பிள்ளை லோகம்ஜீயர் 01

ஶ்ரீ:

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

ஶ்ரீமதே வரவரமுநயே நம:

 

யதிராஜ விம்ஶதி

யஸ்துதிம் யதிராஜ ப்ரஸாதிநீம்

வ்யாஜஹார யதிராஜ விம்ஶதிம்

தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம்

நௌமி ஸௌம்ய வரயோகி புங்கவம்

(ப்ரதிபதம்)

ய: – யாதொரு மணவாளமாமுனிகள்

யதிபதி – எம்பெருமானாருடைய

ப்ரஸாதிநீம் – அநுக்ரஹத்தை உண்டுபண்ணவற்றான

யதிராஜவிம்ஶதிம் – (எம்பெருமானார் விஷயமாக இருபது ஶ்லோகங்களால் செய்யப்பட்ட) யதிராஜவிம்ஶதி என்கிற

ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை

வ்யாஜஹார – திருவாய்மலர்ந்தருளினாரோ

ப்ரபந்நஜந – சரமோபாய நிஷ்டரான ஸாத்விக ஜநங்களாகிற

சாதக – சாதக பக்ஷிகளுக்கு

அம்புதம் – மேகம் போன்றவரான

தம் – அப்படிப்பட்ட

ஸௌம்யவரயோகிபுங்கவம் – அழகிய மணவாள மாமுனிகளை

நௌமி – தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்.

(தாத்பர்யம்) யாதொரு மணவாள மாமுனிகள், தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை தாமே உகந்து காட்டிக்கொடுத்த உடையவர் திருவடிகளில் அத்யந்த பரவணராய், அவருடைய குணசேஷ்டிதாதிகளிலீடுபட்டு, அவ்வநுபவத்துக்குப் போக்குவீடாக இருபது ஶ்லோகங்களால் எம்பெருமானாருடைய ப்ரஸாதஜநகமான யதிராஜவிம்ஶதி என்கிற ஸ்தோத்ரத்தை பின்புள்ளாரநுஸந்தித்து உஜ்ஜீவிக்கும்படி அருளிச்செய்தாரோ, பகவத் ப்ராப்தி ஸாதகங்களான கர்மஜ்ஞானாதிகளை ஸ்வரூபாநநுரூபத்வ துஷ்கரத்வாதிகளாலுபேக்ஷித்து  முடிந்த நிலமான ஆசார்யாபிமானமே உத்தாரகமென்றிருக்குமவர்களாய் பூமிஸம்பந்தமுள்ள நதீ தடாகாதி ஜலங்களை உபேக்ஷித்து கேவலவர்ஷதாரையே ப்ரதீக்ஷித்துக்கொண்டிருக்கும் சாதகம்போன்ற  ஸாத்விகஜநங்களுக்கு க்ருபா ரஸத்தை வர்ஷிக்கிற காளமேகம்போன்ற அப்படிப்பட்ட  மணவாளமாமுனிகளை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேனென்று  அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான எறும்பியப்பா என்பவர் யதிராஜ விம்ஶதி ப்ரஸாதித்த ஶீலகுணத்திலீடுபட்டு  அருளிச்செய்கிறார்.

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

பிள்ளை லோகம்ஜீய ரருளிச்செய்த

யதிராஜவிம்ஶதி வ்யாக்யாநம்

ப்ரவேஶம்

“தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள்சொன்னேன்” என்கிறபடியே பூஸுரர்களான ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு போக்யமாக வவதரித்த திருவாய்மொழியி லவகாஹித்து, அதில் ஶப்தரஸம், அர்த்தரஸம், பாவரஸம் இவற்றை யநுபவித்து, ததேகநிஷ்டராய், தத்வ்யதிரிக்த ஶாஸ்த்ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணியிருக்கையாலே  திருவாய்மொழி யபிமதார்த்தத்தையே தமக்கு நிரூபகமாகவுடையராய், ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே அநவரதம் செய்துகொண்டு போரும் திருவாய்மொழிப்பிள்ளை ஶ்ரீபாதத்திலே யாஶ்ரயித்து, த்ராவிடவேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும் அவருபதேஶமுகத்தாலே லபித்து, “மிக்க வேதியர் வேதத்தினுட்பொருளான (கண்ணி – 3) சரமபர்வத்திலே நிஷ்டராய், ஶேஷித்வஶரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றும் பிள்ளை விஷயத்திலே அநுஸந்தி்த்து ததேகநிஷ்டராய் எழுந்தருளியிருக்கிற ஜீயரை;  பிள்ளை தாமே உகந்து உடையவர் திருவடிகளிலே காட்டிக்கொடுக்கையாலே அவர் திருவடிகளிலே மிகவும் ப்ரவணராய், தத்குணசேஷ்டிதங்களைப் பேசி யநுபவிக்கும்படியான தஶை பிறந்து, தத்வைபவத்தைப் பேசுகிற இவர், சரமோபாயநிஷ்டரான சரமாதிகாரிகளுக்கு அநவரதாநுஸந்தேயங்களான சரமார்த்தங்களை இப்ரபந்தமுகேன வெளியிடாநின்றுகொண்டு, ஸ்வாபேக்ஷிதங்களையும் அவர் திருவடிகளிலே யபேக்ஷித்துத் தலைக்கட்டுகிறார்.

அவதாரிகை – இதில் முதல் ஶ்லோகத்தாலே ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமபௌஷ்கல்யத்தையும், ஸ்வாபிமாநாந்தர்பூதருடைய து:க்கங்களைப் போக்கி  ரக்ஷிக்கும்படியையும் பேசாநின்றுகொண்டு, துடங்கின ஸ்தோத்ரம் தடையற நடக்கத் தக்கதாக  உடையவர் திருவடிகளிலே விழுகிறார்.

  1. ஶ்ரீமாதவாங்கரி ஜலஜத்வய நித்யஸேவா

ப்ரேமாவிலாஶய பராங்குஶபாதபக்தம்

காமாதிதோஷஹர மாத்மபதாஶ்ரிதானாம்

ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா

பதவுரை –

ஶ்ரீ – காந்திபொருந்திய

மாதவ – ஶ்ரீய:பதியினுடைய

அங்க்ரி – திருவடிகளாகிற

ஜலஜத்வய – இணைத்தாமரை மலர்களில்

நித்யஸேவா – அநவரதம் பண்ணத்தக்க கைங்கர்யத்தில்

ப்ரேம – ஆசையினாலே

ஆவிலாஶய – கலங்கிய (வ்யாப்தமான) திருவுள்ளத்தையுடையராய்

பராங்குஶ – பகவத்விரோதிகளான குத்ருஷ்டிகளை ஸ்வஸூக்திகளால் நிரஸிக்குமவரான நம்மாழ் வாருடைய

பாத – திருவடிகளில்

பக்தம் – நிரவதிக ப்ரேமயுக்தராய்

ஆத்ம – தம்முடைய

பத – திருவடிகளை

ஆஶ்ரிதானாம் – ஆஶ்ரயித்தவர்களுடைய

காமாதிதோஷ – விஷயப்ராவண்யம் முதலான துர்க்குணங்களை

ஹரம் – (ஸ்வோபதேஶ கடாக்ஷாதிகளால்) ஸவாஸநமாகப் போக்குமவராய்

யதிபதிம் – ஜிதேந்த்ரியர்களுக்குத் தலைவரான

ராமாநுஜம் – எம்பெருமானாரை

மூர்த்த்நா – ஶிரஸ்ஸினால்

ப்ரணமாமி – வணங்குகிறேன்.

வ்யாக்யானம் – (ஶ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வயேத்யாதி) “திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்” (திருப்பல்லாண்டு – 11) என்கிறபடியே மிதுநஶேஷத்வமே ஸ்வரூபமாகையாலே ஸ்வரூபாநுரூபமான

புருஷார்த்த மும் மிதுநவிஷய கைங்கர்யமாயிருக்கும்.

ஆகையிறே, “திருமாற்கரவு – சென்றாற்குடையாம்” (முதல்.திரு – 53) என்று நித்யசூரிகளில் தலைவரான திருவநந்தாழ்வான், அவனும் அவளுமான சேர்த்தியிலே கிஞ்சித்கரிக்குமென்று சொல்லுகிறது.  அந்த கடிந்தரையில் வாஸனையாலேயிறே “தொடர்ந்து குற்றேவல் (திருவாய் – 1.2.1) செய்யப்போந்தவிடத்திலும் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா “ (ரா.அயோ – ) என்றும், “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி”  என்றும் அவர் ப்ரார்த்தித்தது.

அப்படியே, ஆழ்வாரும், “அடிமை செய்வார் திருமாலுக்கு” (திருவாய் – 4.5.11) என்றும் ”கோலத்திரு மகளோடுன்னைக்கூட“ (திருவாய் – 4.1.3) என்றும் மிதுநமே கைங்கர்யப்ரதிஸம்பந்தியாக  வருளிச்செய்தாரிறே. ஆகையாலே ஶ்ரீய:பதியான வெம்பெருமான் திருவடித்தாமரைகளில்  நித்யகைங்கர்யத்தி லாசையாலே கலங்கின திருவுள்ளத்தையுடையரான ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமமே தமக்கு நிரூபகமாக உடையவராயிருக்கு மவரென்கிறது.

மாயா தவ: மாதவ: என்று மாதவ ஶப்தத்தாலே ஶ்ரீய:பதித்வம் ஸித்தமாகையாலே, ஶ்ரீ ஶப்தம் ஔபசாரிகம்.  “சீமாதவன் கோவிந்தன்” (திருவாய் – 1.2.7) என்று ஆழ்வார் அருளிச்செய்த  திவ்யஸூக்தியை யுட்கொண்டாயிற்று  இவரிப்படி யருளிச்செய்தது.

உடையவருக்கு வைபவம் சொல்லுகிறவளவில் ஜ்ஞாநபக்தி வைராக்யங்களையிட்டுச் சொல்லுகையன்றிக்கே ஆழ்வார் திருவடிகளில் ஸம்பந்தத்தையிட்டு ஏற்றம் சொல்லுகைக்கு “மாறனடி பணிந்துய்ந்தவன்” (இரா.நூ – 1) என்று பிள்ளையமுதனார் அருளிச்செய்த திவ்யஸூக்தியாயிற்று.

அங்க்ரி ஶப்தத்தாலே – திவ்யமங்களவிக்ரஹயோகம் சொல்லுகிறது.  ஜலஜ ஶப்தத்தாலே – திருவடிகளில் போக்யதையைச் சொல்லுகிறது.  த்வய ஶப்தத்தாலே –  “உன்னிணையடித்தாமரைகள்”  என்கிறபடியே இரண்டு தாமரைப்பூவை  ஒழுங்குபட நிரைத்துவைத்தாப் போலேயிருக்கிற சேர்த்தியழகைச் சொல்லுகிறது.

