பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
ப்ரபந்நபரித்ராணம்
முமுக்ஷவாய், மோக்ஷார்த்தமாக ஸர்வேஶ்வரனைப் பற்றியிருக்கு மவனுக்கு அநந்யகதித்வமும், ஆகிஞ்சந்யமும் வேணும். அநந்ய கதித்வமாவது – (திருவாய் 5-8-8) “களைவாய் துன்பங்களையாதொழி வாய் களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ஸர்வேஶ்வரனை யொழிய வேறெரு ரக்ஷகரில்லை என்றிருக்கை. ப்ராதாக்கள், புத்ரர்கள், மாதாபிதாக்கள், ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரக்ஷகராகக் குறையென்னென்னில்–ப்ராதாக்கள் ரக்ஷகரல்லர் என்னு மிடம் வாலிபக்கலிலும், ராவணன் பக்கலிலும் காணலாம். புத்ரர்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம், ருத்ரன் பக்கலிலும், கம்ஸன் பக்கலிலும் காணலாம். மாதாபிதாக்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம், கைகேயி பக்கலிலும், ஹிரண்யன் பக்கலிலும் காணலாம். மாதாபிதாக்கள் -யௌவநவிரோதி, என்று உபேக்ஷித்தல், க்ஷாமகாலம் வந்தவாறே ஆள் பார்த்துத் தூற்றிலேபொகடுதல், விலைகூறிவிற்றல், ஆபத்து வந்தவாறே நெகிழநினைத்தல், அர்த்தக்ஷேத்ராதிகளுக்காக எதிரிட்டுக் கொல்லுதல், முடியும் அவஸ்தையிலே (பெரியாழ் திரு 4-5-3) “சோர்வி னால் பொருள் வைத்ததுண்டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து’ என்கிறபடியே, ஈஶ்வரனை ஸ்மரித்துக் கரைமரஞ் சேரவொட்டாதபடி அலைத்தல் முடித்தல் செய்யாநிற்பர்கள். ஸ்த்ரீகளுக்கு பர்த்தாக்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம், தர்மபுத்ராதி கள் பக்கலிலும், நளன் பக்கலிலும் காணலாம். இவர்கள் ரக்ஷக ரல்லரேயாகிலும், நாட்டார்க்குக் கண்காட்டியாய்ப் போருகிற சந்த் ராதித்யர்கள் ரக்ஷகராகக் குறையென் ? என்னில்; அவர்களும், ஈஸ்வ ராஜ்ஞைக்கஞ்சி, தாங்கள் நினைத்தபடி ஸஞ்சரிக்கப்பெறாதே, (பெரியாழ் திரு 4-1-8) நாழிகை கூறிட்டு உதிப்பது அஸ்தமிப்பதாய்க் கொண்டு போருகையாலும், ஹிரண்யராவணாதிகள் கையிலே அகப் பட்டு அவர்களுக்கு இழிதொழில் செய்து திரிவார் சிலராகையாலும் ரக்ஷகராக மாட்டார்கள். த்ரைலோக்யத்துக்கும் பாலகனான இந்த்ர னும், “எப்போதோ நம் பதம் நழுவப்புகுகிறது” என்றஞ்சி ஶாபோப ஹதனாய், இந்தரஜித்தின் கையிலே அப்பட்டுக்கட்டுண்டு, மஹாபலி போல்வார் கையிலே ஐஸ்வர்யத்தைப் பறிகொடுத்து, கண்ணுங் கண்ணீருமாய், கழுத்தங்கப்படமுமாய்க் ( எளி வரவைக்காட்டும் வஸ்த்ரம் ) கொண்டு திரிவானொருவனாகையாலே அவனும் ரக்ஷகனாகமாட்டான். ப்ரஹ்மாவும் – மது, கைடபர்கள் கையிலே அகப்பட்டு, வேதங்களைப் பறிகொடுத்து, ‘கண்ணிழந்தேன், தநமிழந்தேன்’ என்று நிலந்துழாவுகையாலும், ருத்ரன் கையிலே தலையறுப்புண்கையாலும் ரக்ஷனாகமாட்டான். ருத்ரனும் – ஸகல ப்ராணிகளையும் ஸம்ஹரிக்கையே தொழிலாகவுடையனாய், விடாயர் முகத்திலே நெருப்பைச் சொரிந்தாற்போலே யிருக்கத் (பெரிய