும் எனக்கு ஒருவனுக்குமே ஸித்திக்க வேணும் என்று இப்பாதந்த்ர்யகாஷ்டையான ததீயபாரதந்த்ர்யமே ஸ்வரூபம் என்று அநுஸந்தித்தவர்,
(7) (ஸ்வஸாதநஸாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்) தம்முடைய ஸாதந ஸாத்யங்களே தங்களுக்கும் என்று இருக்கிறவர்கள் தத்விஷயத்திலும் ததீயவிஷயத்திலுமாய் ப்ராப்யம் ஒன்றும் ப்ராபகம் ஒன்றுமாய் இருகரையராகாதபடி (மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே குறிக்கொண்மின் உள்ளத்தென்று) “கோவிந்தன் மண்ணும் விண்ணும் அளந்த ஒண் தாமரையை மண்ணவர்தாம் தொழ வானவர்தாம் வந்து நண்ணு திருக்கடித்தான நகரை உள்ளத்துக் கொண்மின் இடர்கெட” (திருவாய்மொழி 8-6-7) என்று ஸர்வேஶ்வரனுடைய ஸர்வ ஸுலபமான திருவடிகளை உபயவிபூதியிலுள்ளாரும் வந்து அனுபவிக்கும்படியான திருக்கடித் தான நகரை உங்கள் ஸமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சாலே நினையுங்கோள் என்று கீழ்ப் பத்திலே ப்ராப்யமாக உபதேஶித்த அர்ச்சாவதார பூமியே து:க்கநிவர்த்தகமும் என்கையாலே ப்ராப்யமே ப்ராபகம் என்று ப்ராப்யம் ஒன்றிலுமே அவர்களை தத்பரராக்குகிறார் எட்டாம் பத்தில் என்கிறார்.
227. (1) எண்டிசையும் அகல்ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேலென்னும்படி நித்யபோகபாத லீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்கும் ஆபத்ஸகன் (2) ஆருயிர் என்னப்படுத்தின ஆத்ம தர்ஶநபலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுகவிட்டு (3) ஏகமெண்ணிக் காணக்கருதி எழ நண்ணி நினைதொறும் உருகிய அலற்றிக் கவையில் மனமின்றிப் பதினாலாண்டு பத்துமாஸம் ஒருபகல் பொறுத்தவர்கள் ஒருமாஸ தின ஸந்த்யையில் படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக் கீடாக (4) இனிப்பத்திலொன்று தஶம தஶையிலே பேறென்று நாட்கடலாகத் தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர் (5) இம்மடவுலகர் கண்டதோடு பட்ட அபாந்தவ–அரக்ஷக–அபோக்ய–அஸுக–அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி (6) மற்றொன்று கண்ணனல்லால் என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம், (7) அதில் துர்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம் ஸாங்கபக்தி, அதில் அஶக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி, (8) அதில் அஶக்தர்க்கு உச்சாரண மாத்ரம், ஸர்வோபாய ஶூந்யர்க்கு இப்பத்தும் பாடியிடும் தெண்டனென்று கீதாசார்யனைப் போலே அதிகாராநுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில்.
இப்படி அவாப்தஸமஸ்தகாமத்வத்தால் வந்த நைரபேக்ஷ்யத்தாலே அபேக்ஷா நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத்தஶைகளிலே உதவி ரக்ஷிக்கும் ஆபத்ஸகனான ஸர்வேஶ்வரன் கீழ் ப்ரகாஶிப்பித்த ஆத்மதர்ஶநத்துக்கு பலம் ஸ்வஸ்வரூபாநுரூபமான ப்ராப்யாநுபவமாய் அவ்வநுபவத்திலுண்டான த்வரையாலே க்ஷணகாலவிளம்பம் பொறுக்கமாட்டாமல் ஆர்த்தரான இவர்க்கு ஆரப்தஶரீராவஸாநத்திலே பேறாகக் கடவதென்று நாளிட்டுக் கொடுக்கப் பெற்ற இவர் கீழ்த் தாமுபதேஶித்த ஹிதவசநம் கேட்டுத் திருந்தினவர்களை ஒழிய அல்லாதாரையும் விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே யதாதிகாரம் ஸர்வ உபாயங்களையும் அருளிச்செய்கிறார் என்கிறார்.
(1) (எண்டிசையும் அகல்ஞாலம் எங்கும் அளிக்கின்ற இத்யாதி) “எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான்” (திருவாய்மொழி 9-1-1) “அவனே அகல்ஞாலம் படைத்து இடந்தான் அவனே அஃதுண்டுமிழ்ந்தான் அளந்தான்” (திருவாய்மொழி 9-3-2) “அகலிடம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன்” (திருவாய்மொழி 9-9-2) “ஆலின் மேலாலமர்ந்தான்” (திருவாய்மொழி.9-10-1) என்று ஸகலலோகங்களையும் ஸஹகாரி நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத்துக்களிலே உதவி ரக்ஷிக்கும் என்கையாலே கீழ்ச்சொன்ன ஸத்யகாமத்வத்தால் வந்த நைரபேக்ஷ்யத்தாலே “பாதோஸ்ய விஶ்வாபூதாநி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி” (புருஷஸூக்தம்) அந்த நித்யவிபூத்யேகதேஶமான லீலாவிபூதிக்குண்டான ஆபத்துக்களிலே அபேக்ஷாநிரபேக்ஷமாக உதவித் தன்பேறாக ரக்ஷிக்கும் ஆபத்ஸகத்வனான ஸர்வேஶ்வரன்,
(2) (ஆருயிரென்னப்படுத்தின இத்யாதி) “ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்று என்னாத்மா பட்டது நித்யவிபூதியில் உள்ளாராரேனும் பட்டாருண்டோ என்று இவர்தாமே பேசும்படி அவன்மேல்விழுந்து அநுபவிக்கைக்கு அடியாக கீழில் பத்தில் ஆத்மஸ்வரூபத்தை யதாவாகக் கண்டவதுக்குப் பலம் ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தையநுபவிக்கையாய் அதிலே த்வரை விளைகையாலே “தாமரைக் கண்களால் நோக்காய்” (திருவாய்மொழி 9-2-1) “பாதபங்கயமே தலைக்கணியாய்” (திருவாய்மொழி 9-2-2) “உன் தாமரை மங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகும் தொழவிருந்தருளாய்” (திருவாய்மொழி 9-2-3), “கனிவாய் சிவப்ப நீ காணவாராய்” (திருவாய்மொழி 9-2-4) “நின் பன்னிலாமுத்தம் தவழ்கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்” (திருவாய்மொழி 9-2-5) என்று என் துக்கம் தீரத் திருக்கண்களாலே குளிர கடாக்ஷித்து அருளவேணும், திருவடிகளை என் தலையிலே வைத்தருளவேணும், தேவரீரும் பிராட்டிமாரும் கூட எழுந்தருளியிருக்கிற இருப்பை எனக்குக் காட்டியருளவேணும், என் முன்னே நாலடி உலாவியருளவேணும், அநுகூலதர்ஶனத்திலே பிறக்கும் ஸ்மிதம் நான் காணவேணும், ஒரு வார்த்தை அருளிச்செய்ய வேணும், என்றிப்படி அநுபவபரம்பரைகளை ஆசைப்பட்டு அது க்ரமப்ராப்தமாகாமல் கூவுதல் வருதல் செய்யாயே என்று நிரதிஶயபோக்யமான உன்னுடைய திருவடிகளிலே நானும் வந்தடிமை செய்யும்படி என்னை அங்கே அழைத்தல் இங்கே வருதல் செய்தருளவேணும் என்று இப்படி முடுகவிட்டு
(3) (ஏகமெண்ணி இத்யாதி) “கவையில் மனமின்றி” (திருவாய்மொழி 9-8-3) “மாகவைகுந்தம் காண்பதற்கு என்மனம் ஏகமெண்ணும் இராப்பகலின்றியே” (திருவாய்மொழி 9-2-7) அவன் நித்யவாஸம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே ஸர்வகாலமும் ஏகரூபமாக மநோரதித்து “காணக் கருதும் என் கண்ணே” (திருவாய்மொழி 9-4-1) என்று பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடும் திவ்ய விக்ரஹத்தோடும் கூடியிருக்கிற அவனைக் காணவேணுமென்று ஆசைப்பட்டு “எழநண்ணி நாமும் நம் வானநாடனோ டொன்றினோம்” (திருவாய். 9-5-10) என்று ஸ்மாரகபதார்த்த தர்ஶநத்திலே நோவுபடுகையாலே முடிந்து போகையிலே ஒருப்பட்டு “நினைதொறும் சொல்லுந் தொறும் நெஞ்சிடிந்துகும்” (திருவாய். 9-6-2) “உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும்” (திருவாய்மொழி 9-6-1) என்று, அவனுடைய அநுபவத்தை நினைக்கும்தொறும் அநுபவ உபகரணமான நெஞ்சானது ஶிதிலமாய்க் கரைய “தக்கிலமே கேளீர்கள் “ (திருவாய்.9-7-2) என்று ஆள்விட்டு “கிளிமொழியாள் அலற்றிய சொல்” (திருவாய். 9-7-11) என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு “கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்” (திருவாய்மொழி 9-8-3) என்று இருதலைத்த நெஞ்சின்றிக்கே கண்ணீர் காட்டாறு போலே பெருக (பதினாலாண்டு இத்யாதி இரங்குகிற த்வரைக்கீடாக) பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்திருந்த ஸ்ரீபரதாழ்வான் அந்த அவதி கழிந்த ஒருநாள் பட்ட க்லேஶமும், பத்து மாஸம் பிரிந்து பொறுத்திருந்த பிராட்டி “மாஸாதூர்த்வம் ந ஜீவிஷ்யே” (ரா.ஸு. 40-10) என்று ஒரு மாஸத்தில் பட்ட க்லேஶமும், க்ருஷ்ணன் பசுமேய்க்கப் போக ஒரு பகலெல்லாம் அவனைப் பிரிந்து பொறுத்திருந்த ஸ்ரீ கோபிமார் ஸந்த்யாகாலத்திலே பசுக்களின் முற்கொழுந்திலே காணாமல் அவர்கள் பட்ட க்லேஶமுமெல்லாம் அவனை “விட்டகல்வதற்கே இரங்கி அணிகுருகூர்ச் சடகோபன்” என்று ஒரு க்ஷணத்திலேயாம்படி யீடுபடுகிற தம்முடைய த்வரைக்கீடாக