ஸேவா ஶப்தத்தாலே – ஶேஷவ்ருத்தியைச் சொல்லுகிறது.  நித்ய ஶப்தத்தாலே – “ஒழிவில் காலமெல்லாம்”  என்கிறபடியே இதுதான் யாவதாத்மபாவி யென்னுமிடம் சொல்லுகிறது;  இதுதான் “உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும்” என்று சொன்ன ஸர்வதேஶத்திலும்  ஸர்வகாலங்களிலும்

ஸர்வாவஸ்த்தைகளிலும் பண்ணக்கடவ ஸர்வவித கைங்கர்யங்களுக்கு முபலக்ஷணம்.

ஏவம்விதமான கைங்கர்யத்தைப் பெறவேணுமென்னும் ப்ரேமபாரவஶ்யத்தாலே யாயிற்று “சிந்தைக் கலங்கித் திருமாலென்றழைப்பன்” (திருவாய் – 9.8.10) என்றிறே இவர் கூப்பிட்டது.  நாடடங்க அன்னபாநாதிகளுக்கு வாய்ப்புலற்றிக் கூப்பிடாநிற்க, கைங்கர்யத்தாலல்லது செல்லாமல் கூப்பட்டலமாக்கிற இவர்படி உபயவிபூதியிலும் வ்யாவ்ருத்தமாயிருக்கையாலே;  இப்படி இருக்கிற ஆழ்வாருடைய ஸ்வபாவத்திலே வித்தராய், இவருடைய திருவடிகளிலே நிரவதிகப்ரேமயுக்தராயாயிற்று

எம்பெருமானாரிருக்கும்படி.

(காமாதீத்யாதி) பகவத்கைங்கர்ய விரோதியான ஶப்தாதிவிஷயப்ராவண்யரூபமான காம்மும், ஆதிஶப்தஸங்க்ருஹீதங்களான பகவதேகரக்ஷ்யத்வ விரோதியான அர்த்தத்ருஷ்ணையும், ததேகஶேஷத்வ விரோதியான அஹங்காரமும் முதலான துர்க்குணங்களை, தம்முடைய திருவடிகளிலாஶ்ரயித்தவர்களுக்கு ஸ்வோபதேஶாநுஷ்டா நங்களாலும் ஸ்வகடாக்ஷவிஶேஷாதிகளாலும் ஸவாஸநமாகப் போக்குமவரென்கை.

(ராமாநுஜம்) “ந சேத்ராமாநுஜேத்யேஷா சதுராசதுராக்ஷரீ காமவஸ்த்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஶ:” (ஆழ்வான் முக்தகம்)  என்று அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷஹேதுவான திருநாமத்தையுடையவ ரென்கை.  (யதிபதிம்) ஜிதேந்த்ரியரான ஸந்யாஸிகளுக்குத் தலைவரானவரென்கை.  இத்தால் கீழ்ச்சொன்ன ஆஶ்ரிததோஷ நிவர்த்தகத்வத்துக்கடியான குணயோகம் சொல்லுகிறது.

“ப்ரணமாமி” என்கிற மாத்ரமேயமைந்திருக்க, “மூர்த்த்நா ப்ரணமாமி”  என்கிறது விஷயவைபவத்தை யநுஸந்தித்து மாநஸமான ப்ரணாமமாத்ரத்தில் நிற்கையன்றிக்கே தம்முடைய ஆதராதிஶயத்தாலே நிர்ப்பரராய்த் திருவடிகளிலே தலையைமடுக்கிறார் என்னுமிடம் தோற்ற.

தாத்பர்யம் – ஸகலபுருஷார்த்தப்ரதமாய், நிரதிஶய போக்யமான ஶ்ரீய:பதியான எம்பெருமான் திருவடித்தாமரைகளில்  ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேணுமென்னும் ப்ரேம பாரவஶ்யத்தாலே கலங்கின திருவுள்ளத்தையுடைய நம்மாழ்வாருடைய திருவடிகளில் நிரவதிக ப்ரேமயுக்தராய், தம்முடைய திருவடிகளிலாஶ்ரயித்த வர்களுடைய பகவத்கைங்கர்ய விரோதிகளான விஷயப்ராவண்யம் முதலான தோஷங்களைத் தம்முடைய கடாக்ஷாதிகளால் போக்குமவராய், யதிகட்குத் தலைவரான எம்பெருமானாரை  ஸாஷ்டாங்கமாக தெண்டன் ஸமர்ப்பிக்கிறேனென்று, மணவாளமாமுனிகள் ப்ரபந்தாரம்பத்தில் நமஸ்காராத்மகமான மங்களாசரணம் பண்ணுகிறார்.

அவதாரிகை- இப்படித் துடங்கின ஸ்தோத்ரம் நிர்விக்நமாகத் தலைக்கட்டுகைக்காக அவர் திருவடிகளை ஆஶ்ரயித்து, அத்தாலே நிறம் பெற்றவராய்க்கொண்டு, எம்பெருமானா ருடைய பகவத் பாகவதவிஷய ப்ரேமபௌஷ்கல்யத்தையும், ஆஶ்ரித ஜநங்களுக்கு சரமப்ராப்யமா யிருக்கிறபடியையும் சொல்லி ஸாதரமாகவேத்துகிறார்.

ஶ்ரீரங்கராஜ சரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்

ஶ்ரீமத்பராங்குஶ பதா3ம்பு3ஜ ப்4ருங்க3ராஜம்

ஶ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்

ஶ்ரீவத்ஸசிந்ஹ ஶரணம் யதிராஜமீடே3

பதவுரை –

ஶ்ரீரங்கராஜ – ஶ்ரீரங்கத்துக்கு நிர்வாஹகரான பெரியபெருமாளுடைய

சரணாம்புஜ – திருவடிகளாகிற தாமரைப்பூக்களில்

ராஜஹம்ஸம் – (மதுபாநமத்தமான) ஹம்ஸஶ்ரேஷ்டம் போன்றவராயும்

ஶ்ரீமத் – கைங்கர்யாபிநிவேஶமாகிற ஸம்பத்தையுடையராய்

பராங்குஶ – ஸ்வஸூக்திகளால் ஸம்ஸாரிகளைத் தலைவணங்கப் பண்ணுமவரான நம்மாழ்வாருடைய

பதாம்புஜ – பரமபோக்யமான திருவடித்தாமரைகளில்

ப்ருங்கராஜம் – மகரந்தத்தை யுள்புக்கநுபவிக்கும் வண்டுபோன்றவராயும்

ஶ்ரீபட்டநாத – மங்களாஶாஸநரூபைஶ்வர்யத்தையுடைய பெரியாழ்வாருடையவும்

பரகால – பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு ம்ருத்யு போன்ற திருமங்கையாழ்வாருடைய

முகாப்ஜ – திருமுகமண்டலமாகிற தாமரையை அலர்த்தும்

மித்ரம் – சூரியன் போன்றவராயும்

ஶ்ரீவத்ஸசிந்ஹ – ஶிஷ்யாசார்ய க்ரமத்துக்கு ஸீமாபூமியான கூரத்தாழ்வானுக்கு

ஶரணம் – ப்ராப்யப்ராபகபூதராயுமிருக்கிற

யதிராஜம் – எம்பெருமானாரை

ஈடே – ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்

வ்யாக்யானம் – (ஶ்ரீரங்கராஜேத்யாதி) பகவத்விஷயத்தில் வந்தால் வெளிறான அம்ஶத்தைக் கழித்து ஸாரமான அம்ஶத்திலேயாயிற்றிருப்பது.  பரவ்யூஹங்கள் நித்ய முக்தர்க்கும் முக்தப்ராயர்க்கும் முகங்கொடுக்கிற விடமாகையாலும், விபவாந்தர்யாமித்வங்கள் புண்யம் பண்ணினார்க்கும் உபாஸகர்க்கும் முகங்கொடுத்து  நிற்கிற நிலையாகையாலும் அவ்வோநிலைகளுக்கு ஓரோகுறை களுண்டு.  “அடியோமுக்கே யெம்பெருமானல்லீரோ” (திருவாய் – 4.9.5) என்று பரத்வாதிகளுக்காளாகாத பிற்பாடற்கும் முகங்கொடுத்து நிற்கும் அரச்சாவதாரத்துக்குச் சொல்லலாவது ஒருகுறையில்லையே.  இப்படி நீர்மைக்கெல்லை நிலமான அர்ச்சாஸ்தலங்களுக்கெல்லாம் வேற்பற்றான கோயில் நிலையிலேயாயிற்று எம்பெருமானார் ஆழங்கால்பட்டிருப்பது.  ஆகையாலே, பெரியபெருமாள் திருவடிகளில் மிக்க போக்யதையை யநுபவித்து ஸரஸஸஞ்சரணம் பண்ணும்படி சொல்லுகிறது.  பரமபதைஶ்வர்த்தையும், சிறாங்கிக்கும்படியான விபவைஶ்வர்தையுடையதாய், “ரதிங்கத:” (ஶ்ரீரங்கமகாத்ம்யம்) என்கிறபடியே ஸர்வஜ்ஞனான ஸர்வேஶ்வரனையும் ஸ்வபோக்யதையாலே ஆழங்கால்படுத்தும்படி நிரதிஶயபோக்யமான திருவரங்கம் திருப்பதியை “அரங்கமாளி” ( தி.மொ – 7.6.4) என்கிறபடியே ஸ்வாதீனமாக ஆண்டுகொண்டு போருகையால் வந்த பெருமையையுடைய “அரங்கத்தம்மான் திருக்கமலபாதத்தில் (அமல – 1)  அலையெறிகிற மதுப்ரவாகத்தாலே சிறகடித்துக்கொண்டு வர்த்திக்கிற ஹம்ஸஶ்ரேஷ்டமாயுள்ளவரை என்கை.  “பொன்னரங்கமென்னில் மயலே பெருகுமிராமாநுசன்” (இரா.நூ – 35) என்னும்படியிறே இத்தேஶத்தில் இவருக்குண்டான ப்ராவண்யம்.

(ஶ்ரீமத்பராங்குஶேத்யாதி) இனி பாகவத விஷயத்திலும் வந்தால், ஸ்வயத்நத்தாலே ஈஶ்வரனைப் பெறப் பார்க்குமுபாஸகரையும், ப்ரபத்தியிலே அந்வயித்திருக்கச் செய்தே தங்கள் ஸ்வீகாரத்தை ஸாதநமாகக் கொள்ளுமவர்களையும், அவனே உபாயமாகக்கொள்ளா நிற்கச் செய்தேயும் பெற்ற பேறு பெறுகிறோமென்று ஆறியிருக்குமவர்களையும் கழித்து “ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் அவனே”  என்றத்யவஸித்து “இப்போதே பெற்றநுபவிக்கவேணுமென்னு மபிநிவேஶத்தாலே கண்ணும் கண்ணீருமாய்த் துடிக்கும்படியான ஆர்த்தியையுடையவராய், பரவ்யூஹாதி ஸ்தலங்களிற்காட்டில் “கண்டியூரரங்கம்” (திருக்குறுந்தாண்டகம்) இத்யாதிப்படியே கோயில் துடக்கமான அர்ச்சாவதார ஸ்தலங்களிலே ஆழங்கால்பட்டிருக்கும் ஆழ்வார்களளவிலே யாயிற்றுத் திருவுள்ள மூன்றியிருப்பது.

