[highlight_content]

03-08 12000/36000 Padi

எட்டாந்திருவாய்மொழி  –  முடியானே : ப்ரவேசம்

– எட்டாந்திருவாய்மொழியில், கீழ், இவர் அநுபவித்த பாகவதசேஷத்வத்துக் கடியான பகவத்குணவைலக்ஷண்யமானது இவர் திருவுள்ளத்திலே அநுபவாபி நிவேசத்தை ஜநிப்பிக்க, அத்தாலே ப்ரஸ்துதமான பாகவதஸம்ஸ்லேஷம் விடாய்க்கு உத்தம்பகமாக, நெஞ்சு முதலான தம்முடைய கரணங்களோடு தம்மோடு வாசியற அநுபவாலாபத்தாலே ஆர்த்தி பிறந்து, அநுபாவ்யனுடைய சேஷித்வாத்யாகாரத்தையும், அநிஷ்டத்தைப்போக்கி அநந்யார்ஹமாக்கும்படியையும், ஆஸ்ரித வ்யாமோஹத்தையும், அவதாரமூலமான அநந்தசாயித்வத்தையும், ஆஸ்ரிதர்க்கு முகங்காட்டுகைக்கு ஈடான வாஹநவத்தையையும், அவர்களுக்கு அநுபாத்யமாம்படி கையுந் திருவாழியுமான அழகையும், இத்வாஹநாயுதவிசிஷ்டவஸ்துவே தாரகாதிகளானபடியையும், அநுபவிப்பிக்கும் ஸௌந்தர்ய ஸ்வபாவத்தையும், அநுபவப்ரதிபந்தக நித்ருத்திப்ரகாரத்தையும், நிவர்த்தநத்தில் அநாயாஸத்தையும் அநுஸந்தித்து, அநுபவம் கிட்டாத ஆர்த்தியாலே அதிசயிதமாகக் கூப்பிடுகிறார்.

ஈடு:  – _தேர்கடவியபெருமான் கனைகழல் காண்ப தென்றுகொல் கண்கள்_ (3-6-10)  என்று தம்முடைய கண்கள் அவனைக் காணவேணுமென்று விடாய்த்தபடி சொன்னார், _செய்யதாமரைக் கண்ண_(3-6)னில்; ‘நிழலும் அடிதாறுமான’ (பெரிய.திருவ.31) ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, அநந்தரம் ப்ரவ்ருத்தமான பாகவதஸம்ஸ்லேஷம் போதயந்த:பரஸ்பரம்பண்ணி தரிக்கைக்கு உடலன்றிக்கே பகவத்குணங்களுக்கு ஸ்மாரகமாய்க் கீழ்ப்பிறந்த விடாய்க்கு உத்தம்பகமாயிற்று. கீழே பாகவதர்களுடைய ஸ்வரூபநிரூபகத்வேந அவனையும் சொல்லிற்றிறே; வேறொன்றுக்காகப் புகுந்தாலும் தன்னையொழியப் புறம்பு ஒன்றுக்கு ஆளாகாதபடி தன்பக்கலிலே துவக்கிக்கொள்ளவற்றாயிறே பகவத் விஷயம் இருப்பது. அத்தாலும் அபிநிவேசம் கரைபுரண்டு, _என்றுகொல் கண்கள் காண்பது_ (3-6-10) என்னுமளவன்றிக்கே மற்றை இந்த்ரியங்களும் விடாய்த்து, ஓரிந்த்ரியத்தினுடைய வ்ருத்தியை மற்றையிந்த்ரியங்களும் ஆசைப்பட்டும், மற்றையிந்த்ரியங்களினுடைய வ்ருத்தியை மற்றையிந்த்ரியம் ஆசைப்பட்டும், அவையெல்லாவற்றினுடைய வ்ருத்தியையும் தாம் ஆசைப்பட்டும்,  தம்மிலும் விடாய்த்த கரணங்களும் கரணங்களிலும் விடாய்த்த தாமுமாய், – க்ஷாமகாலத்திலே பஹுப்ரஜனானவன் தன்பசிக்கு ஆற்றமாட்டாதே,  ப்ரஜைகள் பசிக்கு ஆற்றமாட்டாதே, அவற்றின்வாயிற் சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது, தன்வாயிற் சோற்றை அவை பறித்து ஜீவிப்பதாய், ‘என் பசிக்கு என்செய்வேன்? என்ப்ரஜைகளின்பசிக்கு என்செய்வேன்?’ என்னுமாபோலே, தாமும் தம்முடைய கரணக்ராமமுமாக நோவுபட்டுக் கூப்பிடுகிறார். (கா3த்ரை ஸ்சோகாபி4கர்தை:) என்று சிலர் பட்டினிகிடக்கச் சிலர் ஜீவிக்குமோபாதி, இத்வுடம்பைக் கொண்டு அணைய ஆசைப்பட்டு இத்வாசையோடே முடிந்துபோய் இனி ஒருசரீரபரிக்ரஹம் பண்ணி அவரை அநுபவிக்க இராமே, ஆசைப்பட்ட இக்கரணங்களைக் கொண்டே நான் அநுபவிக்கும்படி பண்ணித்தரவேணு மென்றாளிறே பிராட்டியும்; அப்படி இவரும் நோவுபட்டு, ஆயுதங்களையும், ஆபரணங்களையும், அவற்றுக்கு ஆஸ்ரயமான திருமேனியையும், குணங்களையும் சேஷ்டிதங்களையுமுடைய எம்பெருமானைக் காணவேணுமென்று ‘முன்புபோலே ஈஸ்வரனுக்கு ஒரு கு௰விஷ்காராதிகளால் பட்டினி பரிஹரிக்கவொண்௰து’ என்னும்படி, கேட்டாரெல்லாம் நீராம்படி, பெருந்தானத்திலே பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். _(கு3ஹேந ஸார்த்த4ம் தத்ரைவ ஸ்த்தி2தோஸ்மி தி3வஸாந் ப3ஹூந்) – ஸ்ரீகுஹப் பெருமாளோடே கூட, பெருமாளைப்பிரிந்த இடத்தினின்றும் கால்வாங்க மாட்டாதே நின்றானாயிற்று ஸுமந்த்ரன்; அங்குநின்றது ஒன்றிரண்டுநாளாயிருக்கச் செய்தே (ப3ஹூந்) என்னா நின்றதாயிற்று, பிரிவாலே காலம்நெடுகினபடி_. ‘ஸ்ரீகுஹப்பெருமாளோடே நிற்க, காலம்  நெடுகுவானென்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க, ‘ஸ்மாரகஸந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்குமிறே’ என்று அருளிச்செய்தாராம். _மேகக்குழாங்கள்காள் காட்டேன்மின் நும்முரு வென்னுயிர்க் கது காலன்_(9-5-7) என்றாரிறே. சைதந்யப்ரஸ்ருதித்வாரமான கரணங்கள் விடாய்க்கையாவது என்? என்னில்,  – ஆழ்வாருடைய அபிநிவேசாதிசயத்தைச் சொன்னபடி. இந்த்ரியங்களும் தனித்தனியே சேதநஸமாதியாலே விடாய்க்கும்படியாயிற்று, பகவத்விஷயத்தில் இவர்க்குப்பிறந்த வாஸநை. இதரவிஷயங்களில் வாஸநை விடாயைப் பிறப்பியாநின்றால் குணாதிகவிஷயத்தில் சொல்லவேண்டாவிறே. பகவத்விஷயத்தில் வாஸனை பண்ணுகிறார் பண்ணுகிறது ஸாதநபுத்யாவல்ல, இதரவிஷயங்களோபாதி இவ்விஷயம் ரஸிக்கவேணுமென்று; (யா ப்ரீதிரவிவேகாநாம்). ‘ஒரு இந்த்ரியத்தின் வ்ருத்தியை இந்த்ரியாந்தரம் ஆசைப்படக்கூடுமோ?’ என்னில்; ‘சக்ஷுஸ்ஸ்ரவா: கண்ணாலே காண்பதுஞ்செய்து கேட்பதுஞ்செய்யாநின்றதிறே; அதுவும் அவன்கொடுத்ததே; அது நமக்குத் தட்டென்ன அவன் தந்தால்?’ ஒருதேசவிசேஷத்திலே தன்னையநுபவிப்பார்க்குக் கொடா நின்றானிறே, தம்மையே ஒக்க அருளவேண்டுகையாலே.*தூதுசெய்கண்கள்கொண்டு ஒன்றுபேசித் தூமொழியிசைகள் கொண்டு ஒன்று நோக்கி’ (9-9-9)யிறே அவன்தன்படி. அதாவது – ஆறு கிண்ணகமெடுத்தால் பலவாய்த்தலைகளாலும் போகச்செய்தேயும் கடலில்புகும் அம்ஶம் குறைவற்றுப்போமாபோலே, இவருடைய அபிநிவேஶாதிஶயம் இவருடைய கரணங்களாகிற வாய்த்தலைகளாலே பெருகுகிறபடி.

