பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
ஸாரஸங்க்ரஹம்
அகிலஜகத்திதாநுஶாஸநபரமான வேதத்திலும், வேதோபப்ரும்ஹ ணார்த்தமாக ப்ரவ்ருத்தங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதி, ஸமஸ்தஶாஸ்த்ரங்களிலும் ப்ரஸித்தமாய், ஸர்வேஶ்வரனுடைய ஸர்வஸ்வம்மாய், நம் ஆசார்யர்களுக்கு ஆபத்தநமாயிருந்துள்ள அர்த்தத்வயத்தையும் பிரதிபாதிக்கையாலே – த்வயமென்று திரு நாமத்தையுடைத்தாயிருந்துள்ள வாக்யத்வயம், பத்து அர்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது.
அதாகிறது -1. ஶ்ரீய:பதித்வமும், 2. நாராயணத்வமும், 3. நாராயண னுடைய ஸர்வலோகஶரண்யமான சரணாரவிந்தயுகளமும், 4.அதினுடைய ப்ராபகத்வமும், 5. தத்கோசரமாய் சேதநகதமாயிருந் துள்ள ப்ரார்த்தநாகர்ப்பவிஸ்ரம்பமும், 6. லக்ஷ்மீ தத்வல்லபர்க ளுடைய நிகிலாத்ம நித்யகைங்கர்ய ப்ரதாநார்த்தமான நித்ய ஸம்பந்தமும், 7. கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான ஈஶ்வரனுடைய நிரதிஶயபோக்யதையும், 8. ஸர்வஸ்வாமித்வமும், 9. நித்யகைங் கர்யமும், 10 கைங்கர்யப்ரதிபந்தக நிஶ்ஶேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விஶேஷங்கள்; ஈத்ருஶார்த்த விஶேஷப்ரகாஶகமான மந்த்ர விஶேஷத்தினுடைய விவரணரூபமாய், அபௌருஷேயமாய், உபநிஷத்தாயிருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப்பத்தாலும் இப்பத்து அர்த்தத்தையும் பூர்வாசார்யர்கள் அடைவே சேர்த்து அநுஸந்தித்துக்கொண்டு போருவர்கள்.
அதில் முதற்பத்தால் – (திருவாய் 1.3.1) “மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்” என்றும், – (திருவாய் 1.5.9) “மலராள் மைந்தன்” என்றும், – (திருவாய் 1.6.9) ”திருமகளார் தனிக்கேள்வன்” என்றும், – (திருவாய் 1.9.1) “திருவின் மணாளனென்னுடைச் சூழலுளானே” என்றும், – (திருவாய் 1.9.3) ‘பூமகளார் தனிக்கேள்வன்” என்றும், – (திருவாய் 1.10.4) “மைந்தனை மலராள் மணவாளனை” என்றும் – ஶ்ரிய:பதித்வம் ப்ரதிபாதிதமாய்த்து.
இரண்டாம் பத்தால் – (திருவாய் 2.1.7) எம்பெருமான் நாரணற்கு” என்றும், – (திருவாய் 2.7.1) “எம்பிரானெம்மான் நாராயணனாலே” என்றும், – (திருவாய் 2.7.2) “நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன்” என்றும் நாராயணத்வம் ப்ரதிபாதிதமாய்த்து.
மூன்றாம் பத்தால் – (திருவாய் 3.3.9) “நாண்மலராமடித்தாமரை ” என்றும், – (திருவாய் 3.4.3) “அங்கதிரடியன்” என்றும், – (திருவாய் 3.6.4) “அவன் பாத பங்கயம்” என்றும், – (திருவாய் 3.6.10) ”அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல்” என்றும், – (திருவாய் 3.8.1) “மூவுலகுந்தொழுதேத்துஞ் சீரடியான்” என்றும் நாராயணனுடைய ஸர்வலோக ஶரண்யமான சரணாரவிந்தயுகளம் ப்ரதிபாதிதமாய்த்து.
நாலாம் பத்தால் – (திருவாய் 4.2.8) “இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர்” என்றும், – (திருவாய் 4.4.11) “வல்வினை தீர்க்குங் கண்ணனை” “தொல்வினை தீர” என்றும், (திருவாய் 4.5.2) ”வெய்யநோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீய” என்றும், (திருவாய் 4.5.4) “மேவிநின்று தொழுவார் வினைபோகமேவும்” என்றும், , (திருவாய் 4.7.7) “பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்” என்றும், (திருவாய் 4.9.7) “நோயே மூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவை யொழிய” என்றும், (திருவாய் 4.9.9) “வேட்கையெல்லாம் விடுத்து – கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை” என்றும், , (திருவாய் 4.1.11) ”அஃதேயுய்யப்புகுமாறு” என்றும், , (திருவாய் 4.3.11) “உய்வுபாயம் மற்றின்மை தேறி ” என்றும் அநிஷ்டநிவ்ருத்தீஷ்டப்ராப்திகரத்வ லக்ஷணமான ப்ராபகத்வம் ப்ரதிபாதிதமாய்த்து.