ஆகையாலே, கைங்கர்யாபிநிவேஶமாகிற ஸ்வரூபாநுரூபமான ஸம்பத்தை யுடையராய், நிரங்குஶஸ்வதந்த்ரனான ஈஶ்வரனையும் “ஈஶ்வரோஹம்”  என்றிருக்கும் ஸம்ஸாரிகளையும், ஸ்வஸூக்தி விஶேஷங்களாலே வஶீக்ருதராய்த் தலைசீய்க்கும்படி பண்ணுகையாலே பராங்குஶரென்னும் திருநாமத்தை யுடையராயிருக்கிற ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாருடைய பரமபோக்யமான திருவடிகளில் போக்யதாநுஸந்தானமே நித்யஜீவநமாக உடையவரென்கை.

கீழ், “பராங்குஶபாதபக்தம்” என்று அவர் திருவடிகளிலே ப்ரேமத்தையுடையவரானமை மாத்ரம் சொல்லிற்று.  இங்கு அந்த ப்ரேமாநுரூபமாக அவர் திருவடிகளில் போக்யதையை உள்புக்கநுபவிக்கும்படியைச் சொல்லுகிறது.  அல்லாத ஆழ்வார்களிற்காட்டில் நம்மாழ்வாருக்குண்டான வ்யாவ்ருத்தி தோற்ற, அவர்களோடேகூட அநுஸந்திக்கிறமாத்ரம் போராதென்று தனியே முற்பட அநுஸந்தித்தார்.  இப்போது அவர்களோடேகூட அநுஸந்தித்தருளுகிறார்;  பெரியபிராட்டியாரை அல்லாத நாய்ச்சிமாரோடேகூட அநுஸந்தியாநிற்கச் செய்தேயும், முந்துறவே “ஶ்ரீய:பதி:” என்று அவள் வ்யாவ்ருத்திதோற்ற உடையவர் அநுஸந்தித்தருளினாப்போலே அல்லாத ஆழ்வாரகள் இவர்க்கு அவயவபூதரென்னும்படியிறே  இவருடையவேற்றம்.

(ஶ்ரீபட்டநாதேத்யாதி) மங்களாஶாஸநரூபமான ஐஶ்வர்யத்தை யுடையராய் ப்ராஹ்மணோத்தமரான பெரியாழ்வாருடையவும், பாஹ்யகுத்ருஷ்டிகளாகிற ப்ரதிபக்ஷங்களுக்கு ம்ருத்யுபூதரான திருமங்கையாழ்வா ருடையவும் திருமுகமண்டலமாகிற தாமரையை அலர்த்துமாதித்யனென்கை.  “ஆளுமாளார்” (திருவாய் – 8.3.6) என்கிறவன் தனிமைதீர ஆள்சேர்த்தருளுகையாலும், பாஹ்யகுத்ருஷ்டிகளைக் கிழங்கெடுத்துப் பொகடுகையாலும் இவரைக்கண்டபோதே அவர்கள் முகம் மலர்ந்தபடி.

(ஶ்ரீவத்ஸசின்ஹஶரணம்) கீழ், “ஆத்மபதாஶ்ரிதானாம் – காமாதிதோஷஹரம்” என்று ஸாமாந்யேந திருவடிகளை யாஶ்ரயித்தவர்களுக்கு உபாயபூதரென்னுமிடம் சொல்லிற்று.  இங்கு அவர்களெல்லாரு மொருதட்டும் தாமொருதட்டு மாம்படியான ஏற்றத்தையுடையராய், ஶிஷ்யாசார்ய க்ரமத்துக்கு ஸீமாபூமியான கூரத்தாழ்வானுக்கு ப்ராப்யப்ராபகங்களிரண்டும் தாமேயாயிருக்கும்படி சொல்லுகிறது.

(யதிராஜமீடே) இப்படி ஆழ்வார்களுந்த விஷயமான பெரியபெருமாளளவிலும் முகில்வண்ணனடியை யடைந்தருள்சூடி உய்ந்த ஆழ்வார்கள் விஷயத்திலும் தத்தத்விஷயாநுரூபமான ப்ரேமபூர்த்தியையுடையவராய் ஆஶ்ரிதற்கு ப்ராப்ய ப்ராபகபூதருமாயிருக்குமவரென்று ஸ்துதிக்கிறேன் என்கை.

தாத்பர்யம் – பரவ்யூஹாதிகள் போலன்றிக்கே ஸர்வஜநங்களாலும் கண்ணாலே கண்டாஶ்ரயிக்கைக்கு ஸுலபமான கோயிலில் திருவணைமேல் கண்வளரும் பெரியபெருமாள் திருக்கமலபாதத்தில் அலையெறிகிற மதுப்ரவாஹத்தில் சிறகடித்துக்கொண்டு வர்த்திக்கிற ராஜஹம்ஸம் போன்றவராய், ஸ்வஸூக்திகளால் ஈஶ்வரனையும் ஸம்ஸாரிகளையும் வஶீகரித்துத் தலைசீய்க்கும்படி பண்ணுகையாலே பராங்குஶரென்று திருநாமமுடையராய், கைங்கர்யாபிநிவேஶமாகிற ஸ்வரூபாநுரூப ஸம்பத்தைப் பெற்றவரான நம்மாழ்வாருடைய பரமபோக்யமான திருவடிகளிலே போக்யதாநுபவமே  நித்யஜீவநமாக வுடையவராய், மங்களாஶாஸநத்துக்கு ஆள்கோத்தருளு கையாலும், பாஹ்யகுத்ருஷ்டிகளைக் கிழங்கெடுத்துப் பொகடுகையாலும், பெரியாழ்வார் கலியன் இவர்களுடைய முகமலர்த்திக்கு ஹேதுபூதராய், “ஒருமகள் தன்னை உடையேன்”  என்னுபடி ஏற்றமுடைய கூரத்தாழ்வானுக்கு ப்ராப்யப்ராபகபூதரான எம்பெருமானாரை இந்த குணங்களில் கால்தாழ்ந்து ஸ்துதிக்கிறேனென்கிறார்.

  1. வாசாயதீந்த்3ர மநஸா வபுஷா ச யுஷ்மத்3

பாதா3ரவிந்தயுக3ளம் ப4ஜதாம்கு3ரூணாம்

கூராதி3நாத2குருகேஶ முகாத்3யபும்ஸாம்

பாதா3நுசிந்தநபர: ஸததம்ப4வேயம்

பதவுரை –

யதீந்த்ர – யதிகட்கிறைவரான எம்பெருமானாரே!

வாசா – வாக்கினாலும்

மநஸா – மநஸ்ஸினாலும்

வபுஷா ச – ஶரீரத்தினாலும்

யுஷ்மத் – தேவரீருடைய

பாதாரவிந்த – செவ்வித்தாமரைப் பூப்போன்ற திருவடிகளுடைய

யுகளம் – இரண்டை

பஜதாம் – நிரந்தரமாக ஸேவிக்குமவர்களாய்

குரூணாம் – ஆசார்யகுணபூர்த்தியை உடையவர்களாய்

கூராதிநாத – கூரத்தாழ்வான்

குருகேஶ – திருக்குருகைப் பிரான் பிள்ளான்

முக – இவர்கள் முதலான

ஆத்யபும்ஸாம் – பூர்வபுருஷர்களுடைய

ஸததம் – எக்காலத்திலும்

பாதாநுசிந்தன – திருவடிகள் விஷயமான ஶேஷத்வாநுஸந்தானத்தில்

பர: – ஆஸக்தியுடையேனாக

பவேயம் – ஆகவேண்டும்

வ்யாக்யானம் – (வாசாயதீந்த்ரேத்யாதி) “ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா:” என்கிறடியே பகவத்விஷயத்துக்கு உபகாரகரான ஆசார்யர்களை ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்குமாயிற்று இவனுக்கு வாங்மந:காயங்களை அடியிலே உண்டாக்கிற்று.  “விசித்ரா தேஹஸம்பத்தி:” (விஷ்ணுதத்த்வம்) இத்யாதிப்படியே ஸர்வேஶ்வரன் தன்னை ஆஶ்ரயிக்கக்கொடுத்த கரணங்களைக்கொண்டு அந்யபரராய்த் திரிகிற இவ்விபூதியிலே பகவத் ஸமாஶ்ரயணமாத்ரத்திலே துவளுகையன்றிக்கே அத்தையும் ப்ரதமாவதியென்று கழித்து  சரமாவதியான ஆசார்யவிஷயத்திலே கரணத்ரயத்தையும் விநியோகிக்கும்படியான ஏற்றமுடைய இவர்களும் சிலரேயென்று வித்தராய்  அவர் திருவடிகளைப் பற்றுகிறார்.

(வாசா) “வாயவனையல்லது வாழ்த்தாது” (பெரிய திரு – 4.4. 1) என்று ப்ரதமபர்வநிஷ்டர்  பகவத்விஷயமல்லது மற்றொரு விஷயத்தை யேத்தாதாப்போலே இவர்களும் வகுத்த விஷயமொழிய மற்றொன்றை ஏத்தாதபடி;  அவர்களுக்கு வ்யாவ்ருத்தம் தேவதாந்தரம்; இவர்களுக்கு பகவத்விஷயம்.  “நாவகாரியம்” என்றவர்களிறே இவர்கள்.

(மநஸா) “மந:பூர்வோ வாகுத்தர:” என்கிற நியமமில்லை யாயிற்று இவர்களுக்கு;  வாய் திறக்க இவ்விஷயத் திலல்லது வாய்திறவாதாப்போலே நெஞ்சுக்கும் விஷயம் இதுவல்லதாயிற்று இவர்களுக்கு;  திருக்கோட்டியூர் நம்பியை “உமக்கு த்யாநத்துக்கு விஷயமென்” என்று கேட்டபின்பு  அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது.  (வாசா மநஸா வபுஷா ச) என்று கரணங்களுக்குத் தனித்தனி யுண்டான ப்ராவண்யம் சொல்லுகிறது.

(யுஷ்மத் பாதாரவிந்தயுகளம் பஜதாம்) இவர்கள் “வேப்பங்குடி நீர்” இருக்கிறபடி, இவ்வாத்மாவுக்கு வகுத்த ஶேஷியான தேவரீருடைய நிரதிஶயபோக்யமாய் சேர்த்தியழகை யுடைத்தான திருவடிகளை ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் நிரந்தரமாக ஸேவிக்குமவர்களுடைய.  “நித்யம் யதீயசரணௌ ஶரணம் மதீயம்”  (ஸ்தோ.ரத் – 2) என்று ஆசார்யன் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமென்னுமத்தைப் பரமாசார்யரருளிச் செய்தாரிறே;  திருவடிகளை வாக்காலே பஜிக்கையாவது – தத்வைலக்ஷண்யத்தைப் புகழுகை;    மநஸ்ஸாலே பஜிக்கையாவது – திருவடிகளை நெஞ்சினால் நினைக்கை;  ஶரீரத்தாலே பஜிக்கையாவது – ப்ரணமாமிக்கு விஷயமாக்குகை.