முதற்பாட்டு

முடியானேஎ மூவுலகுந்தொழுதேத்தும் சீர்

அடியானேஎ!* ஆழ்கடலைக்கடைந்தாய்! புள்ளூர்

கொடியானே!* கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்

நெடியானே!* என்றுகிடக்கும் என்நெஞ்சமே.

– முதற்பாட்டில்,  ப்ராப்தமுமாய், சரண்யமுமாய், ப்ராப்யமுமான பகவத்விஷயத்திலே தம்முடைய நெஞ்சுக்கு உண்டான அபிநிவேசத்தை அருளிச்செய்கிறார்.

முடியானே – (உபயவிபூதிக்கும் சேஷியான மேன்மைக்கு ஸூசகமான) முடியையுடையவனே! (அந்த உறவடியாக), மூவுலகும் – ஸர்வலோகமும், தொழுது ஏத்தும்-ஆஸ்ரயித்து ஸ்துதிக்கும், சீர் அடியானே – சரண்யத்வைகாந்தகுணபூர்ணமான திருவடிகளையுடையவனே! (ஆஸ்ரிதர் ப்ரயோஜநாந்தரங்களைவேண்டிலும்), ஆழ்கடல் – ஆழ்கடலை, கடைந்தாய் – கடைந்து கொடுக்கும் உபகாரகனே!  புள் ஊர் கொடியானே – (ஆஸ்ரிதர் இருந்தவிடத்திலே வருகைக்கும் அவர்கள் தூரத்தில் கண்டு உகக்கைக்கும் அடியான) பெரியதிருவடியை வாஹநமும் த்வஜமுமாகவுடையவனே! கொண்டல் – (அவர்களுக்கு அநுபாத்யமாம்படி ஸ்ரமஹரமாய்)  காளமேகம் போன்ற, வண்ணா – வடிவையுடையவனே!  (இவ்வடிவழகை அநுபவிப்பித்து), அண்டத்து – பரமபதவாஸிகளான, உம்பரில் – ஸூரிகளுக்கு நிர்வாஹகனான, நெடியானே – பெரியவனே!, என்று – என்று (தனித்தனியே இந்தஸ்வபாவங்களை) அநுஸந்தித்து, என்நெஞ்சம் – என்நெஞ்சானது, கிடக்கும் – (ஓருப்ரத்ருத்திக்ஷமமன்றிக்கே சிதிலமாய்) கிடவாநின்றது.

அண்டத்து உம்பரென்று – ப்ரஹ்மாதிகளாகவுமாம்.

ஈடு: – முதற்பாட்டு.  தம்முடைய திருவுள்ளத்துக்கு அவன்பக்கலுண்டான சாபலாதிசயத்தைச் சொல்லுகிறார்.