(4) (இனிப் பத்திலொன்று தஶமதஶையிலே பேறென்று) “நயநப்ரீதி: ப்ரதமம் சித்தாபோகஸ்ததோநுஸங்கல்ப: நித்ராச்சேதஸ் தநுதாவிஷய விரக்திஸ் த்ரபாநாஶ: உந்மாதோ மூர்ச்சா மரணம் இத்யேதா ஸ்மரதஶா தஶைவ ஸ்யு:, ப்ரதமஸ்த்வபிலஷ: ஸ்யாத் த்விதீயம் சிந்தநம் பவேத் அநுஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குணகீர்த்தநம் உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாதஸ் ஸப்தமோ ஜ்ஞேய: அஷ்டமோ வ்யாருஶ்யதே நவமே ஜடதா சைவ தஶமம் மரணம் ததா” என்று காமுகராயிருப்பார்க்கு தஶமாவஸ்தையிலே மரணமாமாபோலே நம்பக்கல் பரபக்தி யுக்தரான உமக்கு நம்மைப் பெறாவிடில் முடியும்படி பரமபக்திதஶையான பத்தாம்பத்திலே பெறக்கடவதென்று (நாட்கடலாகத் தம்பிக்கிட்டதாகாமல் நாளைவதுவை போலே நாளிடப்பெற்றவர்) “நாட்கடலைக் கழிமினே” (திருவாய்மொழி 1-6-7) என்று ஒரு நாள் ஒரு கடல் போலே விஶ்லேஷ வ்யஸநத்தாலே துஸ்தரமாம்படி “பூர்ணே சதுர்தஶே வர்ஷே” (ரா.யு. 127-1)என்று தம்பியான ஸ்ரீ பரதாழ்வானுக்கு நெடுக நாளிட்டுக் கொடுத்தாப்போலேயன்றியே “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” (நாச்சியார் திருமொழி 6-2) என்று இன்றென்னில் வெள்ளக்கேடாம் சிலநாள் கழித்தென்னில் வறட்கேடாமென்று “நாளை” என்று நாச்சியார்க்கு நாளிட்டாற்போலே “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்தஶரீராவதியாக அவனாலே நாளிட்டுக் கொடுக்கப்பெற்று ஹ்ருஷ்டரான இவர்,
(5) (இம்மடவுலகர் கண்டதோடு பட்ட இத்யாதி ப்ரதிஸம்பந்தியைக் காட்டி) சரமோபாயோபேய பர்யந்தமாக தாமருளிச்செய்த ஹிதவசநம் கேட்டுத் திருந்தினவர்களை யொழிய அல்லாதாரையும் விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே “இம்மடவுலகர்” (திருவாய்மொழி 9-2-7) என்று ஸம்ஸாரத்தில் அறிவுகேடரானவர்களையும் பார்த்து “கொண்டபெண்டிர்” (திருவாய்மொழி 9-1-1) என்று தொடங்கி த்ரவ்யாதிகளாலே ஸம்பாதிக்கப் பட்டு ஸந்நிதியிலே ஸ்நேஹித்திருக்குமதொழிய காணாதபோது ஸ்நேஹமொன்று மின்றிக்கே யிருக்கிற புத்ரதாராதிகள் பந்துக்களன்று ப்ரளயாபத்ஸக னானவனே பரமபந்துவென்று “துணையும் சார்வும்” (திருவாய்மொழி 9-1-2) இத்யாதி “பொருள் கை” (திருவாய்மொழி 9-1-3) இத்யாதி “அரணமாவர்” (திருவாய்மொழி 9-1-4) இத்யாதி அவனையொழிந்தார் தாங்கள் உபகாரகரைப்போலே ப்ரயோஜநமுள்ளபோது பந்துக்களாய்க் கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர்கள். ஆகையாலே இவர்கள் ரக்ஷகரல்லர். நிர்ஹேதுகமாக ஆபத்ஸகனான க்ருஷ்ணனையொழிய வேறு ரக்ஷகரில்லை. “சதிரம்” (திருவாய்மொழி 9-1-5) இத்யாதி. தங்களுக்கு போக்யைகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள் ஆபத்து வந்தவாறே உபேக்ஷிப்பர்கள். ஏகப்ரகாரமாக ஸ்நிக்தனாயிருப்பானவனே. ஆனபின்பவனே நிரதிஶயபோக்யன். “இல்லைகண்டீர் இன்பம்” (திருவாய்மொழி 9-1-5) என்று து:க்கமிஶ்ரமான சிலவற்றை ஸுகமென்று ப்ரமிக்கிறவத்தனை போக்கி அவனையொழிய ஸுகரூபமாயிருப்ப தொன்றில்லை. “யாதுமில்லை” (திருவாய்மொழி 9-1-9) இத்யாதி. இவனையொழிய வேறேயொருவனை ரக்ஷகமென்று பற்றினவர்கள் பண்டைநிலையுங் கெட்டு அநர்த்தப்பட்டுப் போவர்கள் ஆனபின்பு அவனையொழிய உபாயமில்லை என்று அவனை யொழிந்தவற்றினுடைய அபந்துத்வத்தையும், அரக்ஷகத்வத்தையும், அபோக்யத்வத்தையும், அஸுகத்வத்தையும், அநுபாயத்வத்தையும் அவர்களுக்கு உபதேஶித்து,
(6) (மற்றொன்று கண்ணனல்லால் என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம்) “மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்” (திருவாய்மொழி 9-1-7) என்று இதுக்கு மேலொன்று இன்றியிலே இருப்பதாய் ஸம்க்ஷேபேண வுபதேஶிக்கலாம் படியுமாய் ஸர்வாதிகாரமுமாய் ஸ்வரூபாநுரூபமுமாய் ஸுகரமுமாய் நிரதிஶயபோக்யமுமாய் “கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண்” (திருவாய்மொழி 9-1-9) என்று “மாமேகம் ஶரணம் வ்ரஜ” (கீதை 18-66) என்று திருத்தேர்த்தட்டிலே நின்றருளிச்செய்த க்ருஷ்ணனையொழிய வேறு நிரபேக்ஷோபாயம் இல்லை. இவ்வுபாயந்தான் “வைகல் வாழ்தல் கண்டீர் குணம்” (திருவாய்மொழி 9-1-7) என்று யாவதாத்மபாவியநுபவம் என்று ஸித்தோபாயத்தை அவர்களுக்கு உபதேஶித்தும்,
(7) (அதில் துர்பலபுத்திகளுக்கு) “ஸக்ருதேவஹி ஶாஸ்த்ரார்த்த: தப்நாம் பயநாஶக: நராணாம் புத்திதௌர்பல்யாத் உபாயாந்தரமிஷ்யதே” என்று அந்த ஸித்தோபாயத்தில் மஹா விஶ்வாஸம் பிறக்கைக்கடியான பாக்யமின்றிக்கே ஸாத்யங்களான உபாயாந்தரங்களில் ருசிகுலையாமையாலே அவன் பலப்ரதனாமோ என்று புத்திதௌர்ப்பல்யமுடையார்க்கு (மாலை நண்ணிக் காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் ஸாங்கபக்தி) “மாலை நண்ணித் தொழுதெழுமினோ காலை மாலை கமலமலரிட்டு நீர்” (திருவாய்.9-10-1) “விண்டு வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்” (திருவாய்மொழி 9-10-3) “தேனை வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்” (திருவாய்மொழி 9-10-4) “தனதன்பர்க்கு” (திருவாய்மொழி 9-10-5) என்று நிரதிஶயப்ரீதியுக்தராய்க் கொண்டு ஸர்வகாலமும் புஷ்பாத்யுபகரணங்களைக் கொண்டு அவனை ஸமாராதநம் பண்ணி அவன் பக்கலிலே பக்தியைப் பண்ணுங்கோள் என்று அங்க ஸஹிதையான பக்தியை உபதேஶித்தும், (அதிலஶக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி) அதில் துஷ்கரத்வத்தாலே அநுஷ்டிக்க ஶக்தி இல்லாதார்க்கு “சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” (திருவாய்மொழி 9-10-5) என்று ஸர்வாதிகாரமுமாய் ஶரீராவஸாநத்திலே பலமுமான ப்ரபத்தியை வெளியிட்டும்,
(8) (அதிலஶக்தர்க்கு உச்சாரணமாத்ரம்) உபாய பல்குத்வம் பலகௌரவ விரோதி பூயஸ்த்வங்களாகிற ஶங்காத்ரயத்தாலே அதில் வ்யவஸாயத்துக்கு அடியான ஶக்தி இல்லாதார்க்கு “திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே” (திருவாய்மொழி 9-10-10) என்று உச்சாரணமாத்ரத்தை வெளியிட்டும் (ஸர்வோபாயர்க்கும் இப்பத்தும்பாடியிடும் தண்டனென்று) கீழ்ச்சொன்ன உபாயங்களெல்லாவற்றிலும் அயோக்யராயிருப்பார்க்கு “இப்பத்தும் பாடியாடிப் பணிமின் அவன் தாள்களே” (திருவாய்மொழி 9-10-11) என்று இத்திருவாய்மொழியை ப்ரீதிப்ரேரிதராய்க் கொண்டு பாடி அவன் திருவடிகளிலே விழுங்கோளென்று கீதோபநிஷதாசார்யன் தன் பரமக்ருபையாலே “நெறியெல்லாம் எடுத்துரைத்த” (திருவாய்மொழி 4-8-6) என்கிறபடியே ருச்யநுகுணமான உபாயங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டாற்போலே இவர் தமக்கு ப்ராப்தி அணித்தானவாறே ஸம்ஸாரிகள் இழக்கவொண்ணாதென்று பார்த்து அவ்வவருடைய அதிகாராநுகுணமாந உபாயங்கள் எல்லாவற்றையும் வெளியிடுகிறார் என்கிறார்.
