[highlight_content]

Thirupallandu Vyakyanam Part 1

ஶ்ரீ:

ஶ்ரீமதே ராமானுஜாய நம:

திருப்பல்லாண்டு

தனியன்கள்

நாதமுனிகள் அருளிச்செய்தது

குருமுகமநதீத்ய ப்ராஹ வேதான் அஶேஷான்

நரபதி பரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம: |

ஸ்வஸுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்

த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த வ்யாக்யானம்

அவதாரிகை:-

இதுதான் திருப்பல்லாண்டு தனியனாயிருக்கும்.  அந்த திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத்தை பெருக்கப் பேசி, அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது.

வ்யாக்யானம்:-

(குருமுகமநதீத்ய)– ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான சர்வேஶ்வரனும், சாந்தீபனேஸ் ஸக்ருத் ப்ரோக்தாம் ப்ரம்மவித்யாம் ஸவிஸ்தராம்’ என்னும்படி, ஸாந்தீபனியிடத்திலேயாய்த்து சகல வேதங்களையும் அதிகரித்தது.  இவர் அங்ஙன் ஒரு குருகுல வாஸம் பண்ணி தன்முகேன “நலங்களாய நற்கலைகள்” (திரு.விரு. – 90) நாலையும் அதிகரியாதே, புண்டரீகரைப்போலே “துளவத்தொண்டிலே மண்டி” (திருமாலை – 45) ஶ்ரீ மாலாகாரரைப்போலே “சூட்டு நன்மாலைகளைத் தொடுத்து” (திரு.விரு. –21) வடபெருங்கோயிலுடையானுக்குச் சூட்டி அடிமை செய்து போந்தார்.  ஏவம்வித தாஸ்ய ரஸஜ்ஞரான இவர்,

(நரபதி பரிக்லுப்தம் ஶுல்கம் ஆதாதுகாம) -என்று, ஶ்ரீ வல்லபதேவன் என்கிற ராஜாவானவன் பரதத்வ நிர்ணயபூர்வகமாக புருஷார்த்த லாபத்தை லபிக்கைக்காக அனேகமான அர்த்தத்தை வித்யா ஶுல்கமாகக் கல்பித்துக்  கல் தோரணத்திலே கட்டி வைக்க . இப்படி நிர்மிதமான அந்த தனத்தை வடபெருங்கோயிலுடையானுடைய ஆஜ்ஞையாலே ஆஹரித்துக்கொண்டு வரவேண்டுமென்கிற அபேக்ஷையை உடையராய் வித்வத் கோஷ்டியிலே சென்று:

(அஶேஷான் வேதான் ப்ராஹ)– வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான்’ என்றத்தை சொல்லுகிறது.  இவர்க்கு அப்போது வேதப் பிரானான (பெரியாழ்வார் திருமொழி 5.2.1) பீதஹவாடைப் பிரானார் (பெரிய திருமொழி 5.2.8) தாமே பிரமகுருவாய் போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து நாவிலுளனாய் (திருவாய்மொழி 1.9.7 & 8) நாவினுள் நின்று மலரும் ஜ்ஞானக் கலைகளை இவர் முகேன பேசுவித்தானிறே.  “எயிற்றிடை மண்கொண்ட எந்தையான” (பெரியாழ்வார் திரு 5.2.3) ஜ்ஞானப்பிரானாய்த்து (திருவிருத்தம் 99) இவரை ஜ்ஞானக்கலைகளை ஓதுவித்தது.  ஆகையாலே நாட்டார்க்கு ஓதினவிடமொழிந்து ஓதாதவிடம் தெரியாதிருக்கும்.  இவர்க்கு மயர்வற மதிநலம் அருளுகையாலே (தி.மொழி 1.1.1) அஶேஷ வேதங்களும் அருளிச் செய்யும்படி விஶதமாய்த்து.  அத்தாலே “வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனன்” (பெரியாழ்வார் திரு 4.3.11) என்னும்படி பரதத்வ ஸ்தாபனம் பண்ணி அந்த வேத தாத்பர்யமான திருப்பல்லாண்டை “அங்கானைமேல் மங்கலவீதி வருகையாலே” (நா.திரு. 6.10) மங்களாஶாஸனமாக அருளிச் செய்தார். வேதான் அஶேஷான் என்கிறதுக்குள்ளே இதுவும் அந்தர்பூதம். “வேதைஶ்ச  ஸர்வைரஹமேவ வேத்ய:” (கீதை 15.15) என்னக்கடவதிறே.

(ஸ்வஸுரம்)– அனந்தரம் வித்வான்களை வென்று கிழியறுத்து அந்த தனத்தை ஸ்வாமி சந்நிதியிலே சமர்ப்பித்து, மீளவும் தம் துறையான துளவத்தொண்டிலே மூண்டு  நடத்திகொண்டு போர, அக்காலத்திலே ஆண்டாள் இவர்க்குத் திருமகளாக திருத்துழாயடியிலே அவதரிக்க, இவரும் “திருமகள்போலே” (பெரியாழ்வார் திரு – 3.8.4) வளர்த்து போர, அஞ்சு பிராயத்திலே திருவாய்ப்பாடியில் பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களை அனுகரித்து திருப்பாவைப் பாடி, அதுக்கு மேலே அவர் “தொடுத்த துழாய் மலரை”’ (திரு பல்லாண்டு – 9) “வியன்துழாய் கற்பென்று சூடும் திருக்குழல்மேல்” (மூ.திரு – 69) என்கிறபடியே சூடிக்கொடுத்தாளாய், பின்பு ப்ராப்த யௌவனையாய் “மானிடவர்க்கென்று  பேச்சுபடில் வாழாத” (நாச்.திரு – 1.5) தன்மையளாய் “தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்” (நாச்.திரு – 11.1) என்றும், “பணவாளரவணைப் பற்பலகாலமும் பள்ளிகொள் மணவாளர்” (நாச். தி – 10.6) என்றும் சொல்லப்படுகிற அழகிய மணவாளப் பெருமாளை ப்ரார்த்தித்துத் திருமணம் புணருகையாலே அவர் மணவாளப்பிள்ளை ஆனார்.  மறை நான்கு முன்னோதிய பட்டனுக்கிறே (பெரியாழ்வார் .திரு. – 7.3.6) பட்டர்பிரான் (திருப்பாவை – 30) கோதையைக் கொடுத்தது. ஆகையாலே ஔபசாரிகமாக அன்றிக்கே யதாவாக ரங்கநாதனுக்கு பட்டநாதர் மாமனாரானார்.  அத்தாலே:

(அமரவந்த்யம்)– என்கிறது.  அதாவது “வடிவுடை வானோர் தலைவனான” (திரு.மொழி – 7.2.10) தன்னை அவர்கள் அடி வணங்கி ஏத்துமாப்போலே, இவர் தன்னையும் அமரர் வந்திக்கும்படியான பரிசை கொடுத்தபடி “தம்மையே ஒக்க அருள் செய்வாரிறே” ( பெரிய திரு. – 11.3.5).  பட்டநாதரான மாத்திரமன்றிக்கே தேவர்களாலும் ஸ்துத்யரானவர் என்கிறது.  “விரும்புவர் அமரர் மொய்த்து” (திரு.மொழி 3.4.11) என்னக்கடவதிறே.  அஸ்தானே பயஶங்கிகளானவர்களையும் இவர் மங்களாஶாஸனம் பண்ணுமவராகையாலே அவர்களும் இவருக்கு ஸ்துத்யாபிவாதங்களையும் பண்ணுவர்கள்.  “பரஸ்பர நீசபாவை:” (வைகுண்ட ஸ்தவம் – 75) என்னக்கடவதிறே.

இனி ரங்கநாதனோடே சம்பந்திக்கைக்கீடான  பட்டநாத குலத்தைச்  சொல்லுகிறது

(த்விஜகுலதிலகம்)– என்று.  “வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தராகையாலே” (பெரியாழ்வார் திரு – 5.4.11) “அந்தணனை யான் கண்டது அணிநீர் தென்னரங்கத்தே” (பெரிய. திருமொழி – 5.6.7) என்னும்படி கண்டு கொடுத்தார்.  (த்விஜகுலதிலக)ராகையாவது – ப்ராஹ்மண குலத்துக்கெல்லாம் முக்யராய், ஶிரஸா வஹ்யராய், ஶ்ரேஷ்ட்டராய் இருக்கை என்கிறபடி.

(தம் விஷ்ணுசித்தம்)– அப்படி ஸ்ரேஷ்ட்டராய் விஷ்ணுவை எப்போதும் சித்தத்திலே உடையரானவரை என்கிறது.  “வல்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்” (பெரியாழ்வார் திரு. 1.1.10) என்று அடியிலே தமக்கு நிரூபகமான ஆழ்வார் தாமே அருளிச் செய்தாரிறே.  “விஷ்ணுசித்தம்   என்கையாலே மின்னுநூல் விட்டுசித்தன்  விரித்த     என்று பெரியாழ்வார் திருமொழி அடியிலும் “விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை” என்று (பெரியாழ்வார்  திரு – 5.4.11) முடிவிலும் அருளிச்செய்கையால் இந்த திருநாமத்தாலே அந்த ப்ரபந்த ப்ரவக்தா என்னுமதுவும் சூக்தம். அதுக்கும் தனியன் இதுவேயிறே.  “அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான்” (பெரியாழ்வார் திரு – 5.4.8) என்னும்படி இவர் திருவுள்ளத்திலே அத்யபிநிவிஷ்ட்டனாய் இருக்கிறபடி.  “நின் கோயிலில் வாழும் வைட்டணவன்” (பெரியாழ்வார் தி – 5.1.3) என்றாரிறே.  அவனும் வைஷ்ணவ சம்பந்தத்தை அபேக்ஷித்து கைப்பற்றினான்.

(தம் விஷ்ணுசித்தம் நமாமி)– அந்த விஷ்ணு சித்தரை

‘’கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று’’– என்னும்படி சேவிக்கிறேன் என்கிறது.  நமஸ்காரமும் சேவையும் பர்யாயம்.  ‘ஓம் நமோ விஷ்ணவே’ (விஷ்ணு ஷடக்‌ஷரி) என்னுமது விஷ்ணுசித்தர் விஷயத்திலேயாய்த்து.  விஶேஷஜ்ஞருக்கு பகவத்விஷயத்திலே அரை வயிறாய், இங்கேயிறே எல்லாம் பூர்ணமாவது.  “நம்பி விட்டுசித்தரிறே” (நாச். திரு – 13.10) இத்தால் ப்ரதம ப்ரபந்த அனுஸந்தான தசையில்  தத்வக்தாவான      ஆழ்வாரை ‘”தம் பூர்வம் அபிவாதயேத்” என்று ப்ரதமம் திருவடி தொழும்படியை சொல்லிற்றாயிற்று.

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

  1. மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்

சொன்னார் கழற்கமலம் சூடினோம் – முன்னாள்

கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினிற் சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

வியாக்யானம்

(மின்னார் தடமதில் சூழ்)–

தேஜ:ப்ரசுரமான பெரிய மதில்களாலே சூழப்பட்ட வில்லிபுத்தூர்.  இத்தால் செம்பொன் ஏய்ந்த மதிளாயிருக்கை.  (திருவா.மொழி 9.10.6).  ப்ரதிகூலர்க்கு கிட்டவொண்ணாத படியாய், அனுகூலர்க்கு கண்டுவாழும்படியாய்  இருக்கை. கல் மதில்போலே அத்தலைக்கு அரணாய், மங்களாஶாஸனபரரான பெரியாழ்வார் இருக்குமூரில் மதிலிறே. ஏவம்விதமான மதிளாலே சூழப்பட்ட.

(வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழற்கமலம் சூடினோம்)–

ஒருகாலாகிலும் ஶ்ரீவில்லிபுத்தூரை உச்சரித்த ஶ்ரீவைஷ்ணவர்களுடைய ஶ்ரீபாதகமலங்களை “பைங்கமல தண்தெரியலாக” (திருப்பாவை – 30) தலையிலே சூடினோம். “கோவிந்தன் தன்னடியார்களாகி எண்டிசைக்கும்  விளக்காகி நிற்பர் இணையடி என் தலைமேலவே” என்றிறே ஆழ்வாரும் அருளிச் செய்தது.  ஶ்ரீவில்லிபுத்தூர்தான் வடபெருங் கோயிலுடையானுக்கும் ஆழ்வார்க்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து.  “வில்லிபுத்தூர் உறைவான்” (நாச்சி.திரு – 5.5) ‘வில்லிபுத்தூர் பட்டர்பிரான்’ (பெரியாழ்வார் திரு – 2.2.11) “அன்னவயல் புதுவை யாண்டாள்” (திருப்பாவை தனியன்) “கோதை பிறந்த ஊர் – வில்லிபுத்தூர்” (ஆண்டாள் வாழித் திருநாமம்) என்னக்கடவதிறே.  ப்ரணவம் போலே மூவரும் கூடலாயிருக்கை.  இப்படி உத்தேஶ்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்பொழுதும் உத்தேஸ்யராகையாலே அவர்கள் ஶ்ரீபாதங்கள் ஶிரோபூஷணமாக தார்யம் என்கிறது.  “அரசமர்ந்தான் அடி சூடும் அரசு” (பெரு.திரு – 10.7) என்னுமாப்போலே.