(முடியானே) ஆதிராஜ்ய ஸூசகமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியிறே; அவன் சேஷித்வ ப்ரகாசகமான திருவபிஷேகத்திலே முந்துறக் கண் வைக்கிறார். அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடியாக்கும்படி தலையான முடியிறே. உபய விபூதிக்கும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியிறே. (முடியானேஎ) இவர்க்கு இதிலோடுகிற விடாயின் பெருமை இசையினோசையிலே காணுமித்தனை. புகும் க்ரமங்களெல்லாம் இல்லை இதில்; முதலிலே உயர்ந்த தானமாயிருக்கும். (முடியானேஎ) கீழ் _பொன் முடியன்_ (3-7-4) என்றதுதான் முடிய அநுவர்த்திக்கிறபடி. (மூவுலகும் இத்யாதி) கு௰குண நிரூபணம் பண்ணாதே அசேஷலோக சரண்யமான திருவடிகளை யுடையவனே! திருவபிஷேகத்தின் அழகை அநுஸந்தித்துத் தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே. _தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்_ (3-7-7) என்றது வடிம்பிடுகிறபடி. ஸர்வஸாதாரணமான திருவடிகளை என் தலையிலே வையாய் என்று கருத்து. (ஆழ்கடலைக் கடைந்தாய்) _ஆரமுதூட்டியவப்பனை_ (3-7-5) என்றது பின்னாடுகிறபடி. இத்திருவடிகளில் போக்யதையைவிட்டு ப்ரயோஜநாந்தரத்தை ஆசைப்பட்டார்க்கும் வருந்தி அபேக்ஷித ஸம்விதாநம் பண்ணுமவனே! *அப்ரமேயோ மஹோததி:* என்று ஒருவரால் அளவிடப்போகாதபடியிருக்கிற கடலைக் குளப்படி போலே கலக்கினபடி. (புள்ளூர் கொடியானே) – தன்னை உகந்தார்பக்கல் வந்து தோற்றும்படி பெரிய திருவடியை வாஹநமாகவும் கொடியாகவுமுடையவனே! ஆஸ்ரிதர் இருந்தவிடத்தே செல்லுகைக்கு வாஹநம், தூரத்திலே கண்டு ‘வாராநின்றான்’ என்று த4ரிக்கைக்கு த்வஜமாகை. கடலைக் கடையப்புக்கு தேவஜாதி இளைத்துக் கைவாங்கினவளவிலே, சாய்கரகம் போலே அம்ருதத்தைக் கொண்டுவந்து கொடுக்கைக்குத் திருவடிமுதுகிலே வந்து தோன்றினபடியென்றுமாம். (கொண்டல்வண்ணா) திருவடிமுதுகிலே தோற்றினபோது ஒரு மேருவைக் கினியக் காளமேகம் படிந்தாப்போலேயாயிற்று இருப்பது. *நீலம் மேராவிவாம்புதம்* (அண்டத்து உம்பரில்) – அவன்தோளில் இருக்கும் இருப்பைக் கண்டால் ‘இவனே ஸர்வாதிகன்’ என்று தோற்றும்படியாயிற்று இருப்பது. ப்ரஹ்மாதிகளுடைய ஐஸ்வர்யம் அடையப் பரிச்சிந்நமாய்த் தன் ஐஸ்வர்யம் மேலாய்த் தோற்றும்படியிறே இருப்பது.  வடிவழகோபாதி அவனைஸ்வர்யமும் ஆகர்ஷகமாயிருக்கிறபடி. (என்று கிடக்கும்) ‘நெடியானே, என்றால் காணவேணும், கேட்கவேணும் என்கிற சொல்லால் தலைக்கட்டமாட்டுகிறதில்லை: ‘நெடியானேஎ’ என்று பாடோடிக் கிடவாநின்றது; *உக்த்வார்யேதி ஸக்ருத்தீநம் புநர்நோவாச கிஞ்சந* என்ற ஸ்ரீபரதாழ்வானைப்போலே. (என்நெஞ்சமே) _கொடியவென்னெஞ்சம்_ (5-3-5) என்னுமாபோலே, கொண்டாடிச் சொல்லுகிறாரல்லர்; நான் செய்தபடி செய்ய, இதின் விடாய்க்கு என் செய்வேன்? என்கிறார். ‘பர்த்தாவே ரக்ஷிக்கவேண்டாவோ? இத்வயிறுதாரி நெஞ்சை என்னால் ப4ரிக்கப்போமோ?’ என்கிறார்.

இரண்டாம் பாட்டு

நெஞ்சமேநீள்நகராக இருந்த என்

தஞ்சனேஎ!* தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற

நஞ்சனேஎ!* ஞாலங்கொள்வான்குறளாகிய

வஞ்சனேஎ!* என்னும் எப்போதும் என்வாசகமே.

– அநந்தரம், அநிஷ்டத்தைக் கழித்து அநந்யார்ஹமாக்கும்படியை என்வாக்கு எப்போதும் சொல்லாநின்றது என்கிறார்.

என் வாசகம் – என் வாசகமானது, எப்போதும் – ஸர்வகாலமும், நெஞ்சமே – நெஞ்சையே, நீள் நகராக – பெரிய தித்யநகரியாகக்கொண்டு, இருந்த – வர்த்திக்கையாலே, என் தஞ்சனே – எனக்கு நற்றுணையானவனே!,  தண் – (குளவிக்கூடு போலே ராக்ஷஸர்சேர்ந்த) தண்மையையுடைத்தான, இலங்கைக்கு – லங்கைக்கு, இறையை – நிர்வாஹகனான ராவணனை, செற்ற – முடித்த, நஞ்சனே – நஞ்சானவனே! (மஹாபல்யபிமாநத்தைக்கழித்து), ஞாலம் – பூமியை, கொள்வான் – அநந்யார்ஹமாக்கிக் கொள்ளுகைக்காக, குறளாகிய – வாமநவேஷனான, வஞ்சனே – க்ருத்ரிமனே!,  என்னும் – என்னாநிற்கும்.

ராவணனை அழித்தாற்போலே இந்த்ரியபாரவஸ்யத்தைத் தவிர்த்து, பூமியைக்கொண்டாற்போலே என்னை அநந்யார்ஹனாக்கவேணுமென்று கருத்து.

ஈடு: – இரண்டாம்பாட்டு. ‘*மந:பூர்வோ வாகுத்தர:* என்று மநஸ்ஸுக்கு அநந்தரமான வாக்கு மநோத்ருத்தியையும் தன்த்ருத்தியையும் ஆசைப்படாநின்றது’ என்கிறார்.

(நெஞ்சமே இத்யாதி) வாக்கின் வார்த்தை இருக்கிறபடி. ‘என்றும் நெஞ்சிலே யிருந்து போமித்தனையோ? என்பக்கலும் ஒருகால் இருக்கலாகாதோ?’ என்னா நின்றது. அவதாரணத்தாலே – ‘இந்த்ரியாந்தரங்கள், பரமபதம், க்ஷீராப்தி தொடக்கமான இடங்கள் என்படுகிறதோ?’ – _கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தன கொல் ஏபாவம்_ (பெரிய.திருவ.68) என்னுமாபோலே, ‘பரமபதமும் அத்விருப்பும் என்படுகிறதோ?’  ‘கலங்காப் பெருநகரத்திற்’ (மூன்.திரு.51) பண்ணும் ஆதரத்தை இதிலே பண்ணாநின்றான். பரமபதத்தில் இட்டளமும் தீர்ந்தது இங்கேயாயிற்று. மநஸ்ஸை இட்டளமில்லாத நகரமாகக் கொண்டிருந்தான். இல்லையாகில், மறந்து கூப்பீடு மாறுமிறே. (என் தஞ்சனேஎ) இப்படி கூப்பிடப் பண்ணின உபகாரகத்வத்தை நினைத்துச் சொல்லுகிறார். ஸம்ஸாரிகளில் இப்படி கூப்பிடுகிறாரில்லையிறே. இவர்நெஞ்சிலே இருக்கையிறே இவ்விஷயத்திற் கூப்பிடுகிறது. (தண் இலங்கை இத்யாதி) – கட்டளைப்பட்ட லங்கைக்கு இறைவனான ராவணனை நிரஸித்து, அவனுக்கு நஞ்சானவனே! ஒன்றுக்கும் விக்ருதனாகாத திருவடியும் லங்கையில் கட்டளையைக் கண்டு, *அஹோ வீர்ய மஹோ தைர்ய மஹோ ஸத்த்வ மஹோ த்யுதி:* என்று மதித்த ஐஸ்வர்யமிறே. தண்மையாலே-கட்டளைப்பாட்டை லக்ஷிக்கிறது. (ஞாலம் இத்யாதி) – மஹாப3லியாலே அபஹ்ருதையான பூமியை மீட்கும் விரகறியுமவனே! ராவணனைப்போலே தலையை அறாவிட்டது – ஔதார்யமென்பதொரு குணலேஶ முண்டாகையாலே. ‘இவன் கையிலே ஒரு தர்மாபாஸ முண்டாயிருந்தது’ என்று இவனை அழியாதே, ஸர்வாதிகனான தன்னை அர்த்தியாக்கி இந்த்ரனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்த விரகு. (வஞ்சனே) *கள்ளக்குறளாய் மாவலியை வஞ்சித்து, (திருமொழி 5-1-2), ‘சிறுகாலைக்காட்டி மூவடி’ (3-8-9) என்று வேண்டிப் பெரிய காலாலே அளந்து, இரண்டடியிலே அடக்கி ஓரடிக்குச் சிறையிலேயிட்டுவைத்த வஞ்சநம். ‘கொள்வான்’ என்கிறார், இந்த்ரன்பேறு தன்பேறாகையாலே. இத்வஞ்சநத்தையே ஸர்வகாலமும் சொல்லாநின்றது என் வாக்கானது. இத்வஞ்சநத்தை அநுஸந்தித்த பின்பு ராமாவதாரத்தின் செத்வையிலும் போகிறதில்லை; தன்பெருமை அழியாமற் செய்த இடமிறே ராமாவதாரம்; தன் பெருமையை அழிய மாறின இடமிறே இது. (எப்போதும்) – கலியர் ‘சோறு சோறு’ என்னுமாபோலே.

