ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
முமுக்ஷு க்ருத்யம்
அஜ்ஞாந ஸமயத்திலும் ஜ்ஞாந ஸமயத்திலும் ஜ்ஞாநம் பக்வமான ஸமயத்திலும் ஜ்ஞாந ப2லமான ப்ராப்தி ஸமயத்திலும் மாதா பிதாக்களோடு ரூபநாமங்களோடு போ4ஜநாதி3களோடு ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு நிஷேத4ங்களோடு ப3ந்து4வர்க்கத்தோடு ஐஶ்வர்யாதிகளோடு ப்ரார்த்தனைகளோடு வாசிய பே4தித்திருக்கும்.
முதலடியான அஜ்ஞாந ஸமயத்தில் விவேகம் சஞ்சரியாமையாலே ஶரீரமேவ (மாதா பிதரௌ ஜநயத:) என்று கேவலம் ஶரீரத்தைப் பெற்றவர்களையே மாதாபிதாக்களாக அபி4மாநித்து அவர்களிட்ட பேரும் அவர்கள் நியமித்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவர்களை அநுவர்தித்து அத்தாலே வந்தேறின ரூப நாமங்களும் அவர்கள் விரும்பின ப3ந்து4 வர்க்கமும் அவர்கள் வம்சாபி4மாநமும் ஐஶ்வர்யமும் அவர்கள் கற்பித்த ஸம்ஸார வர்த்த4கமா இருப்பன சில ப்ரார்த்தனைகளுமாய் ஸம்ஸாரத்தில் என்னை விஞ்சினாரில்லை என்று தன்னை சமாதி4க த3ரித்3ரனாக அபி4மாநித்து மேநானித்து இறுமாந்திருக்கும்.
ஜ்ஞாநம் பிறந்த சமயத்தில் அஞ்சுசேராக்கையான கேவல ஶரீரமே அன்று ப்ரக்ருதே: பரனாய் பஞ்சவிஶகனாய் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாஶனாய் ஏகரூபனாய் ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய் அச்சே2த்யனாய் அதா3ஹ்யனாய் அஶோஷ்யனாய் ஜநநமரணாதிகள் அன்றிக்கே இருப்பானாய் நித்யனாயிருப்பானொரு ஆத்மா உண்டு வேத ஶாஸ்த்ரங்களுமுண்டு புண்யபாபங்களுமுண்டு வர்ணாஶ்ரமங்களும் உண்டு கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தாலே ப்4ரமித்த இத்தனை என்று உணர்ந்து நெகிழ்ந்து (ஸஹிவித்3யாதஸ்தம் ஜநயதி) என்கிறபடியே வேதஶாஸ்த்ரங்களை மாதாவாகவும் தத்ப்ரதா3னம் பண்ணினவனை பிதாவாகவும் அபி4மாநித்து அந்த ஶாஸ்த்ரம் விதித்த படியே போ4ஜனாதிகளும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி4 நிஷேத4ங்களும் வேதஶாஸ்த்ரம் சொன்னவர்களையே ப3ந்து4க்களாகவும் அந்த ஶாஸ்த்ராபி4மாநத்தாலே வந்தேறின ரூப நாமங்களும் ஶாஸ்த்ராப்4யாஸம் பண்ணுவதான தேசம் தேசமாயும் ஶாஸ்த்ரத்தையே ஐஶ்வர்யமாகவும் ப்ரார்த்தனைகளாகவும் அபி4மாநித்து ஆத்மாபி4மாநிகளில் என்னை விஞ்சினார்கள் இல்லை என்று தன்னை சமாதி4க த3ரித்3ரனாக அபி4மாநித்து மேநானித்து இறுமாந்திருக்கும்.