பின்னை விரோதிகள் செய்ததென்? என்கிறார் ?

(முன்னாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம். கீழ்மையினில் சேரும் வழியறுத்தோம்) – முன்னாள் கிழியறுக்கையாவது – முற்காலத்தில் பாண்டியன் வித்யா ஶுல்கமாகக் கட்டின த்ரவ்யக் கிழியை, அங்கே சென்று, வேதாந்தார்த்த முகேன “விஷ்ணுவே பரதத்வம்” என்று விஷ்ணுசித்தரான தாம் வித்வத் ஜனங்களை வென்று த்ரவ்யக்கிழியை அறுத்த ஆழ்வாருடைய இந்த அத்யத்புத கர்மத்தை அனுசந்தித்தோம்.  அத்தாலே கீழ்மையினில் சேரும் வழியறுத்தோம். “ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத: | த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுன : ||” (கீதை – 4.9) என்று கிருஶ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம ஸம்ஸார பந்தத்தை அறுக்குமாபோலே ஆய்த்து விஷ்ணுசித்தர் ஜன்ம கர்மங்களும்.  இங்கும், ஶ்ரீவில்லிபுத்தூர் ஜன்மமும், கிழியறுக்கை கர்மமுமாயி௫க்கும். (கீழ்மையினில் சேரும் வழியறுக்கையாவது) :–நிஹீனக்ருத்யத்தாலே ப்ராபிக்கும் ப்ரதிபந்தகமான மார்க்கத்தை சேதித்தோம்.  “புறநெறிகளைக் கட்டு” (திருவா.மொழி 1.3.5), அவைதிகமார்க்கத்தை அடைகை பாபபலமிறே.  “மெய்ம்மை  பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்”   (நாச்சி.திரு. – 11.10) என்று, இவர்தாம் ஸன்மார்க்கவர்த்திகளிறே.  அன்றிக்கே, “கீழ்மையினில் சேரும் வழி” என்று,அத:பதநத்திலே ப்ராப்தமான மார்க்கம் என்று அர்ச்சிராதி மார்க்கத்துக்குக் கீழாய், புனராவ்ருத்தி லக்ஷண ஹேதுவான தூமாதி மார்க்கத்ரயத்தையும் நிரோதித்தோம். (நெஞ்சமே வந்து)–நெறிநின்ற நெஞ்சாய் (மூன்றாம் திருவந்தாதி -35) நீ அனுகூலிக்கையாலே இந்த லாபத்தை லபித்தோம்.  (வந்து) – இவ்வளவும் வந்து. ஆழ்வாரளவும் வந்து.  வில்லிபுத்தூர் என்றொருகால் சொன்னார் கழற்கமலம் சூடினோம், கீழ்மையினில் சேரும் வழியறுத்தோம். இதுவன்றோ நீ அனுகூலித்ததால் பெற்ற பேறு.  நீ என் வழி வருகையாலே இவை எல்லாம் பெற்றோம்.  இஷ்டப்ராப்தியோபாதி அநிஷ்ட நிவாரணமும் பலமிறே. (நெஞ்சமே வந்து) – ‘நெஞ்சமே நல்லை நல்லை.  உன்னை பெற்றால் என் செய்யோம்.  இனி என்ன குறைவினம்’ (திருவா.மொழி – 1.10.4) என்றாற்போலே பெற்ற பேற்றைப் பேசி நெஞ்சோடே ஹர்ஷிக்கும்படியைச் சொல்லுகிறது.

(வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னால்) – என்றது “வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்” (பெரிய. திருமொழி – 2.2.8) என்றும், “மென்னடை அன்னம் பறந்து விளையாடும் வல்லிபுத்தூர்” (நாச்சி.திரு – 5.5) என்றும் பகவத் விஷயத்திலே தமப்பனாரும் மகளாரும் ஒருகால் சொன்னாற் போலே, பாகவத விஷயமாக ஒருகால் சொன்னால் என்றபடி. ஸம்பந்தானுஸந்தானம் ஸக்ருத் என்றபடி.

  1. பாண்டியன் கோண்டாட பட்டர்பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்கமெடுத்தூத  – வேண்டிய

வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்

பாதங்கள் யாமுடைய பற்று

அவதாரிகை –

பாண்டியன் கொண்டாட இதில் ப்ரபந்த வக்தா பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ஸ்வீகாரத்தைச் செய்கிறது.

வ்யாக்யானம் –

(பாண்டியன் கொண்டாட) – “தென்னன் கொண்டாடும்” (நாச்சி.திரு. 4.2.7) என்னுமாபோலே “நமக்கு பரதத்வ நிர்ணயம் பண்ணித் தரும்படி பட்டர் பிரான் வந்தார்” என்று பாண்டியனான ஶ்ரீவல்லப தேவன் சொல்லிக் கொண்டாட அத்தசையிலே

(ஈண்டிய சங்கம் எடுத்தூத) – திரண்டிருக்கிற வித்வத் சங்கமானது ஓரோ ப்ரதேஶங்களிலே ஓதிக்கிடக்கிற ப்ரஶம்ஸா வாக்கியங்களை எடுத்து பிரம்ம ருத்ராதிகளை போரப் பொலியச் சொல்லி உபன்யஸிக்க என்னுதல்.

(ஈண்டிய சங்கம் எடுத்தூத) – என்று ஜெய சங்கங்கள் பலவற்றையும் வாயிலே வைத்து ஊத என்னுதல் “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலி” (நாச்சி.திரு – 9.9) என்னக்கடவதிறே.  எடுத்தூத என்கிறபோது கிட்டி ஊத என்றபடி.  அதிக்ஷேபித்த வித்வான்கள் வாயடைக்கும்படி.

(வேண்டிய வேதங்கள் ஓதி) – “ஸர்வே வேதா: யத் பதம் ஆமநந்தி” (கடவல்லி) ‘ “வேதைஶ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:” (கீதை – 15.15) என்கிறபடியே வேதங்கள் எல்லாவற்றாலும் ஆராதன ப்ரகாரத்தையும் ஆராத்ய வஸ்துவையும் சொல்லுகிறதென்று அறுதியிட்டு, பகவத் பரத்வத்தை ஸாதித்து, இனித் தாழுகைக்கு ஹேதுவென் என்று திருவடிகளிலே தாழ்ந்த கிழியை த்வரித்து அறுத்தவருடைய த்ரவ்ய க்ரந்தியை அறுத்தவருடைய

(பாதங்கள்) – கிழியறுத்த பட்டர்பிரான் பாதங்கள்.

யாமுடைய பற்று – ‘பட்டர்பிரான் அடியேன்’ என்னும்படி அவர்க்கு ஶேஷபூதராய் இருக்கிற நம்முடைய ரக்ஷை.   ‘    ஶரணம் தமர்கட்கோர் பற்று’  (திருவா – 10.4.10) என்கிற பொதுவானவனுடைய திருவடிகளன்று, “அவனை பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்” தாள் (இராமானுச நூற்றந்தாதி – 15)

யாமுடைய பற்று – நம்முடைய அரண், புகல், உபாயம், ஶரண்யம் என்றபடி.  பற்றற்ற நம்முடைய பற்று.  “பற்றிலார் பற்ற நின்றான்” (திருவாய் – 7.2.7) என்னக்கடவதிறே.

              தனியன்கள் வியாக்யானம் முற்றிற்று

          பிள்ளை லோகார்ய ஜீயர் திருவடிகளே ஶரணம்.

———————————————————————————————-

திருப்பல்லாண்டு

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வ்யாக்யானம்

ஶ்ரீமத்க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே |

யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலப:ஶ் ஶ்ரீதரஸ்ஸதா ||

அவதாரிகை –

“பதிம் விஶ்வஸ்ய ஆத்மேஶ்வரம்” என்றும், “தம் ஈஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம்” என்றும், ஸர்வ ஸ்வாமியாகவும், ஸர்வ நியந்தாவாகவும், ஸர்வேஶ்வரன் ஸ்வரூபத்தை நிர்ணயித்து, சேதன ஸ்வரூபத்தை “யஸ்யாஸ்மி” என்றும், “பரவானஸ்மி” என்றும், “தாஸோஹம் வாசுதேவஸ்ய” என்றும், “தாஸபூதா: ஸ்வத: ஸர்வே” என்றும் நிரூபித்து, இந்த ஸ்ரூபானுரூபமான ஜ்ஞானமும், ஜ்ஞானானுரூபமான வ்ருத்தமும் ப்ராப்தமாயிருக்க அய:பிண்டத்துக்கு அக்னி ஸம்ஸர்க்கத்தால் வந்த தாதாத்ம்யம் போலே சேதனர் அசித் ப்ரத்யாஸத்தியாலே தேவோஹம் மனுஷ்யோஹம் என்று அஹங்கரித்து, புத்ர மித்ராதிகள் பக்கலிலே மமதா புத்தியை பண்ணி, இப்படி ப்ரவாஹ ரூபேண நித்யமான அஹங்கார மமகாரங்களாலே ஸர்வேஶ்வரகதமான ஸ்வாமித்வ பந்துத்வங்களை தங்கள் பக்கலிலே அத்யவஸித்து, ஸ்வத:ப்ராப்தமான பாரதந்த்ர்யத்தில் விமுகராய், அத ஏவ ஶப்தாதி விஷய ப்ரவணராய், அத்தால் வந்த ராக த்வேஷாதிகளிலே அபிபூதராய் வருகிற து:க பரம்பரைகளை அனுஸந்தித்து, நிருபாதிக ஶேஷியான ஸர்வேஶ்வரன் “ஶாஸநாத் ஶாஸ்த்ரம்” என்கிறபடியே தத்வ ஹிதங்களை அறிந்து நல்வழி போகைக்குடலான ஶாஸ்த்ரத்தை ப்ரகாஶிப்பித்தருளினான். “ஹர்தும் தம: ஸதஸதீச மானம் காருணிகோ ததாதி”  என்னக்கடவதிறே.

இந்த ஶாஸ்த்ர ப்ரதானமும் வாஸனா தூஷிதமாகையாலே அகிஞ்சித்கரமாக ஓலைப்புறத்தில் செல்லா தேசத்திலே எடுத்துவிடும் ராஜாக்களைப்போலே ராமகிருஷ்ணாதிரூபேண வந்தவதரித்து, “பிதுர்வசன  நிர்தேஶாத் பரத்வாஜஸ்ய ஶாஸநாத்’ என்று பித்ரு வசன பரிபாலநாதிகளை ஆசரித்தருளியும், இளைய பெருமாளை இடுவித்து “வகுத்த விஷயத்தில் ஶேஷவ்ருத்தியே  இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம்” என்னுமிடத்தை ப்ரகாஶிப்பித்தருளியும், ‘ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய’  என்றுகொண்டு இந்த வ்ருத்திக்கடியான பாரதந்த்ர்யத்தை ஶ்ரீபரதாழ்வானை இட்டு ப்ரகாஶிப்பித்தருளியும், இப்பாரதந்த்ர்ய காஷ்ட்டையை “கச்சதா மாதுலகுலம் பரதேன நீதா:” என்று கொண்டு ஶ்ரீஶத்ருக்னாழ்வானை இட்டு ப்ரகாஶிப்பித்தருளியும், கிருஷ்ணனாய் வந்தவதரித்து தூத்ய ஸாரத்யங்களை ஆசரித்தருளியும் “யத்யதாசரதி ஶ்ரேஷ்ட்ட:” என்று ஶ்ரேஷ்ட்ட ஸமாசாரம் கர்தவ்யம்’ என்று உபதேஶித்தருளியும், இப்படி பஹு ப்ரகாரத்தாலே ஆத்மாக்களுடைய பாரதந்த்ர்யத்தை ப்ரகாஶிப்பித்தருளின   இடத்திலும், பெரியவன் தாழநின்று ஆசரித்த இம்மஹா குணத்திலே “அவஜானந்தி மாம்  மூடா:” என்கிறபடியே அனீஶ்வரத்வமாகிற தோஷத்தை ஆவிஷ்கரித்து காற்கடை கொள்ளுகையாலே அவையும் கார்யகரமாய்த்தில்லை.  இனி நாம் பார்வை வைத்து ம்ருகம் பிடிப்பாரை போலே ஸஜாதீய முகத்தாலே  சேதனரை வஶீகரிக்க வேணும் என்று பார்த்தருளி, பெரியாழ்வாரை அவதரிப்பித்தருளினான்.