திரு 9-1-3) தழல் நிற வண்ணனாய், தன்னை ஆஶ்ர யித்தவர்களை “அறுத்துத்தா (பா-பொசுக்கித்தா) பொரித்துத்தா” என்று கொடுந்தொழில்களைச் செய்வித்துக் கொள்ளுகையாலும், தன்னை ஆஶ்ரயித்தவாணனை, “தலையில் பூவாடாதே நோக்குகிறேன்” என்று ப்ரதிஜ்ஞை பண்ணி, தன்னைத்தொழுத கைகளைக் கள்ளிக்காடு சீய்த்தாற்-(வெட்டினாற்)- போலே சீய்க்கக்கண்டு, “உயிருண்டாகில் உப்புமாறியுண்ணலாம்” என்று நெற்றியில் கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினவனாகையாலும், லோககுருவாய்த் தனக்குப் பிதா வான ப்ரஹ்மாவின் தலையைத்திருகிப் பாதகியாய், கூறுசெய்த வூரிலே குறும்புசெய்து, கையுங் கைத்தளையுமாய்க் கொண்டு திரிவாரைப்போலே, கையும் கபாலமுமாய், திறந்து கிடந்த வாசல்கள் தோறும் புக்குத் தன்னை வெளியிட்டுக்கொண்டு திரிவானொருவ னாகையாலும் ரக்ஷகனாகமாட்டான். இனி, அர்த்தம் ரக்ஷகமாமோ ? என்று நிரூபித்தால், கள்ளர்கொள்ளுதல், காமங்கொள்ளுதல், கோமுற்றவர் கொள்ளுதல், ஜ்ஞாதிகொள்ளுதல், வ்யாதிகொள்ளுதல்,
பிறரோடே எதிரிட்டு விஷபக்ஷணம் பண்ணித் தன்னைத்தானே முடித்துக்கொள்ளும்படி பண்ணுதல் செய்கையாலே அர்த்தமும் ரக்ஷகமாக மாட்டாது. ஈஶ்வரன், மாதாபிதாக்கள் கைவிட்ட அவஸ்தையிலும் (பெரிய திரு -9-7) “பின்னுநின்று அடியேனுக்குற்றா னாய் வளர்த்தென்னுயிராகி நின்றான்” என்கிறபடியே, தன்னுருக் கெடுத்து வேற்றுருக்கொண்டு தாய்முகம் காட்டியும், இன்சொல்லுச் சொல்லியும், ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழநின்றவன்று தான் ஏறிட்டுக்கொண்டு கழுத்திலே ஓலைகட்டித் தூதுபோயும், புருவம் நெரித்தவிடத்திலே தேரை நடத்தியும், மார்விலே அம்பேற்றும், சாவா மல் நோக்கியும், செத்தாரை மீட்டும், நாராயணத்வப்ரயுக்தமான உதரத்தரிப்பாலே அகவாயிலே நின்று ஸத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே, இவனே எல்லார்க்கும் ரக்ஷகன், இனி ஆகிஞ்சந்யமாவது – கர்மஜ்ஞாந பக்திகளிலும், அவற்றுக்கு ஹேது வான ஆத்மகுணங்களிலும் அந்வயமின்றிக்கே, அவற்றுக்கு விபரீதங்களானவற்றாலே தான் பரிபூர்ணனாயிருக்கிற இருப்பையும், தன்னுடைய ஸ்வரூபம் ஸர்வப்ரகாரத்தாலும் ஈஶ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாயிருக்கிற இருப்பையும் அநுஸந்தித்து, ‘நம் கார்யத்துக்கு நாம் கடவோமல்லோம்’ என்றிருக்கை இவை இரண்டையு முடையனாய், ஈஶ்வரனையே உபாயமாகப் பற்றுகையாலே நிர்ப் பரனாயிருக்குமவனுக்கு ஶரீராவஸாந காலத்திலே ப்ராப்தி யணித்தானவாறே, 1. “நயாமி” என்று அருளிச்செய்தபடியே ஈஶ்வரன் தானே சரக்காளாய் வந்து, அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரமபதத்தேறக் கொண்டுபோய், நித்யமுக்தரோடே ஒரு கோவையாக்கி, நித்ய கைங்கர்யத்தையும் கொடுத்தருளும்.
ப்ரபந்நபரித்ராணம் முற்றிற்று.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்.