228. (1) சுரிகுழல் அஞ்சனப் புனல்மைந்நின்ற பொல்லாப்புனக் காயாவென்னும் ஆபத்தில் கொள்ளும் காமரூப கந்த ரூபத்தாலே ப்ரபந்நார்த்திஹரனானவன் (2) அருள்பெறும் போதணுகவிட்டதுக்குப் பலமான வானேறும் கதிக்கு அண்ட மூவுலகும் முன்னோடிக் கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி அமுதமளித்த தயரதன் பெற்ற கோவலனாகையாலே வேடன், வேடுவிச்சி, பக்ஷி, குரங்கு, சராசரம், இடைச்சி, இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிணவிருந்து, வேண்டடிசில் இட்டவர், அவன்மகன், அவன்தம்பி, ஆனை, அரவம், மறையாளன், பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித்துணையாக்கி (3) அறியச்சொன்ன ஸுப்ரபாதத்தே துணைபிரியாமல் போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர், ஸஞ்சிதம் காட்டும் தஶையானவாறே (4) முந்துற்ற நெஞ்சுக்குப் பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யா க்ருத்யங்களை விதி4த்து நெஞ்சுபோல்வாரைத் தொண்டீரென்றழைத்து, (5) வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதுமென்று கர்த்தவ்யம் ஸ்மர்த்தவ்யம் வக்தவ்யம் ஶ்ரோதவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யமெல்லாம் வெளியிட்டுப் (6) பிணக்கறவைச் சார்வாக நிகமித்து (7) எண்பெருக்கிலெண்ணும் திருநாமத்தின் ஶப்தார்த்தங்களைச் சுருக்கி மாதவனென்று த்வயமாக்கி, கரணத்ரயப்ரயோகவ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக் கையோலை செய்து கொடுத்துச் செஞ்சொற்கவிகளுக்குக் கள்ளவழி காவலிட்டு (8) மனம் திருத்தி வீடுதிருத்தப் போய் நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம் புறப்பட்டவாக்கையிலே புக்குத் தானநகர்களை அதிலே வகுத்துக் குரவை துவரைகளில் வடிவு கொண்ட சபலனுக்கு தேஹதோஷம் அறிவித்து (9) மாயையை மடித்து வானேதரக்கருதிக் கருத்தின்கண் பெரியனானவனை இன்று அஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்யநாதர ஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க, (10) இந்த்ரியகிங்கரராய்க் குழிதூர்த்துச் சுவைத்தகன்றீர் என்னில், அவை யாவரையும் அகற்ற நீ வைத்தவையென்பர்; அது தேஹ யோகத்தாலே என்னில், அந்நாள் நீ தந்த சுமடென்பர்; முன்செய்த முழுவினையாலே என்னில், அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளுமென்பர்; (11) ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில், ஆங்காரமாய்ப் புக்குச் செய்கைப் பயனுண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்; (12) யானே எஞ்ஞான்றும் என்றத்தாலேயென்னில்; அயர்ப்பாய்ச் சமயமதி கொடுத்து உள்ளம் பேதம் செய்கை உன் தொழிலென்பர்; ஜீவப்ரக்ருதி சைதந்யம் நீங்கும் வ்ரதஹேது; அகமேனியிலழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்; (13) தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்; ஸௌஹார்தம் எஞ்ஞான்றும் நிற்கும்; பிணக்கிப் பேதியாத ஜ்ஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில் அல்லல்மாய்த்த யத்ந பலித்வங்கள் நம்மது; (14) நாம் தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே யென்னும் ஸர்வஜ்ஞர் இவர்; (15) நெறிகாட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, (16) அமந்த்ரஜ்ஞோத்ஸவ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேகஸமுத்ர பேரீகீத காஹள ஶங்காஶீஸ்ஸ்துதி கோலாஹலம் செவிப்பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்திக்குத் (17) தலைமிசையாய் வந்த தாள்களைப் பூண்டு போகாமல் தடுத்துத் திருவாணையிட்டுக் கூசம் செய்யாத செய்திப் பிழை; (18) பற்றுக் கொம்பற்ற கதிகேடு, போரவிட்ட பெரும்பழி; (19) புறம்போனால் வருமிழவு, (20) உண்டிட்ட முற்றீம்பு, அன்புவளர்ந்த அடியுரம், உயிருறவு (21) முதலளவு துரக்கைகளாலே பெறாவாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல் போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார் பத்தாம் பத்தில்.
ஆபத்ஸகனாகையாலே ப்ரபந்நரானவர்களுடைய ஆபத்துக்களிலே ஶுபாஶ்ரயமாய் அஸாதாரணமான திருமேனியோடே வந்துதவி அவர்களுடைய தாபங்களைப் போக்கும் ஆர்த்திஹரனானவன் கீழில் பத்தில் இவர் த்வரைக்கீடாக அணித்தாக நாளிட்டுக் கொடுத்ததற்குப் பலம் அர்ச்சிராதி கதியாலே துணைபெற்றுப் போகையாகையாலே அதுக்கு ஆப்தனானவன் தன்னையே துணையாகப் பற்றி ப்ராப்தி நிஶ்சிதம் என்ற போக்கிலே ஒருப்பட இவர் தாம் தஞ்சமாக நினைத்திருந்த அர்த்தமும் பேசியிடும்படியான தஶையானவாறே முற்பட்ட உபதேஶவிஷயமான திருவுள்ளத்துக்கு க்ருத்யாக்ருத்யங்களை விதித்து அப்படி பவ்யரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கர்த்வ்யாதிகளை வெளியிட்டு முதலிலே உபக்ரமித்த பக்தி ப்ரபத்திகளையும் நிகமித்து ஸம்ஸாரிகளுக்கு ஸுகரமாக ஆஶ்ரயணத்தை உபதேஶித்து அநுபவகைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு ஶீல குணமாகிற ஆழங்காலையும் காட்டித் தம்பக்கல் வ்யாமுக்தனான ஈஶ்வரனுக்குத் தம்முடைய திருமேனியில் தமக்குண்டான உபேக்ஷையை வெளியிட்டு இப்போது தமக்குப் பரதந்த்ரனாய் நிற்கிறவவனை அநாதிகாலம் தம்மைக் கைவிட்டதுக்கு ஹேதுவென்னென்று கேட்க அவனும் இந்த்ரியவஶ்யதை தொடக்கமான ஹேதுபரம்பரைகளையெண்ணி அதுவும் ததாயத்தம் என்று அறியும் ஸர்வஜ்ஞரான இவர்க்குப் போக்கிடம் சொல்லுகை அரிது என்று நிருத்தரனாய் அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்குள்ளாருடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க அத்தை ஸாக்ஷாத்கரித்தவிவர் அதுவும் மாநஸாநுபவமாய் பாஹ்ய கரணயோக்ய மல்லாமையாலே அவனுக்கு மறுக்கவொண்ணாதவாணையிட்டுத் தடுத்து அது பெறாவாணை அல்லாமைக்கு ஹேதுக்களைச் சொல்லும்படியான தம்முடைய பரமபக்தி எல்லாம் குளப்படியாம்படியான அபிநிவேஶத்தோடே வந்து தம்முடைய தாபத்தைப் போக்கிப் பேற்றோடே தலைக்கட்டிக் கொடுத்ததை வெளியிடுகிறார் என்கிறார் பத்தாம்பத்தில்.
(1) (சுரிகுழலஞ்சனப்புனலித்யாதி ப்ரபந்நார்த்திஹரனான ஸர்வேஶ்வரன்) “சுரிகுழல் கமலக் கண்கனிவாய்” (திருவாய்மொழி 10-1-1) “அணிக்கொள் நால்தடந்தோள்” (திருவாய்மொழி 10-1-9) “மணிமிகு மார்பு அணிமிகு தாமரைக் கை” (திருவாய்மொழி 10-3-5) “கைகளும் பீதகவாடையும்” (திருவாய்மொழி 10-3-8) “செங்கமலவண்ண மென்மலரடி” (திருவாய்மொழி 10-3-7) “மணிநின்ற சோதி” (திருவாய்மொழி 10-4-7) “அஞ்சன மேனி” (திருவாய்மொழி 10-3-3) “புனல் மைநின்றவரை போலும் திருவுருவம்” (திருவாய்மொழி 10-6-8) “பொல்லாத் தாமரைக்கண் கருமாணிக்கம்” (திருவாய்மொழி 10-10-1) “புனக்காயா நிறத்த” (திருவாய்மொழி 10-10-6) “நீரார் முகில் வண்ணன்” (திருவாய்மொழி 10-5-8) “கார் மேகவண்ணன்” (திருவாய்மொழி 10-4-1) “மெய்நின்று கமழ் துளப விரையேறு திருமுடியன்” (திருவாய். 10-6-8) “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை” (திருவாய்மொழி 10-6-9) “அணிநின்ற செம்பொன் அடலாழி” (திருவாய்மொழி 10-4-7) “காமனைப் பயந்த காளை” (திருவாய்மொழி 10-2-8) என்று அவயவங்களோடும் ஔதார்யம் முதலான குணங்களோடும் ஸ்ரக்வஸ்த்ர ஆபரண ஆயுதங்களோடும் கூடி “காமரூபங்கொண்டு எழுந்தருளியிருப்பான்” (திருவாய்மொழி 10-1-10) என்று ஆஶ்ரிதருடைய ஆபத்ரக்ஷணத்துக்கு அநுரூபமாகக் கொள்ளும் விக்ரஹங்களுக்கு எல்லாம் கந்தமாய் ஶுபாஶ்ரயமான அந்த விக்ரஹத்தையுடையனாய்க் கொண்டு தன்பக்கல் ந்யஸ்தபரரானவர்களுடைய ஆர்த்தியைத்தீர்க்கையாலே ப்ரபந்நார்த்திஹரனான ஸர்வேஶ்வரன்