மூன்றாம் பாட்டு

வாசகமேயேத்தஅருள்செய்யும் வானவர்தம்

நாயகனேஎ!* நாளிளந்திங்களைக்கோள்விடுத்து*

வேயகம்பால்வெண்ணெய்தொடுவுண்ட ஆனாயர்

தாயவனேஎ!* என்றுதடவும் என்கைகளே.

– அநந்தரம், ஆஸ்ரிதத்யாமோஹத்தாலே அவர்கள்பதார்த்தங்களை விரும்பும்படியான க்ருஷ்ணனை என்கைகள் ஆராயாநின்றன என்கிறார்.

வாசகமே – வாசகமே, ஏத்த – ஏத்தும்படி, (அதுக்கே) அருள்செய்யும் – அருளைச் செய்யுமவனாய், வானவர்தம் – (அத்தாலே) ஸூரிகளுங் கொண்டாடும்படி, நாயகனே – நிர்வாஹகனானவனே!, நாள் – அபிநவனாய், இளம் திங்கள் – இளையனான உதயசந்த்ரனுடைய, கோள் – (அநுரக்தமான) தேஜஸ்ஸை, விடுத்து – (விரிக்குமாபோலே அதரசோபாவிசிஷ்டமான ஸ்மிதசந்த்ரிகையை) ப்ரகாசிப்பித்து, வேயகம்பால் – மூங்கிற்குடிலின் அகவாயிலே வைத்த, வெண்ணெய் – வெண்ணெயை, தொடு உண்ட – களவுகண்டு அமுதுசெய்தத்தாலே, ஆனாயர் – இடையருடைய, தாயவனே – ஸத்தாதிகளுக்கு  வர்த்தகனானவனே!, என்று – என்று, என்கைகள் – என்கைகளானவை, தடவும் – (களவுகாணப்புக்கவிடத்தே) தடவிப் பிடிக்கத் தேடாநின்றன.

நாள் – புதுமை. இளமை – உதயாவஸ்தை. கோள் – ஒளி. விடுத்தல் – விரித்தல். நாளிளந்திங்களைக் கோள்விடுத்தென்று – உபமாநமுகத்தாலே உபமேயமான ஸ்மிதத்தை லக்ஷிக்கிறது.

ஈடு: – மூன்றாம்பாட்டு. ‘கைகளானவை வாக்வ்ருத்தியையும் தன் வ்ருத்தியையும் ஆசைப்படா நின்றன’ என்கிறார்.

(வாசகமே ஏத்த இத்யாதி) – கைகளானவை ‘இத்வாக்கே யேத்திப்போ மித்தனையோ? நானும் ஒருகால் ஏத்தினாலாகாதோ?’ என்னா நின்றது. *விபந்யவ:* என்கிறபடியே ‘நித்யஸூரிகள் ஏத்த இருக்கிற உனக்கு, வாக்கு ஏதேனும் பச்சையிட்டதுண்டோ?’ நித்யஸூரிகளைப்போலே வாக்குக்கு உன்னையேத்துகையே ஸ்வபாவமாகக் கொடுத்தவனென்னுதல். நிரபேக்ஷனாயிருக்கச் செய்தேயன்றோ வாக்குக்கு ஏத்தலாம்படி ஸாபேக்ஷனாயிற்று; அந்த, நைரபேக்ஷ்யம் என்பக்கலிலே யாயிற்றோ? (நாளிளந்திங்களைக் கோள்விடுத்து)* படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசுவெண்ணெய்’ (திருமொழி 443) களவுகாணப் புக்கவிடத்திலே – உறிகளிலே சேமித்து வைப்பர்களிறே; தன்நிறத்தின் இருட்சியாலும் அத்விடத்தின் இருட்சியாலும் தெரியாமையாலே தடவா நிற்கச்செய்தே, கையிலே வெண்ணெய்த்தாழிகள் தட்டின ப்ரியத்தாலே ஸ்மிதம் பண்ணுமிதுவே கைவிளக்காக அமுது செய்யுமாயிற்று. ஆள் தட்டிற்றாகில் வாயை மூட அமையுங்காணும்; ஆள்தட்டுகைதான் அநபிமதமாகையாலே ஸ்மிதம் மாறுமே. பின்னை ஸ்ரீகௌஸ்துபத்தைக் கையாலே புதைக்க அமையுமே. அபிநவசந்த்ரனைப்போலேயாயிற்று முறுவல் இருக்கிறது. _செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைப்போல் நக்க செந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர் வெண்பல் முளையிலக_ (பெரியாழ்.திரு. 1-7-2) என்னக்கடவதிறே. திங்கள்போ லென்னாதே, திங்களென்றது-முற்றுவமையிருக்கிறபடி; _தாவி வையங்கொண்ட தடந்தாமரை_ (6-9-9) என்னுமாபோலே. (கோள்விடுத்து) தேஜஸ்ஸைப் புறப்படவிட்டு; திருவதரம் மறைக்குமத்தைத் தவிருகை. (வேயகம்) – மூங்கிலாலே சமைந்த அகம். (பால்வெண்ணெய் தொடுவுண்ட) – அத்வகங்களில் பாலையும் வெண்ணெயையும் களவுகண்டு அமுது செய்த. அகத்திடத்து வெண்ணெயென்றுமாம். (வேயகம்பால் வெண்ணெய் தொடுவுண்ட) வேய்த்துஅகத்திடத்து வெண்ணெயைக் களவுகண்டு அமுது செய்த என்றுமாம். வேய்த்து – அவஸரம் பார்த்து. வேய்த்திறே களவு காண்பது: _போரார் வேல்_ (சிறிய திரு.31) இத்யாதி. (ஆனாயர் தாயவனே என்று) ஆனாயர்க்குத் தாய்போலே பரிவனானவனே என்று. (தடவும் என்கைகள்) – படலையடைத்து உள்ளே புக்குக் கொண்டியிலே பிடிக்கக் காணுந்தேடுகிறது. நவநீதசௌர்ய வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறதில்லை. _*ராமம் மேநுகதாத்ருஷ்டி:* இத்யாதி.-கடல்கொண்ட வஸ்து மீளுமோ? அறுபதினாயிரமாண்டு மலடுநின்று பட்டினிவிட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை, இனி நம்மது என்று வழக்குப்பேசினால் பசையுண்டோ? *அத்யாபி* – தன்னைக்கொண்டு கார்யங்கொள்ளவேண்டும் இற்றைக்கும் உதவுகிறதில்லை. அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற ஸௌபாக்யமுடைய உன்னைக்கண்டு தரிக்கவேண்டும் இத்வளவிலும் மீளுகிறதில்லை._