இவ்வாழ்வார், ஸஹஜதாஸ்யத்தை உடையவராகையாலே  ‘பகவத் விஷயத்திலே கிஞ்சித்கரித்து  காலக்ஷேபம் பண்ணவேணும்’ என்று  பார்த்தருளி, அது செய்யுமிடத்து ‘அவனுகந்த அடிமையே கர்த்தவ்யம்’ என்று அனுஸந்தித்து அவதாரங்களை ஆராய்ந்தவிடத்தில், கம்ஸனுக்கு பணி செய்து போந்த மாலாகாரர் க்ருஹத்திலே எழுந்தருளிப் பூவை இரந்து, அவன்தான் “ப்ரஸாத பரமௌ நாதௌ மம கேஹமுபாகதௌ  தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்யோபஜீவன:” என்று உகந்து சூட்ட சூடினபடியை அனுஸந்திக்கையாலே, இவ்விஷயத்துக்கு பூவிடுகை ஒழிய  வேறு கர்த்தவ்யமில்லை நமக்கு” என்று திரு நந்தவனம் செய்கையிலே உத்யோகித்தார் ஒருவரிறே.

இன்னமும், மற்றைய ஆழ்வார்களிற்காட்டில் இவர்க்கு நெடுவாசி உண்டு. அவர்கள் தந்தாமுடைய ஸம்ருத்திகளை எம்பெருமானாலே பெற நினைத்திருப்பார்கள்.  இவர் தம்மை அழியமாறி வரும் பகவத் ஸம்ருத்தியையே தமக்கு புருஷார்த்தமாக நினைத்திருப்பார்.  அவர்கள் ஈஶ்வரனை கடகாக பற்றி தந்தாமுடைய பய நிவ்ருத்தியை பண்ணாநிற்பர்கள். இவர் தாம் கடகாக நின்று ‘அவனுக்கு என் படுகிறதோ’ என்று பயப்பட்டு அந்த பய நிவ்ருத்தியிலே யத்னம் பண்ணாநிற்பர்.

இப்படி, மற்றைய ஆழ்வார்களிற்காட்டில் இவர்க்குண்டான நெடுவாசி போலே, மற்றை ப்ரபந்தங்களைக் காட்டில் திருப்பல்லாண்டுக்கு நெடுவாசி உண்டு.  வேதமென்ன தத் உபப்ரும்ஹணமான இதிஹாஸ புராணங்களென்ன, இவை போலே அதிக்ருத அதிகாரமாயிராது.  ஸர்வாதிகாரமான திருவாய்மொழியில் உண்டான அருமையும் இதுக்கில்லை.  “அரி அயன் அரன் என்னும் இவரை” (திருவா – 1.3.6) “ஒன்ற நும் மனத்து வைத்து” (திருவா – 1.3.7) என்றும் “முனியே நான்முகனே முக்கண்ணப்பா” (திருவா – 10.10.1) என்றும் உபக்ரமம் ’ தொடங்கி  உபஸம்ஹாரத்தளவும் செல்ல த்ரிமூர்த்தி ஸாம்யத்தை அருளிச் செய்கையாலே ‘மத்யே விரிஞ்ச கிரிஶம் ப்ரதமாவதார:’ என்று ரகுகுல ஸஜாதீயனாகவும் யதுகுல ஸஜாதீயனாகவும் அவதரித்தாப் போலே, ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே வந்தவதரிக்கையாலே “நீராய் நிலனாய்” (திருவா – 6.9.1) என்று தொடங்கி “ஶிவனாய் அயனாய்” என்று சேதன அசேதன வாசி ஶப்தங்களோடே ஸாமாநாதிகரிக்கையாலே, ஸாமாநாதிகரண்யத்துக்கு நிபந்தனம் ஈஶ்வரனோடு சேதன அசேதனங்களுக்குண்டான ப்ருதக்ஸ்தித்யுபலப்தி இல்லாத ஸம்பந்தமென்றே நிர்வஹிக்க வேண்டும் அருமையாதல் இல்லை இப்பிரபந்தத்துக்கு.

இன்னமும், மஹாபாரதம்போலே பெரும்பரப்பாய், ‘இன்னது சொல்லிற்று’ என்று நிர்ணயிக்க வொண்ணாததாய் இருக்கும் குறைவுமின்றிக்கே, ப்ரணவம் போலே ஶப்தம் அத்யல்பமாய், சகல வேதார்த்தமும் அதுக்குள்ளே காணவேண்டி, அது தெரியாதே தேடவேண்டி வரும். அந்த குறையும் இன்றிக்கே, 12 பாட்டாய், ஐஶ்வர்ய கைவல்யங்களை நீக்கி, உத்தம புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை ஸுக்ரகமாக ப்ரதிபாதிக்கையாலே இதுக்கு நெடுவாசியுண்டு.  இன்னமும் இப்ரபந்தம், தன்னை அதிகரித்தவன் கையிலே பரதத்வத்தை கை படுத்தவல்ல ஶக்தியை உடைத்தாகையாலே வந்த ஏற்றமும் உண்டு.  ‘பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டு’ (பல்லாண்டு – 12) என்றிறே இதுக்கு பலம்.

இப்ரபந்தம் அதிகரித்தபடி என்? என்னில் ஶ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜா, தார்மிகராகையாலே புரோஹிதரான செல்வ நம்பியை ‘புருஷார்த்த நிர்ணயபூர்வகமாக அத்ருஷ்ட சித்திக்கு விரகென்? என்ன, ‘தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம்’ என்கிறபடியே, வித்வான்களைத் திரட்டி வேதார்த்த நிர்ணயத்தை பண்ணி, அவ்வழியாலே புர்ஷார்த்தம் பெறவேண்டும்’ என்று சொல்ல, அவனும் அப்படியே பஹு த்ரவ்யத்தை வித்யா ஶுல்கமாக கட்டி, வித்வான்களை ஆஹ்வானம் பண்ணிச் செல்லுகிறவளவிலே வடபெருங்கோயிலுடையான், ஆழ்வாரை இடுவித்து லோகத்திலே வேததாத்பர்யத்தை ப்ராஶிப்பிக்கைக்காக, ‘நீர் போய் கிழியை அறுத்துக்கொண்டு வாரும்’ என்று அருளிச் செய்ய, அது வித்யா ஶுல்கமாக நிர்மித்ததொன்றன்றோ, கையில் கொட்டுத் தழும்பைக் காட்டிக் கிழியை அறுக்கலாமோ’ என்ன, ‘அது உமக்கு பரமோ.  நாமன்றோ வேதார்த்த ப்ரதிபாதனத்துக்குக் கடவோம்’ என்று ஆழ்வாரை நிர்பந்தித்தருள:  ஆழ்வாரும் பாண்டிய வித்வத் கோஷ்டியிலே எழுந்தருளினவளவிலே செல்வ நம்பியும் ராஜாவும் அப்யுத்தான ப்ரணாம பூர்வகமாக பஹுமானம் பண்ண,  அத்தைக் கண்ட வித்வான்கள் ராஜாவை அதிக்ஷேபிக்க: அவ்வளவிலே செல்வ நம்பி ஆழ்வாரை தெண்டநிட்டு ‘வேதாந்த தாத்பர்யமான புருஷார்த்தத்தை அருளிச்செய்யலாகாதோ?’ என்ன ஆழ்வாரும் ‘தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம்ப்ரபஶ்யதி’ என்று ஶ்ரீ வால்மீகி பகவான் ஸர்வார்த்தங்களையும்  ஸாக்ஷாத் கரித்தாற் போலேயும், ஶ்ரீபாஞ்சஜன்ய ஸ்பர்ஶத்தாலே த்ருவன் ஸர்வஜ்ஞனானாப்போலேயும், பகவத் ப்ரஸாதத்தாலே ஸகல வேதார்த்தங்களையும் ஸாக்ஷாத்கரித்து, வேதாந்த  தாத்பர்யமான அர்த்தத்தை ப்ரதிபாதித்தருள, அதிக்ஷேபித்த வித்வான்களோடு அனுவர்த்தித்த ராஜாவோடு வாசியற ஸர்வரும் விஸ்மிதராய்: அனந்தரம் இவரை ஆனையிலே ஏற்றி, ராஜா ஸபரிகரனாய் சேர்த்துக்கொண்டு நகரி வலம் வருகிற மஹோத்ஸவத்தை காண்கைக்காக, புத்ரர்களை ப்ரஹ்மரதம் பண்ணும் சமயத்திலே மாதாபிதாக்கள் காண ஆதரித்து வருமாபோலே, பிராட்டியோடே கூட ஸபரிகரனாய்க் கொண்டு ஈஶ்வரன் ஸந்நிஹிதனாக, தத்பரிகரபூதரான ப்ரஹ்மாதி தேவர்களும் ஆகாஶத்திலே நெறுங்கி நிற்கிற இத்தை ஸாக்ஷாத்கரித்த ஆழ்வார் ஸ்வஸம்ருத்தியைக்கண்டு  இறுமாவாதே பகவத் ப்ரஸாதத்தாலே நிரவதிக பக்தியைப் பெற்று அவனுடைய ஸர்வஜ்ஞத்வ ஸர்வ ஶக்தித்வ ஸர்வ ரக்ஷணத்வாதிகளை அனுசந்திப்பதற்கு முன்னே, முகப்பிலுண்டான சௌந்தர்ய சௌகுமார்யாதிகளைக் கண்டு   ‘காலாதீதமான தேஶத்திலே இருக்கிற வஸ்து, காலம் ஸாம்ராஜ்யம் பண்ணுகிற தேஶத்திலே சக்ஷுர்விஷயமாவதே! இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ? என்னும் அதி ஶங்கையாலே, ஆனைமேலே கிடந்த மணிகளைத் தாளமாகக்   கொண்டு, இந்த சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்குத் தீங்கு வாராதே நிர்ப்பயமாகச் செல்லவேணும் என்று திருப்பல்லாண்டு பாடுகிறார்.

அவாப்த ஸமஸ்த காமனாகையாலே ஒன்றால் ஒரு குறையுமின்றிக்கே ஸர்வ நியந்தாவுமான ஈஶ்வரனைக் கண்டால் தம்முடைய மங்களங்களை அவன் பக்கலிலே ப்ரார்த்திக்க ப்ராப்தமாயிருக்க, தாம் அவனுக்கு மங்களங்களை ஆஶாஸிக்கை அஸங்கதமன்றோ?  என்னில், முகப்பில் சக்ஷுர்விஷயமான சௌந்தர்யாதிகளில் பகவத் ப்ரஸாத லப்தமான பக்தி பரவஶராய்க் கொண்டு அழுந்தி, அவனுடைய ஸர்வ ரக்ஷகத்வ  ஸர்வ ஶக்தித்வத்தையும், ஸ்வ ஸம்ருத்தியையும் மறக்கையாலே பகவத் ஸம்ருத்தியே தமக்கு ஸம்ருத்தியாகக் கொண்டு மங்களாஶாஸனம் பண்ணுகை சங்கதம்.

பகவத் ப்ரேமம்தான்  தத் ப்ராப்திக்கு ஹேதுவாதல், ததனுபவத்துக்கு பரிகரமாதலாகை ஒழிய அறிவுக்கேட்டைப் பண்ணுமென்னுமிடத்தில் ப்ரமாணமென்? என்னில், அது ஶிஷ்டாசார சித்தம், “ஸ்த்ரியோ வ்ருத்தா: தருண்யா ச ஸாயம் ப்ராத: ஸமாஹிதா: ஸர்வான் தேவான் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யஶஸ்வின:” என்று, திவாராத்ர விபாகமற தேவதைகளை ரக்ஷித்துப் புகழ் படைத்துப் போந்த சக்ரவர்த்தித் திருமகனுடைய சௌந்தர்யாதி குணங்களுக்கு ரக்ஷகமாக  அயோத்யாவாசி ஜனங்கள் பெருமாளால் தங்களுக்கு வரும் ஸம்ருத்தியை மறந்து தேவதைகளின் காலிலே விழுந்தார்களிறே.  பிராட்டியைத் திருமணம் புணர்ந்து மீண்டெழுந்தருளா நிற்க, ஶ்ரீ பரஶுராமாழ்வான் வந்து தோன்றினவளவிலே, தாடகா தாடகேயருடைய நிரஸனங்களைக் கேட்டிருக்கச் செய்தேயும் அஞ்சி “க்ஷத்ர ரோஷாத் ப்ரஶாந்தஸ்த்வம் ப்ரம்ஹணஶ்ச மஹாயஶா: பாலானாம் மம புத்ராணாம் அபயே தாதுமர்ஹஸி’ என்று ஶரணம் புக்கு, ‘அவன் தோற்று மீண்டு போனான்’ என்று கேட்ட பின்பு ‘புனர்ஜாதம் ததா மேனே” என்கிறபடியே தானும் பிள்ளைகளும் மறுபிறவி பிறந்ததாக நினைத்தானிறே  சக்ரவர்த்தியும் ஶ்ரீ கௌசல்யாரும் “யன்மங்களம் ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா அம்ருதம் ப்ரார்த்தயானஸ்ய தத்தே பவது மங்களம்” விஶ்வாமித்ர அத்வர த்ராணாதிகளால் வந்த ஆண்பிள்ளைத் தனத்தை விஸ்மரித்து மங்களாஶாஸனம் பண்ணினார்களிறே.  ஶ்ரீ தண்டகாரண்ய வாஸிகளான ருஷிகளும் “தே தம் ஸோமமிவோத்யந்தம் த்ருஷ்ட்வா வை தர்மசாரிண: மங்களானி ப்ரயுஞ்சானா: ப்ரத்யக்ருஹ்ணன் த்ருடவ்ரதா:” என்று தங்கள் ஆபந்நிவ்ருத்திக்கும் அபிமத ஸித்திக்கும் இவரே ரக்ஷகரென்று ஸாதனானுஷ்டானம் பண்ணுகிறவர்கள், இவர் சந்நிஹிதரானவாறே அவற்றை மறந்து, இவர் வடிவழகிலே  துவக்குண்டு மங்களாஶாஸனம் பண்ணினார்களிறே.  கர்ம ஸ்பர்ஶமின்றிக்கே தலைநீர்பாட்டிலே இவர் ஏற்றமெல்லாம் அறியும் பிராட்டி இவர் அழகிலே தோற்று “பதி ஸம்மாநிதா சீதா பர்தாரமஸிதேக்ஷணா ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யபிதத்யுஷீ ‘ என்று தொடங்கி “பூர்வா திஶம் வஜ்ரதர:” என்று திக்பாலகர்களை இவர்க்கு ரக்ஷகராக அபேக்ஷித்தாளிறே.