(2) (அருள்பெறும்போதணுக விட்டதித்யாதி தயரதன் பெற்ற கோவலனாகை யாலே) “அவனுடையருள்பெறும் போதரிதால் அவனருள் பெருமளவாவி நில்லாது” (திருவாய். 9-9-6) என்று கீழில் பத்திலே க்ஷணகால விஶ்லேஷம் பொறாமை ஆர்த்தரான இவ்வாழ்வார்க்கு “மரணமானால்” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்தஶரீராவஸாநத்திலே உமக்கு மோக்ஷம் தருகிறோம் என்று அணித்தாக நாளிட்டுக் கொடுத்ததுக்குப் பலம் “வானேற வழிதந்த” (திருவாய்மொழி 10-6-5) என்று அவன் காட்டிக் கொடுத்த அர்ச்சிராதி மார்க்கத்துக்குத் துணை பெற்றுப் போகையாலே இவரை இவ்வழியாலே கொடு போவதாக ராஜகுமாரன் போம்போது நிலவரானார் முன்னே போய் நிலம் சோதித்து நிழலாம்படி சோலை செய்து தடாகங்கள் சமைத்து வைத்துப் பின் கொண்டு போவரைப் போலே “அண்டமூவுலகளந்தவன்” (திருவாய்மொழி 10-1-5) என்று திருவுலகளக்க என்றொரு வ்யாஜத்தாலே முன்னோடி நிலம் ஶோதித்து “அவனடிநிழல் தடமன்றி யாமே” (திருவாய்மொழி 10-1-2) என்று காளமேகமான தன்கால் விழுந்தவிடத்தே நிழலும் தடாகமுமாம்படி பண்ணி அமுதமளித்த பெருமானாகையாலே “பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்” (காருடம்) என்று இவர்க்கு பாதேயமாகத் தன் திவ்யகுணாம்ருதத்தை வர்ஷிக்குமவனாய் “தயரதன் பெற்ற மரதக மணித்தடம்” (திருவாய்மொழி 10-1-8) என்றும் “கூத்தன் கோவலன்” (திருவாய்மொழி 10-1-6) என்றும் சக்ரவர்த்தி திருமகனாயும் க்ருஷ்ணனாயும் வந்து அவதரித்தவனாகையாலே. (வேடன் வேடுவச்சி என்று தொடங்கி ஆத்தனை வழித்துணையாக்கி) “உகந்த தோழன் நீ” (பெரிய திருமொழி 5-8-1) என்று பெருமாளுடைய ஸ்வீகாரத்துக்கு விஷயபூதனான ஸ்ரீ குஹப் பெருமாள், “சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந” (ரா.ஆ.74-14) என்று அவன் கடாக்ஷலக்ஷ்யபூதையான ஶபரீ, “யா கதிர் யஜ்ஞஶீலாநாம் ஆஹிதாக்நே ச யா கதி: அபரா வர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம் மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாநநுத்தமாந்” (ரா.ஆ. 68-29, 30) என்று விஷயீகரிக்கும்படியான ஸ்ரீஜடாயுமஹாராஜர், “ராமபாணாஸந க்ஷிப்தமாவஹத் பரமாங்கதிம்” (ரா.சு. 17-8) என்னும்படியான வாலி, ஸுக்ரீவ மஹாராஜர் தொடக்கமான வாநரஸேநைகள், அயோத்தியில் வாழும் சராசரம், “சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸதயா முக்திம் கதாந்யா கோபகந்யகா” (ஸ்ரீவிஷ்ணு புராணம்.5-10-22) என்னும்படி இடைச்சியான சிந்தயந்தி, ததிபாண்டன், அவனுடைய தயிர்த்தாழி, “ஸுகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே ஆவயோர் காத்ரஸத்ருஶம் தீயதாமநுலேபநம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 5-20-6) என்று விஷயீகரிக்கும்படியான கூனி, “தர்மே மநஶ்ச தே பத்ர ஸர்வகாலம் பவிஷ்யதி யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்கமாயுர் பவிஷ்யதி” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 5-9-26) என்று விஷயீகரிக்கும்படியான ஸ்ரீமாலாகாரர், “நவம் ஶவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத, யஜ்ஞஶீல மஹாப்ராஜ்ஞ ப்ராஹ்மணம் ஶவமுத்தமம்” (ஹரிவம்சம்) என்று பிணவிருந்திட்ட கண்டாகர்ணன், “வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்” (நாச்சியார் திருமொழி 12-6) பத்தவிலோசநத்தில் ருஷிபத்நிகள், “மீளவவன் மகனை” (பெரியாழ்வார் திருமொழி 1-5-2) என்று ஹிரண்யபுத்ரனான ஸ்ரீப்ரஹ்லாதன், “அவன் தம்பிக்கு” (பெருமாள் திருமொழி 10-7) என்று ராவணாநுஜனான ஸ்ரீவிபீஷணப்பெருமாள், ஸ்ரீகஜேந்த்ராழ்வான், “நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம்” (பெரிய திருமொழி 5-8-4) என்கிற ஸுமுகன், “மலரடி கண்ட மாமறையாள”னான (பெரிய திருமொழி 5-8-5) கோவிந்தஸ்வாமி, “மாமுனி பெற்ற மைந்தன்” (பெரிய திருமொழி 5-8-6) என்று ம்ருகண்டுபுத்ரனான மார்க்கண்டேயன் இவர்கள் தொடக்கமான பதினெட்டு நாட்டிலுள்ள அநுகூலவர்க்கமான பெருங்கூட்டத்தை அர்ச்சிராதிமார்க்கத்தாலே தானே துணையாய்க் கொண்டு நடத்துகிறவனாய் “திருமோகூராத்தன் தாமரையடியன்றி மற்றொன்றிலம் அரணே” (திருவாய்மொழி 10-1-6) “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம் கதியே” (திருவாய்மொழி 10-1-1) என்று பரமாப்தனான காளமேகத்தை வழித்துணையாகப் பெற்று.
(3) (அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே) “நாமுமக்கறியச் சொன்ன நாள்களும் நணியவான” (திருவாய்மொழி 10-2-9) “மரணமானால்” (திருவாய்மொழி 9-10-5) என்று அவன் அறுதி இட்டுத் தந்தானாய் நான் உங்களுக்குச் சொன்ன நாள் கிட்டிற்றென்று பிறர்க்கும் பேசும்படியாய் “ஸுப்ரபாதா ச மே நிஶா ஸுப்ரபாதாத்ய ரஜநீ மதுராவாஸ யோஷிதாம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 5-17-3) என்று பகவத்ப்ராப்தி அணித்தான நல்விடிவான நாளிலே (துணை பிரியாமல் போக்கொழிந்து மீள்கின்றதில்லை என்று நிச்சித்திருந்தவிவர்) “துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை பசுமேய்க்கப்போகேல்” (திருவாய்மொழி 10-3-4) “என் கை கழியேல்” (திருவாய்மொழி 10-3-8) “பசுநிரை மேய்ப்பொழிப்பானுரைத்தன” (திருவாய்மொழி 10-3-11) என்று தமக்குத் துணையாக அவனைப் பசுமேய்க்கப் போகையாகிற அபிமதத்தில் நின்றும் தவிர்த்து “மீள்கின்றதில்லை பிறவித்துயர் கடிந்தோம்” (திருவாய்மொழி.10-4-3) “நிலை பேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்” (திருவாய்மொழி.10-4-4) என்று ஸம்ஸாரதுரிதம் மறுவலிடாதென்று “ந பிபேதி குதஶ்சந” (தைத்திரீயோபநிஷத்) என்கிறபடியே ஒன்றுக்கும் அஞ்சாதபடி நிஶ்சித்திருந்தவிவர் (ஸஞ்சிதம் காட்டும் தஶையானவாறே) மரணாவஸ்தைகளிலே ஸஞ்சிதமாய்ப் புதைத்துக் கிடந்த நிதிகளைப் புத்ராதிகளுக்குக் காட்டுவாரைப் போலே தமக்கு ப்ராப்தி அணித்தானவாறே ஒருவரும் இழக்கவொண்ணாது, இவ்வளவிலே எல்லார்க்கும் ஹிதாஹிதங்களை அறிவிக்க வேணுமென்று பார்த்து,
(4) (முந்துற்ற நெஞ்சுக்குப் பணியித்யாதி க்ருத்யாக்ருத்யங்களை விதித்து) “தொழுதெழென் மனனே” (திருவாய்மொழி 1-1-1) என்று ப்ரதமத்திலே உபதேஶிக்கும்படி பகவத்விஷயத்திலே தம்மிலும் முந்துற்று நிற்கிற தம்முடைய திருவுள்ளத்தைப் பார்த்து “பணிநெஞ்சே நாளும் பரமபரம்பரனை” (திருவாய்மொழி 10-4-7) “வாழியென் நெஞ்சே மறவாது வாழ்கண்டாய்” (திருவாய்மொழி 10-4-8) “மருளொழி நீ மடநெஞ்சே” (திருவாய்மொழி 10-6-1) “நரகத்தை நகு நெஞ்சே” (திருவாய்மொழி 10-6-5) “வாழி மனமே கைவிடேல்” (திருவாய்மொழி 10-7-9) என்று நம் ப்ரதிபந்தகங்களையெல்லாம் தானே போக்கி அடிமை கொள்ளும் ஸர்வஸ்மாத்பரனை அநுபவிக்கப்பார். உனக்கிந்த ஸம்ருத்தி மாறாதே சென்றிடுக. கைபுகுந்ததென்னா இதரவிஷயங்களிலே செய்யுமத்தை இவ்விஷயத்திலும் செய்யாதே கிடாய். இன்பம் பயக்கவிலே “திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து கை தொழக்கூடுங்கொலோ” (திருவாய்மொழி 7-10-9) என்று ப்ராப்யவஸ்து கிட்டிற்றாகில் இங்கேயடிமை செய்யவமையாதோவென்று ப்ரமிப்பதொன்றுண்டு; உனக்கு அத்தைத் தவிரப்பார். உத்தேஶ்யவஸ்து ஸந்நிஹிதமாய்த்தென்று அத்தையே பார்க்குமத்தனையோ, நம்மைப் பார்க்க வேண்டாவோ நான் பரமபதத்தேறப் போகாநின்றேன். நெடுநாள் நம்மைக் குடிமக்களாக்கி எளிவரவு படுத்தின ஸம்ஸாரத்தைப் புரிந்து பார்த்து சிரித்துப் போரு கிடாய்; நமக்கு இந்த ஸம்பத்தெல்லாம் திருமலையாழ்வாராலே வந்ததாய்த்து. அத்திருமலையைக் கைவிடாதேகொள் என்று க்ருத்யாக்ருத்யங்களை அவஶ்யகரணீயமாம் படி விதித்து (நெஞ்சுபோல்வாரைத்தொண்டீரென்றழைத்து) திருவுள்ளம் போலே அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவர்களை “தொண்டீர் வம்மின்” (திருவாய்மொழி 10-1-4) என்று அழைத்து,
(5) (வலஞ்செய்தித்யாதி நடமின் புகுதுமின் என்று) “கொண்ட கோயிலை வலஞ் செய்திங்காடுதும் கூத்தே” (திருவாய்மொழி 10-1-5) “எண்ணுமின் எந்தை நாமம்” (திருவாய்மொழி 10-2-5) “பேசுமின் கூசமின்றி” (திருவாய்மொழி 10-2-4) “நமர்களோ சொல்லக் கேண்மின்” (திருவாய்மொழி 10-2-8) “பாதங்காண நடமினோ நமர்களுள்ளீர்” (திருவாய்மொழி 10-2-1) “அனந்தபுர நகர் புகுதுமின்” (திருவாய்மொழி 10-2-1) என்று அவனெழுந்தருளியிருக்கிற தேஶத்திலே அநுகூலவருத்திகளைப் பண்ணுங்கோள் ; ஸ்வாமியுடைய திருநாமங்களை அநுஸந்தியுங்கோள் உங்கள் யோக்யதை பார்த்துக் கூசாதே திருவனந்தபுரத்திலே ஸ்நேஹத்தைப்பண்ணி வர்த்திக்கிறவனைப்பேசுங்கோள்; என்னோடு ஸம்பந்தமுடையரானார் சொன்ன வார்த்தையைக் கேளுங்கோள்; திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேஶ்வரனுடைய திருவடிகளைக் காணப் போருங்கோள்; என்று இச்சை பிறந்த இன்றே அங்கே போய்ப்புகப் பாருங்கோள் என்று அவர்களுக்குக் கர்த்தவ்யம் ஸ்மர்த்தவ்யம் வக்தவ்யம் ஶ்ரோதவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யமெல்லாம் வெளியிட்டு,