நான்காம் பாட்டு

கைகளாலாரத் தொழுதுதொழுது உன்னை*

வைகலும்மாத்திரைப்போதும் ஓர்வீடின்றி*

பைகொள்பாம்பேறி உறைபரனே!* உன்னை

மெய்கொள்ளக்காண விரும்பும் என்கண்களே.

– அநந்தரம், இவ்வவதாரமூலமான அநந்தசாயியைக் காண ஆசைப்படாநின்றது என் கண்கள் என்கிறார்.

என் கண்கள் – என் கண்களானவை, கைகளால் – கைகளாலே, உன்னை – உன்னை, ஆர தொழுதுதொழுது – பரிபூர்ணமாகப் பலகாலுந்தொழுது, வைகலும் – காலதத்த்வமுள்ளதனையும், ஓர் மாத்திரைப் போதும் – ஒரு க்ஷணமாத்ரமும், வீடு இன்றி – விடாதே, பைகொள் – விரிகிற பணங்களையுடைய, பாம்பு  ஏறி உறை – திருவநந்தாழ்வான்மேலே நித்யவாஸம்பண்ணுகிற, பரனே – பரமசேஷியே!  உன்னை – உன்னையே, மெய்கொள்ள காண – அபரோக்ஷித்துக் காணவேணுமென்று, விரும்பும் – ஆசைப்படாநின்றன.

கண்கள் கையாலேதொழுகையாவது – அதினுடைய வ்ருத்தியிலும் அந்வயிக்கத் தேடுகை. பை – பணம்.

ஈடு: – நாலாம்பாட்டு. ‘கண்களானவை கைகளின் வ்ருத்தியையும் ஸ்வவ்ருத்தியையும் ஆசைப்படாநின்றது என்கிறார்.

(கைகளால்)காமிநியாய் முலையெழுந்துவைத்துக் காந்தனுடைய கரஸ்பர்சம் பெறாத வோபாதியிறே இவற்றுக்குத் தொழாதொழிகை. கைவந்தபடி செய்யவிறே இவர் ஆசைப் படிகிறது; *தேஹஸம்பத்திரீஸ்வராய* இறே. (ஆரத்தொழுது) – ‘பசியர் வயிறாரவுண்ண’ என்னுமாபோலே, ‘உன்னைத்தொழவேணும்’ என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே உறாவிக் கிடக்கிற இக்கைகளானவை நிறையத் தொழுது. வாய் வந்தபடி சொல்லவும், கைவந்தபடி செய்யவுமிறே இவர் ஆசைப்படுகிறது. வாய்க்கு ஏத்துகையோபாதியிறே கைக்குத் தொழுகையும். (தொழுதுதொழுது) ப்ரயோஜநாந்தரத்துக்காகத் தொழில் ப்ரயோஜனத்தளவிலே மீளும்; ஸாதநபுத்த்யா தொழில் ஸாத்யம் ஸித்தித்தவளவிலே மீளும்; அங்ஙனன்றிக்கே, இதுவே யாத்ரையாய். _*முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத்* என்று – முக்தர்க்கு  லக்ஷணஞ் சொல்லுகிறவிடத்தில் ஸ்வேதத்வீபவாஸிகள்படியாகச் சொல்லி, அவர்களையிறே *நித்யாஞ்சலிபுடா:* என்கிறது. *ஹ்ருஷ்டா:* – பசியிலே உண்ணப் பெற்றாற்போலேயாயிற்று, தொழுதால் இருக்கும்படி. *நமஇத்யேவ வாதிந:* – இதுவே —லமாயிருக்கை_. (உன்னை) இத்தலை தொழுது ஸத்தை பெறுமாபோலே, தொழுவித்துக்கொண்டு ஸத்தைபெறும் உன்னை. கைவந்தபடி செய்யச் சொல்லிவிட்ட உன்னை; ப்ராப்தனான உன்னை; *ஸேவா ஸ்வ வ்ருத்தி:*  இறே புறம்பு தொழுவது. தொழுதல்லது தரியாத கையாலே தொழுவித்துக்கொண்டல்லது தரியாத உன்னை. (வைகலும் இத்யாதி) – நாள்தோறும், அதுதன்னிலும் ஒருக்ஷணமும் இடைவிடாதே. ஒரு நாளைக்கு ஒருகால் தொழுது தேவையற்றிராதே, இடைவிடாதே தொழுது. நித்யாத்நிஹோத்ராதிகளோபாதியாகப் போராது. (பைகொளித்யாதி) – தொழுவித்துக் கொள்ளுகைக்கு ஈடான உச்ச்ராயத்தையும், ஸ்ப்ருஹணீயதையையும், தொழுமவர்களிருக்கும்படியையும் சொல்லிற்று. திருமேனியோட்டைஸ்பர்சத்தாலே விகஸிதமான பணங்களையுடைய திருவநந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே, தகட்டிலழுத்தின மாணிக்கம் போலேயிருக்கையாலே ‘பரன்’ என்கிறது. அநந்தசாயியிறே ஸர்வேஸ்வரனாவான். பர்யங்கவித்யையிற் சொல்லுகிற பேற்றை ஆசைப்படாநின்றது. (உன்னை) – ப்ராப்தனுமாய் போக்யனுமான உன்னை. (மெய்கொள்ளக்காண) – பத்தும் பத்தாக மெய்யேகாண. மாநஸாநுபவம் பாவநாப்ரகர்ஷத்தாலே ப்ரத்யக்ஷஸமாநமாம்படி விஶததமமாக, ‘இனிக் கிட்டிற்று’ என்று அணைக்கத் தேட, கைக்கு எட்டாமையாலே கூப்பீட்டோடே தலைக்கட்டிவிடுகையன்றிக்கே, ப்ரத்யபிஜ்ஞார்ஹமாம்படி காணத்தேடாநின்றது. (விரும்பும்) – ஆசைப்படா நின்றது. கிடைப்பது, கிடையாதொழிவது; ஆசைப்படாநின்றது. (என் கண்களே) – என் கண்கள் தன்கைகளாலே தொழவும் தான் காணவும் ஆசைப்படாநின்றது. ஸ்ரீபரதாழ்வான், பெருமாள்பின்னே போன இளையபெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் ஆசைப்பட்டாற்போலே.