இன்னமும், “ஜாதோஸி தேவதேவேஶ ஶங்கசக்ர கதாதர திவ்ய ரூபம் இதம் தேவ ப்ரஸாதேன உபஸம்ஹர” என்று ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’  (திருவா.1.1.1) அவ்வடி வோடே வந்து அவதரித்தான் என்று  இவனுடைய பெருமையை அறிந்திருக்கிற தசையிலும் கம்ஸ பயத்தாலே ‘இவ்வடிவை உபஸம்ஹரிக்கவேணும்’ என்றாரிறே.  ஶ்ரீ வசுதேவர். “உபஸம்ஹர ஸர்வாத்மன் ரூபமேதத் சதுர்புஜம் ஜாநாது மா அவதாராந்தே கம்ஸோயம் திதிஜன்மஜ:” என்று “ஸர்வாத்மன்” என்று “ஸர்வாந்தர்யாமி” என்றும் “ஏதத் சதுர்புஜம்” என்று அவனுடைய அஸாதாரண விக்ரஹமென்று அறிந்திருக்கச் செய்தேயும், கம்ஸ பயத்தாலே “இவ்வடிவை உபஸம்ஹரிக்க வேணும்” என்றாளிறே தேவகி பிராட்டியும்.

இவ்வர்த்தம் லோக ப்ரசித்தமும்.  அனேக காலம் தபஸ்ஸு பண்ணிப் பெற்று ப்ரதமஜனாய் அதி ஸுந்தரனாய் புத்ரனளவிலே ஒரு விரோதமின்றிக்கே இருக்கச்செய்தேயும் செல்லா நின்றதும் வாரா நின்றதும் ப்ரேமாந்த்யத்தாலே பயஹேதுவாகக் கடவதிறே மாதாவுக்கு.  தன் கைக்கடங்காத விற்பிடி மாணிக்கத்தைப் பெற்றவன், அது ஸுரக்ஷித மாயிருக்கச் செய்தேயும் “அதுக்கு என்ன விரோதம் வருகிறதோ” என்று காற்றசங்கிலும் பயப்படாநிற்குமிறே.  அல்ப தேஜஸ்ஸுக்களான சந்திராதித்யர்களுடைய  ஸந்நிதியிலே அசித்துக்களான பாஷாணங்கள் உருகாநின்றன. “பரஞ்சோதிருபஸம்பத்ய” என்று “பரஞ்சோதிநீபரமாய்”  என்றும் சொல்லுகிறபடியே நிரதிஶய சௌந்தர்ய யுக்தனாய் நிரவதிக தேஜோரூபனான எம்பெருமானைக் கண்டால் பரம சேதனரான ஆழ்வார் கலங்கச் சொல்லவேணுமோ?

ஆகையாலே ராவணாதி ராக்ஷஸ துர்வர்கமேயாய், காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற தேசத்திலே இவ்விலக்ஷண விஷயத்தைக் கண்டருளி ‘இவ்விஷயத்துக்கு எவ்வழியிலே தீங்கு வருகிறதோ!’ என்று பயப்பட்டு தத்பரிஹாரார்த்தமாகத் திருப்பல்லாண்டு பாடுகிறார்.

ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்களை உள்ளபடி அறிந்திருக்கிற இவர் ரக்ஷ்ய ரக்ஷக பாவத்தை மாறாடி ப்ரதிபத்தி பண்ணுகை விபரீதஜ்ஞராமன்றோ? என்னில், கர்ம நிபந்தனமான  விபரீத ஜ்ஞானமாய்த்து த்யாஜ்யம்.  விஷய வைலக்ஷண்யமடியாக வந்ததாகையாலே அவ்வைலக்ஷண்யம் உள்ளவளவும் அனுவர்த்திக்கையாலே ஸ்வரூப ப்ராப்தமாகக் கடவது.

இன்னமும், ஶேஷ ஶேஷி பாவஜ்ஞரானஸமநந்தரம்  ஶேஷிக்கு அதிஶயத்தை விளைக்கை ஶேஷபூதனுக்கு ஸ்வரூபமாகையாலே, தத்விஷயமாக  மங்களாஶாஸனம் பண்ணுகை சைதன்யக்ருத்யம்.  அந்த ஶேஷத்வ காஷ்டையாவது – தன்னை அழியமாறியேயாகிலும் ஸ்வாமிக்கு ஸம்ருத்தியை ஆஶாஸிக்கையிறே.  வேதாந்த தாத்பர்யமிறே இத்திருப்பல்லாண்டில் ப்ரதிபாதிக்கப் படுகிறது.

இப்ரபந்தத்தில், முதலிரண்டு பாட்டாலே தாம் மங்களாஶாஸனம் பண்ணுகிறார். அத்தால் தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே மேல் மூன்று பாட்டாலே மங்களாஶாஸனம்  பண்ணுகைக்கு பகவத் சரணார்த்திகளையும், கேவலரையும், ஐஶ்வர்யார்த்திகளையும் அழைக்கிறார்.  அதுக்கு மேல் மூன்று பாட்டாலே ஆஹூதரானவர்கள் இவரோடே சங்கதராகிறார்கள்.  இதுக்கு மேலே மூன்று பாட்டாலே அவர்களோடே திருப்பல்லாண்டு பாடியருளுகிறார்.  மேல் பாட்டு பலஶ்ருதி.

  1. பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடிநூறாயிரம்

மல்லாண்டதிண்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடிசெவ்வித்திருக்காப்பு.

பதவுரை: –

மல் – சாணூர முஷ்டிகர் முதலிய மல்லர்களை

ஆண்ட – அடக்கிக் கொன்ற

திண் – திடமான, மஹா பலம் பொருந்திய

தோள் – திருத்தோள்களை உடைய

மணி – மாணிக்கம் போன்ற

வண்ணா – வர்ணத்தையும் ஸ்வபாவத்தையும் உடையவனே

உன் – உன்னுடைய

செவ்வடி – செம் + அடி: சிவந்த திருவடியின்

செவ்வி – அழகுக்கு

பல்லாண்டு – பல எண்ணமுடியாத வருஷங்கள் (இங்கு ஆண்டு மனுஷ்ய லோகத்தின் ஆண்டைக் குறிக்கும்).

பல்லாண்டு – தேவ வருஷத்தில் எண்ண முடியாத வருஷங்கள்.

பல்லாயிரத்தாண்டு – ப்ரஹ்மாவின் வருஷ கணக்கில்  எண்ணமுடியாத வருஷங்கள்

பலகோடி நூறாயிரம்- எண்ண முடியாத ப்ரஹ்மாக்களுடைய கணக்கில்லாத வருஷங்கள்.  அதாவது, கால தத்வம் உள்ளவரை.

திருக்காப்பு – குறைவற்ற ரக்ஷை உண்டாகவேணும்.

அவதாரிகை –

முதற்பாட்டு சௌந்தர்யாதி கல்யாண குணோபேதமான விக்ரஹத்தோடே வகுத்த ஶேஷியானவனை காலாதீனமான தேசத்திலே காண்கையாலே ‘இத்தால் இவனுக்கு என்ன தீங்கு வருகிறதோ’ என்று அதிஶங்கை பண்ணி “அநாதிர்பகவான் காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே” என்கிறபடியே காலதத்வமுள்ளதனையும் இச்செவ்வி மாறாதே நித்யமாகச் செல்லவேணுமென்று மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.

(பல்லாண்டு) – அல்லாத அவச்சேதங்களை ஒழிய ஆயுஸ்ஸுக்குப் பர்யாயமான ஆண்டைக் கொண்டு காலத்தை பெருக்குகிறார்.  ஆயுஸ்ஸைப் ப்ரார்த்திக்கிறவராகையாலே “யாமோஷதி மிவாயுஷ்மன்” என்று ஆயுஸ்ஸை ப்ரார்த்தித்தாரிறே பெரியவுடையார்.  “வேதநூல் பிராயம் நூறு” ( திருமாலை – 3) என்று ஆயு:பர்யாயமாகச் சொல்லிற்றிறே வத்ஸரத்தை.  இந்த பஹு வசனத்துக்கு அஸங்க்யாதத்வமே  முக்யார்த்த மாகையாலே அஸங்க்யாதமான வர்ஷங்கள் இவ்வழகோடே நித்யமாகச் செல்லவேணும் என்கிறார்.

பல்லாண்டு என்கிற ஶப்தம் ஸ்வரூப வாசியாயும் இருக்கிறது. உத்க்ருஷ்டனாய் இருப்பானொருவனை அபக்ருஷ்டனா யிருப்பானொருவன் கண்டால் அவனுடைய உத்கர்ஷானுரூபமாகச் சொல்லும் பாஶுரமாகையாலே, சர்வேஶ்வரனுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும், அவனைக் குறித்து தம்முடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும் இந்த உத்கர்ஷ அபகர்ஷ ரூப வைஷம்யம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே “பல்லாண்டு” என்கிற ஶப்தம் ஸ்வரூபவாசியாகிறது.  மேல் பண்ணுகிற மங்களா ஶாஸனம் ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காகச் சொல்லிற்று.  “ஜிதம்” என்றும், “நம:” என்றும், “தோற்றோம்” (திருவா – 2.1.7) என்றும், “போற்றி” என்றும் (திருவா – 4.5.1) “பல்லாண்டு” என்றும்  இவை பர்யாயம்.

இந்த பதங்களுக்கு அர்த்த பேதம் இல்லையோ? என்னில், ப்ரவ்ருத்தி நிமித்த பேதத்தாலே வரும் விஶேஷம் உண்டானாலும் விழுக்காட்டில் ஆத்ம ஸ்பர்ஶியாய்த் தலைக்கட்டுகையாலே பர்யாயமாகிறது.   “ஜிதம்” என்று, அவனாலே தன் அபிமானம் போகும்படியை இசைந்து அத்தலையின் வெற்றிக்கு மேலெழுத்திடுகை வ்யவஹாரம்.  இத்தால், ஸ்வரூப ப்ரகாஶத்தால் அல்லது அபிமானம் போகாமையினாலே, இச்சப்தமும் விழுக்காட்டால் ஸ்ரூபவாசியாகிறது.  “நம:” என்று எனக்குரியேன் அல்லேன் என்கிறபடி, இது நிவ்ருத்த ஸ்வதந்த்ரனுடைய வ்யவஹாரம். இதுவும் ஸ்வரூப ப்ரகாஶத்தால் அல்லது கூடாமையாலே ஸ்வரூப ஸ்பர்ஶியாகிறது.  “தோற்றோம்” என்கிறது, அத்தலையில் வெற்றியே தனக்கு பரமப்ரயோஜனம்’ என்றிருக்குமவனுடைய வ்யவஹாரம்.  இதுவும் அஹங்கார நிவ்ருத்தியேயல்லது சம்பவியாமையாலே ஸ்வரூப ஸ்பர்ஶியாகிறது.  ‘போற்றி’ என்றுத் தன்னைப் பேணாதே அத்தலையில் ஸம்ருத்தியே பேணுமவன் வ்யவஹாரம்.  இதுவும் ஸ்வரூபானுரூபமிறே.  ‘பல்லாண்டு’ என்கிறது தன்னைப் பாராதே ‘அத்தலையில் ஸம்ருத்தியே  நித்யமாகச் செல்ல வேணும்’ என்றிருக்குமவன் வ்யவஹாரம். ஆக, இச்சப்தங்கள் ஸ்வரூபத்தையும் ஸ்வரூபானுரூபமான வ்ருத்தியையும் ப்ரகாஶிப்பிக்கையாலே ஸ்வரூபானுபந்தியே ஆகிறது.