(பாதாநுசிந்தனபரஸ்ஸததம் பவேயம்)  அவர்கள் தேவரீருடைய திருவடிகளை அநவரதாநுஸந்தாநம் பண்ணுமாப்போலே இவ்வநுஸந்தானம் காதாசித்க மாகையன்றிக்கே  நித்யமாகவேணுமென்கிறது;  அநுசிந்தனம் – “அநுஸ்யூதம் சிந்தநம்” என்று கொள்ளும்போது ஸததஶப்தம் ஸங்கதமாகாது;  (அநு) ஹிதார்த்தத்திலேயாய்.  “க்ருஷ்ணாநுஸ்மரணம்” (வி.பு – 2.4.37)  என்றவிடத்திற்போலே தத்விஷய ஶேஷத்வாநுஸந்தாநத்தைச் சொல்லுகிறது.  “உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கி யங்காட்படுத்தே” (இரா.நூ – 107)  என்றவர்த்தத்தைச் சொல்லுகிறது.   இவர்களுக்கு இவ்விஷயத்திலுண்டான பாவபந்தத்திலூற்றம்;  அவர் சரமத்திலே ப்ரார்த்திக்கை ப்ரதமத்திலே ப்ரார்த்திக்கும்படியாயிற்று.

தாத்பர்யம் – எம்பெருமானாரே! தேவருடைய பரமபோக்யமான திருவடிகளை, மநஸ்ஸினால் த்யாநித்தும், வாயினால் அதின் வைலக்ஷண்யத்தைப் புகழ்ந்தும், ஶரீரத்தினால் வணங்கியும் இப்படி கரணத்ரயத்தாலே நிரந்தரஸேவை பண்ணாநின்றுள்ள கூரத்தாழ்வான், திருக்குறுகைப் பிரான் பிள்ளான் முதலான பூர்வாசார்யர்கள் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமாகப் பற்றி ததேகபரனாயிருப்பேனாம்படி அநுக்ரஹிக்கவேணுமென்று, எம்பெருமானார் ஸம்பந்திகளிடத்தில் ப்ராவண்யம் தமக்கு நித்யமாய்ச் செல்லும்படி ப்ரார்த்தித்தருளுகிறார்.

அவதாரிகை – எம்பெருமானார் திருவடிகளுக்கு இப்படி அவிநாபூதராய் அவரையல்லதறியாத கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளிலே ஶேஷத்வத்தையும் ப்ரார்த்தித்தருளி, அவர்களளவிலூற்றத்தாலே அவர்களுகந்த விஷயமான எம்பெருமானார் திருவடிகளிலே கரணத்ரயமும் ப்ரவணமாம்படி பண்ணியருளவேணுமென்று அவரை ப்ரார்த்தித்தருளுகிறார்.

  1. நித்யம் யதீந்த்3ர தவதி3வ்யவபுஸ்ஸ்ம்ருதௌ மே

ஸக்தம் மநோ ப4வது வாக்கு3ணகீர்த்தநேஸௌ

க்ருத்யஞ்ச தாஸ்யகரணே து கரத்3வயஸ்ய

வ்ருத்யந்தரேஸ்து விமுக2ம் கரணத்ரயஞ்ச

பதவுரை –

யதீந்த்ர – யதிஸார்வபௌமரான எம்பெருமானாரே!

மே – இதர விஷயங்களில் பழகிப் போந்த என்னுடைய

மந: – மநஸ்ஸானது

தவ – தேவருடைய

திவ்யவபு: – திவ்யமங்களவிக்ரஹத்தினுடைய

ஸ்ம்ருதௌ – நிரந்தர த்யாநத்திலே

நித்யம் – ப்ரதிதினமும்

ஸக்தம் – ஆஸக்தியுடையதாக

பவது – ஆகவேண்டும்

அஸௌ – துர்விஷயங்களை சொல்லிப்போந்த இந்த

வாக் – வாகிந்த்ரியமானது

குணகீர்த்தனே – தேவருடைய கல்யாணகுணங்களை வர்ணித்துக்கொண்டு பேசுகையில்

ஸக்தா பவது – ஆஸக்தியுள்ளதாகவேண்டும்

கரத்வயஸ்ய – அந்யவிஷயங்களுக்கு நிஹீநவ்ருத்தி செய்துபோந்த கைகளிரண்டுக்கும்

க்ருத்யம் –  வ்யாபாரமானது

தாஸ்யகரணே து – தேவர் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் செய்வதில்

பவது – நிரதமாக ஆகவேண்டும்

கரணத்ரயஞ்ச – மநோவாக் காயரூபமான மூன்று கரணங்களும்

வ்ருத்யந்தரே – வ்யாபாராந்தரத்தில் நின்றும்

விமுகம் – பராங்முகமாக

அஸ்து – ஆகவேண்டும்

வ்யாக்யானம் – (நித்யம் யதீந்த்ரேத்யாதி) (மே மந: தவ திவ்ய வபுஸ்ஸ்ம்ருதௌ நித்யம் ஸக்தம் பவது)  அநாதிகாலம் இதரவிஷயங்களில் பழகிப்போந்த வென்னுடைய மநஸ்ஸானது தேவருடைய திவ்யமங்கள விக்ரஹத்திலே ஸர்வகாலமும் மண்டி விஷயாந்தரஸ்மரணத்துக் காளாகாதபடி நன்றாகச் செய்வதாகவும்;  “உன்றன் மெய்யிற்பிறங்கிய சீரன்றி வேண்டிலன்” (இராமா.நூ – 104) என்கிறபடியே மநஸ்ஸுக்கு ஶுபாஶ்ரயமான அவலம்பநம் தேவருடைய திவ்யமங்களவிக்ரஹமேயாகவேணுமென்கை.

(வாக் குணகீர்த்தநேஸௌ) இதுக்கு முன்பு துர்விஷயங்களை ஜல்பித்துப் போந்த வாக்கு தேவருடைய கல்யாணகுணங்களை வர்ணித்துக்கொண்டு பேசுகையிலே ஸக்தமாகவேணுமென்கை.

(க்ருத்யம் சேத்யாதி) அந்ய விஷயங்களுக்கு நிஹீநவ்ருத்தி செய்து போந்த கைகளிரண்டுக்கும் க்ருத்யம் தேவருடைய திருவடிகளில் நித்யகைங்கர்யமாவதாக.

(வ்ருத்யந்தரேஸ்து விமுகமித்யாதி) தேவர் விஷயத்திலே கரணத்ரயமும் அபிமுகமானாலும் விஷயாந்தரங்களில் வைமுக்க்யம் இல்லாதபோது இது நிலைநில்லாதென்று பார்த்து, புறப்பூச்சான வைலக்ஷண்யத்தையுடைய ஹேயவிஷயங்களை நினைக்கை சொல்லுகை தொழுகையாகிற வ்யாபாரத்தில் நின்றும் கரணத்ரயமும் முகம் மாறுவதாக.  இத்தால் “நையும் மனமுன் குணங்களையுன்னி” (இராமா.நூ – 102) இத்யாதிப்படியே கரணத்ரயத்துக்கும் எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யத்தை இதர நிவ்ருத்தி பூர்வகமாக ப்ரார்த்தித்தருளினாராயிற்று.

தாத்பர்யம் – எம்பெருமானாரே! அநாதிகாலம் இதரவிஷயங்களில் பழகிப்போந்த என் மநஸ்ஸானது தேவருடைய திவ்யமங்களவிக்ரஹத்தை ஶுபாஶ்ரயமாக த்யானம் செய்யும்படியாகவும், அப்ராப்த விஷயங்களைப் புகழ்ந்துபோந்த என்னுடைய வாக்கானது தேவருடைய கல்யாணகுணங்களைப் புகழ்கையில் நிரதமாகும்படியாகவும், அப்ராப்த விஷயங்களுக்கு நிஹீநவ்ருத்தி செய்துபோந்தவென் கைகளிரண்டுக்கும் தேவர் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் செய்வதே யாத்ரையாகும்படியாகவும், இப்படி மநோவாக்காயங்கள் மூன்றும், அப்ராப்த விஷயங்களை நினைக்கை முதலான வ்யாபாரங்களைத் தவிர்ந்து தேவர் திருவடிகளிலேயே ப்ரவணமாகும்படி யருளவேணுமென்று ப்ரார்த்தித்தருளுகிறார்.

அவதாரிகை – “எம்பெருமானே ஶேஷியும் உபாயமும் உபேயமுமென்று ஶாஸ்த்ரங்கள் சொல்லாநிற்க, நீர் நம்மையும் நம்முடையாரையும் ஶேஷிகளும் உபாயபூதருமாகச் சொல்லாநின்றீர்;  அது  என்கொண்டு நீர் சொல்லுகிறது” என்று எம்பெருமானாருக்கு நினைவாக, ஸகலஶாஸ்த்ர ஸாரமான திருமந்த்ரம் இதுக்கு மூலப்ரமாணம்;  அதில் ப்ரதிபாதிக்கிறவர்த்தத்துக்கு அநுரூபமான நிஷ்டையையும் தத்பலமான தேவர் திருவடிகளில் அநுபவத்தையும் தந்தருளவேணுமென்றபேக்ஷிக்கிறார்.

5.அஷ்டாக்ஷராக்2ய மநுராஜ பத3த்ரயார்த்த2

நிஷ்டா2ம் மமாத்ரவிதராத்3ய யதீந்த்3ரநாத2

ஶிஷ்டா2க்3ரகண்யஜந ஸேவ்யப4வத்பதா3ப்3ஜே

ஹ்ருஷ்டா2ஸ்து நித்ய மநுபூ4ய மமாஸ்யபுத்தி4:

பதவுரை –

யதீந்த்ர – யதிஶ்ரேஷ்டரான எம்பெருமானாரே!