ஐந்தாம் பாட்டு

கண்களால்காண வருங்கொல் என்று ஆசையால்*

மண்கொண்டவாமனன் ஏற மகிழ்ந்துசெல்*

பண்கொண்டபுள்ளின் சிறகொலிபாவித்து*

திண்கொள்ளஓர்க்கும் கிடந்து என்செவிகளே.

– அநந்தரம், என் செவிகளானவை காணவும் ஆசைப்பட்டு, காட்சிகொடுக்க வரும்போது பெரியதிருவடியின் சிறகொலியைக் கேட்கவும் ஆசைப்படாநின்றன என்கிறார்.

கண்களால் -(காண்கைக்குக் கரணமான) கண்களாலே, காண – அபரோக்ஷித்துக் காணும்படி, வருங்கொல் – வரக்கூடுமோ?, என்று – என்கிற, ஆசையால் – ஆசையாலே, மண்கொண்ட – (தன்வஸ்துவைப் பிறர்க்குக் கொடாமல் அர்த்தியாய்ச்சென்று) பூமியைக் கொண்ட, வாமனன் – ஸ்ரீ வாமநனானவன், ஏற – (ஆசைப்பட்டார்க்கு முகங்காட்டுகைக்குத்) தன்னைமேற்கொள்ள, மகிழ்ந்து – (அத்தாலே) ப்ரீதனாய், செல் – செல்லக்கடவனான, புள்ளின் – பெரியதிருவடியினுடைய, பண்கொள் – ஸாமஸ்வரத்தை யுடைத்தான, சிறகொலி – சிறகொலியை, பாவித்து – நினைத்து, என்செவிகள்-என்செவிகளானவை, கிடந்து – (பரவசமாய்க்) கிடந்து, திண்கொள்ள – திண்ணியதாக, ஓர்க்கும் – நிரூபியாநின்றன. பண்கொண்ட என்று – கலனையுடைத்தான என்றுமாம்.

ஈடு: – அஞ்சாம்பாட்டு. செவிகளானவை கண்ணினுடைய வ்ருத்தியையும் தன்னுடைய வ்ருத்தியையும் ஆசைப்படாநின்றன என்கிறார்.

(கண்களால் இத்யாதி) ‘தன்னைக்காணவேணும்’ என்று விடாய்த்த இக்கண்ணாலே ஒருகால் காணவருமோ? என்னும் ஆசையாலே. கன்னமிட்டும் காணவேண்டும்படியிறே வஸ்துவைலக்ஷண்யம் இருப்பது. *சக்ஷுஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண:* என்கிறபடியே கண்ணுக்கு வகுத்த விஷயத்தைக் காணவருமோ? என்னாநின்றது. *காத்ரைஸ் சோகாபிகர்ஸிதை:- ஸம்ஸ்ப்ருசேயம்* என்னுமாபோலே. அவனும் வருவானாயோ? என்னில்,-அதொன்றில்லை. (ஆசையால்) தன் சாபலத்தாலே. அன்றியே, தன் ஆசையைப் பார்க்க அவன் வரவு தப்பாது என்றும். அவ்வளவு அமையுமொன்றிறே; பகவத்விஷயத்தில் இட்ட படை கற்படையிறே; *நேஹாபிக்ரமநாசோணஸ்தி.* (மண்கொண்ட வாமனன்) – மண்கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார் காணும்; முடிசூடின பின்பும் கருந்தரையில் பேர்சொல்லும் அந்தரங்கரைப்போலே. வளர்ந்தபின்பும் வாமனன் என்கிறார், இதிலே தாம் துவக்குண்டபடியாலே. (ஏறமகிழ்ந்து செல்) – தன்னை மேற்கொள்ள, அத்தால் வந்த ஹர்ஷப்ரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு ஸஞ்சரியாநிற்கை. (பண்கொண்டபுள்) – பண் என்று – வாஹநபரிஷ்க்ரியையைச் சொல்லுதல்; அன்றியே, வேதாத்மாவாகையாலே ப்3ருஹத்ரதந்தராதி ஸாமங்களைச் சொல்லுதல். (சிறகொலி பாவித்து) திருவடிசிறகில் த்4வநியையே பா4வித்து. (திண்கொள்ள ஒர்க்கும்) முன்னேநின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறதில்லை. இத்தையே திண்ணிதாகப் புத்தி பண்ணாநின்றது. அதின்பக்கல் பக்ஷபாதமிறே இதுக்கு அடி.

ஆறாம் பாட்டு

செவிகளாலார நின்கீர்த்திக்கனியென்னும்

கவிகளே* காலப்பண்தேன் உறைப்பத்துற்று*

புவியின்மேல் பொன்னெடுஞ்சக்கரத்து உன்னையே*

அவிவின்றி ஆதரிக்கும் எனதாவியே.

– அநந்தரம், கையும் திருவாழியுமான அழகை அநுபவிக்கவேணுமென்று என் ப்ராணன் ஆசைப்படாநின்றது என்கிறார்.

எனது – என்னுடைய விளம்பாக்ஷமமான, ஆவி – ப்ராணனானது, நின் – உன்னுடைய, கீர்த்தி கனி – கிர்த்தியின் பக்வபலம், என்னும் – என்னலாம்படியான, கவிகளே – கவிகளையே, காலம் பண் – காலாநுரூபமான பண்ணாகிற, தேன் – தேனிலே, உறைப்ப – மிகவும்செறிய, துற்று – துற்று, செவிகளால் – செவிகளாலே, ஆர – நிரம்ப அநுபவிக்கைக்காக, புவியின்மேல் – பூமியிலே, பொன் – தர்ஶநீயமாய், நெடு – நிரதிசயபோக்யமான, சக்கரத்து – திருவாழியையுடைய, உன்னையே – உன்னையே, அவிவு இன்றி – விச்சேதரஹிதமாய், ஆதரிக்கும் – ஆதரியா நிற்கும்.

ஈடு: – ஆறாம் பாட்டு. ‘என்னுடைய ப்ராணனானது உன்னுடைய கீர்த்தியைத் தன் செவியாலே கேட்க ஆசைப்படா நின்றது’ என்கிறார்; கன்னமிட்டுக்கொண்டும் கேட்க வேண்டும்படியிறே பகவத்கீர்த்தி இருப்பது.