(பல்லாண்டு) – மறித்து பல்லாண்டு என்கிறதென்? என்னில், அகவாய் அறியாதவனுக்குத் தெரியாமையாலே பலகால் சொல்லவேண்டியிருக்கும்.  ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனாய், எதிர் சூழல் புக்குத் திரிகிறவனுக்கு இருகால் சொல்லவேண்டா. இப்புனருக்திக்குப்     பொருளென்?  என்னில், அவனுடைய ஸர்வஜ்ஞத்வத்தில் குறையாலல்ல.  ‘ஒருகால் சொன்னோம்’ என்று ஆறியிருக்கமாட்டாத தம்முடைய ஆதராதிஶயத்தாலும், பலகால் சொல்லுமத்தாலும் பர்யாப்தி பிறவாத விஷய வைலக்ஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்.  த்ருஷார்த்தனானவன் தண்ணீர் பெறுமளவும் ‘தண்ணீர்’ ‘தண்ணீர்’ என்னுமாபோலே தம்முடைய பயம் ஶமிக்குமளவும் ‘பல்லாண்டு’ ‘பல்லாண்டு’ என்ன ப்ராப்தமிறே.

(பல்லாயிரத்தாண்டு) – கீழில் பஹு வசனத்திலே வர்ஷங்களுடைய அஸங்க்யாதத்வம் சொல்லியிருக்க, இதுக்கு  உதயமில்லையே? என்னில், அவச் சேதகங்களுக்கு ஸங்க்யை இல்லாமையாலே காலாவச்சேத்யத்துக்குத் தொகை இல்லை.  ஆகையாலே அருளிச்செய்கிறார்.

அவச்சேதகங்களாவன – சூர்ய பரிஸ்பந்தாதிகள்.

அவச்சேத்யங்களாவன – க்ஷண லவாதிகள்.

வர்ஷத்துக்கு அவச்சேதகர் தேவர்கள்.  அத்தைப் பற்றச்சொன்னார் கீழ். பல வர்ஷத்துக்கு அவச்சேதகன் பிரஹ்மா.  அத்தைப் பற்ற அருளிச்செய்கிறார் ‘பல்லாயிரத்தாண்டு’ என்று.

(பலகோடி நூறாயிரம்) – என்று ப்ரஹ்மாக்களுக்குத் தொகை இல்லாமையாலே  அருளிச்செய்கிறார்.  காலக்ருத பரிணாமம் இல்லாத தேஶத்தில்    உள்ளவளவும் விஷயவைலக்ஷண்யத்தைப் பற்ற அதிஶங்கையும் மங்களாஶாஸனமும் நித்யமாய்ச் செல்லா நின்றது.  காலக்ருத பரிணாமமுள்ள தேஶத்தில் இருக்கிறவருக்கு அதிஶங்கையும் அத்தால் வந்த பயமும், பய நிவ்ருத்திக்காகக் காலத்தைப் பெருக்கி, இக்கால முள்ளதனையும் இப்படி மங்களாஶாஸனம் பண்ணச் சொல்வேணுமோ?

இப்படி மாறி மாறி பயத்தை விளைத்த காலத்தைப் பெருக்கி இதுவே தமக்கு யாத்ரையாய்ச் செல்லப்புக்கவாறே, அவன் ‘இவருடைய பயத்தை பரஹரிக்கவேணும்’ என்று பார்த்து ‘புலி கிடந்த தூற்றுக்கஞ்சிக் காவல் தேடுவாரைப்போலே, நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ? மல்ல வர்க்கத்தை நிரஸித்த தோள் இருக்கிறபடி பாரீர்’ என்று தோள் வலியைக் காட்டினான்.  ராவணானுஜனைக் குறித்து மகாராஜர்க்குப் பிறந்த பயத்தை போக்குகைக்காகத் தம் மிடுக்கைக் காட்ட அவர் பயம் ஶமிக்கக் காண்கையாலே ‘இவ்விஷயத்திலும் பலிக்கும்’ என்று மிடுக்கைக் காட்ட, இவர்க்கு இதுதானே பயஹேதுவாய்த்து.  மஹாராஜர் பயத்தைத் தீர்த்தபடி எங்ஙனே என்னில், ‘பிஶாசான் தானவான் யக்ஷான்’ கள்ளர், பள்ளிகள், வலையர் என்னுமாபோலே ஹிம்ஸகருடைய அவாந்தர பிதை இருக்கிறபடி.  ‘ப்ருதிவ்யாஞ்சைவ ராக்ஷஸான்’ லங்கையிலுள்ள ராக்ஷஸரளவன்றிக்கே,  பஞ்சாஶத்கோடி விஸ்தீர்ணையான பூமியிலுள்ள ராக்ஷஸர் எல்லாரும் எதிரிகளானாலும் ‘அங்குல்யக்ரேண தான் ஹன்யாம்’ ஆக ஶத்ரு வர்க்கங்களெல்லாம்  ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றினுடைய நிரஸனத்துக்கு அஸ்த்ர ஶஸ்த்ரங்கள் வேணுமோ? க்ஷுத்ர க்ருமிகளை நிரஸிக்குமாபோலே அங்குல்யாக்ரத்தாலே நிரஸிக்க வல்லோம் காணும்’ என்கிறார்.  ஆனால் நம்மை நலிந்த ப்ரதிபக்ஷம் நஶியாதே கிடக்கிறதென்? என்னில், அழிப்போம் என்னும் இச்சை இல்லாமை. இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை.  அதுதனக்கு அடி என்?  என்னில், ‘உயிரோடே தலை சாய்க்குமானால் அழிக்கிறதென்? என்று இரக்கத்தாலே.  இவ்வார்த்தை ராமபாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சில் பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து.  இவர்க்கு இதுதானே பய  ஹேதுவாய்த்து.

(மல்லாண்ட திண்தோள்) – மல்லவர்க்கத்தை ஸ்வாதீனமாகப் பண்ணிய திண்ணிய தோள், பிற்பாடரான கம்ஸாதிகளை  அனாயாஸேன கொல்லுகையாலே திண்ணிய தோள் என்கிறது.  மல் என்று மிடுக்காய், அத்தை அடிமை     கொண்ட திண்ணிய தோள் என்கிறதாகவுமாம்.  இம்மிடுக்கு இவர்க்கு பயஹேது ஆவானென்? என்னில், சூரனான புத்ரனைக் கண்டால், பெற்ற தாய் ‘இவன் மதியாதே யுத்தத்திலே புகும். என் வருகிறதோ?’ என்று பயப்படுமாபோலே பயப்படுகை உக்தம்.  ‘மல்லரை அழியச்செய்த தோள்’ என்று இவர் அறிந்தபடி என்?  என்னில் காதில் தோடு வாங்கினாலும்            தோடிட்ட காது என்று அறியுமாபோலே.

(மணிவண்ணா) – நீல மணிபோலே இருக்கிற திருநிறத்தை உடையவனே! அதி ரமணீயமாய் அத்யுஜ்வலமாய், அதி சுகுமாரமாய்,   அதி ஸுலபமாய் இருந்துள்ள வடிவைக்கொண்டு முரட்டசுரர்களுடைய சகாஶத்திலே செல்லுவதே! ‘யௌவனோன்முகீபூத சுகுமாரதநுர்ஹரி: போக ஶரீரோயம் மஹாசுர:’ என்று வெண்ணெயமுது என்று வளர்த்த சிறு பிள்ளையை, முரட்டு வடிவை  உடைய மல்லரோடே உக்கப் போரவிடுவதே ‘ந சமம் யுத்தமித்யாஹு:’ என்று கூப்பிட்டார்களிறே  மதுரையில் பெண்கள்.  சௌகுமார்யம் பயஹேதுவாகிறது, ஸௌலப்யம் பயஹேதுவோ? என்னில், அஸுர நிரஸநார்த்தமாக தேவதைகள் ஶரணாகதியைப் பண்ண மாத்திரத்திலே ஸுலபனாய் அசுரர்கள் ஆஸ்யத்திலே புகும் என்னுமத்தாலே ‘ஆஶ்ரிதருக்குத் தஞ்சமான சௌலப்யத்தையும் மிடுக்கையும் கண்டால் நீர் இங்ஙனே அஞ்சக் கடவீரோ? என்ன

(உன் செவ்வடி) – அது  என்னால்   வருகிறதன்று.  உன் வடிவின் வைலக்ஷண்யத்தாலே வருகிறது.  நீதான் உன்னை கண்ணாடிபுறத்திலே கண்டால் ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான நீயும் கலங்கும்படியன்றோ உன் வடிவு இருக்கிறது.

(செவ்வடி) – செவ்விய அடி என்னுதல், சிவந்த அடி என்னுதல்.  குடில ஹ்ருதயர்க்கும் செவ்விதாகையும், திருமேனிக்கும் பரபாகமாகையும், இரண்டும் இவர்க்கு பயஸ்தானமாகிறதிறே.  ஶேஷபூதன் ஶேஷிவடிவைக் கண்டால் ‘’திருவடிகள்’ என்றிறே வ்யவஹரிப்பது.  ஆஶ்ரய வேளையோடு போக வேளையோடு, மங்களாஶாஸன வேளையோடு வாசியற ஆஶ்ரிதர் இழியும் துறை திருவடிகளிறே.

(செவ்வி) – ‘அரும்பினை அலரை’ என்னுமாபோலே நித்ய யௌவனமாயிருக்கை.

(திருக்காப்பு) – குறைவற்ற ரக்ஷை.  உண்டான அமங்கங்கள் போகைக்கும், இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் பண்ணின ரக்ஷை என்கை. ஒரு க்ரியை இன்றிக்கே குறைவான் என்? என்னில், தாழ்ந்தாரை குறித்து ‘ரக்ஷை  உண்டாயிடுக’ என்றும், சமரைக் குறித்தும், பரிச்சின்னமான உத்கர்ஷம் உடையாரைக் குறித்தும் ‘ரக்ஷை உண்டாகவேணும்’ என்றும் சொல்லக்கடவது.  தமக்கும் ஈஶ்வரனுக்கும் உண்டான நிரவதிகமான உத்கர்ஷ அபகர்ஷங்களில் பாஶுரமில்லாமையாலே குறைந்து கிடக்கிறது.  வேதாந்தத்தாலே நாட்டையடைய வென்றிருக்கிற இவர் ரக்ஷணத்தில்      கவிபாடமாட்டாமை அன்றிறே.

இன்னமும், இவ்விஷயத்திலே மங்களாஶாஸனம் பண்ண இழிந்தார்க்கு ‘மங்களாஶாஸனம் பண்ணினோம்’   என்று கைவாங்கவொண்ணாத அபர்யாப்திக்கு சூசகமாயிருக்கிறது. எல்லா பாட்டுக்கும் இதுதான் முகவுரைபோலே இருக்கிறது.

‘மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு’ என்று அன்வயம்.

————————————————————————————————

  1. அடியோமோடும்நின்னோடும் பிறிவின்றி ஆயிரம்பல்லாண்டு

வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு

வடிவார்சோதிவலத்துறையும்  சுடராழியும் பல்லாண்டு

படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பதவுரை –

அடியோமோடும் – தாசரான எங்களோடும்

நின்னோடும் – ஸ்வாமியான உன்னோடும்

பிரிவின்றி – பிரிவில்லாமல் இருக்கும் சம்பந்தம்

ஆயிரம் பல்லாண்டு – என்னாளும் நித்யமாய்ச் செல்லவேண்டும்

வடிவாய் – அழகே உருவெடுத்தவளும் ஸர்வாபரண பூஷிதையுமான

வலமார்பினில் வாழ்கின்ற – வலத்திருமார்பில் நித்யவாசம் பண்ணுகிற

மங்கை – நங்கை, ஸ்த்ரீத்வத்தில் பரிபூர்ணமானவள், நித்ய யௌவனத்தை உடையவள் (“உம்” என்பதினால் பூமி நீளாதேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்)

பல்லாண்டு – நித்யமாகக் கூடி இருக்கவேண்டும்

வடிவார் சோதி – பகவானுடைய திவ்ய ஶரீரத்தையும் சூழும் ஒளியை உடைய

வலத்துறையும் – உன் வலது திருக்கையில் நித்யவாஸம் பண்ணுகிற

சுடராழி – எதிரிகளை அழிக்கும் சக்கரத்தாழ்வானும்

பல்லாண்டு – ஶாஶ்வதமாய் சேர்ந்து இருக்கவேண்டும்

படை – ஆயுதமாய்

போர் புக்கு – போரிலே புகுந்து

முழங்கும் – ஶப்திக்கும்

அப்பாஞ்சசன்னியமும் – அந்த பாஞ்சசன்னியம் என்று பெயர் பெற்ற சங்கமும்

பல்லாண்டே – நித்யமாய் இருக்க வேண்டும்.