அஷ்டாக்ஷராக்ய – திருவஷ்டாக்ஷரமென்னும் பேருடைய

மநுராஜ – மந்த்ர ஶ்ரேஷ்டமான திருமந்திரத்தினுடைய

பதத்ரய – மூன்று பதங்களாலும் ப்ரதிபாதிக்கப்படுமதான

அர்த்த – அநந்யார்ஹஶேஷத்வாதிகளான அர்த்தங்களில்

நிஷ்டாம் – சரமபர்வபர்யந்தமான நிஷ்டையை

மம – இதிலபேஷையுடைய அடியேனுக்கு

அத்ர – ருசியுடையாரைக் கிடையாத இந்த விபூதியிலேயே

அத்ய – இப்போதே

விதர – தந்தருளவேணும்

நாத – ஸ்வாமீ

ஶிஷ்ட – ஜ்ஞாநாநுஷ்டான பூர்ணரான ப்ராப்யருசியுடையவர்களுக்கு

அக்ரகண்யஜந – ப்ரதானரான ஆழ்வான் போல்வார்களா யிருந்துள்ளவர்களாலே

ஸேவ்ய – நிரந்தரமநுபவிக்கப்படா நிற்பதான

பவத் – தேவரீருடைய

பதாப்ஜ – பரமபோக்யமான திருவடித்தாமரைகளை

அஸ்ய மம – இந்த ப்ராப்யம் பெறாவிடில் தரியாதபடியான இந்தவென்னுடைய

புத்தி: – புத்தியானது

அநுபூய – யதாமநோரதமநுபவித்து

நித்யம் – ப்ரதிதிநம்

ஹ்ருஷ்டா – ஸந்துஷ்டமாக

அஸ்து – ஆகவேணும்

வ்யாக்யானம் – (அஷ்டாக்ஷரேத்யாதி) “ஓமித்யேகாக்ஷரம் நம இதி த்வேக்ஷரே நாராயணாயேதி  பஞ்சாக்ஷராணி இத்யஷ்டாக்ஷரம் சந்தஸா காயத்ரீசேதி”  என்று திருமந்த்ரம் எட்டுத்திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்குமென்னுமிடம் ஶ்ருதிஸித்தமிறே.  மநு ஶப்தம் – மந்த்ரவாசி.  மநுராஜமென்றது – மந்த்ரராஜமென்றபடி.  திருமந்த்ரத்துக்கு ராஜாவாகையாவது – வேதங்களும் ரிஷிகளும் வைதிகபுருஷர்களும் ஏககண்டமாகப் பரிக்ரஹிக்கையாலும், அர்த்தபூர்த்தியாலும் தானே ஸ்வதந்த்ரமாய்க்கொண்டு  ஸகலபலங்களையும் கொடுக்கவற்றாகைலும், உபாயாந்தரஸஹகாரியாகையாலும், தன்னையொழிந்த வ்யாபக அவ்யாபக ஸகல பகவந்மந்த்ரங்களிலும் உத்க்ருஷ்டமாயிருக்கை.

பதத்ரயங்களில்  அர்த்தமாவது – ஆத்மாவினுடைய அநந்யார்ஹஶேஷத்வம், அநந்யஶரணத்வம், அநந்யபோக்யத்வம் இவைகளும், தத்ப்ரதியோகியான ஸர்வேஶ்வரனுடைய ஶேஷித்வஶரண்யத்வ ப்ராப்யத்வங்களும்; அநந்யார்ஹஶேஷத்வாத் யாகாரத்ரயமும் தத்விஷயத்திற்போலே ததீயர்விஷயத்திலும் உண்டாயிறே இருப்பது.  ஆகையிறே திருமந்த்ரம் கற்ற திருமங்கையாழ்வாரும் “நின் திருவெட்டெழுத்தும் கற்று நானுற்றது முன்னடியார்க்கடிமை” என்றருளிச்செய்தது.

இப்படி ஸாமாந்யேன ததீயர்க்கெல்லாம் தத்ஸம்பந்த மூலமாக ஶேஷித்வாதிகளுண்டாகையாலே ததீயவிஷயமாய் நிர்ஹேதுகமாகவடியிறே தன்னை அங்கீகரித்தருளி இவ்வவஸ்தாபந்நனாக்கின ஸ்வாசார்யவிஷயத்திலும் ஶேஷித்வாதிகளநுஸந்திக்கக் குறையில்லை;  ஆகையாலே பதத்ரயத்திலும் சொல்லுகிற அர்த்தங்களில் சரமபர்வபர்யந்தமான நிஷ்டையை இதிலபேக்ஷையை யுடைய அடியேனுக்கு இவ்வர்த்தத்தில் ருசியுடையாரைக்கிடையாத இவ்விபூதியிலே இப்போதே தந்தருளவேணும்.  பெருவிடாய்ப்பட்டுத் “தண்ணீர் தண்ணீர்” என்று துடிக்கிறவனுக்கு இவ்விடத்திலே இப்போதே விடாய் தீர்க்கவேணுமிறே.

நீர் நம்மை யபேக்ஷித்தால் இப்படி உம்முடைய அபேக்ஷிதம் செய்யவேண்டும் ஹேதுவென் என்ன, சொல்லுகிறது, (நாத) என்று.  இத்தலையில் சொல்லலாவதொரு ஹேதுவில்லை.  இவ்வாத்மாவுக்கு வகுத்த ஶேஷியான தேவரீர் “இது நம்முடையதன்றோ” என்று இஸ்ஸம்பந்தமே ஹேதுவாகச் செய்தருளவேணுமென்கை.

(ஶிஷ்டேத்யாதி) ஶிஷ்டராகிறார் – ஜ்ஞாநாநுஷ்டானபூர்ணராய் கண்ணழிவற்ற ப்ராப்யருசியையுடையவர்கள், அவர்களுக்கு அக்ரகண்யராகிறார் – கூரத்தாழ்வான் போல்வார்;  இப்படி யிருந்துள்ளவர்களாலே நிரந்தரமநுபவிக்கப்படா நிற்பதா யிருக்கிற வகுத்த ஶேஷியான தேவருடைய பரமபோக்யமான திருவடிகளை இந்த ப்ராப்யம் பெறாவிடில் தரியாதபடியான இந்த என்னுடைய புத்தியானது, யதாமநோரதம் அநுபவித்துக் களிப்பதாக;  “உனதடிப்போதில் ஒண்சீராம் தெளிதேனுண் டமர்ந்திடவேண்டி நின்பாலதுவே – போந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு” (இரா.நூ – 100) என்றவர்த்தத்தைப் ப்ரார்த்தித்தபடி.

(தாத்பர்யம்) எதிகட்கிறைவனான எம்பெருமானாரே!  அடியேனுக்கு திருமந்திரத்தில் பதத்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படாநின்றுள்ள அநந்யார்ஹஶேஷத்வ அநந்யஶரணத்வ அநந்யபோக்யத்வாதிகளான அர்த்தங்களில் ததீயபர்யந்தமான சரமபர்வநிஷ்டையை இந்த விபூதியிலேயே அபேக்ஷித்தபோதே லபிக்கும்படிக்கும், ஜ்ஞாநாநுஷ்டாநபூர்ணரான ஆழ்வான்போல்வாரான மஹான்களாலே நிரந்தரமநுபவிக்கப்படாநின்றுள்ள தேவரீர் திருவடித்தாமரைகளை நிரந்தரமநுபவித்து ஹ்ருஷ்டனாம் படிக்கும் தேவரீர் அநுக்ரஹிக்கவேணுமென்று ப்ரார்த்தித்தருளுகிறார்.

அவதாரிகை – ப்ராப்யருசியையுடையராய் புறம்புள்ள போக்யங்களில் நசையற்ற கூரத்தாழ்வான் போல்வாரன்றோ நம்மையநுபவிக்குமவர்களாகச் சொன்னீர்;  அவர்களைப் போலே உமக்கு அவையிரண்டுமுண்டோ? என்ன, ஏகதேஶமும் ப்ராப்யருசியற்றிருக்கிறபடியையும் இதரவிஷயருசி கொழுந்துவிட்டு வளருகிறபடியையும், விண்ணப்பம் செய்து இவ்விரண்டுக்குமடியான பாபத்தைப் போக்கியருளவேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

  1. அல்பாபிமேந ப4வதீ3ய பதா3ப்ஜ ப4க்தி:

  ஶப்தா3தி3போ4க3 ருசிரந்வஹமேத4தே ஹா

  மத்பாபமேவஹி நிதா3நமமுஷ்ய நாந்யத்

  தத்3வாரயார்ய யதிராஜ த3யைகஸிந்தோ4

பதவுரை –

ஆர்ய – ரக்ஷணோபயோகியான ஜ்ஞாநாதிகுண பரிபூர்ணராய்

யதிராஜ – ஜிதேந்த்ரியாக்ரேஸரரான எம்பெருமானாரே!

மே – இதரவிஷயசபலனான எனக்கு

பவதீய – தேவரீருடைய

பதாப்ஜ – திருவடித்தாமரைகளில்

பக்தி: – நிரந்தர ஸ்நேஹபூர்வக த்யாநமானது

அல்பாபி – அல்பமும்

ந – இல்லை.

ஶப்தாதிபோக – தேவரீர் திருவடிகளிலநுபவத்துக்கு விரோதியான ஶப்தாதி விஷயாநுபவத்தில்

ருசி – ஆசையானது

அந்வஹம் – நாடோறும்

ஏததே – அபிவ்ருத்தமாய்ச் செல்லாநின்றது

ஹா – ஐயோ

அமுஷ்ய – இந்த ப்ராப்தவிஷய ப்ராவண்யமில்லாமைக்கும், அப்ராப்த விஷயப்ராவண்யத்துக்கும்

நிதாநம் – ஹேதுவானது

மத்பாபமேவ ஹி – பாபியான என்னுடைய துஷ்கர்மமேதான்

நாந்யத் – வேறொரு ஈஶ்வரஸ்வாதந்த்ர்யம் முதலானது ஹேதுவன்று

தயைகஸிந்தோ – கருணைக்கடலான  எம்பெருமானாரே!

தத் – அந்த துஷ்கர்மபலத்தை

வாரய – (அடியேனளவில் கிட்டாதபடி) தகைந்தருளவேணும்

வ்யாக்யானம் – (அல்பாபி மேநேத்யாதி) பவதீயபதாப்ஜ பக்தி: – அல்பாபி மே ந) தேவர் திருவடித்தாமரைகளில் பூர்ணபக்தி இல்லாத மாத்ரமன்றிக்கே அத்யல்ப பக்தியும் இதரவிஷயசபலனான எனக்கில்லை.  ஆநுகூல்யலேஶ மில்லையானாலும் ப்ராதிகூல்யநிவ்ருத்திதானுண்டாகி லுமாமிறே;  அதுவுமில்லை யெனக்கென்கிறார்.  (ஶப்தாதீத்யாதி)  தேவரீர் திருவடிகளிலநுபவத்துக்கு விரோதியான ஶப்தாதிவிஷயாநுபவ ஶ்ரத்தை நாடோறும் வர்த்திஷ்ணுவாய்ச் செல்லாநின்றது.  ஐயோ! இத்தால் த்ருதீயபத நிஷ்டாவிரோதி சொல்லிற்று.