அஞ்சாம் பத்தால், (திருவாய் 5.7.2) “தமியேனுக்கருளாய்” என்றும், , (திருவாய் 5.7.10) “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய்” என்றும், , (திருவாய் 5.8.3) “உன்னாலல்லால் யாவராலும் ஒன்றுங் குறை வேண்டேன்” என்றும், “அவளை உயிருண்டான் கழல்க ளவையே சரணாகக்கொண்ட” என்றும், , (திருவாய் 5.9.11) “நாமங்க ளாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” என்றும், , (திருவாய் 5.10.11) ‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” , “நாடொறுமேகசிந்தையனாய்” என்றும் — தத், கோசரமாய், சேதநகதமாயிருந்துள்ள ப்ரார்த்தநாகர்ப்பவிஸ்ரம்பம் ப்ரதிபாதிதமாய்த்து.
ஆறாம் பத்தால் – (6.5.8) ”திருமாமகளிரும்தாம் மலிந்திருந்து’ என்றும், (6.5.11) “அடிமைசெய்வார் திருமாலுக்கே” என்றும், (6.7.8) “ஓசிந்த வொண்மலராள்கொழுநன்” என்றும், (6.8.10) ”என் திருமார்வற்கு” என்றும், (6.9.3) “கோலத்திருமாமகளோடு உன்னைக்கூடாதே” என்றும்- கைங்கர்யப்ரதாநார்த்தமான லக்ஷ்மீதத்வல்லபர்களுடைய நித்ய ஸம்பந்தம் ப்ரதிபாதிதமாய்த்து.
ஏழாம் பத்தால் – (7.1.2) ” கன்னலேயமுதே” என்றும், (7.1.7) “கொடியேன் பருகின்னமுதே” என்றும், (7.2.5) ”அலைகடல் கடைந்த ஆரமுதே’ என்றும், (7.9.9) “திருமாலின்சீர் இறப்பெதிர்காலம் பருகிலு மார்வனோ?” என்றும், (7.10.1) ”ஏழுலகை இன்பம் பயக்க” என்றும்-கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான ஈஶ்வரனுடைய நிரதிஶயபோக்யத்வம் ப்ரதிபாதிதமாய்த்து.
எட்டாம் பத்தால் – (8.1.3) “அடியனேன் பெரியவம்மான்” என்றும், (8.2.2) “விண்ணவர்கோன் நங்கள்கோனை” என்றும், , (8.4.10) “அமர்ந்த நாதனை” என்றும், (8.9.5) “மூவுலகாளி” என்றும், (8.9.11) “நேர்பட்ட நிறைமூவுலகுக்கும் நாயகன்” என்றும் – ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிதமாய்த்து.
ஒன்பதாம் பத்தால்- (9.2.1) “பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளுங் கொண்டு நின்கோயில்சீய்த்து” என்றும், (9.2.2) “நின் தீர்த்தவடிமைக் குற்றேவல் செய்து” என்றும், (9.2.3) “தொடர்ந்து குற்றேவல் செய்து” என்றும், (9.2.10) “கொடுவினை யேனும் பிடிக்க” என்றும், (9.4.4) ”உறுவதிதுவென்றுனக்காட்பட்டு” என்றும், (9.6.7) “ஆட்கொள்வானொத்து’ என்றும், (9.8.4) “நானும் மீளா வடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்” என்றும் — நித்யகைங்கர்யம் ப்ரதிபாதிதமாய்த்து,
பத்தாம் பத்தால் – (10.1.7) “துயர் கெடுங்கடிது” என்றும், (10.2.1) கெடுமிடராயவெல்லாம்” என்றும், (10.2.2) “எழுமையும் ஏதஞ்சாரா” என்றும், (10.2.3) “தீரும் நோய் வினைகளெல்லாம்” என்றும், (10.2.5) ”இப்பிறப்பறுக்கும்” என்றும், (10.3.9) “உன்றன்திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம்பெண்மையாற்றோம்” என்றும், (10.4.7) “பிணியொன்றுஞ் சாரா பிறவிகெடுத்தாளும்” என்றும், (10.4.8) “பிறவித்துயர் கடிந்தோம்” என்றும், (10.4.9) ”விண்டே யொழிந்த வினையாயினவெல்லாம்” என்றும், (10.5.9) “அமரா வினைகளே” என்றும், (10.6.11) ”கடுநரகம் புகலொழித்த” என்றும், (10.8.5) “தடுமாற்றவினைகள் தவிர்த்தான்” என்றும், (10.8.3) “பிறவி கெடுத் தேன்’ என்றும் (10.8.7) “அந்திதொழுஞ் சொல்லுப்பெற்றேன்” என்றும், (10.10.11) “அவாவற்று வீடுபெற்ற” என்றும் – கைங்கர்ய ப்ரதிபந்தக நிஶ்ஶேஷநிபர்ஹணம் ப்ரதிபாதிதமாய்த்து.
இப்படி ஶ்ரீய:பதித்வ ப்ரமுகங்களாய், கைங்கர்ய ப்ரதிபந்தக நிஶ்ஶேஷ நிபர்ஹணபர்யந்தங்களாயிருந்துள்ள உபாதேயார்த்தங்களை ப்ரதி பாதிக்கக்கடவதாயிருந்துள்ள வாக்யத்வயமும், திருவாய்மொழியும் –பகவச்சரணார்த்திகளாய் அநந்யோபாயபரராயிருக்கும் அதிகாரி களுக்குக் காலக்ஷேபஹேதுவாகவும், போகஹேதுவாகவும், ஈஶ்வர ப்ரீதிஹேதுவாகவும் யாவச்சரீரபாதம் அநுஸந்தேயம்.
ஸாரஸங்க்ரஹம் முற்றிற்று.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்.