திருவாய்மொழி
எட்டாம் பத்து
ஆறாம் திருவாய்மொழி
எல்லியும் காலையும், தன்னை நினைந்தெழ *
நல்ல வருள்கள், நமக்கே தந்து அருள் செய்வான் *
அல்லியந் தண்ணந் துழாய் முடி, அப்பனூர் *
செல்வர்கள் வாழும், திருக்கடித்தானமே. 8.6.1 திருக்கடித்தானம்
திருக்கடித்தானமும், என்னுடைச் சிந்தையும் *
ஒடுக்கடுத்து உள்ளே, உறையும் பிரான் கண்டீர் *
செருக்கடுத்து அன்று, திகைத்த அரக்கரை *
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 8.6.2 திருக்கடித்தானம்
ஒருவர் இருவர், ஓர் மூவரென நின்று *
உருவு கரந்து, உள்ளுந் தோறும் தித்திப்பான் *
திருவமர் மார்வன், திருக்கடித்தானத்தை *
மருவி யுறைகின்ற, மாயப் பிரானே. 8.6.3 திருக்கடித்தானம்
மாயப் பிரான், என வல்வினை மாய்ந்தற *
நேசத்தினால், நெஞ்சம் நாடு குடி கொண்டான் *
தேசத்தமரர், திருக்கடித்தானத்தை*
வாசப் பொழில், மன்னு கோயில் கொண்டானே. 8.6.4 திருக்கடித்தானம்
கோயில் கொண்டான் தன், திருக்கடித்தானத்தைக் *
கோயில் கொண்டான், அதனோடும் என்னெஞ்சகம் *
கோயில் கொள், தெய்வ மெல்லாம் தொழ * வைகுந்தம்
கோயில் கொண்ட, குடக் கூத்த அம்மானே. 8.6.5 திருக்கடித்தானம்
கூத்த அம்மான், கொடியேனிடர் முற்றவும் *
மாய்த்த அம்மான், மதுசூத வம்மானுறை *
பூத்த பொழில், தண் திருக்கடித்தானத்தை *
ஏத்த நில்லா, குறிக்கொண்மின் இடரே. 8.6.6 திருக்கடித்தானம்
கொண்மின் இடர்கெட, உள்ளத்துக் கோவிந்தன் *
மண்விண் முழுதும் அளந்த, ஒண்தாமரை *
மண்ணவர் தாம் தொழ, வானவர் தாம் வந்து *
நண்ணு, திருக்கடித்தான நகரே. 8.6.7 திருக்கடித்தானம்
தான நகர்கள், தலைச் சிறந்து எங்கெங்கும் *
வானிந் நிலம் கடல், முற்றும் எம்மாயற்கே *
ஆன விடத்தும், என் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும் * தன தாயப் பதியே. 8.6.8 திருக்கடித்தானம்
தாயப் பதிகள், தலைச் சிறந்து எங்கெங்கும் *
மாயத்தினால், மன்னி வீற்றிருந்தானுறை *
தேசத் தமரர், திருக்கடித்தானத்துள் *
ஆயர்க் கதிபதி, அற்புதன் தானே. 8.6.9 திருக்கடித்தானம்
அற்புதன் நாராயணன், அரிவாமனன்
நிற்பது மேவி, இருப்பது என்னெஞ்சகம் *
நற்புகழ் வேதியர், நான்மறை நின்றதிர் *
கற்பகச் சோலைத், திருக்கடித்தானமே. 8.6.10 திருக்கடித்தானம்
சோலைத் திருக்கடித்தானத்து, உறை திரு
மாலை * மதிள்குருகூர்ச், சடகோபன் சொல் *
பாலோடமுதன்ன, ஆயிரத்து இப்பத்தும் *
மேலை வைகுந்தத்து, இருத்தும் வியந்தே. 8.6.11 திருக்கடித்தானம்