இவ்விரண்டுக்குமடியேதென்ன – (அமுஷ்ய நிதாநம் மத்பாபமேவ ஹி)  என்கிறார்.  ப்ராப்தவிஷய ப்ராவண்யாபாவத்துக்கும், அப்ராப்தவிஷய ப்ராவண்யத் துக்கும் காரணம் பாபியானவென்னுடைய துஷ்கர்மமிறே.  அவதாரணத்தாலே ஹேத்வந்தரத்தைக் கழிக்கிறது.  ஹி ஶப்தம் இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்லுகிறது.  (நாந்யத்) ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யம் இதுக்கு ஹேதுவன்று;  அவன் உஜ்ஜீவநத்துக்கு க்ருஷிபண்ணுகிறவனாகையாலே;  உம்முடைய கர்ம தோஷத்தாலே வந்ததாகில் நம்மால் செய்யலாவதுண்டோ? என்ன, ஏன்?  செய்யலாவ தில்லையோ?  அத்தை அடியேனளவில் கிட்டாதபடி தகைந்தருளவேணும்;  நாம் அதுக்கு ஶக்தரோ? என்ன,

(ஆர்ய) செய்யும் விரகறிகைக்குத் தக்கவறிவில்லையோ?  (யதிராஜ) அறிந்தபடி செய்யவல்ல ஶக்தியில்லையோ?  ஜிதேந்த்ரியரான ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே அபிமாநாந்தர்பூதருடைய பாபத்தைப் போக்குகைக்கு ஶக்தியில் குறையில்லை.  (தயைகஸிந்தோ) அந்த ஜ்ஞாநஶக்திகளை ரக்ஷணோபயோகியாக நடத்தும் க்ருபைக்கும் ஸங்கோசமுண்டோ?  “அஸ்ய தயைகஸிந்தோ:” (ஆழ்வான் முக்தகம்) என்று விஶேஷஜ்ஞர் ஆழங்கால் படும்படியன்றோ க்ருபா ப்ராசுர்யம்.  ஏகஶப்தத்தாலே குணாந்தரங்கள் தடவிப்பிடிக்கவேண்டும்படி சொல்லுகிறது.

தாத்பர்யம் – எம்பெருமானாரே! இதரவிஷயசபலனான எனக்கு தேவரீர் திருவடித்தாமரைகளில் அத்யல்பமான பக்தியுமில்லை.  இப்படி அநுகூலாம்ஶமில்லையாயினும், ப்ரதிகூலமான விஷயாநுபவத்திலாசை நாடோறும் மேன்மேலென அபிவ்ருத்தமாகாநின்றது.  ஐயோ! இப்படி ப்ராப்த விஷயத்தில் ப்ராவண்யமில்லாமைக்கும், அப்ராப்த விஷயத்தில் ப்ராவண்யத்துக்கும்  காரணம் பாபியான வென்னுடைய துஷ்கர்மமிறே;  வேறொன்றும் ஹேதுவன்று;  ஆகையால் ரக்ஷணோபயோகியான ஜ்ஞாநஶக்திக்குபாதி குணங்களை உடையரான தேவரீர் இந்த பாபகர்மத்தை அடியேனளவில் கிட்டாதபடி தகைந்தருளவேணும்.

அவதாரிகை – இப்படி எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேமாபாவத்துக்கும் இதரவிஷய ப்ராவண்யத்துக்கும் ஹேதுவான பாபத்தைப் போக்கியருளவேணுமென்று ப்ரார்த்தித்தவர், மீளவும் பதத்ரயார்த்த  நிஷ்டாவிரோதிகளாய் அநாதிகாலமே பிடித்துப் பண்ணிப்போந்த அக்ருத்யகரண பகவதபசாராதிகளும், இப்போது பண்ணிப்போருகிற குருமந்த்ர தேவதாபரிபவாதிகளும் துடக்கமானவற்றை யநுஸந்தித்து, “இப்படி தோஷபூயிஷ்டனான நான் தேவர் திருமுன்பே  கூசாதே நின்று இத்தை விண்ணப்பம் செய்தேன்” என்று பீதராய் தம்முடைய மௌர்க்க்யத்தை அநுஸந்தித்தருளுகிறார் மேல் நாலு ஶ்லோகத்தாலே.

  1. வ்ருத்த்யா பஶுர்நரவபுஸ்த்வஹமீத்3ருஶோபி

  ஶ்ருத்யாதி3ஸித்த4 நிகி2லாத்மகு3ணாஶ்ரயோயம்

  இத்யாத3ரேண க்ருதினோபிமித:ப்ரவக்து

  மத்3யாபி வஞ்சநபரோத்ர யதீந்த்ர வர்த்தே

பதவுரை –

யதீந்த்ர – யதிஶ்ரேஷ்டரான  எம்பெருமானாரே!

அஹம் – நான்

வ்ருத்த்யா – என்னுடைய வ்யாபாரத்தாலே

பஶு: – ஜந்யஜநகவிபாகமற வர்த்திக்கும் பஶுக்களோ டொப்பாவன்

நரவபு: – (எடுத்தவுடம்பைப் பார்த்தால்) ஶாஸ்த்ராப்யாஸயோக்யமான மநுஷ்யஜந்மாவா யிருக்கிறேன்

ஈத்ருஶோபி – கீழ்ச்சொன்னபடி தோஷபூயிஷ்டனா யிருந்தபோதிலும்

அயம் – “இவன் ஶ்ருத்யாதிஸித்த-ஶாஸ்த்ராதிகளில் ப்ரதிபாதிக்கப்பட்ட

நிகில – ஸமஸ்தமான ஆத்மகுண – அமாநித்வாதிகளான ஆத்மகுணங்களுக்கு

ஆஶ்ரய: – இருப்பிடம்

இதி – என்று

க்ருதினோபி – ஜ்ஞாநாதிகுணபூர்ணரெல்லாரும்

மித: – ஒருவருக்கொருவர்

ஆதரேண – ப்ரீதிக்குப் போக்குவிட்டு

ப்ரவக்தும் – புகழும்படியாக

அத்யாபி – இப்போதும்

வஞ்சநபர: – பிறரை வஞ்சி்கும் வ்யாபாரத்தையுடையனாய்

அத்ர – இந்த லோகத்தில்

வர்த்தே – வஸியாநின்றேன்

வ்யாக்யானம் – (வ்ருத்யா பஶுரித்யாதி) ஶாஸ்த்ராப்யாஸாதிகளுக்கு யோக்யமான மநுஷ்ய ஜந்மத்திலே பிறக்கையாலும் தத்விருத்தமான அக்ருத்யாதிகளிலே தடையற  நடக்கையாலும் நரஸாம்யமும் பஶுஸாம்யமும் தமக்குண்டாக வநுஸந்திக்கிறார்.

(வ்ருத்யாபஶு:)  என்னுடைய வ்ருத்தியைப் பார்த்தால் ஜந்யஜநகவிபாகமற வர்த்திக்கும் பஶுவ்ருத்தியோடொக்கும்.  (நரவபு:) எடுத்த வுடம்பைப் பார்த்தால் ஶாஸ்த்ரவஶ்யமான மநுஷ்யஶரீரமாயிருக்கும்;  து ஶப்தத்தாலே மநுஷ்யஶரீரம் பரிக்ரஹம்பண்ணி வர்த்திக்கிற வல்லாதாரில் தமக்குண்டான வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார்.

(ஈத்ருஶோபி) கிழ்ச்சொன்னபடியை உடையனாயிருக்கச் செய்தேயும் தம்முடைய தோஷப்பரப்புக்குப் பாஶுரமிடப்போகாமையாலே இப்படிப்பட்டவனென்கிறார்.  நம்முடைய தோஷம் இதுவானபின்பு நாம் இவ்விஷயத்தைக் கிட்டுகை அயுக்தமென்று கைவாங்கவேண்டியிருக்க, அது செய்யாதவளவின்றிக்கே “இவனைப்போலே ஆத்மகுணபூர்ணனில்லை; ஆகையால் இவ்விஷயத்தைக் கிட்டிப் பரிமாறுகைக்கு இவனத்தனை அதிகாரிகளில்லை” என்று அறிவில் தலைநின்றவர்களெல்லாம் தங்களிலேககண்டராய் ப்ரீதிக்குப் போக்குவிட்டுப் புகழும்படியன்றோ இப்போதும் வஞ்சநபரனாய்க்கொண்டு அடியேன் வர்த்திக்கிறது.

(யதீந்த்ர) ரோகநிவர்த்தகனான பிஷக்கைப் பற்றியிருக்கச் செய்தேயும் நோயின்கையில் துகையுண்ணும் வ்யாதிக்ரஸ்தனைப்போலே ஆஶ்ரித தோஷங்களைக் கழிக்கைக்கு ஶக்தரான தேவரைப்பற்றியிருக்கிறவடியேன்  இத்தோஷஸாகரத்திலே கிடந்தழுந்துகை ப்ராப்தமோ பிரானேயென்கிறார்.

தாத்பர்யம் – யதிபதியான எம்பெருமானாரே! நான் ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸத்கர்மங்களை அநுஷ்டிக்கைக்கு யோக்யமான மநுஷ்யஶரீரத்தைப்  பரிக்ரஹித்திருந்தபோதிலும், அந்த ஸத்கர்மங்களை யநுஷ்டியாமல், அக்ருத்யாதிகளிலே தடையற நடக்கையாலே ஜந்யஜநகவிபாகமற வர்த்திக்கும் பஶுக்களோடு ஸத்ருஶனாயிராநின்றேன்;  இப்படி தோஷபூயிஷ்டனாயிருந்தபோதிலும், மஹாத்மாக்க ளெல்லாரும் “இவனைப்போலே ஆத்மகுண பூர்ணனில்லை, பகவத்விஷயத்தைக் கிட்டிப் பரிமாறுகைக்கு இவனத்தனை அதிகாரிகளில்லை” என்று என்னுடைய வஞ்சகவ்யாபாரத்தைக் கண்டு, பரஸ்பரம் புகழும்படியன்றோ அடியேன் மிகவும் வஞ்சகனாயிராநின்றேன்;  ஆகையால் ஆஶ்ரிததோஷ நிவர்த்தகரான தேவரீர் இந்த தோஷத்தைப் போக்கியருளவேணுமென்கிறார்.

  1. து:3க்கா2வஹோஹம் அநிஶம் தவ து3ஷ்டசேஷ்ட:

    ஶப்தா3தி3போ43நிரதஶ் ஶரணாக3தாக்2ய:

    த்வத்பாத34க்த இவ ஶிஷ்டஜநௌக4மத்4யே

    மித்2யாசராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க:

பதவுரை –

யதிராஜ – யதிபதியான எம்பெருமானாரே!