அவதாரிகை –

இரண்டாம் பாட்டு.  கீழ் விக்ரஹ யோகத்தையும் குண யோகத்தையும் குறித்து மங்களா ஶாஸனம் பண்ணினார்.  இதில், உபயவிபூதி யோகத்தைக் குறித்து மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.

வ்யாக்யானம் –

(அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு) –  அடியோமோடும் – தம்மைப் பேணாதே மங்களாஶாஸனம் பண்ணுகிற இவர், தம்முடைய நித்யதையைப் ப்ரார்த்திப்பானென்?  என்னில், ஒரு ஸாத்யத்தைக் குறித்து ஸாதனானுஷ்டானம் பண்ணுகிறவர்கள் ‘ஆயுராஶாஸ்தே’ என்று ஆயுஸ்ஸை ததங்கமாக ப்ரார்த்தியா நின்றார்களிறே.  அதுபோல ‘மங்களாஶாஸனத்திற்குத் தாம் வேணும்’ என்று தம்மையும் கூட்டிக்கொள்கிறார்.  அத்தலைக்குப் பரிகைக்குத் தன்னாலல்லது இல்லாமையாலே தாமில்லாதபோது அத்தலைக்கு அபாயம் ஸித்தம் என்றிருக்கிறாரிறே. ஆனால் ‘என்னோடும்’ என்னாதே “அடியோமோடும்”  என்பானென்?  என்னில், தேஹாத்மாபிமானி தேஹத்தில் ஆத்ம புத்தி பண்ணும்.  மாயாவாதி அஹங்காரத்தில் ஆத்ம புத்தி பண்ணும்.  சாக்யன் “அஹமர்த்தம் ப்ரக்ருதே:பரம், ஸ்வயம் ப்ரகாஶம்,  ஸ்வதந்த்ரன்” என்றிருக்கும்.  அங்ஙன் கலங்கினவரன்றிறே இவர்.  முறையறியுமவராகையாலே “அடியோமோடும்” என்கிறார்.  “கர்மௌபாதிகமாக வந்த அவஸ்த்தைகளெல்லாம் மறைந்தாலும் மறையாத ஸ்வபாவம் தாஸ்யம்” என்றிருக்குமவரிறே இவர்.  ஆனால் “அடியோம்” என்கிற பஹு வசனத்துக்குக் கருத்தென்? என்னில், தாம் தமியராய் நின்று மங்களாஶாஸனம் பண்ணுமத்தால் பர்யாப்தி பிறவாமையாலும் ஸர்வாத்மாக்களுக்கு ஶேஷத்வம் அவிஶிஷ்டமாகையாலும், இப்ரதிபத்தி அவர்களுக்கு இன்றிக்கே இருக்கச்செய்தேயும் ஸ்வாபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்.

(நின்னோடும்) – வ்யாவ்ருத்தமான ஶேஷித்வம் மங்களாவஹ மாகையாலே ஸர்வரும் கூடி பரிந்தாலும் போராதபடியாயிறே இருப்பது.  இத்தால், திவ்யாத்ம ஸ்ரூபத்தைப் பற்றி மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.

(பிரிவின்றி) – இரண்டு தலையும் நித்யமானவோபாதி ஸம்பந்தமும் நித்யமாயிறே இருப்பது.  அதுவும் தன் மங்களாஶாஸனத்தில் உண்டாவதாக நினைத்திருக்கிறார்.

(ஆயிரம் பல்லாண்டு)  – காலதத்வமுள்ளதனையும்  இஸ்ஸம்பந்தம் நித்யமாய்ச் செல்ல வேண்டும் என்கிறார்.

(வடிவாய் நின் வலமார்பினில்) – உண்டான அமங்களங்கள் போகைக்கும், இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் தன் கடாக்ஷமே அமைந்திருக்கிற இவர் “அகலகில்லேன் இறையும்” என்று நம்மைப் பிரியமாட்டாதே இருக்க, நமக்கு வருவதொரு அமங்களம் உண்டோ?’ என்றியப் படுகிறீர்?’ என்ன, தேவரீரும் பிராட்டியுமான  சேர்த்தி நித்யமாய்ச் செல்லவேணுமென்று மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.

(வடிவாய்) – “வடிவு” என்று நிறமாய், இவளோட்டைச் சேர்த்தியாலே திருமேனிக்குண்டான புகரைச் சொல்லுகிறது.  “அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா” என்று ஶ்ரீ ஜனகராஜன் திருமகளை எனக்கென்ன இட்டுப் பிறந்த தத்வத்தோடே எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ?’ என்றானிறே மாரீசனும்.  “ஶ்ரத்தயா தேவம் தேவத்வ மஶ்னுதே” என்னக்கடவதிறே.  ஆனால் இவளாலே அவனுக்கு உத்கர்ஷமாகில் அவனுடைய ஶேஷித்வம் குலையாதோ? என்னில், மாணிக்கம் ஒளியாலே பெருவிலையனாங்காட்டில் மாணிக்கத்தினுடைய ப்ரான்ய மழியுமோ? பூ மணத்தாலே பெருவிலையனாங்காட்டி பூவுக்கு ப்ரான்யமழியுமோ?

(வடிவாய்) – ஶ்ரீ கௌஸ்துபாதிகள் போலே ஆபரணபூதையாய், அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்.

(நின் வலமார்பினில்) – ஸர்வாதிகனான உன்னுடைய வலமார்பினில்.  ஸர்வ யஜ்ஞமயமாய் யோகிசிந்த்யமாயிறே வடிவு இருப்பது.   வலமார்பினில் – அணைக்கைக்கு அணித்தாயிருக்கை.

(வாழ்கின்ற) – மார்பிலிருப்புத்தானே நித்யமாய் போகரூபமா யிருக்கை.  அம்மார்பிலே இருக்கச் செய்தேயும் ‘இறையும் – அகலகில்லேன் என்று அதிஶங்கை பண்ணும்படியாயிறே போக்யதை இருப்பது.

(மங்கையும்) – “யுவதிஶ்ச குமாரிணீ” என்கிற பருவத்தைச் சொல்லுகிறது.  “யுவா குமார:” என்று இவ்விரண்டு அவஸ்த்தையும் உண்டே அவனுக்கு.  இவளுக்கு கௌமாராவஸ்த்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது.  யுவதியுமாகக் கடவள் எங்ஙனே? என்னில், போக ஸ்ரோதஸ்ஸில் வந்தால் இவள் தளர்த்திக்கு அவன் கை கொடுக்கவேண்டும்படியான மௌக்த்யத்தைச் சொல்லுகிறது.  “மங்கையும்” என்கிற ஶப்தத்தாலே  மஹிஷ்யந்தரத்தைச் சொல்லுதல், மங்களாவகையான இவளும் ஆஶாஸ்யை என்னுதல்.

(பல்லாண்டு) – காலதத்வமுள்ளதனையும் இச்சேர்த்தி நித்யமாய்ச் செல்லவேண்டும்.

(வடிவார் சோதி வலத்துறையும்) –  இச்சேர்த்திக்கு ஒரு தீங்கு வாராதபடி கல்மதிளிட்டாற்போல் இருக்கிற ஆழ்வார்களைப் பாரீர்! என்ன, அவர்களோட்டைச் சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.   வடிவார் சோதி – காளமேகநிப ஶ்யாமமான  திருமேனி, ஸ்வதேஜஸ்ஸாலே வ்யாப்தமாம்படி இருக்கை.  “புருஷம் க்ருஷ்ணபிங்களம்” என்னும்படியாயிறே இருப்பது.  தேஜோராஶியாயிருக்கும்படியை உடையவன் என்னவுமாம்.

(வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு) – வலவருகே நித்யவாஸம் பண்ணுமவனாய், பிறர்க்கு அனபிபவநீயனாய் இருக்கிற ஆழ்வாரோட்டைச் சேர்த்தி நித்யமாய்ச் செல்லவேணும் என்கிறார்.  “ஆழியும்” என்கிற ஶப்தத்தால் ஆயுதாகாரத்தாலே ரக்ஷகமாகக் காட்ட, ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களாஶாஸனம் பண்ணுகிறார் என்கை.

(படைபோர்) – தம் கையை விடாதே த்வனியாலே எதிரிகளை அழிக்கும் இவனைப் பாரீர்! என்ன,

(படைபோர் புக்கு முழங்கும்) – சேனையை உடைய யுத்தத்திலே புக்கு முழங்குதல் என்னுதல், யுத்தத்திலே ஆயுதமாய் புக்கு முழங்கும் என்னுதல்.  முழங்கும் – “ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத்” என்றும், “யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹானிரஜாயத” என்றும், ப்ரதிகூலர் மண்ணுண்ணும்படியும், அனுகூலர் வாழும்படியுமிறே த்வனி இருப்பது.  இத்வனி இவர்க்கு பயஸ்தானமானபடி என்? என்னில், த்வனி வழியே நின்று இடம் காட்டிக்கொடுக்கும் என்று பயப்படுகிறார்.

(அப்பாஞ்சசன்னியமும்) – முன்னிலையாய் இருந்தும் பரோக்ஷநிர்தேஶம் பண்ணுவானென்? என்னில், புத்ரனை அலங்கரித்தத் தாய் ‘தன் கண் படிலும் கண்ணெச்சிலாம்’ என்று பார்க்கக் கூசுமாபோலே, மங்களாஶாஸனம் பண்ணுகிற தம்முடைய கண்களையும் செறித்து முகத்தை மாறவைத்துக் கொள்கிறார்.  அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாதத்துக்கு இன்று மங்களாஶாஸனம் பண்ணுகிறார் என்றுமாம்.

இவ்விரண்டு பாட்டும்  திருமந்த்ரார்த்தமாய் இருக்கிறது.  ‘அடியோமோடும்’ என்றவிடத்திலே ப்ரணவார்த்தத்தை சொல்லிற்று.  முதல் பாட்டில் “பல்லாண்டு” என்கிற முதல் பதத்தாலே  “நம:” ஶப்தார்த்தம் சொல்லிற்று.  “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா” என்று அப்பாட்டில் விக்ரஹ யோகத்தையும், ஶௌர்ய வீர்யாதி குணயோகத்தையும், இரண்டாம் பாட்டில் விபூதி யோகத்தையும் சொல்லுகையாலே நாராயண ஶப்தார்த்தம் சொல்லிற்று.  “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு” என்கையாலே சதுர்த்தியில் ப்ரார்த்திக்கிற அர்த்தத்தை சொல்லிற்றாய்த்து.

  1. வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல்வந்துமண்ணும்மணமும்கொண்மின்

கூழாட்பட்டுநின்றீர்களைஎங்கள்குழுவினில்புகுதலொட்டோம்

ஏழாட்காலம்பழிப்பிலோம்நாங்கள்இராக்கதர்வாழ்இலங்கை

பாழாளாகபடைபொருதானுக்குப்பல்லாண்டுகூறுதுமே

பதவுரை –

வாழ் ஆள் – கைங்கர்யமாகிற போகத்துக்கு

பட்டு – பொருந்தி

நின்றீர் – நிலை நின்றவர்களாய்

உள்ளீரேல் – இருப்பீர்களானால்

வந்து – (விரைவில்) வந்து

மண்ணும் – (திருமுளைத் திருநாளைக்கு ) புழுதி மண் சுமக்கையும்

மணமும் – (அந்த கல்யாணத்திற்கு) அபிமானிகளாய் இருக்கையையும்

கொண்மின் – ஸ்வீகரியுங்கள்

கூழ் – சோற்றுக்காக

ஆள் பட்டு – (பிறர்க்கு) அடிமைப் பட்டு

நின்றீர்களை – (எங்கும் பரந்து) நிற்கும் உங்களை

எங்கள் – (அனன்யப்ரயோஜனரான) எங்களுடைய

குழுவினில் – கூட்டத்திலே

புகுதல் ஒட்டோம் – சேரவிடமாட்டோம்

நாங்கள் – நாங்களோவென்னில்

ஏழு ஆள் காலம்  – முன்னேழ் பின்னேழ் நடுவேழாகிய இருபத்தொரு தலைமுறைகளிலும்

பழிப்பு இலோம் – (ஒரு விதமான) குற்றமும் இல்லாதவர்கள்

இராக்கதர் – (ராவணன் முதலிய) ராக்ஷசர்கள்

வாழ் – வாழ்ந்து வந்த

இலங்கை – லங்கையானது

பாழ் ஆள் ஆக – பாழடைந்த ஆளை உடையதாம்படி

படை – யுத்தத்திலே

பொருதானுக்கு – (அன்று) சண்டை செய்தருளிய எம்பெருமானுக்கு

பல்லாண்டு  கூறுதும் – இன்றிலிருந்து திருப்பல்லாண்டு பாடுமவர்களாயிருக்கிறோம்.