(செவிகளால் ஆர) செவிகள்வயிறு நிறையும்படியாக. (நின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே) கீர்த்திரூபமாய்க் கனிபோலேயிருக்கிற கவிகளை. கவி, கனிபோலிருக்கை யன்றிக்கே, கனி, கவியாயிற்று என்கிறதிறே போக்யதாதிசயத்தாலே. (காலம் இத்யாதி) – செருக்கராயிருக்கும் ராஜபுத்ரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து புஜிக்குமாபோலே,  உன்கீர்த்தியாகிற கனிகளைக் காலங்களுக்கு அடைத்த பண்௰கிற தேனிலே, அத்தேன் மிஞ்சும்படி கலந்து. (துற்று) – அநுபவித்து. அது பரமபதத்தே போய்ப் பெறுவதொன்றன்றோ? என்ன. (புவியின்மேல்) – எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க வொண்ணாது; பசித்த விடத்தே சோறிடவேணும். (பொன்னெடுஞ்சக்கரம் இத்யாதி) – தேசம் இதுவேயானவோபாதி விஷயமும் இதுவேயாக வேணும். *தமஸ:பரமோ தாதா சங்கசக்ரகதாதர:* ஸ்ப்ருஹணீயமாய் போக்யதை எல்லையின்றிக்கே யிருக்கிற திருவாழியை நிரூபகமாகவுடைய உன்னையே. (அவிவின்றி ஆதரிக்கும்) விச்சேத மில்லாதபடி ஆதரியா நின்றது. _துர்லபம்_ என்று பாராதே கிடைக்கும் விஷயத்திற்போல சாபலம் பண்ணாநின்றது. (எனது ஆவியே) ‘தன்னடையே வரப்பெறவேணுங்காண்’ என்றால் அது கேளாது, ‘அவனருள் பெறுமளவாவி நில்லாது’ (9-9-6) என்னும்படியான ஆவி.

ஏழாம் பாட்டு

ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை*

தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்!*

பாவியேன்நெஞ்சம் புலம்பப்பலகாலும்*

கூவியும்காணப்பெறேன் உனகோலமே.

– அநந்தரம், ‘இப்படி ஆஸ்ரிதஸுலபனாய் போக்யனான உன்னை அநுபவிக்கப்பெறுகிறிலேன்’ என்று கரணங்களோபாதி கரணியான தம்முடைய இழவு சொல்லுகிறார்.

ஆவியே – (வ்யதிரேகத்தில் முடியும்படி தாரகமான) ப்ராணனாய், ஆர் – பரிபூர்ணமான, அமுதே – நித்யபோக்யபூதனாய், என்னை ஆளுடை – என்னை அடிமைகொள்ளுகைக்கீடான, அம் தூவி – அழகிய சிறகையுடைய, புள் – பெரியதிருவடியை, உடையாய் – வாஹநமாகவுடையனாய், சுடர் – (ப்ரதிபந்தகத்தைக்கழிக்கும்) உஜ்ஜ்வலமான, நேமியாய் – திருவாழியையுடையவனே! உன-உன்னுடைய, கோலம் – (நிரதிசயபோக்யமான) வடிவழகை, பாவியேன் – மஹாபாபியான என்னுடைய, நெஞ்சம் – நெஞ்சானது, புலம்ப – ஆசைப்பட்டுக்கூப்பிட, (அத்வாசையடியாக),பலகாலும் – அநேககாலம், கூவியும் – நான் கூப்பிட்டவிடத்திலும், காணப்பெறேன் – கண்டநுபவிக்கப் பெறுகிறிலேன். *தத்தஸ்ய ஸத்ருசம்* என்கிற ஸ்வரூபமும் இழந்தேன். அபிமதமும் இழந்தேன் என்று கருத்து.

ஈடு: – ஏழாம்பாட்டு. கரணங்களையொழியத் தம்முடைய இழவு சொல்லுகிறார். ப்ரஜைகளினிழவும் பசியும் சொன்னார்-கீழ்; தம் இழவும் பசியும் சொல்லுகிறார்-மேல். இப்பாட்டில், ‘நான் மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாயுந் தீரப்பெற்றிலேன், என் விடாயுந் தீரப்பெற்றிலேன்’ என்கிறார்.

(ஆவியே) ‘அபிநிவேசம்மிக்காலும், ப்ராப்யனாகிறான் ஶேஷியானால் வருந்தனையும் பாடாற்ற வேண்டாவோ?’ என்ன, ‘ப்ராணனை விட்டிருக்கப்போமோ?’ என்கிறார். _ஆவியாவியும் நீ_ (234) என்கிறபடியே அவனிறே ஆவி. (ஆரமுதே) – தா4ரகமுமாய் போ4க்யமுமாயிருக்க, விட்டிருக்கப்போமோ? ஆரமுது – ஆர்ந்த அமுது; பூர்ணமான அம்ருதம்; தேவஜாதியினுடைய அம்ருதத்தில் வ்யாவ்ருத்தி. உள்ளுந்தோறும் தித்திக்கும் அமுது. *அமுதிலுமாற்ற வினிய அமுதமிறே (1-6-6). (என்னை இத்யாதி) – மற்றை அம்ருதத்தைக் கொண்டு வருமவனே காணும் இத்வம்ருதத்தையும் கொண்டு வருவான். பெரியதிருவடிதிருத்தோளிலிருக்கும் இருப்பைக்காட்டி என்னையெழுதிக் கொண்டவனே! அதவா, ‘என்னையாளுடைத் தூவியம்புள்’ என்று பெரிய திருவடியோடே அந்வயித்துச் சொல்லவுமாம். சேர்க்குமவர்களுக்கு சேஷமென்றிறே இவர் இருப்பது. தா4ரகமுமாய் போ4க்யமுமாயிருப்பதொன்றைக் கொண்டு வந்து தருவாருண்டாயிருக்க, ஆறியிருக்க விரகு உண்டோ? (சுடர்நேமியாய்) – அழகுக்கும் விரோதி நிரஸநத்துக்கும் தானேயாயிருக்கும் பரிகரமிறே. வரும் வழியில் ப்ரதிபந்தகங்கள் உண்டாகிலும் கைம்மேலே தீர்த்துக்கொண்டு வருகைக்குப் பரிகரமுண்டே. (பாவியேன்) – பகவத் விஷயத்தை ஆசைப்பட்டாரில் இழந்தாரில்லை கண்டீர்; _ஆரே  துயருழந்தார்_ (மூன்.திரு.27) இத்யாதி. (பாவியேன் நெஞ்சம்) – எனக்குக் கரணமாயிறே இது இழக்கவேண்டிற்று. _நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே_ (பெரு.திரு.7-3) – ‘தமப்பனான ப்ராப்தியொத்திருக்க, ஸுக்ருதம் பண்௰த என்னைக் கைப்பிடிக்கையிறே ஸ்ரீவஸுதேவர் இழந்தது’ என்னுமாபோலே. *மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்* என்னக்கடவதிறே. (புலம்ப) – நெஞ்சானது காணப்பெறாத இழவோடே கூப்பிட. _கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான்_ (முதல்.திரு.56) என்னுமாபோலே, _நெஞ்சத்துப் பேராதுநிற்கும் பெருமானையிறே_ (மூன்.திரு.81) நெஞ்சு காணப்பெறாமல் கூப்பிடுகிறது. (பலகாலும்) – ஒருகால் கூப்பிட்டார்க்கும் இழக்க வேண்டாத விஷயத்திலே பலகால் கூப்பிட்டும். (கூவியும் காணப்பெறேன்) – ‘ஒன்றில் அபிமதம் பெற்றேனல்லேன்; ஸ்வரூபம் பெற்றேனல்லேன்’ என்கிறார். *தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்* என்றிருக்கப்பெறேனல்லேன்; மடலூர்ந்தார் பெற்றபேற்றைப் பெற்றேனல்லேன். என் ஸ்வரூபத்தையும் அழித்தேன், அவன்ஸ்வரூபத்தையும் அழித்தேன். அவன்நீர்மையையும் அழித்தேன், என் சேஷத்வத்தையும் அழித்தேன். அவனீஸ்வரத்வத்தையும் அழித்தேன், என்னுடைய ஈசிதவ்யத்வமும் போயிற்று. இனிக்கொள்ள இருக்கிறார் ஆர்? கொடுக்க இருக்கிறார் ஆர்? (உனகோலமே) -இரண்டு தலையையும் அழித்துப் பெறவேண்டும் விஷயவைலக்ஷண்யம் சொல்லுகிறது. வ்யதிரேகத்தில் கண்ணுறங்குதல், சூது சதுரங்கங்களோடே போது போக்குதல், செய்யலாம் விஷயமாகப் பெற்றேனோ? _உண்டோ கண்கள் துஞ்சுதல்_ (திருவிரு.97) என்றும், _என்னினைந்து போக்குவரிப்போது_ (பெரிய திரு.86) என்றும் கண்ணுமுறங்காதே போதுபோக்கவும் அரிதாயிறே இருப்பது.