அஹம் – நான்

துஷ்ட – கெடுதியான

சேஷ்ட: – வ்யாபாரத்தை உடையவனாய்

ஶப்தாதிபோக: – ஶப்தாதி விஷயாநுபவத்தில்

நிரத: – மிகவும் ஆஸக்தியுள்ளவனாகவும்

ஶரணாகத – தேவரீர் திருவடிகளில் ஶரணமடைந்தவனென்று

ஆக்ய: – பேர் மாத்ரம் உடையவனாகவும்

(இப்படி த்யஜிக்கவும் அங்கீகரிக்கவும் போகாமல் தேவரீர் திருவுள்ளத்தில் புண்படும்படி யிருக்கையாலே)

அநிஶம் – ஸர்வகாலமும்

தவ – தேவரீருக்கு

து:க்காவஹ: – து:க்கத்தை உண்டுபண்ணுகிறவனாக ஆகாநின்றேன்

(இப்படி தேவர் திருவடிகளை ஸ்மரிக்கவும் யோக்யதை யில்லாமலிருக்க)

ஶிஷ்டஜநௌகமத்யே – அக்ருத்ரிம பக்தியுடையரான விலக்ஷணர் திரளுக்குள்ளே

த்வத் – தேவரீருடைய

பாத – திருவடிகளில்

பக்த இவ – மிகவும் ப்ரேமமுடையவன்போலே

மித்யா – க்ருத்ரிமமாக

சராமி – ஸஞ்சரியாநின்றேன்

தத: – ஆகையாலே

மூர்க்க: – ஜ்ஞாநஹீனனாக

அஸ்மி – ஆகிறேன்

வ்யாக்யானம் – (து:க்காவஹோஹமித்யாதி) (அஹம் தவ அநிஶம் து:க்காவஹோ பவாமி) தேவர் திருவடிகளில் ஶேஷத்வமே நிரூபகமாம்படியான ஸ்வரூபத்தையுடைய நான் இவ்வாத்மாவுக்கு வகுத்த ஶேஷியான தேவரீர்க்கு இடைவிடாமல் ஹர்ஷாவஹனாய்ப் போரவேண்டியிருக்க, அது செய்யாதவளவன்றிக்கே  தத்விருத்தமாக து:க்காவஹனாய்க் கொண்டுபோராநின்றேன்.  இது என்னுடைய ப்ரதம பதார்த்த நிஷ்டையிருந்தபடி.  (துஷ்டசேஷ்ட:) தயாகுணபூர்ணரும் ஏறிட்டுப்பார்க்க அருவருக்கும்படி துர்வ்ருத்தியேயாயிற்றுச் செய்துபோருவது.

(ஶப்தாதிபோக நிரத:)  தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்துவைத்து  அதுக்கு விருத்தமான ஶப்தாதி விஷயாநுபவத்திலே ஒரு ஸர்வ ஶக்தியாலும் விடுவிக்கவொண்ணாதபடி மிகவும் ப்ரவணனாய்ப் போருமவன்;  (ஶரணாகதாக்ய:)  ஶரணாகதனென்கிற பேர்மாத்ரமே யுள்ளது.  அதிலும் நிஷ்டையில்லையென்கை.  இத்தால் மத்த்யமபதார்த்த நிஷ்டாஹாநி சொல்லுகிறது.  “ஶப்தாதிபோகநிரத:” என்கையாலே த்ருதீயபதார்த்த நிஷ்டையில்லை யென்னுமிடம் சொல்லிற்று.

இதரவிஷயப்ரவணனாய் துஷ்டசேஷ்டனாகையாலே இவனைக் கைகொள்ளப் போகிறதில்லை;  ஶரணாகதனென்னும் பேரிட்டிருக்கையாலே கைவிடப்போகிறதில்லை.  இப்படி தள்ளவும் கொள்ளவும் போகாதேயிருக்கிறவிவனை நாம் என் செய்வதென்று புண்படும்படியிருக்கையாலே நித்யது:க்காவஹனென்கை.

(த்வத் பாதபக்த இவ ஶிஷ்டஜநௌகமத்யேத்யாதி)  நம்படி இதுவானால் ”நமக்கும் இவ்விஷயத்துக்கும் என்ன சேர்த்தியுண்டு”  என்று நடுங்கக் கடக்க வர்த்திக்கவேண்டியிருக்க, அது செய்யாதே தேவர் திருவடிகளில் பாரமார்த்திக ப்ரேமயுக்தரான விலக்ஷணர் திரளுக்குள்ளே நானுமொருவனாகப் புக்கு ப்ரேமலேஶமற்றிருக்க, தேவரீர் திருவடிகளில் ப்ரேம பரிபூர்ணரைப்போலே  க்ருத்ரிமமாக ஆசரியாநின்றேன்.  (ததோஸ்மி மூர்க்க:) நிஸ்ஸ்நேஹனாயிருக்கச்செய்தே ஸ்நேஹயுக்தரைப்போலே அநுபவகைங்கர்யங்களை ஆசைப்படுவது, அர்த்திப்பதாய்க்கொண்டு க்ருத்ரிமமாக வர்த்தியாநின்றேன் என்பது யாதொன்று, அத்தாலே மூர்க்கனாகாநின்றே னென்கிறார்.

தாத்பர்யம் –  யதிபதியே! தேவரீருக்கு அநந்யார்ஹ ஶேஷபூதனாகையாலே இடைவிடாமல் ஹர்ஷாவஹனாய்ப் போரவேண்டியிருக்க, அதுக்கு விருத்தமாக தேவரீரும் அருவருக்கும்படி துர்வ்ருத்திகளைச் செய்து விஷயாநுபவத்தில் மிகவும் ப்ரவணனாயிருக்கையாலே தள்ளிவிடுகைக்கும், ஶரணாகதனென்று பேர்மாத்ரம் உடையவனாயிருக்கையாலே அங்கீகரிக்கவும் போகாதே தேவரீர் திருவுள்ளம் புண்படும்படி நித்யது:க்காவஹனாயிரா நின்றேன்.  இப்படி இருக்கையாலே தேவரீர் திருவடிகளைக் கூவிக் கடக்கவர்த்திக்க வேண்டியிருக்க அது செய்யாதே தேவரீ்ர் திருவடிகளில் யதார்த்தமான பக்தியுடைய விலக்ஷணர்திரளுக்குள்ளே யானுமொருவனாய்ப் புக்கு ப்ரேமபரிபூர்ணரைப்போலே க்ருத்ரிமமாக வர்த்தியா நின்றேன்.  ஆகையாலே என்னைப்போலே ஜ்ஞாநஹீன னொருவருமில்லை என்கிறார்.

  1. நித்யம் த்வஹம் பரிப4வாமி கு3ருஞ்சமந்த்ரம்

   தத்தே3வதாமபி ந கிஞ்சித3ஹோ பி3பே4மி

   இத்த2ம் ஶடோப்யஶடவத் ப4வதீ3யஸங்கே4

   ஹ்ருஷ்டஶ்சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க:2

பதவுரை –

யதிராஜ – யதிஶ்ரேஷ்ட்டரான எம்பெருமானாரே!

அஹம் – நான்

நித்யம் – ப்ரதிதினமும்

குரும் – அஜ்ஞாந நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேஶித்த ஆசார்யனையும்,

மந்த்ரஞ்ச – அநுஸந்திக்குமவர்களை ரக்ஷிக்கும் அந்த பெரிய திருமந்த்ரத்தையும்

தத்தேவதாமபி – அந்த மந்த்ர ப்ரதிபாத்யனான எம்பெருமானையும்

பரிபவாமி – அவமதி செய்யாநின்றேன்

(இப்படி இருக்கச் செய்தேயும் இதில்)

கிஞ்சித் – கொஞ்சமும்

ந பிபேமி – பயமின்றிக்கே இராநின்றேன்

அஹோ – மிகவும் கஷ்டம்

இத்தம் – இப்படி

ஶடோபி – துர்வ்ருத்தி யுடையனாயிருக்கச் செய்தேயும்

பவதீய – தேவரீர் திருவடிகளில் பக்திமான்களான மஹாத்மாக்களுடைய

ஸங்கே – திரளில்

அஶடவத் – குருமந்த்ர தேவதைகளிடத்தில் நிரதிஶய ப்ரீதியுக்தரைப்போலே

ஹ்ருஷ்ட: – ஹர்ஷயுக்தனாய்க்கொண்டு

சராமி – இதஸ்தத: ஸஞ்சரியாநின்றேன்

தத: – அதனாலே

மூர்க்க: – விவேகஶூந்யனாக

அஸ்மி – ஆகிறேன்.

வ்யாக்யானம் – (நித்யம் த்வஹமித்யாதி) (நித்யம் த்வஹம் பரிபவாமி குரும்) அஹேதுகமாக அங்கீகரித்து ஸ்வோபதேஶத்தாலே தத்வஜ்ஞாநத்தைப் பிறப்பித்து  ஸ்வரூபயாதாத்ம்ய ப்ரகாஶகமான திருமந்த்ரத்தையும் ஸார்த்தமாக ப்ரஸாதித்தருளி ஸ்வரூப விருத்தங்கள் புகுராதபடி இரவுபகல் அவஹிதனாய் நோக்கிக்கொண்டுபோரும் ஆசார்யனருளிச் செய்தபடி அநுஷ்டியாமையாலும், ததுபதிஷ்டமந்த்ர ததர்த்தங்களை அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையாலும் ஸர்வகாலமும் ப்ரதிக்ஷணமும் பரிபவியாநின்றேன்.

அவ்வளவன்றிக்கே (மந்த்ரஞ்ச பரிபவாமி) அநுஸந்தாத்ருக்களுக்கு  ரக்ஷகமாகையாலே மந்த்ரஶப்த வாச்யமாய் ஸகலவேதாந்தஸாரமான திருவஷ்டாக்ஷ ரத்தையும் ஆசார்யன் அதுக்கருளிச் செய்த யதார்த்தத்தையும் மறக்கையாலும் அயதார்த்தத்தை அதுக்கர்த்தமாக நினைக்கையாலும் அதின் சீர்மை குன்றும்படி பரிபவியாநின்றேன்.  அவ்வளவன்றிக்கே (தத்தேவதாமபி – நித்யம் – பரிபவாமி) அம்மந்த்ரத்துக்கு ஶேஷித்வ ஶரண்யத்வ ப்ராப்யத்வ வேஷத்தாலே ப்ரதிபாத்யனான எம்பெருமானையும், தத்ஸமாஶ்ரயணத்தைப்பற்ற  ஸ்ருஷ்டங்களான கரணத்ரயத்தையும் தத்விஷயத்தில் ப்ரவணமாக்காமையாலும், ததிதரவிஷயங்களிலே ப்ரணவமாக்குகையாலும் பரிபவியாநின்றேன்.

(நகிஞ்சிதஹோபிபேமி) எப்போதும் உத்தேஶ்யமாக அநுஸந்தித்து கௌரவிக்கத்தக்க குருமந்த்ரதேவதைகளை அநவரதம் பரிபவித்து இதுவே யாத்ரையாப் போரநின்றால் இதிலே ஒரு சற்றும் பயமின்றிக்கே  யிராநின்றேன்.