ஜ்ஞாநம் பக்வமான சமயத்திலே சகல வேத்ஶாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ர்யம் விநாஶகம் என்றும் ஈஶ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யம் இவனைக் கரையேற்றும் என்றும் இடமும் பரவாநஸ்மி என்றும் (தா3ஸபூ4தாஸ்ஸ்வத ஸர்வே: ஆத்மந: பரமாத்மாந: நான்யதா4லக்ஷணம் தேஷாம்) என்றும், (ஆத்ம தா3ஸ்யம் ஹரேஸ்ஸ்வாம்யம்) என்றும், இத்யாதி ப்ரமாணங்களாலும் (ஆலோட்4ய ஸர்வ ஶாஸ்த்ராணி) என்று ப்ரமாணங்கள் சொல்லுகையாலும் கீழ்நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து தத்வத்ரய ஜ்ஞாந விஷயத்தையும் தத்வ த்3வய விஷய வைராக்யத்தையும் தத்வைக விஷய பக்தியையும் உடையனாய் தத்வஹிதங்களை அறியும்போதுகைப்பறிபறித்துக் கிடந்தானை கண்டேறியறியும் அதல்லாமையாலே லோகத்தில் அர்த்த காமோபஹதனன்றியே வேதஶாஸ்த்ர நிதானஜ்ஞனாய் லோக பரிக்ரஹம் உடையனாய் இருந்துள்ள ஆசார்யன் ஸ்ரீபாதத்திலே சென்று கண்ணும் கண்ணீருமாய் கீழ் தே3ஹாத்மாபி4மானியாயும் கேவலாபி4மானியாயும் தான் பட்ட அநர்த்தமெல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய ஆசார்யன் தன் நிரவதி4க க்ருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து இரண்டு பங்குக்கு ஒரு கைய்யாலை போலே ஈஶ்வர ஸ்வாதந்த்ரயத்துக்கும் ஆத்ம பாரதந்த்ரயத்துக்கும் வாசகமாய் (அகாரோ விஷ்ணுரித்யுக்தோ மகாரோ ஜீவ வாசக: தயோஸ்து நித்ய ஸம்ப3ந்த4: உகாரேண ப்ரகீர்தித:) என்று இவ்வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் உண்டான ஒழிக்க ஒழியாத நித்யஸம்ப3ந்த4த்துக்கு எட்டிழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்களஸூத்ரம் உண்டென்று திருமந்த்ரத்தை ஆசார்யன் தன் இரக்கத்தாலே அருளிச்செய்து ஸ்வரூபத்தில் உணர்த்தியோடும் ஸ்வரக்ஷணத்தில் அஶக்தியோடும் ஈஶ்வரனையே பேணிக்கொண்டுவதின் என்று அருளிச் செய்தருளினால் தான் நின்ற நிலைகளை அடைய உணர்ந்து நெகிழ்ந்து பெற்றார் பெற்றொழிந்தார் என்றும், பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ என்றும், பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் என்றும் தாயே தந்தை என்று துடங்கி நோயே பட்டொழிந்தேன் என்றுமளவும் சொல்லுகிறபடியே திருமந்த்ரத்தை மாதாவாகவும் ஆசார்யனே பிதாவாகவும் அபிமானித்து ஆசார்யன் திருவுள்ளமான ரூப நாமங்களும் போ4ஜநாதிகளும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி4நிஷேத4ங்களும் ஆசார்யன் விரும்பி வர்த்திக்கும் தேசம் திவ்யதேசவாசமாகவும் ஆசார்யன் திருவுள்ளத்தாலே ஸஹவாஸ யோக்யராகக் கற்பித்த பரம ஸத்வ நிஷ்ட2ரான ஸ்ரீவைஷ்ணவர்களையே தனக்கு ப3ந்து4 க்களாகவும் அவர்கள் தங்களுக்கு ஐஶ்வர்யமாக அபி4மானித்திருக்கும் ஆசார்ய கைங்கர்யமே தனக்கு ஐஶ்வர்யமாகவும் அந்த கைங்கர்யத்தின் மேல் உண்டான ப்ரார்த்தனையே தனக்கு தே3ஹயாத்ரையாகவும் நினைத்து குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் நின்னிலங்கு பாதமின்றி மற்றோர் பற்றிலேன் என்றும்; கற்றிலேன் கலைகள் நற்றுணையாகப் பற்றினேன் அடியேன் என்றும் போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனையமாட்டேன் ஏதிலேன் அரங்கர்க்கு என்றும் நாட்டாரோடியல் ஒழிந்தென்றும் நாட்டு மானிடத்தோடு எனக்கரிது என்றும் சொல்லுகிறபடியே தன் வேறுபாடு தோன்ற இந்நிலத்தில் பொருந்தாமையும் பொருந்தின நிலத்தில் புகப்பெறாமையும் ஆகிற பேக3னிப்பு வடிவிலே தோன்றும்படி நிர்மமனாய் மோக்ஷப்ரதனான எம்பெருமானைக் கிட்டி வாழுமளவும் ஜ்ஞாந ப்ரதனான ஆசார்யன் நிழலிலே ஒதுங்கி அவன் ப்ரீதிக்கு வர்த்த4கனாய் இருந்த இடமறியாமல் இருக்கும்.