மூன்றாம் பாட்டு.

அவதாரிகை –

(வாழாட்பட்டு இத்யாதி) – கீழிரண்டு பாட்டாலே தாம் திருப்பல்லாண்டு பாடினார்.  இனிமேல், தன்னுடைய மங்களாஶாஸனத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே  “சதுர்விதா பஜந்தே மாம்” என்கிறபடியே, ஐஶ்வர்ய, கைவல்ய பகவத் ஶரணார்த்திகள் மூவரையும் கூட்டிக்கொள்வதாக நினைத்து, அதில் மங்களாஶாஸனத்துக்கு பகவத் ப்ராப்திகாமன் ப்ரத்யாசன்னராகையாலே அவர்களை அழைக்கிறார்.  “ஏக: ஸ்வாது ந புஞ்சீத” என்கிற ந்யாயத்தாலே இம்மங்களாஶாஸன ரஸம் எல்லோரும் புஜிக்கவேணும்’  என்னும் நினைவாலே அழைக்கிறார்  என்றுமாம்.  அவர்களோடேகூட மங்களாஶாஸனம் பண்ணுகை தமக்கு தாரகமாகையாலே என்றுமாம்.  “அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு”  (பெரு.திரு – 1.10) என்றும், “அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்று கொலோ” (திரு. வாய் – 2.3.10) என்றும், கண்ணாலே காண்கையும் அத்திரளிலே புகுருகையும் இவை எல்லாம் உத்தேஶ்யமாயிறே இருப்பது.

வ்யாக்யானம் –

(வாழாள்) – என்று நிரதிஶய சுக ரூபமான வ்ருத்தியைச் சொல்லுகிறது.  வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை துராராதமாகையாலும், துஸ்ஸஹமாகையாலும், அத்யல்ப பலமாகையாலும் துக்கரூபமாயிறே இருப்பது.  “ஸர்வம் பரவஶம் து:க்கம்” ‘”சேவா ஶ்வ வ்ருத்தி:” என்னக்கடவதிறே.

இவ்விஷயந்தன்னிலும் ப்ரயோஜநாந்தரபரராய் இழிந்தாராய் இழிந்தால் பலம் பந்தகமாகையாலும், அனன்ய ப்ரயோஜனரோபாதி அனவரத பாவனையும் அந்திம ப்ரத்யயமும் வேண்டுகையாலும் துக்கப்ராயமாய் இருக்கும்.  ஸாதநாந்தர ஶிஷ்டனுக்கும் கர்தவ்ய புத்தியாலே ரஸமில்லை.  இக்குறைகளொன்றுமின்றிக்கே ப்ராப்த விஷயத்திலே தன்னைப் பேணாதே பரஸம்ருத்தியை ஆஶாஸிக்க, ஸர்வ நிரபேக்ஷனான ஈஶ்வரன் இத்தைக் கண்டு ‘இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என்?’ என்று ப்ரீதனாக, இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாயிறே இருப்பது.

(பட்டு) –என்று ‘உவர்கடலில் முத்துப் பட்டது’ என்னுமா போலே.  “நான்” “எனக்கு” என்றிருக்கிற ஸம்ஸாரத்திலே பகவத் ஸம்ருத்தியை ஆஶாசிக்கும்படி கையொழிந்திருப்பார் சிலரைப் பெறுகையாவது அலப்யலாபம் என்னுமிடம் தோற்ற அருளிச் செய்கிறார்.

(நின்றீர்) – வாயு பரவஶமாய்த் திரிகிற த்ருணம் போலே கர்ம பரதந்த்ரனாகத் திரிகிற ஸம்ஸாரி சேதனனுக்கு பகவத்ஜ்ஞான பூர்வகமாக தத் ஸம்ருத்தியை ஆஶாஸிக்கப் பெற்றாலிறே ஸ்திதி உண்டாவது.

(உள்ளீரேல்) – “ஸ மகாத்மா ஸுதுர்லப:”  என்று, அனன்யப்ரயோஜனரைக் கிடையாது என்று ஸர்வேஶ்வரன் கைவிட்ட ஸம்ஸாரமாகையாலே மங்களாஶாஸனத்துக்கு  ஆள் தேட்டமாயிறே இருப்பது.  நாகபாஶத்தினன்று அடைய மோகித்துக் கிடக்க, திருவடியும் ஶ்ரீ விபீஷணாழ்வாரும் “ப்ராணனுடையாருண்டோ” என்று தேடிற்றாபோலே, ஸம்ஸாரத்தில் ஸ்வரூபஜ்ஞானமுடையார் தேட்டமாயிறே இருப்பது.  இந்த “யதி” ஶப்தத்தாலே, ஸம்ஸாரத்தில் வைஷ்ணவர்களும் “நம்மை விரும்புவார் சிலருண்டாவதே” என்று சந்நிஹிதராக

(வந்து) – அவர்களுடைய ஸ்ரூப ஸ்வபாவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடே கலந்துகொடு நிற்கக் காண்டும்படியான த்வரை சொல்லுகிறது மண்ணும் மணமும் கொண்மின் என்கிறார்.

(மண்ணும் மணமும் கொண்மின்) – மண்ணுக்கும் மணத்துக்கும் உரியர் அந்தரங்கரான அடியாரிறே. அடிமை விலையோலை எழுதும்போதும் “மண்ணுக்கும் மணத்துக்கும்  உரியனாக வேணும்” என்றிறே எழுதுவது.  மண்ணாவது – ஸ்வாமிக்கு ஒரு மங்களம் உண்டானால்  அங்குரார்பணத்துக்கு புழுதிமண் சுமக்கை.  அந்த ந்யாயத்தாலேயிறே நம் ஆழ்வார்களுக்கு இது க்ருத்ய மாகிறது.  மணமாவது – அந்த கல்யாணத்துக்குத் தான் அபிமானியாயிருக்கை. இவ்விரண்டும், ஸர்வ கைங்கர்யத்துக்கும்  உபலக்ஷணம்.  கொண்மின் – என்றத்தால் அடிமை செய்யுமிடத்தில் கிடந்தானைக் கண்டேலுகையன்றிக்கே சிலர் தரக்கொள்ளவேணும் என்கையும், தருமவர்களும் “உங்களதான அடிமையை நீங்கள் ஸ்வீகரியுங்கோள்” என்று சீரிதாகக் கொடுக்கக் கடவர் என்கையுமாகிற ஶாஸ்த்ரார்த்தத்தை வெளியிடுகிறது.

(கூழாட்பட்டு இத்யாதி) – இவர் அழைத்த வாசியறியாதே ப்ரயோஜநாந்தரபரர்களடைய புகுரத் தொடங்கிற்று.  அவர்களை நிஷேதிக்கிறார் “கூழாள்” என்று.  சோற்றுக்காக ஆரேனுக்கும் தன்னை எழுதிகொடுக்கை.  இது ப்ரயோஜநாந்தரபரர்க்கும் உபலக்ஷணம்.  தன்னை “பகவத தாஸ்யைக போகன்” என்னுமிடமறியாதே ப்ரயோஜநாந்தரங்களைக் குறித்து அவன் தன்னை ஆஶ்ரயிக்கிறார்களிறே. “கூழாள்” என்று அனன்ய ப்ரயோஜனராய் இழிந்து ப்ரயோஜனாந்தரங்களை வேண்டிக் கொள்ளும் இருகரையரைச் சொல்லுகிறது என்றுமாம்.   பட்டு – அரப்பட்டு என்றபடி.  அதாவது – பந்தகமாகையாலே ஸ்வரூப விரோதியாய் அனர்த்தத்தை பண்ணுமத்தாலே சொல்லுகிறது.

(நின்றீர்களை) – பஹு வசனத்தாலே “உள்ளீரேல்” என்று தேட வேண்டாதே பார்த்த பார்த்த விடமெங்கும் ப்ரயோஜனாந்தர பரராயிருக்கை

(எங்கள் குழு) – என்று இந்திரனுக்கு உண்டான வ்யாவ்ருத்தி தோற்ற அருளிச் செய்கிறார்.  தேஹாத்மாபிமானிகளை தேவதாந்தர ப்ரவணர் இவ்விஷயந்தன்னிலே புகுந்து ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷிப்பார்.  அனன்ய ப்ரயோஜனர்கள் ஸாதனாந்தரங்களிலே அன்யபரரா யிருப்பார்களாகிலிறே திரள்களெல்லாவற்றிலும் வ்யாப்தமாயன்றோ எங்கள் திரளிருப்பது என்கிறார்.

(புகுதலொட்டோம்) – “ஆரோ புகுவார்” என்று ப்ரார்த்திக்கிற இவர் நிர்தயரைப்போலே “புகுதலொட்டோம்” என்பானென்? என்னில், வஶிஷ்டர் பரம தயாளுவானாலூம் சண்டாளனை அக்னி கார்யத்தில் கூட்டிக்கொள்ளானிறே.  இத்தால் அனன்ய ப்ரயோஜனருக்கு ப்ரயோஜநாந்தரபரரோட்டை சஹவாஸம் அஸஹ்யமாயிருக்கும் என்றதாய்த்து.

எல்லா திரளிற்காட்டிலும் உங்கள் திரளுக்கு வாசி என்? என்னில்,

(ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்) – என்கிறார்.  ‘ஏழாள்’ என்று தமக்குக் கீழே ஒரு மூன்றும், மேலே ஒரு மூன்றும், தாமுமாக ஏழ்படியைச் சொல்கிறார்.  இஸ்ஸமுதாயத்தைப் பற்றி ஶாஸ்திரங்கள் ‘ஸப்த ஸப்த ச ஸப்தா ச’ என்று, இந்த  ஏழையும் இதுக்குக் கீழே ஓரேழையும், இதுக்கு மேலே ஓரேழையும் ஆக இருபத்தொரு படிகளைச் சொல்லுகிறது.  “தஶ பூர்வான் தஶாபரான் ஆத்மனஞ்சைக விம்ஶதி பங்க்திஞ்ச புநாதி” என்று முகபேதேன ஶாஸ்த்ரம் சொல்லிற்று.

(ஏழாட்காலும்) – என்கிற ஶப்தம் இவ்வளவை நினைக்கிறது.  இத்தால் ஒரு ஸந்தானத்திலே ஒருவன் அனன்ய ப்ரயோஜனனானால் அவனைப் பற்றி பகவத் ப்ரபாவம் ஸம்பந்தி ஸம்பந்திகளளவும் செல்லக் கீழும் மேலும் வெள்ளமிடுமென்கிறது.

(பழிப்பிலோம்) –விஷயாந்தர ப்ராவண்யமென்ன, தேவதாந்தர பஜனமென்ன, இவை தூரதோ நிரஸ்தமாகையாலே பதர் கூட்டித் தூற்றவேண்டா.  இனி அனன்யப்ரயோஜனராய் அனன்ய ஸாதகராயிருப்பார்க்கும் பழிப்பாவது, ப்ரயோஜனாந்தரபரரையும், ஸாதனாந்தரபரரையுமிறே, அவற்றை உடையோமல்லோம் என்கிறார்.

(நாங்கள்) – ‘எங்கள் குழு’ என்றபோதைச் செருக்கு போலே பகவத் விஷயீகாரத்தால் வந்த செருக்குத் தோற்றச் சொல்லுகிறாரிறே.

உங்கள் ஸ்வரூபம் நிங்கள் சொன்னவளவிலே விஶ்வஸித்திருக்கும் அத்தனை அளவுடையோமல்லோம், உங்கள் வ்ருத்தி விஶேஷத்தைக் கொண்டு உங்களை அறியவேண்டும் என்ன, அது நீங்கள் அறியும் புடையல்ல, எங்ஙனே?, என்னில், ஒரு கார்யபாடாக உள்ள அமங்களங்கள் போக மங்களாஶாஸனம் பண்ணும்படியாதல், இல்லாத மங்களங்கள் உண்டாகவேண்டுமென்று மங்களாஶாஸனம் பண்ணுதல் செய்யுமளவிறே நீங்கள் அறிவது.  முன்பு வ்ருதமாய்க் கழிந்த செயலுக்கு இன்றிலிருந்து வயிறு பிடிக்கும் திரள்காண் எங்களது.

(இராக்கதர்வாழ் இலங்கை) – துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம், புறம்பே போய் பரஹிம்ஸை பண்ணி, குளவிக்கூடுபோலே திரண்டு கடலையும் மதிளையும் அரணாக்கி, அமணகூத்தடிக்கும் தேசமென்கை. (இலங்கை பாழாளாக) – லங்கையில் ஆள் பாழாம்படியாக, இலங்கைதான் விபீஷணவிதேயமிறே, இனி “ந நமேயம்” என்ற ராவணனையும் அவனுடைய அதிக்ரமத்துக்குத் துணையான ராக்ஷஸரையும் அழியச் செய்து  “ஶ்மஶான சத்ருஶீ பவேத்” என்று பிராட்டி அருளிச்செய்தபடியே அவ்வூரை மூலையடியே போம்படி பண்ணினான்.