(6) (பிணக்கறவைச் சார்வாக நிகமித்துக் கொண்டு) உக்தநிகமநம் பண்ணுகை ஶாஸ்த்ரமாகையாலே முதலிலே “பிணக்கற” என்கிற பாட்டில் “வணக்குடைத் தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்று உபக்ரமித்த ஸாத்யஸித்தரூபமான பக்தி ப்ரபத்திகளாகிற உபாயத்தையும் சார்வே தவநெறியிலே “சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்” (திருவாய்மொழி 10-4-1) என்றும் “பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமலமலர்ப்பாதம்” (திருவாய்மொழி 10-4-9) “இருமை வினைகடிந்து இங்கென்னை யாள்கின்றான்” (திருவாய்மொழி 10-4-2) என்று நிகமித்துக் கொண்டு,
(7) (எண்பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் ஶப்தார்த்தங்களைச் சுருக்கி) “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன்” (திருவாய்மொழி 1-2-10) என்றும் “திண்ணம் நாரணமே” (திருவாய்மொழி 10-5-1) என்றும் பக்திக்காலம்பநமாக உபதேஶித்த திருமந்தரத்திலர்த்தத்தையும் ஶப்தத்தையும் பரவாதபடி சுருக்கிக் கொண்டு (மாதவன் என்றென்று த்வயமாக்கி) “மாதவனென்றென்று ஓதவல்லீரேல்” (திருவாய்மொழி 10-5-7) என்று அந்தத்திருநாமத்தினுடைய விஶதாநுஸந்தாநமான த்வயத்தையும் வெளியிட்டு (கரணத்ரயமித்யாதி கையோலை செய்து கொடுத்து) ஈஶ்வரன் தம்மைக் கொண்டு போகையிலே த்வரிக்கிறபடியாலும் கேட்கிறவர்களுக்கு ப்ரதிபத்திக்கு விஷயமாம் படியாகவும் சுருங்கக் கொண்டு அநுஷ்டாநார்த்தப்ரகாஶகமான ப்ரயோகவ்ருத்தி போலே “பாடீரவன் நாமம் வீடே பெறலாமே” (திருவாய்மொழி 10-5-5) “சுனைநன் மலரிட்டு நினைமின் நெடியானே” (திருவாய்மொழி 10-5-10) என்று கரணத்ரயத்தாலுமுண்டான ஆஶ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஶித்து (செஞ்சொற்கவிகளுக்குக் கள்ளவழி காவலிட்டு) “செஞ்சொற்கவிகாள் உயிர்காத்தாட் செய்மின்” (திருவாய்மொழி 10-7-1) என்று அவனுக்கு அடிமை செய்வார் ஶீலாதிகளிலே அகப்படாதே கொள்ளுங்கோள், அநுபவகைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு அரணழியாமல் கள்ளவழி காவலிடுவாரைப் போலே ஶீலகுணமாகிற ஆழங்காலிலே இழியாதே கொள்ளுங்ககோள் என்று உபதேஶித்து,
(8) (மனந்திருந்தி என்று தொடங்கி தேஹதோஷமறிவித்து) “தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்” (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே பரமபதத்தைக் கொடுப்பதாகப் போய் அலங்கரித்து அவன் வரக்கொள்ள “ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல்” (திருவாய்மொழி 6-7-2) என்று இவர் உபதேஶத்தாலே லோகமாகத் திருந்த இவரை வைத்த கார்யம் தலைக்கட்டினவாறே “விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்” (திருவாய்மொழி 10-6-3) என்று இவரைக் கொண்டுபோகையிலே த்வரித்து இவருடைய ஶரீரம் சரமஶரீரமாகையாலே அதில் தனக்குண்டான வ்யாமோஹத்தாலே இவரைக் கொண்டு போகையையும் மறந்து “கோவிந்தன் குடிகொண்டான்” (திருவாய்மொழி 10-6-7) என்று ஸபரிகரனாய்க் கொண்டு “என் மாயவாக்கை இதனுள் புக்கு” (திருவாய்மொழி 10-7-3) இன்றிவர்தாம் குந்தியடியிட்டு த்யாஜ்யமென்று சரக்குக் கட்டிப் புறப்பட்டு நிற்கிற இவருடைய தேஹத்திலே தான் புகுந்து “திருமாலிருஞ்சோலை மலையே” (திருவாய்மொழி 10-7-8) என்கிற பாட்டின்படியே க்ஷீராப்தி தொடக்கமாகத் தனக்கு வாஸஸ்தாந திவ்யநகரங்களில் பண்ணும் விருப்பத்தையெல்லாம் ஒரோ அவயவங்களிலே பண்ணி “அங்கநாமங்கநாமந்தரே மாதவவோ மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்கநா இத்தமா கல்பிதே மண்டலே ஸஞ்சரந் ஸஞ்ஜகௌ வேணுநா தேவகீநந்தந:” (கி.கர்ணாம்ருதம்.2-35) என்று திருக்குரவையில் பெண்களோடே அநேக விக்ரஹபரிக்ரஹம் பண்ணி அநுபவித்தாப் போலவும் ஸ்ரீமத் த்வாரகையிலே தேவிமார்களோடே பதினாறாயிரம் விக்ரஹம் கொண்டு அநுபவித்தாப் போலவும் அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி இவருடைய அவயவங்கள்தோறும் அநுபவிக்கும்படி இவருடைய விக்ரஹத்திலே சபலனானவனுக்கு “பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே உன் மாமாயை மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-8-10) என்று தம்முடைய தேஹத்தில் தோஷத்தை அவனுக்கறிவித்து அத்தை விடுவிக்க வேணுமென்று
(9) (மாயையை மடித்து வானே தரக்கருதி கருத்தின்கண் பெரியனானவனை) “மடித்தேன் மனைவாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை” (திருவாய்மொழி 10-8-3) ஸம்ஸாரத்தில் நிற்கைக்கடியான மாயை ப்ரக்ருதி அத்தைத் திரிய விடுத்தேன் என்று இவர்தாமே பேசும்படி அசித்ஸம்பந்தத்தையறுத்து “வானே தருவான்” (திருவாய்மொழி 10-8-5) என்று பரமபதத்தை இவர்க்குக் கொடுப்பதாக “கருத்தின்கண் பெரியன்” (திருவாய்மொழி 10-8-8) என்று இவருடைய மநோரதத்தினளவல்லாபடி இவரைக் கொண்டுபோகையிலே த்வரிக்கிறபடியைக் கண்டு (அநாத்யநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க) “இன்றென்னை” (திருவாய்மொழி 10-8-9) இத்யாதி இன்றிப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்த நீ அநாதிகாலம் உபேக்ஷித்து வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்யவேணுமென்று அவன் மடியைப் பிடிக்க,
(10) (இந்த்ரிய கிங்கரராய் குழிதூர்த்துச் சுவைத்தகன்றீர் என்னில் அவை யாவரையுமகற்ற நீ வைத்தவை என்பர்) “வயந்து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரிய கிங்கரா:” (வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை) என்கிறபடியே அநாதிகாலம் இந்த்ரியவஶ்யராய் “தூராக்குழி தூர்த்து எனைநாளகன்றிருப்பன்” (திருவாய்மொழி 5-8-6) “அற்பசாரங்களவை சுவைத்தகன்று ஒழிந்தேன்” (திருவாய்மொழி 3-2-6) என்று துஷ்பூரமான இந்த்ரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம் உன்னை அகன்றிருக்கக் கடவேன் அற்பசாரமானது அது நமக்குமெட்டாதபடி ஸம்ஸாரத்திலே கைகழிப் போந்தேன் என்று நீர்தாமே பேசும்படியான ஶப்தாதி விஷயப்ராவண்யமன்றோ நீர் அநாதிகாலம் இழக்கைக்கு ஹேது என்னில், “ஓரைவர் யாவரையும் மயக்க நீ வைத்த” (திருவாய்மொழி 7-1-8) என்றும் “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்” (திருவாய்மொழி 5-7-8) என்றும் நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை என்று நன்றாக அறிந்தேன் என்பர். (அது தேஹயோகத்தாலே என்னில் அந்நாள் நீ தந்த சுமடென்பர்) அந்த இந்த்ரியவஶ்யதைக்கடி ஶரீர ஸம்பந்தமன்றோ என்னில் “அந்நாள் நீ தந்த ஆக்கை” (திருவாய்மொழி 3-2-1) “அது நிற்கச் சுமடு தந்தாய்” (திருவாய்மொழி 7-1-10) என்று அதுவும் உன்னாலே உண்டான(தென்பர்). (முன் செய்த முழுவினையாலே என்னில் அது துயரேமேயுற்ற இருவினை உன் கோவமும் அருளுமென்பர்) “முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ் குற்றேவல் முன்செய்ய முயலாதே அகல்வதுவோ” (திருவாய்மொழி 1-4-2) என்று அந்த தேஹஸம்பந்தத்துக்கடி நீர் அநாதியாகச் செய்து போந்த கர்மமன்றோ என்னில் “துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் உற்றவிருவினையாய்” (திருவாய்மொழி 3-6-8) என்று புண்யபாப ரூபமான கர்மங்களை அசேதநமுமாய் நஶ்வரமுமாய் இருபசைமலமுமாய்க் கொண்டு உன் கோபமும் அருளுமென்று உன்னுடைய நிக்ரஹாநுக்ரஹரூபேண பலிக்குமவையாகையாலே அந்த கர்மம் நீயிட்ட வழக்கென்பர்.
(11) (ஈவிலாத மதியிலேனென்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில் ஆங்காரமாய்ப் புக்கு செய்கைப்பயனுண்பேனும் கர்த்ருத்வமும் தத் பலமான போக்த்ருவத்வமும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்) “ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்” (திருவாய்மொழி 4-7-3) என்றும் “மதியிலேன் வல்வினையே மாளாதோ” (திருவாய்மொழி 1-4-3) என்றும் அநுபவித்தாலும் மாளாத பாபத்தை எத்தனை பண்ணினேன், நான் பண்ணினபாபமேயோ அநுபவித்தாலும் மாளாதேயிருப்பது என்று நீர் சொல்லுகையாலே வந்த கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் உம்மதன்றோ என்று நாம் சொல்லில் “தானாங்காரமாய்ப் புக்கு தானே தானே யானான்” (திருவாய்மொழி 10-7-11) என்று தானபிமாநியாய்ப் புக்கு ஆத்மாத்மீயங்களில் எனக்குண்டான அபிமானத்தைத் தவிர்த்துத் தானே அபிமாநியானானென்று, அந்த கர்த்ருத்வமும் “செய்கைப் பயன் உண்பேனும் யானே” (திருவாய்மொழி 5-6-4) என்றும் “கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை” (திருவாய்மொழி 3-5-10) என்று பலபோக்தாவும் நாமிட்டவழக்காகையாலே கர்த்தாவும் போக்தாவும் நீயே என்பர்.
