திருவாய்மொழி
நான்காம் பத்து
ஒன்பதாம் திருமொழி
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்தேங்க *
எண்ணாராத் துயர் விளைக்கும், இவை யென்ன உலகியற்கை ? *
கண்ணாளா ! கடல் கடைந்தாய் ! உனகழற்கே வரும் பரிசு *
தண்ணாவா தடியேனைப் பணி கண்டாய், சாமாறே. 4.9.1
சாமாறும் கெடுமாறும், தமருற்றார் தலைத்தலைப் பெய்து *
ஏமாறிக் கிடந்தலற்றும், இவை யென்ன உலகியற்கை ?
ஆமாறொன்றறியேன் நான், அரவணையாய் ! அம்மானே ! *
கூமாறே விரை கண்டாய், அடியேனைக் குறிக்கொண்டே. 4.9.2
கொண்டாட்டும் குலம் புனைவும், தமருற்றார் விழுநிதியும் *
வண்டார் பூங்குழலாளும், மனை யொழிய உயிர் மாய்தல் *
கண்டாற்றேன் உலகியற்கை, கடல்வண்ணா ! * அடியேனைப் *
பண்டே போல் கருதாது, உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே. 4.9.3
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த, பெருஞ் செல்வம் நெருப்பாகக் *
கொள்ளென்று தமம் மூடும், இவை யென்ன உலகியற்கை ? *
வள்ளலே ! மணிவண்ணா !, உன கழற்கே வரும் பரிசு *
வள்ளல் செய்து அடியேனை, உனதருளால் வாங்காயே. 4.9.4
வாங்கு நீர் மலருலகில், நிற்பனவும் திரிவனவும் *
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப், பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் *
ஈங்கு இதன் மேல் வெந்நரகம், இவை யென்ன உலகியற்கை ? *
வாங்கு எனை நீ மணி வண்ணா !, அடியேனை மறுக்கேலே. 4.9.5
மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர் *
அறப் பொருளை யறிந்தோரார் இவை யென்ன உலகியற்கை ? *
வெறித் துளவ முடியானே ! வினையேனை உனக்கடிமை
அறக் கொண்டாய் * இனி என்னாரமுதே ! கூயருளாயே. 4.9.6
ஆயே இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே * மற்றொரு பொருளும் இன்றி, நீ நின்றமையால் *
நோயே மூப்பிறப்பிறப்புப், பிணியே யென்றிவை யொழிய *
கூயே கொள் அடியேனைக், கொடு வுலகம் காட்டேலே. 4.9.7
காட்டி நீ கரந்துமிழும், நிலம் நீர் தீ விசும்பு கால் *
ஈட்டி நீ வைத்தமைத்த, இமையோர் வாழ் தனி முட்டைக் *
கோட்டையினில் கழித்து, என்னை உன் கொழுஞ் சோதி யுயரத்துக் *
கூட்டரிய திருவடிக்கள், எஞ்ஞான்று கூட்டுதியே ? 4.9.8
கூட்டுதிநின் குரைகழல்கள், இமையோரும் தொழாவகைசெய்து *
ஆட்டுதி நீ அரவணையாய்! அடியேனும் அஃதறிவன் *
வேட்கை யெல்லாம் விடுத்து, என்னை உன் திருவடியே சுமந்துழல *
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை, நான் கண்டேனே. 4.9.9
கண்டு கேட் டுற்று மோந் துண் டுழலும், ஐங்கருவி
கண்ட இன்பம் * தெரிவரிய, அளவில்லாச் சிற்றின்பம் *
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே, நிலா நிற்பக் *
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன், அடைந்தேன் உன் திருவடியே. 4.9.10
திருவடியை நாரணனைக், கேசவனைப் பரஞ்சுடரை *
திருவடி சேர்வது கருதிச், செழுங் குருகூர்ச் சடகோபன் *
திருவடி மேலுரைத்த தமிழ், ஆயிரத்துள் இப்பத்தும் *
திருவடியே அடைவிக்கும், திருவடி சேர்ந்தொன்றுமினே. 4.9.11