திருவாய்மொழி
நான்காம் பத்து
முதல் திருவாய்மொழி
ஒரு நாயகமாய், ஓட வுலகுட னாண்டவர் *
கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர் *
பெரு நாடு காண, இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் *
திருநாரணன் தாள், காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ. 4.1.1
உய்ம்மின் திறை கொணர்ந்து என்று, உலகாண்டவர் *
இம்மையே தம்மின் சுவை மடவாரைப், பிறர்கொள்ளத் தாம் விட்டு *
வெம்மினொளி வெய்யில் கானகம் போய்க், குமை தின்பர்கள் *
செம்மின் முடித் திருமாலை, விரைந்து அடி சேர்மினோ. 4.1.2
அடி சேர் முடியினராகி, அரசர்கள் தாம் தொழ *
இடி சேர் முரசங்கள் முற்றத் தியம்ப, இருந்தவர் *
பொடி சேர் துகளாய்ப் போவர்கள், ஆதலில் நொக்கெனக் *
கடிசேர் துழாய் முடிக் கண்ணன், கழல்கள் நினைமினோ. 4.1.3
நினைப்பான் புகில், கடலெக்கலின் நுண்மணலின் பலர் *
எனைத் தோருகங்களும், இவ்வுலகாண்டு கழிந்தவர் *
மனைப்பால் மருங்கற, மாய்தலல்லால் மற்றுக் கண்டிலம் *
பனைத் தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ. 4.1.4
பணிமின் திருவருளென்னும், அம்சீதப் பைம்பூம் பள்ளி *
அணிமென் குழலார், இன்பக் கலவி யமுதுண்டார் *
துணி முன்பு நாலப், பல்லேழையர் தாம் இழிப்பச் செல்வர்*
மணி மின்னு மேனி, நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ. 4.1.5
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது, மாமழைமொக்குளின் மாய்ந்துமாய்ந்து*
ஆழ்ந்தா ரென்றல்லால், அன்று முதலின்றறுதியா *
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை, நிற்குறில் *
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல், அடியவ ராமினோ. 4.1.6
ஆமின் சுவையவை, ஆறோடடிசி லுண்டார்ந்த பின் *
தூமென் மொழி மடவா ரிரக்கப், பின்னும் துற்றுவார் *
ஈமினெமக் கொரு துற்றென்று, இடறுவராதலின் *
கோமின், துழாய் முடி ஆதியஞ் சோதி குணங்களே. 4.1.7
குணங்கொள் நிறைபுகழ் மன்னர் கொடைக் கடன் பூண்டிருந்து *
இணங்கி யுலகுடனாக்கிலும், ஆங்கவனை யில்லார் *
மணங் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள், மீள்வில்லை *
பணங்கொள ரவணையான், திருநாமம் படிமினோ. 4.1.8
படி மன்னு பல்கலன் பற்றோடறுத்து, ஐம்புலன் வென்று *
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கவனை யில்லார் *
குடி மன்னு மின் சுவர்க்க மெய்தியும் மீள்வர்கள், மீள்வில்லை *
கொடி மன்னு புள்ளுடை, அண்ணல் கழல்கள் குறுகுமினோ. 4.1.9
குறுக மிக வுணர்வத்தொடு, நோக்கி எல்லாம் விட்ட *
இறுகலிறப் பென்னும் ஞானிக்கும், அப் பயனில்லையேல் *
சிறுக நினைவதோர் பாசமுண்டாம், பின்னும் வீடில்லை *
மறுகலி லீசனைப் பற்றி, விடா விடில் வீடஃதே. 4.1.10
அஃதே உய்யப் புகுமாறென்று, கண்ணன் கழல்கள் மேல் *
கொய்பூம் பொழில்சூழ், குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் *
செய் கோலத் தாயிரம், சீர்த்தொடைப் பாடலிவை பத்தும் *
அஃகாமல் கற்பவர், ஆழ் துயர் போய் உய்யற் பாலரே. 4.1.11