(படைபொருதானுக்கு) – இப்படிச் செய்தது ஈஶ்வரத்வ பிடாரான சங்கல்பத்தாலன்றிக்கே எதிரிகளம்பு மார்பில் தைக்கும்படி பொருதவனுக்கு.

(பல்லாண்டு கூறுதுமே) – அப்போது கையும் வில்லுமாய்ச் சீறிச் சிவந்து எதிரிகள் மேலே வ்யாபிக்கும்போதை ஆகர்ஷகமான வடிவழகுக்கு மங்களாஶாஸனம் பண்ணிப்போருவார் சிலர்தான் நாங்கள் என்கிறார்.  “ராகவார்த்தே பராக்ராந்தா: – ந ப்ராணே குருதே தயாம்” என்கிறபடியே அக்காலத்தில் முதலிகளுக்கு அம்புக்கு இராய்க்கப் பண்ணி போருகையாலே அந்த காலத்திலே  மங்களாஶாஸனம் பண்ணுவாரைப் பெற்றதில்லை.

பிராட்டி பிரிந்தபோதே ‘நம் குடியிருப்புப் பெற்றோம்’ என்கிற ப்ரீதியாலே ப்ரம்மாதிகள் அன்யபரரானார்கள்.  அக்காலத்தில் மங்களாஶாஸனம் பண்ணப்பெறாத குறை தீர இன்று இருந்து மங்களாஶாஸனம் பண்ணுவோம் சிலர்காண் நாங்கள் என்கிறார்.

  1. ஏடு நிலத்தில்இடுவதன்முன்னம்வந்தெங்கள்குழாம் புகுந்து

கூடுமனமுடையீர்கள்வரம்பொழிவந்துஒல்லைகூடுமினே

நாடும்நகரமும்நன்கறியநமோநாராயணாயவென்று

பாடுமனமுடைபத்தருள்ளீர்வந்துபல்லாண்டுகூறுமினே

பதவுரை –

ஏடு – பொல்லாங்கான

நிலத்தில் – நிலமாகிய ஶ்மஶானத்தில்

இடுவதன் முன்னம் – (உங்களைச்) சேர்ப்பதற்கு முன்

வந்து – (உங்கள் திரளிலிருந்து) வந்து

எங்கள் குழாம் – எங்கள் கோஷ்டியிலே

புகுந்து – ப்ரவேஶித்து

கூடும் மனமுடையீர்கள் – கூடுவோம் என்னும் நினைவுள்ள வர்களாகில்

வரம்பு ஒழி வந்து – (ஆத்மாவை மட்டும் அனுபவிப்பது என்னும்) வரம்பை விட்டு வந்து

ஒல்லை – விரைவாக

கூடுமினோ – (எங்கள் கோஷ்டியில் ) கூடுங்கள்

நாடும் – நாட்டுப்புறங்களில் உள்ள சாமான்யரும்

நகரமும் – நகரத்திலுள்ள அறிவாளிகளும்

நன்கு அறிய – நன்றாக அறியும்படி

நமோ நாராயணாயவென்று  – அஷ்டாக்ஷர மந்த்ரத்தை அனுஸந்தித்து

பாடும் – (ப்ரீதிக்குப் போக்குவிட்டு) பாடக்கூடிய

மனம் உடை – நினைவுள்ள

பத்தர் உள்ளீர் – பக்தியை உடையவர்களாகில்

வந்து பல்லாண்டு கூறுமினே – வந்து திருப்பல்லாண்டு பாடுங்கோள்

அவதாரிகை –

நான்காம்  பாட்டு. (ஏடித்யாதி) – கீழே அனன்யப்ரயோஜனரை அழைத்தார்.  அவர்கள் மங்களாஶாஸனத்துக்கு ப்ரத்யாஸன்ன ராகையாலே, நீரிலே நீர் சேர்ந்தாற்போல் சேர்ந்திருக்குமிறே.  அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே ‘ஈஶ்வரன் கை பார்த்திருக்குமவர்கள் ‘ என்னுமவ்வளவைக் கொண்டு ஆத்ம ப்ராப்தி காமரையும்,   ஐஶ்வர்ய காமரையும் அழைக்கக் கோலி, அதில் முந்துற ஆத்ம ப்ராப்தி காமரை அழைக்கிறார்.  ஐஶ்வர்யார்த்தியைக் காட்டில் ஆத்ம ப்ராப்தி உத்க்ருஷ்டம் என்னும் நினைவாலே அழைக்கிறார் அல்லர்.  அந்த மோக்ஷத்தை அவர் அநர்த்தம் என்றிருக்கையாலே.  இனி எத்தாலே முற்பட அழைக்கிறது?  என்னில், பகவத் ஸம்பந்தத்துக்கு உபகரணமான ஶரீர மோக்ஷம் அணித்தாகையாலும், அம்மோக்ஷத்தை ப்ராபித்தால் மீளவொண்ணாமையால், ,ஐஶ்வர்ய காமனுக்குக் காலாந்தரத்திலே யாகிலும் பகவத் ஸம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும், இவனுக்கு அந்த யோக்யதையும் அழிகையாலே துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்.  ப்ரயோஜனாந்தரபரர் ‘மங்களாஶாஸனம் பண்ண வாருங்கோள்’ என்றால் வருவார்களோ?  என்னில், பகவத் ப்ராப்தியின் உத்கர்ஷத்தையும், அத்தைப் பற்ற கைங்கர்யத்தினுடைய நிகர்ஷத்தையும் அறிவித்தால் ‘விட்டுப் பற்றவேணும் ‘ என்னும் ஆத்மகுணோபேதரையிறே இவர் அழைக்கிறது.

வ்யாக்யானம் –

(ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்) – ‘ஏடு’ என்று பொல்லாங்கு.  ‘உங்களை பொல்லா நிலத்திலே இடுவதற்கு முன்னம்’ என்று பிள்ளை அமுதனார்.  ‘ஏடு’ என்கிறது சூக்ஷ்ம ஶரீரத்தை, ஸ்தூல ஶரீரத்திற்காட்டில் ப்ரதானமாய், அதினுடைய ப்ரயோஜனரூபமாய் நிற்கையாலே, “பாலில் ஏடு” என்னுமாபோலே சொல்லுகிறது.  (நிலத்தில் இடுவதன் முன்னம்) – ஸ்வகாரணமான மூல ப்ரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னே.  இடு நிர்வஹித்துப் போரும்படி – ‘ஏடு’ என்று உடம்புக்குப் பேராய்,  ஸ்தூல சூக்ஷ்ம ரூபமான ஶரீரம்.  ஸ்வகாரணமான மூல ப்ரக்ருதியிலே லயிப்பதற்கு முன், என்னவுமாம்.  இவ்வாக்யத்தால் அவர்களுடைய அனர்த்தத்தைக் கண்டு அழைக்கிறார் என்னுமிடம் தோற்ற இருக்கிறதிறே.

(வந்து) – ஸ்வதந்த்ரராய் இருப்பாருக்கு தம்மளவில் வருமிடத்து உண்டான தூரத்தைச் சொல்லுகிறது.

(எங்கள் குழாம் புகுந்து) – கேவலரும் ஒரு ஸமஷ்டியாயிறே இருப்பது.  அது ஸ்வதந்த்ரமாகையாலே அன்யோன்யம் சேர்த்தியற்று இருக்கும்.  ஒருத்தருடைய ஸம்ருத்தி ஒருத்தரதாயிறே இத்திரளிருப்பது.  “பரஸ்பர நீச பாவை:” என்னக்கடவதிறே.

இத்திரளில் புகுவார்க்கு எவ்வளவு அதிகாரம் வேணும்?  என்னில்,

(கூடும் மனமுடையீர்கள்) – “புகுருவோம்” என்னும் நினைவே வேண்டுவது.  அவிலக்ஷணங்களான புருஷார்த்தங்களுக்கு புரஶ்சரணங்கள் கனக்கவேண்டியிருக்க, அதில் விலக்ஷணமான இத்திரளிலே புகுருகைக்கு புரஶ்சரணம் வேண்டாதிருப்பதென்? என்னில், அவை அப்ராப்த புருஷார்த்தங்களாகையாலே புரஶ்சரணாதிகள் அபேக்ஷிதங்களாயிருக்கின்றன.  இது ஸ்வரூப ப்ராப்தமாகையாலே வேண்டா.  மாதா பிதாக்களை அனுவர்த்திக்கைக்கு இச்சையேயிறே வேண்டுவது.

(உடையீர்கள்) – இந்த இச்சையால் வந்த ப்ரயோஜனாதிஶயத்தாலே “வைஶ்ரவணன்” என்னுமாபோலே அருளிச் செய்கிறார்.  கூட நினைப்பார்க்குச் செய்யவேண்டுவது, முன்பு நின்ற சிறுமையைக் குலைத்து வரவேணும்.

(வரம்பொழிந்து) – “வரம்பொழிய” என்கிறவிது, “வரம்பொழி” என்று கிடக்கிறது.  ஸர்வேஶ்வரனுக்கு ப்ரகாரபூதனாய் அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை  அனுபவிக்க இட்டுப் பிறந்தவன்.  “ஜராமரணமோக்ஷாய” என்று ஸ்வானுபவத்தளவிலே  ஒரு வரம்பை இட்டுக் கொண்டானிறே.  அத்தை ஒழித்து வாருங்கோள் என்கிறார்.

(ஒல்லைக் கூடுமினோ) – பற்றுகிற புருஷார்த்தத்தினுடைய வைலக்ஷண்யத்தை அனுசந்தித்தால் பதறிக்கொண்டு வந்து விழவேண்டாவோ?  ‘ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்’ என்றது ஶரீரத்தில் அஸ்த்தைர்யத்தைப் பற்ற.  இங்கு “ஒல்லை” என்கிறது பற்றுகிற விஷயத்தினுடைய வைலக்ஷண்யத்தைப் பற்ற.  ‘கூடுமனமுடையீர்கள்’ என்றும் ‘கூடுமினோ’ என்றும் அருளிச் செய்கிறாரிறே யோக்யதையைப் பற்ற.  “அத்திரளில் நின்றும் பிரிகதிர் பட்டார் சிலர் இவர்கள்” என்று தோற்றுமிறே ஸ்வரூபம் வெளிச்செறித்தக்கால்.

(நாடும் நகரமும் நன்கறிய) – இத்திரளிலே புகுருகைக்கு வேண்டுவன அருளிச் செய்தார்.  இதுக்குமேலே மங்களாஶாஸனத்துக்கு வேண்டுவன அருளிச் செய்கிறார்.  ‘நாடு’ என்று அவிஶேஷஜ்ஞரைச் சொல்லுகிறது.  ‘நகரம்’ என்று விஶேஷஜ்ஞரைச் சொல்லுகிறது.  ராஜாவுக்கு ப்ரத்யாஸன்னரிறே நகரத்தார்.  நாட்டார் தூரஸ்த்தரிறே.  ஆகையாலே அருளிச் செய்கிறார்.

(நன்கறிய) – நன்றாக அறிய.  பகவத் ப்ரத்யாஸத்தியாலே அவிஶேஷஜ்ஞர் விடும்படியாகவும், அதுதானே ஹேதுவாக விஶேஷஜ்ஞர் பரிக்ரஹிக்கும்படியாகவும்.  நன்கறிய – இந்நன்மையை   அறியவென்றுமாம்.

(நமோ நாராயணாயவென்று) – இவ்வளவும் போராது.  தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ‘ஸ்வரூபானுரூபமான கைங்கர்யத்தைப் பெறவேணும்’ என்று வைஷ்ணவனாய் வரவேணுமென்று.  ‘அஹமபி ந மம பகவத ஏவாஹமஸ்மி’ என்றிறே ‘நம:’ ஶப்தத்திற்கு அர்த்தமிருப்பது.  ஸ்வாமி பக்கல் பண்ணும் அனுகூல வ்ருத்தியேயிறே புருஷார்த்தமாவது.

(பாடும் மனமுடை பத்தருள்ளீர்) – நினைத்திருக்கும் அவ்வளவு போராது.  ப்ரீதிக்கு போக்குவிட்டு பாடுவோம் என்றும் நெஞ்சுண்டாம்படியான ப்ரேமத்தை உடையீராகில்

(வந்து பல்லாண்டு கூறுமினே) – வந்து, திருப்பல்லாண்டு பாடுங்கோள்.  இத்திரளிலே புகுரவேண்டுமென்றிருப்பீர்! அத்தைச் செய்யுங்கோள்.  அவ்வளவு போராது.  உங்களுடைய வ்ருத்தி விஶேஷம் பெறவேணுமென்றிருப்பீர்! திருப்பல்லாண்டு  பாடுங்கோள் என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.