(12) (யானே எஞ்ஞான்றுமென்றத்தாலே என்னில் அயர்ப்பாய்ச் சமய மதி கொடுத்து உள்ளம் பேதம் செய்கை உன் தொழில் என்பர்) “யானே என்னை அறியகிலாதே யானே என்றனதே என்றிருந்தேன்” (திருவாய்மொழி 2-9-9) “எஞ்ஞான்றும் மெய்ஞ்ஞானமின்றி வினையியல் பிறப்பழுந்தி” (திருவாய்மொழி 3-2-7) என்று நீர் சொல்லுகையாலே அந்த கர்மகர்த்ருத்வ பலபோக்த்ருத் வங்களுக்கடி உம்முடைய அஜ்ஞானமன்றோ என்னில், “அயர்ப்பாய்த் தேற்றமுமாய்” (திருவாய்மொழி 7-8-6) “மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்” (திருவாய்மொழி 3-1-4) “உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்” (திருவாய்மொழி 5-10-4) என்று ஜ்ஞாநாஜ்ஞானங்களிரண்டும் நீயிட்ட வழக்காகையாலே அத்தால் வந்த புத்தி பேதங்களும் உனக்குக் காரியமென்று சொல்லுவர். (ஜீவப்ரக்ருதி சைதந்யம் நீங்கும் வ்ரதஹேது அகமேனியில் அழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்) “மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே யாதானும் பற்றி நீங்கும் வ்ரதம்” (திருவிருத்தம் 95) என்று ஸூக்ஷ்மப்ரக்ருதி விஶிஷ்டனான ஆத்மாவில் கிடக்கிற சைதந்யம் ப்ரக்ருதிப்ராக்ருதங்களைப் பற்றி நம்மை விட்டகலுகை நங்கார்யம். “அகமேனி ஒழியாமே” (திருவாய்மொழி 9-7-10) என்று நமக்கந்தரங்க ஶரீரமான இவ்வாத்மாவைப் பற்றிக் கிடக்கிற ப்ரக்ருதிரூபமான மாலிந்யத்தை அறுக்கை அவ்வாத்மாவுக்கு அபிமாநியான நம்முடைய க்ருத்யமாயிருந்ததீ.
(13) (தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்) “நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே நல்கத்தானாகாதோ நாரணனைக் கண்டக்கால்” (திருவாய்மொழி 1-4-5) என்று நாம் ஸ்நேஹபூர்வமாக ரக்ஷிக்கைக்கடியான நாராயணப்ரயுக்தமான ஸம்பந்தம் நிருபாதிகமாகையால் (ஸௌஹார்த்தம் எஞ்ஞான்றும் நிற்கும்) “தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாய்த் தான்தோன்றி” (திருவாய்மொழி 8-10-7) என்று அந்த பந்தமடியாக எல்லாருடைய நன்மையை ஆஶாஸிக்கைக்கடியான ஸௌஹார்த்தகுணம் ஸர்வாத்மாக்கள் பக்கலிலும் ஸர்வகாலமும் நடக்கையாலே இந்த ஸம்பந்தமடியான ஸ்நேஹமும் இவனுக்குக் கண்ணழிவு சொல்லவொண்ணாதா யிருந்தது. (பிணக்கிப் பேதியாத ஜ்ஞாநவைகல்யமில்லை) “பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்திவெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்” (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹாரகாலத்தில் மண்ணும் நீரும் கலசுமாப்போலே நன்றாகக் கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம் ஒருவருக்குத் தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டிக்கும்படியான நமக்கு ஜ்ஞாநஶக்த்யாதிகளில் குறைசொல்லிக் கண்ணழிக்க வொண்ணாதாயிருந்தது. (ஏகமூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள் நம்மது) “ஏகமூர்த்தி இருமூர்த்தி” (திருவாய்மொழி 4-3-3) என்கிற பாட்டின்படியே காரணங்களோடு கார்யங்களோடு வாசியற எல்லாவற்றையும் உண்டாக்கி அவற்றினுடைய வஸ்துத்வ நாமபாக்த்வங்களுக்காக அநுப்ரஶித்து ஸூக்ஷ்மரான சேதநர்க்கு ருசிபிறந்தபோது ஆஶ்ரயிக்கைக்காக க்ஷீராப்தியிலே கண்வளர்ந்தருளுகிற ஸர்வஶரீரியான நீ உன்னுடைய திருமேனிக்கு வேண்டும் போகோபகரணங்களை பூசும் சாந்தில் படியே என்பக்கலாக்கி நிர்து:க்கனானாயே என்று இவர் பேசும்படி இவரைப் பெறுகைக்கு யத்நம் பண்ணுகையும் பெற்றால் உகக்கைக்கீடாந அறிவுள்ளதொன்றாயிருந்து அத்தாலும் கண்ணழிவு சொல்ல வொண்ணாதாயொழிந்தது.
(14) (நாம் தனிநின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) “தனிநின்ற சார்விலா மூர்த்தி” (பெரிய திருவந்தாதி.71) என்று தான் வேண்டிற்றுச் செய்யும்படி நிரங்குஶஸ்வதந்த்ரனும் நீயே. “அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான்” (திருவாய்..9-3-2) இத்யாதி. “அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” (திருவாய்மொழி 9-3-2) என்று ஸ்ருஷ்டி முதலான ஸகலப்ரவ்ருத்திகளையும் ஸஹஜமாகத் தானே செய்ய வல்லனென்று இப்படி நம்மை உள்ளபடி அறியும் ஸர்வஜ்ஞரான இவர்க்கு உத்தரம் சொல்லுகையறிந்து,
(15) (நெறிகாட்டி அருகும் சுவடும்போலே இதுவும் நிருத்தரம் என்ற கவிழ்ந்து நிற்க) “நெறிகாட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6) என்கிற பாட்டிலும் “அருகும் சுவடும் தெரிவுணரோம்” (பெரிய திருவந்தாதி 8) என்கிற பாட்டிலும் உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயோ விலக்ஷணமான திருமேனியைக் காட்டி சேர்த்துக் கொள்ளப் பார்த்தாயோ அஜ்ஞரான எங்களை என்செய்வதாக நினைத்தாய் இத்தை அருளிச்செய்ய வேணுமென்றும் உன்னைக் கண்டும் கேட்டும் அறியாதிருக்க எனக்கு உன் பக்கலிலே ஸ்நேஹமானது பெருகா நின்றது இதற்கு ஹேதுவை அருளிச் செய்ய வேணும் என்றும் கேட்டவிடங்களில் ஒரு ஹேது சொல்லவொண்ணாதாப் போலே இதுக்கும் சொல்லலாவதொரு ஹேது இல்லாமையாலே நிருத்தரமென்று தரையைக் கீறிக் கவிழ்ந்து நிற்க,
(16) (அமந்த்ரோத்ஸவ கோஷம்போலே) உத்ஸவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயன் மந்த்ரம் தோன்றாவிட்டால் கொட்டச் சொல்லுமாபோலே இவனும் (ஏறப்பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிறவென்று) அது கிடக்க உம்மைக் கொண்டுபோகிற வழியைப் பாரீர் என்று “நானேறப் பெறுகின்றேன்” (திருவாய்மொழி 10-6-5) என்று இவர் கீழ்ச் சொன்னபடியே பரமபதத்துக்குப் போகிற மார்க்கத்தையும், மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க (மேகஸமுத்ரபேரீகீத காஹளஶங்காஶீஸ்துதி கோலாஹலம் செவிப்பட்டவாறே) “சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலை திரை கையெடுத்தாடின” (திருவாய்மொழி 10-9-1) “கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்” (திருவாய்மொழி 10-9-5) “காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர் வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர்” (திருவாய்மொழி 10-9-6) “தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர்” (திருவாய்மொழி 10-9-7) என்று ராஜாக்கள் போகிறபோது தூர்யாதி மங்கலகோஷம் பண்ணுவாரைப் போலே போகிறவர்களைக் கண்ட ப்ரீதியாலே உண்டான மேக ஸமுத்ரங்களினுடைய கோஷங்களாகிற தூர்யாதி பேரிகளையும் அங்குள்ளாருடைய கீத காஹளஶங்காஶீஸ்துதி கோலாஹலங்களையும் இவர் செவிப்படுத்த அத்தைக் கேட்டவாறே (ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்திக்கு) அந்த அர்ச்சிராதிமார்க்கத்தையும் மார்க்கஸ்தரான ஆதிவாஹிக ஸத்காரத்தையும் திவ்யதேஶப்ராப்தியையும் அங்குள்ளாருடைய பஹுமாநத்தையும் பெற்று ஆநந்தமயமான ஆஸ்தாநத்திலிருப்பையும் ஸாக்ஷாத்கரித்து, இப்படி ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்தி மாநஸாநுபவமாத்ரமாய் யதாமநோரதமநுபவமல்லாமையாலே,
(17) (தலைமிசையாய் வந்த தாள்களைப் பூண்டு) “தலைமிசையாய் வந்திட்டு இனி நான் போகலொட்டேன்” (திருவாய்மொழி 10-10-1) என்றும் “தலைமேல் புனைந்தேன்” (திருவாய்மொழி 10-4-4) “தலைமேல தாளிணைகள்” (திருவாய்மொழி 10-6-6) என்றும் இப்படி பூர்ணமாக வந்து தோன்றின திருவடிகளைக் கட்டிக் கொண்டு போகாமல் தடுத்து (திருவாணையிட்டு) “திருவாணை நின்னாணை கண்டாய்” (திருவாய்மொழி 10-10-2) என்று அவனுக்கு மறுக்கவொண்ணாத ஆணையிட்டுத் தடுக்க நீர் ஶேஷபூதரான பின்பு ஶேஷியான நான் செய்தது கண்டிருக்குமத்தனையொழிய நீர் ஆணையிட்டுத் தடுக்கை உமக்கு ஸ்வரூபமன்று; ஆனபின்பு அது பெறாவாணைகாணும்” என்ன, (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) “கூசம் செய்யாது கொண்டாய்” (திருவாய்மொழி 10-10-2) என்று ஸர்வஜ்ஞனான நீ என் பூர்வவ்ருத்தத்தால் வந்த அயோக்யதையைப் பார்த்துக் கூசி வாசிவையாலே உன்னோடு ஆத்மபேதமில்லாதபடி என்னைப் பரிக்ரஹித்த உன்னதன்றோ செய்திப்பிழை என்றும்.