ஜ்ஞாந ப2லமான ப4க3வத் ப்ராப்தி ஸமயத்தில் தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து ஆசார்யன் கட்டின ஸ்வரூபாநுப3ந்தி4யான மங்கள ஸூத்ரத்தில் அர்த்தாநு ஸந்தா4நுத்துடனே வர்த்தியா நிற்கச் செய்தேயும் ப4க3வத் ஸ்வரூப திரோதா4நகாரமாய் விபரீத ஜ்ஞாந ஜநகமான சரீர ஸம்ப3ந்த4த்தை ருசி வாஸநைகளோடேவிட்டு ஆற்றிலே குளித்து அக்கரை ஏறி புக்ககத்திலுள்ளார் அலங்கரிக்கப்போய் வகுத்த தேசத்திலே முகம் பழகின திரளிலே சென்று புகுந்து தனக்கென ஒரு மாதாபிதாக்கள் ஆதல் ரூபநாமங்கள் ஆதல் போ4ஜநாதிகள் ஆதல் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஆதல் விதி4 நிஷேத4ங்கள் ஆதல் ப3ந்து4க்கள் ஆதல் ஐஶ்வர்யமாதல் ப்ரார்த்தனைகள் ஆதல் அன்றிக்கே அஹமந்நம் அஹமந்நம் என்றுதல் சூட்டுநன் மாலைகள் தூயனவேந்தி நிற்றல் ஸதா3 பஶ்யந்தி என்று வைத்த கண் வாங்காதே பார்த்திருத்தல் (சா2யாவாஸத்வமநுக3ச்சே2த்) என்கிறபடியே சா2யாவத் பரதந்த்ரனாய் வர்த்தித்தல் செய்வது எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை இவ்வர்த்தம் ஒரு ஆசார்யன் அங்கீகரித்த முமுக்ஷுவுக்கு நாடோறும் ஆராய வேண்டுவதொன்று.
எங்கனே என்னில் ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்த்ர ஸம்ப3ந்த4த்தாலே கையை பிடித்தால் பூர்வாவஸ்தை2களிநிலைகளடைய நெகிழ்ந்து ப4ர்த்தாவினுக்டைய அபி4மானத்தில் ஒதுங்குகிறாப்போலவும் அநுபநீதனானவன் ஒரு மந்த்ர ஸம்ப3ந்த4த்தாலே ஶிகா2 யஜ்ஞோபவீதங்களை த4ரித்தால் பூர்வாவஸ்தை2களில் நிலையடைய நெகிழ்ந்து த்3விஜன் என்று பேராகிறாபோலவும் யஜ்ஞத்திலே ஒருவன் தீ3க்ஷித்தால் பூர்வாவஸ்தை2களில் நிலையடைய நெகிழ்ந்து அவப்4ருத ஸ்நாநத்தளவும் யஜமான வேஷத்துக்குத் தக்க அநுஷ்டா2னம் ஆகிறாப்போலவும் ஸந்யாஸி கீழ் நின்ற நிலைகளடைய நெகிழ்ந்து ஆஶ்ரமத்துக்கு உசிதமான வ்ருத்தியோடே வர்த்திக்கிறாப்போலவும் இந்த ஜீவன் முக்தனான முமுக்ஷுவும் கீழ் நின்ற நிலைகளடைய நெகிழ்ந்து பகவத் கைங்கர்யம் ஒன்றிலும் நிரதனாய் வர்த்திப்பது எப்போதோ என்று தன் நெஞ்சை உருக்கி தன் வேறுபாடு தோன்ற வர்த்திக்கையே முமுக்ஷுவுக்கு க்ருத்யமென்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
முமுக்ஷு க்ருத்யம் ஸம்பூர்ணம்