(இத்தம் ஶடோபி) மேலெழவன்றிக்கே உள்ளூரவாராய்ந்து  பார்த்தால் ஶடனாயிருக்கச் செய்தேயும் (அஶடவத் பவதீய ஸங்கே ஹ்ருஷ்டஶ்சராமி)  ஆசார்யவிஷயத்திலும், அவநுபகரித்த மந்த்ரவிஷயத்திலும், தத்ப்ரதிபாத்யமான தேவதாவிஷயத்திலும் உக்தக்ரமம் தப்பாமல் யதாப்ரதிபத்தியோடே வர்த்திக்குமவர்களாய் தேவரீருடைய திருவடிகளில் ஸம்பந்தத்தையிட்டே நிரூபிக்கப்படு மவர்களான மஹாத்மாக்கள் நடுவே “குருமந்த்ர தேவதைகளளவில் இவனத்தனை ப்ரேமாதிஶயமுடைய வர்களில்லை” என்று தோற்றும்படி நிரதிஶய ஹர்ஷயுக்தனாய்க்கொண்டு ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு இதஸ்தத:ஸஞ்சரியாநின்றேன்.  (தத: மூர்க்கோஸ்மி) இப்படி குருமந்த்ராதிகளைப் பரிபவித்து அதிலொரு பயமின்றிக்கே விலக்ஷணர் நடுவே புக்கு “நானும் அவர்களிலே ஒருவன்” என்று கண்டவர்களுக்குத் தோன்றும்படி மசக்குப் பரலிட்டுக் களித்துத் திரியாநின்றேன் என்பது யாதோன்றுண்டோ அத்தாலே என்னத்தனை மூர்க்கரில்லையென்கிறார்.

தாத்பர்யம் – யதிபதியே! தத்வஜ்ஞாநத்தை யுபதேஶித்து ரக்ஷித்துக்கொண்டுபோருகிற ஆசார்யனருளிச்செய்தபடி அநுஷ்ட்டியாமல் அவனால் உபதேஶிக்கப்பட்ட மந்த்ரத்தை அநதிகாரிகளுக்கு உபதேஶித்துப் போருகையாலே ஆசார்யனையும், அவனால் உபதேஶிக்கப்பட்ட திருமந்தரத்துக்குள்ள அர்த்தத்தை மறந்து அயதாவான அரத்தத்தை அதுக்கர்த்தமாக நினைக்கையாலே திருமந்த்ரத்தையும், அம்மந்த்ர ப்ரதிபாத்யனான எம்பெருமானுக்கு வகுத்தக் கரணங்களைக்கொண்டு கைங்கர்யம் செய்யாமல் இதர விஷய ப்ரவணமாக்குகையாலே எம்பெருமானையும் மிகவும் பரிபவித்து, இதில் கொஞ்சமும் பயமில்லாமல் தூர்த்தனாய்த் திரியாநின்றேன், இப்படி தூர்த்தனாய் இருக்கச் செய்தேயும் “குருமந்த்ரதேவதைகளில் இவனத்தனை ப்ரேமாதிஶய முடையாரில்லை” என்று தோற்றும்படி தேவரீர் திருவடிகளில் நிரதிஶயப்ரேமயுக்தரான மஹாத்மாக்கள் திரளிலே ஹர்ஷயுக்தனாய்த் திரியாநின்றேன்.  இப்படி இருக்கையாலே என்னத்தனை மூர்க்கனில்லை யென்கிறார்.

  1. ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா

    யோஹம் சராமி ஸததம் த்ரிவிதா4பசாரான்

    ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதே3வம்

    காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க:2

பதவுரை –

யதிராஜ – யதிஸார்வபௌமரே!

ய: – யாதொரு

அஹம் – நான்

மநஸா – பகவத் வைபவத்தை யநுஸந்திக்கத்தக்க மநஸ்ஸாலேயும்

க்ரியயா ச – வ்யாபாரத்தினாலும்

(அஞ்சலி முதலான அநுகூலவ்ருத்திகளைச் செய்யத்தக்க ஶரீரத்தினாலும்)

வாசா – பகவத்குணங்களைப் புகழுகைக்கீடான வாக்காலும்

ஸததம் – ஸர்வகாலமும்

த்ரிவித – மூன்றுவிதமான

அபசாரான் – அபராதங்களை

சராமி – (பகவத் பாகவத விஷயத்தில்) செய்துகொண்டு போருகிறேனோ

ஸோஹம் – அப்படி அபராதபூயிஷ்டனான நான்

தவ – என்னுடைய ரக்ஷணத்தில் க்ருஷி பண்ணுகிற தேவரீருக்கு

அப்ரியகர: – அநிஷ்டகரனாயிருக்கச் செய்தேயும்

ப்ரியக்ருத்வத் –  தேவரீரும் ப்ரியகரனென்று நினைக்கும்படி

ஏவம் – இப்படிப்பட்ட க்ருத்ரிமமான செயலாலே

காலம் – காலத்தை

நயாமி – கழிக்காநின்றேன்

தத: – ஆகையாலே

மூர்க்க: – மூடனாக

அஸ்மி – ஆகிறேன்

ஹா – கஷ்டம்

ஹந்த – மிகவும் கஷ்டம்

ஹந்த – மிகவும் கஷ்டதமம்

வ்யாக்யானம் – (ஹா ஹந்த ஹந்தேத்யாதி) பகவத் பாகவத ஆசார்ய விஷயங்களை அநுவர்த்திக்கைக்குண்டான மநோவாக்காயரூப கரணத்ரயத்தையுங்கொண்டு  அவ்விஷயங்களைப் பரிபவித்து அதிலொரு பயமுமின்றிக்கே விலக்ஷணர் நடுவே அநுவர்த்தியாத மாத்ரமன்றிக்கே அநவரதம் அபசாரமே பண்ணிக்கொண்டு போருகையாலுண்டான வ்யஸநாதிஶயத்தாலே யருளிச் செய்கிறார்.  (ஹா ஹந்த ஹந்தவென்று).

(மநஸா) பகவத்வைபவாதிகளை யநுஸந்திக்கக்கண்ட மநஸ்ஸு படும்பாடே; (க்ரியயா ச) க்ரியா ஶப்தத்தாலே க்ரியாஹேதுவான காயத்தை லக்ஷிக்கிறது.  (வாசா) உத்தேஶ்யங்களைக் குறித்து அஞ்சலி ப்ரணாமாதி அநகூல வ்ருத்திபண்ணுகைக்கும் தத்குணங்களைப் புகழுமாகக்கண்ட காயமும் வாக்கும் அபசாரம் பண்ணி அநர்த்தப்படுகைக்குறுப்பாவதே.

(ஸததம்) ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்தவனுக்குக் காலவிஶேஷத்திலே விச்சேத்யம் வருகை அஸஹ்யமானாப்போலே யாயிற்று அந்த அபசாரகரணத்திலும் காலவிஶேஷத்திலுண்டான விச்சேதம் அஸஹ்யமானபடி.  (சராமி) என்கிற வர்த்தமான நிர்தேஶத்தாலே ஸர்வாவஸ்த்தையிலும் அபசாரம் அநுவர்த்திக்கிறபடி.

(த்ரிவிதாபசாரான்) ஓரொரு விஷயத்திலபசாரமே அதி க்ரூரமாயிருக்க, மூன்றபசாரத்திலுமந்வயித்தபடி.  அதுதான் கதிபயாபசாரத்திலே சுவறுகையன்றிக்கே (சுவறுகை – வற்றுகை)  நாநாவிதாபசாரங்களிலும் அந்வயித்த படியைப்பற்ற பஹுவசநப்ரயோகம் பண்ணுகிறது.  அஹம் ஸர்வம் கரிஷ்யாமிக்கு எதிர்தட்டிருக்கிறபடி.

(ஸோஹம்) அபராதம் பண்ணின கையுலராத இந்த பாபிஷ்டன்;  (தவாப்ரியகர:) ”ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்து வாழவேணும்”  என்று இதுக்கு க்ருஷிபண்ணிக்கொண்டு போருகிற தேவருக்கு, பண்ணின க்ருஷியைப் பாழாக்கி அநிஷ்டகரனாய்ப் போருமவன்.  (ப்ரியக்ருத்வத்) அர்த்தஸ்திதியிதுவாயிருக்க “பகவத்பாகவதா சார்ய விஷயங்களில் இவனத்தனை ப்ரேமமுடையாரும் கைங்கர்யருசியுடையாருமில்லை.  ஆனபின்பு இவனே நமக்கு ப்ரியகரன்” என்று தேவரும் நினைக்கும்படியாயிற்று வர்த்திப்பது.

(ஏவம் காலம் நயாமி) இப்படி க்ருத்ரிமமான பரிமாற்றத்தால் காலத்தைக் கழியாநின்றேன்.   (யதிராஜ ததோஸ்மி மூர்க்க:) ரக்ஷணஸாமர்த்த்யமுடைய தேவரீரும் ஸந்நிஹிதராயிருக்க இவ்வஸ்து அபசாரத்திலே கைகழிகையாலே என்னத்தனை மூர்க்கரில்லை என்கிறார்.

தாத்பர்யம் – யதிஸார்பௌமா! நான் பகவத் வைபவங்களை அநுஸந்திக்கைக்கும், புகழுகைக்கும், அஞ்சலி ப்ரணாமாத்யநுகூல வ்ருத்தி செய்கைக்கும் யோக்யமான மநோவாக்காயங்களாலே  பகவத் பாகவதவிஷயங்களில் அபசாரங்களைப் பண்ணி இதுவே யாத்ரையாய்ப் போருகையாலே ரக்ஷணத்துக்கு க்ருஷி பண்ணிக்கொண்டுபோரும் தேவரீருக்கு அநிஷ்டத்தை பண்ணுகிறவனாயாகாநின்றேன்; இப்படி இருந்தபோதிலும் “இவனத்தனை பகவத்பாகவத விஷயத்தில் ருசியுடையாரில்லை;  இவனே நமக்கு ப்ரியகரன்” என்று தேவரீருக்கும் தோற்றும்படி க்ருத்ரிமமான பரிமாற்றத்தாலே காலத்தைக் கழியாநின்றேன்.  ஆகையால் என்னத்தனை மூர்க்கரில்லையென்கிறார்.  இப்படிப்பட்ட க்ருத்ரிம செய்கையை நினைத்து வ்யஸநாதிஶயத்தாலே கஷ்டம் கஷ்டம் என்கிறார்.

அவதாரிகை –  இப்படி அக்ருத்யகரண பகவதபசாராதிகளிலே அந்விதனாயிருக்கச் செய்தேயும் அவற்றிலன்வயியா தவனைப்போலேயும் வர்த்திக்கையாலே என்னில் குறைந்தார் ஒருவருமில்லை என்று விஷண்ணரான இவரைப்பார்த்து, எம்பெருமானார் “அநுதாபாதிகளுண்டாகில் அவை தன்னடையே கழியுங்காணும்” என்றருளிச்செய்ய, அநுதாபாதி லேஶமுமில்லாமையாலே இப்போதும் அக்ருத்யகரணமே எனக்கு நித்யாநுஷ்டானமாய்ச் செல்லாநின்றதென்று விண்ணப்பம் செய்கிறார்.

Continued…..

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.