(18) (பற்றுக் கொம்பற்ற கதிகேடு) “ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்” (திருவாய்மொழி 10-10-3) என்று கொடி கொழுகொம்பை ஒழிய நிற்கமாட்டாதாப் போலே என் உஜ்ஜீவந ஹேதுவாயிருப்ப தொன்று உன்னையொழிய வேறு காண்கிறிலேன் என்னும்படியான அநந்யகதித்வம் என்றும் (போரவிட்ட பெரும்பழி) “எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப் போரவிட்டிட்டாயே” (திருவாய்மொழி 10-10-4) என்று என் கார்யம் நீ செய்யக்கடவதாக ஏறிட்டுக் கொண்டு உன்பக்கல் நின்றும் பிரித்து உன் குணங்கள் கால்நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளி உபேக்ஷித்தாய்; இது உனக்கும் பரிஹரிக்க வொண்ணாத பெரும்பழியன்றோ வென்றும்,
(19) (புறம்போனால் வருமிழவு) “போர விட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால் பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தையந்தோ எனதென்பதென் யானென்பதென்” (திருவாய்மொழி 10-10-5) என்று உன்பக்கல் நின்றும்பிரித்து அநந்யகதியாய் அஜ்ஞனாய் அஶக்தனான என்னை ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவு புகுர நிறுத்தி ஸர்வரக்ஷகனான நீ என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து என்னை உபேக்ஷித்தால் நான் எந்த உபாயத்தைக் கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? எனக்கொரு புருஷார்த்தமென்றும் நானென்றும் உண்டோ? முடிந்தேன் என்கிற இழவாலும்.
(20) (உண்டிட்ட முற்றீம்பு) “மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்” (திருவாய்மொழி 10-10-6) என்று மநஸ்ஸுக்கு பர்யாப்தி பிறவாமல் நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கின கார்யத்தை குறை கிடவாதே விஷயீகரித்து விடாய். புக்தஶேஷமாக்கின உன்னதன்றோ முதல் தீம்பு என்றும் (அன்பு வளர்ந்த அடியுரம்) கோலமலர்ப் பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” நான் அந்த:புர பரிகரமன்றோ! என்பக்கலுண்டான அன்புக்கடியில்லையோ! அந்த புருஷகார பலத்தால் வந்த அடியுரமென்றும், (உயிருறவு) “பெற்றினிப்போக்குவனோ உன்னை என் தனிப்பேருயிரை” (திருவாய்மொழி 10-10-8) என்று அத்யந்த விஸஜாதீயனாயிருந்து வைத்து எனக்கு தாரகனான உன்னைவிட்டு தரிக்கப் போமோ? ப்ராணனை விட்டு ப்ரக்ருதி தரிக்கவற்றோ என்னும்படியான ஶரீரஶரீரி ஸம்பந்தம் என்று இப்படி.
(21) (முதலளவு துரக்கைகளாலே) முதலிலே பிடித்து முடியுமளவாக புகலறத்துரந்து பெறாவாணை Dயல்லாமையை பலிப்பித்துக் கொள்ளும்படியான பேரவா குளப்படியாம்படி யென்னும்படி “அதனில் பெரியவென்னவாவறச் சூழ்ந்தாயே” (திருவாய்மொழி 10-10-10) என்று தத்வத்ரயங்களையும் விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படியான பரமபக்தியையும் குளப்படியாக்க வற்றான ஸமுத்ரம் போன்றிருக்கிற தன்னபிநிவேஶத்தைக் காட்டி வந்து ஸம்ஶ்லேஷித்து இவருடைய ஸகலதாபத்தையும் வாஸநையோடே போக்கி இவருடைய கூப்பீட்டையும் ஓயப்பண்ணி “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” (ரா.யு. 134-39) என்கிறபடியே மீண்டெழுந்தருளிப் பெருமாள் ஸ்ரீபரதாழ்வானை மடியிலே வைத்தணைத்துக் கொண்டாப்போலே இவர் விடாய் கெடும்படி கலந்து “அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்” என்று தாமே பேசும்படி இவருடைய ஸகல தாபங்களையும் போக்குகையாலே நிர்து:கராய் நிரஸ்தஸமஸ்த ப்ரதிபந்தகராய் பேற்றோடே தலைக்கட்டினபடியை வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் என்கிறார்
229. உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது, நாடுதிருந்த நச்சுப் பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம் தலைக்கட்ட, வேர்சூடுவார் மண்பற்றுப்போலே என்னுமவற்றிலும் இனி இனியென்று இருபதின்கால் கூப்பிடும் ஆர்த்தி அதிகார பூர்த்திக்கென்னுமது முக்யம்.
இனிமேல் இவர் ப்ரதமத்திலே ஆர்த்தராய்க் கொண்டு ஶரணம் புக்கபோதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக்கட்டிக் கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக்கடியேதென்னில் அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச்செய்து அவை எல்லாவற்றிலும் இவர்க்குப் பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான் என்கிறார்.
(உறாமையோடே உற்றேனாக்காதொழிந்தது) “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பபும் இன்னின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம் 1) என்று முதலிலே அவித்யாகர்மவாஸநாருசி ப்ரக்ருதிஸம்பந்த விடுவிக்கவேணுமென்று ஆர்த்தராய் ஶரணம்புக்க விவர்க்கு “உற்றேன் உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவதெந்தாய்” (திருவாய்மொழி 10-8-10) என்று திருவடிகளைக் கிட்டி ப்ரீதிபூர்வகமாக அடிமைசெய்யப் பெற்றேன் என்று பேசும்படியாகத் தலைக்கட்டிக் கொடாதே இவரை இவ்வளவவும் ஈஶ்வரன் வைக்கைக்கு ஹேதுவென்னென்னில், (நாடு திருந்த) அவன் ஸ்ருஷ்ட்யவதாரங்களாலும் திருத்த வொண்ணாத ஜகத்தை “ஊரும்நாடுமுலகமும் தன்னைப்போல்” (திருவாய்மொழி 6-7-2) என்னும்படி திருந்துகைக்காகவும், (நச்சுப்பொய்கை ஆகாமைக்கு) இவரபேக்ஷித்த கார்யம் செய்யில் நச்சுப் பொய்கை போலே பகவத்விஷயத்தில் இழிவாரில்லை என்றும், (ப்ரபந்தம் தலைக் கட்ட) தன்னோடு பிறரோடு வாசியற எல்லார்க்கும் போக்யமுமாய் பாவநமுமாய் இருக்கிற இப்ப்ரபந்தங்களை இவரைக்கொண்டு தலைக்கட்டுவித்துக் கொள்ளுகைக்கும், (வேர்சூடுவார் மண்பற்றுப் போலே) வேர் சூடுவார் அதில் மண்பற்றுக் கழற்றதாப்போலே, சரமஶரீரமான இவருடைய விக்ரஹத்திலுண்டான வ்யாமோஹத்தாலே விடமாட்டாமையாலும் வைத்தான் என்கிற இந்த ஹேதுக்களெல்லாவற்றிலும் , (இனி இனி என்று இருபதுகால் கூப்பிடும் ஆர்த்தி) அவித்யாதி து:க்கம் “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம் 1) என்று தொடங்கி “இனிநெஞ்சமிங்குக் கவர்வது யாமிலம்” (திருவிருத்தம் 0), “இனிவளை காப்பவரார்” (திருவிருத்தம் 13), “இனியுன்திருவருளாலன்றிக் காப்பரிதால்” (திருவிருத்தம் 62), “இனியவர்கண் தங்காது” (திருவாய்மொழி 1-4-4), “இனியுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே” (திருவாய்மொழி.1-4-8), “இனியெம்மைச் சோரேலே” (திருவாய்மொழி.2-1-10), “எந்நாள் யானுன்னையினிவந்து கூடுவனே” (திருவாய் மொழி.3-2-1), “ஆவிகாப்பாரினியார்” (திருவாய்மொழி.5-4-2), “நெஞ்சிடர் தீர்ப்பாரினியார்” (திருவாய்மொழி.5-4-9), “இனியுன்னை விட்டொன்றுமாற்றகிற்கின்றிலேன்” (திருவாய்மொழி.5-7-1), “தரியேனி” (திருவாய்மொழி.5-8-7), “உழந்தினியாரைக்கொண்டு என்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4), “அத்தனையாம் இனி யென்னுயிரவன்கையதே” (திருவாய்மொழி 9-5-2), “நாரைக்குழாங்கள்காள்பயின்றென்னினி” (திருவாய்மொழி 9-5-10), “இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்” (திருவாய்மொழி 9-9-2), “இனிப்பிறவி யான்வேண்டேன்” (திருவாய்மொழி 10-6-1) “இனி நான் போகலொட்டேன்” (திருவாய்மொழி 10-10-1) “முடிவிலீயோ” (திருவாய்மொழி 10-10-9), “சுடர்ஞான இன்பமேயோ” (திருவாய்மொழி 10-10-10) என்னுமளவாக இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்திபரம்பரையை விளைத்து இவருடைய பரமபக்தி பர்யந்தமான அதிகாரபூர்த்தியை ப்ரகாஶிப்பிக்கைக்காக வைத்தான் என்கிறவிதுவே தாத்பர்யமென்கிறார்.
230. கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதி கண்டேனென்று பத்தும் உட்கண்ணாலேயாய், காண்பானவாவுதல் அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும் பரஜ்ஞாநகர்ப்ப பரபக்தி.
ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஶைகள் எந்தெந்த திருவாய்மொழிகள் என்ன அத்தை அருளிச்செய்கிறார் “கமலக்கண்ணன்” என்று தொடங்கி பரஜ்ஞாந கர்ப்ப பரமபக்தி. “கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான் காண்பன்” (திருவாய்மொழி 1-9-9) என்று புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான்; நானுமவனை ஸாக்ஷாத்கரியா நின்றேன் என்று உபக்ரமித்து “கண்ணுள் நின்றகலான்” (திருவாய்மொழி 10-8-8) என் கண்வட்டத்தை விட்டுப் போகிறிலன் என்கிறதளவாக “என் கண்ணனை நான் கண்டேனே”, (திருவாய்மொழி 2-8-10) “கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக்கண்டுகொண்டு” (திருவாய்மொழி 3-2-10), “நறுந்துழாயின்கண்ணியம்மா நானுன்னைக்கண்டுகொண்டே” (திருவாய்மொழி 4-7-7), “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே”, (திருவாய்மொழி 4-9-9) “கைதொழவிருந்தாயது நானுங் கண்டேனே” (திருவாய்மொழி 5-7-5), “ஏரார் கோலந்திகழக் கிடந்தாய் கண்டேனெம்மானே” (திருவாய்.5-8-1), “திருவிண்ணகர்க் கண்டேனே” (திருவாய். 6-3-1), “தேவர்கட்கெல்லாம் கருவாகிய கண்ணனைக்கண்டு கொண்டேனே” (திருவாய்மொழி 9-4-8) என்று இப்பத்து சந்தையாலும் ஸாக்ஷாத்காரமாகச் சொல்லுகிறவிது “நெஞ்சென்னுமுட்கண்” (பெரிய திருவந்தாதி 28) என்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மாநஸஸாக்ஷாத்காரமாய் “கையபொன்னாழி வெண்சங்கொடுங் காண்பான் அவாவுவன் நான்” (திருவிருத்தம் 84), “அடியேன் காண்பானலற்றுவன்”, (திருவாய்மொழி 1-5-7) “உம்மைக்காணு மாசையுள் நைகின்றாள்” (திருவாய்மொழி 2-4-2), “கூவுகின்றேன் காண்பான்” (திருவாய்மொழி 3-2-8), “மெய்கொள்ளக்காண விரும்புமென்கண்களே” (திருவாய்மொழி 3-8-4), “கூவியுங் காணப்பெறேனுனகோலமே”, (திருவாய்மொழி 3-8-7) “உன்னை யெந்நாள் கண்டு கொள்வனே” (திருவாய்மொழி 3-8-8), “கோலமேனி காணவாராய்” (திருவாய்மொழி 4-7-1), “கூவுகின்றேன் காண்பான்” (திருவாய்மொழி 3-2-8) “பாவியேன் காண்கின்றிலேன்” (திருவாய்மொழி 4-7-10), “உன்னைக்காண்பான் நானலப்பாய்” (திருவாய்மொழி 5-8-4), “ஒருநாள் காணவாராயே” (திருவாய்மொழி 8-5-1) “என்று கொல் கண்கள் காண்பதுவே” (திருவாய்மொழி 5-9-5), “விளங்க ஒருநாள் காண வாராய்” (திருவாய்மொழி 6-9-4), “உன்னைக்காண்பான் வருந்தியெனை நாளும்”(திருவாய்மொழி 6-9-6), “அலைகடல் கடைந்தவப்பனே காணுமாறருளாய்” (திருவாய்மொழி 8-1-1), “தொண்டனேனுன்கழல்காணவொருநாள்வந்து தோன்றாயே” (திருவாய்மொழி 8-5-6), “உன்னையெங்கே காண்கேனோ” (திருவாய்மொழி 8-5-10), “கனிவாய் சிவப்ப நீ காணவாராயே” (திருவாய்மொழி 9-2-4), “உன்னைக்காணக் கருதுமென்கண்ணே” (திருவாய்மொழி 9-4-1) என்று அவனைக்காண வாசைப்பட்டுக் கூப்பிட்ட சந்தைகள் அதில் இரட்டியாகையாலே “கண்டுகளிப்பக் கண்ணுள் நின்றகலான்” (திருவாய்மொழி 10-8-7), என்று திருமாலிருஞ்சோலையளவும் அநுபவம் செல்லா நிற்கச் செய்தே பெற்றல்லது தரியாதபடியான பாஹ்யஸம்ஶ்லேஷாபேக்ஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டு பரமபக்தியாயிருக்கிறது.
231. இருந்தமை என்றது பூர்ண பரஜ்ஞாநம்.
(இருந்தமை என்றது பூர்ண பரஜ்ஞானம்) “சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின” (திருவாய்மொழி.10-9-1) என்று தொடங்கி “அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை” (திருவாய்மொழி.10-9-11) என்று அர்ச்சிராதி மார்கத்தையும் மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் தேஶவிஶேஷப்ராப்தியையும் பகவதநுபவத்தையும் பகவத்ஸ்வரூபரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரித்தநுபவிக்கிற நித்யஸூரிகளோடு ஏகரஸராய்க் கொண்டிருந்து அநுபவிக்கிற ப்ரகாரத்தையும் யதாவாக ஸாக்ஷாத்கரிக்கையாலே சூழ்விசும்பணிமுகில் பூர்ணபரஜ்ஞாநமாய் இருக்கிறது.
232. முடிந்த அவாவென்றது பரமபக்தி.
(முடிந்த அவா என்றது பரமபக்தி) இப்படி ஸாக்ஷாத்கரித்தவிது மாநஸாநுபவமாகையாலே யதாமநோரதாநுபவஸித்தியாகத் திருவாணையிட்டுத் தடுத்துப் பெருங்கூப்பீடாகக் கூப்பிட்டுப் பெற்றாலல்லது தரிக்கவொண்ணாத படியாய் “முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து” (திருவாய்மொழி 10-10-11) என்கிற “முனியே நான்முகன்” (திருவாய்மொழி 10-10) பரமபக்தி தஶையாயிருக்கிறது.
233. இவை ஜ்ஞாந–தர்ஶந–ப்ராப்தி அவஸ்த்தைகள்.
(இவை ஜ்ஞாநதர்ஶநப்ராப்த்யவஸ்தைகள்) “ஜ்ஞாதும் த்ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப” (கீதை 11-54) என்றிந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளை ஜ்ஞாந தர்ஶந ப்ராப்தி அவஸ்தைகள் என்கிறார். எங்ஙனே என்னில் பகவத் ஸம்ஶ்லேஷவிஶ்லேஷைக ஸுகது:கராம்படியான ப்ரேமபூர்வகமான பரபக்தி ஜ்ஞாநதஶையாயும், பகவத்ஸ்வரூபரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம் தர்ஶநதஶையாயும் ஸாக்ஷாத்கார ஸமநந்தரம் அப்போதே அநுபவியாவிடில் முடியும்படியான பரமபக்தி ப்ராப்திதஶையாயும் இருக்கிற அவஸ்தா விஶேஷம் என்கிறார்.
234. அவித்யாநி வர்த்தக ஜ்ஞாந பூர்த்திப்ரத பகவத்ப்ரஸாதாத் மோக்ஷலாபம் என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்தைகார்த்யம்.
(அவித்யாநிவர்த்க ஜ்ஞாநபூர்த்தி ப்ரதபகவத்ப்ரஸாதாத் மோக்ஷலாபம் என்கை) “மயர்வற மதிநலமருளினன்” (திருவாய்மொழி 1-1-1) என்றும் “அவாவற்று வீடு பெற்ற” (திருவாய்மொழி 10-10-11) என்றும் சொல்லுகையாலே ஸம்ஸாரகாரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாநபூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதிகுணபூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம் பரமபக்தி தஶையான பாகத்தையும் விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும் தரும் என்கை ஒன்றான ப்ரபந்தத்துக்குத் தாத்பர்யமென்கிறார். (மயர்வற வீடுபெற்ற என்று ப்ரபந்தைகார்த்யம்) அநிஷ்டமான அஜ்ஞாநநிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓர் அர்த்தம் என்கிறார்.
ஆக ஸர்வேஶ்வரன் அஜ்ஞரான சேதநர்க்குத் தன் க்ருபையாலே புருஷார்த்த ஜ்ஞாநம் உண்டாகைக்கு ஶாஸ்த்ரப்ரதாநம் பண்ணினமையையும், அந்த ஶாஸ்த்ரம் கொண்டு புருஷார்த்தஜ்ஞாநம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையையும், அந்த ஶாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம் தொடக்கமான வைஷம்யங்களையும், உபயத்திலும் நிஷ்டரான அதிகாரிகளுடைய ப்ரகாரங்களையும், அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும், அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும், அந்த ப்ரபாவத்துக்கடியான பகவந்நிர்ஹேதுக கடாக்ஷத்தையும், அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும், அந்த ஜ்ஞாநபக்தி தஶைகளில் இவர் பேசும் பேச்சுக்களையும், அந்த பக்தி தஶையில் பகவத்ப்ரேமயுக்தர் எல்லாரோடும் இவர்க்குண்டான ஸாம்யத்தையும், அந்த பக்தி தஶையில் பேசும் அந்யாபதேஶங்களுக்கு ஸ்வாபதேஶங்களையும், அந்த பக்திக்கு விஷயமான திவ்யதேஶங்களில் நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும், அந்த குண விஶிஷ்டவஸ்துவிலுண்டான அநுபவஜநிதப்ரேரிதமாய்க் கொண்டு ப்ரபந்தங்கள் அவதரித்தமையையும், தத்வார்த்தப்ரதிபாதநபரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதாஸாம்ய முண்டான படியையும், அந்த கீதையில் காட்டில் இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும், இதில் இவர் உபதேஶிக்கிற விஷய பேதத்தையும், அவ்வோவிஷயங்கள் தோறும் உபதேஶிக்கிற அர்த்த விஶேஷங்களையும், அந்த வ்யாஜத்தாலே உபதேஶவிஷயமான ஶிஷ்ய லக்ஷணத்தையும், இந்த லக்ஷணம் இல்லாதார்க்கு உபதேஶிக்கைக்குக் அடியான இவருடைய க்ருபையையும், இப்படி இவர் க்ருபையாலே உபதேஶிக்கையாலே அவ்வுபதேஶம் பலித்தபடியையும், உபதேஶிக்கிற இப்ரபந்தங்கள்தான் தத்வஹித புருஷார்த்தப்ரதிபாதகமான ரஹஸ்யத்ரயார்த்தமென்னு மிடத்தையும், அந்த ரஹஸ்யத்ரயத்திலும் ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்தபஞ்சகங்களும் இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்ரஹ விஸ்தரரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும், ப்ரபந்தாரம்பங்களிலுண்டான லக்ஷணங்களில் ப்ரபந்தாதியில் உண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும், ஸாதுபரித்ராணாதி களாலே ஜகத்ரக்ஷணார்த்தமான பகவதவதாரம் போலே ஜகத்ரக்ஷணார்த்தமாக இப்ப்ரபந்தம் அவதரித்த தென்னுமிடத்தையும், திருவாய்மொழியில் பத்துப்பத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும், அக்குண விஶிஷ்டனான ஸர்வேஶ்வரன் அந்தப்பத்துப்பத்தாலு மிவ்வாழ்வார்க்கு தத்வஜ்ஞாநம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப் பிறப்பித்த தஶாவிஶேஷங்களையும், இவர்தாம் பிறரைக் குறித்து உபதேஶித்த ப்ரகாரங்களையும், இவர் ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச்செய்தே ஈஶ்வரன் இவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும், இவர்க்குப் பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஶா விஶேஷங்களையும், அஜ்ஞாந நிவ்ருத்திபூர்வகமாக ஜ்ஞாநப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷஹேது என்னுடத்தையும், அநிஷ்டநிவ்ருத்தி பூர்வக இஷ்டமோக்ஷ ப்ராபணமே இப்ரபந்ததாத்பர்யமென்னுமத்தையும் அருளிச்செய்து தலைக்கட்டி அருளினார்.
நான்காம் ப்ரகரணம் முற்றுப்பெற்றது.
அழகியமணவாளப்பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே சரணம்