எட்டாம் பாட்டு

கோலமே! தாமரைக்கண்ணது ஓரஞ்சன

நீலமே!* நின்றுஎனதாவியை ஈர்கின்ற

சீலமே!* சென்றுசெல்லாதன முன்னிலாம்

காலமே!* உன்னை எந்நாள்கண்டுகொள்வனே?

– அநந்தரம், அநுபாத்யமான ஸௌந்தர்யாதிகளையுடைய உன்னை எந்நாள் கண்டு அநுபவிக்கப் பெறுவது? என்கிறார்.

கோலமே – (ஓப்பனை ரூபம்தரித்தாற்போலே) தர்ஶநீயனாய், தாமரை – தாமரை போன்ற, கண்ணது – கண்களையுடைத்தாய், ஓர் – அத்விதீயமான, அஞ்சனம் – அஞ்சநத்ரவ்யத்தினுடைய, நீலமே – நீலநிறந்தான் வடிவானவனாய், (இந்த ரூபகுணத்தளவன்றியே), நின்று – ஸ்திரமாய் நின்று, எனது ஆவியை – என் ஆத்மாவை, ஈர்கின்ற – ஈராநிற்கிற, சீலமே – சீலமே நிரூபகமானவனாய், சென்று – சென்ற பூதகாலமும், செல்லாதன – செல்லாத பவிஷ்யத்காலமும், முன்னிலாம் காலமே – முன்னே வர்த்தமாநமாயுள்ள காலமும் நீயிட்ட வழக்காம்படியானவனே! உன்னை – (ஏவம்விதனான) உன்னை, எந்நாள் – என்று?, கண்டுகொள்வன் – கண்டு அநுபவிப்பது? கோலமேய்ந்த தாமரைக்கண்ணனென்றுமாம்.

ஈடு: – எட்டாம்பாட்டு. ‘உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு ஒரு காலமில்லையோ? அது வரும் கிடீர் என்ன’, ‘அதுவும் நீ இட்ட வழக்கன்றோ?’ என்கிறார்.

(கோலமே) அழகும், அதுக்கு ஆஸ்ரயமும் என்று இரண்டின்றிக்கே, அழகு தானே வடிவாயிருக்கிறபடி. ஜ்ஞாதாவின் பக்கலிலே ஜ்ஞாநத்யபதேசம் பண்ணாநின்றதிறே தத்குண ஸாரத்வத்தாலே; அப்படி அழகே விஞ்சி அத்தையிட்டு நிருபிக்கவேண்டும்படி யிருக்கையாலே ‘கோலமே’ என்கிறார். (தாமரை இத்யாதி) அதுக்கு ஆஸ்ரயமான திருவுடம்பு இருக்கிறபடி. அதுதன்னிலும் ஒரோ அவயவங்களே அமைந்திருக்கிறபடி. சிவப்பாலும் விகாஸத்தாலும் மார்த்தவத்தாலும் தாமரையை ஒருவகை உபமை சொல்லலாம்படியிருக்கிற கண்ணழகையுடையவனே! (அஞ்சனநீலமே) ‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி. ஒன்றே உபமாநமாவ தொன்றில்லாமையாலே அங்குமிங்கும் கதிர் பொறுக்குகிறார். நைல்ய குணந்தன்னை வடிவாக வகுத்தாற்போலேயாயிற்று இருப்பது. அழகும் வடிவுமேயாய் அகவாயில் ஒரு பசையற்றிருக்குமோ? என்னில்,-(நின்று இத்யாதி) வ்யதிரேகத்தில் வடிவை மறக்கிலும் மறக்கவொண்ணாதபடி பின்னாடி, என் நெஞ்சை ஈராநின்றுள்ள சீலமே ஸ்வரூபமானவனே! _செய்யதாமரைக்கண்ண_(3-6)னில் _நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள்கடல் வண்ணன்_ (3-6-9) என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையையிறே இவர் நினைக்கிறது. அன்றியே, _வளவேழுல_
(1-5)கில் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட சீலமாதல். இப்படி அழகும் குணங்களும் உண்டானாலும், பெறுமிடத்தில் இன்ன காலமென்றில்லையோ? என்னில், – (சென்று இத்யாதி) -அக்காலமும் நீ இட்ட வழக்கன்றோ? _*காலஸ்ய ச ஹி ம்ருத்யோச்ச ஜங்கமஸ்த்தாவரஸ்யச | ஈசதே பகவாநேகஸ் ஸத்யமேதத் ப்ரவீமி தே ||* –  பதார்த்தங்களினுடைய உத்பத்திக்கு முன்பும்நின்று, இவையழிந்தாலும் நிற்கக்கடவ காலத்துக்கும், இவற்றினுடைய ஸம்ஹர்த்தாக்களுக்கும் ஸ்ரஷ்டாக்களுக்கும்; *ம்ருத்யுர் யஸ்யோபஸேசநம்* என்று ஸம்ஹர்த்தாக்களை ம்ருத்யுசப்தத்தாலே சொல்லக்கடவதிறே. ஸ்ருஷ்டிக்குக் கர்மீப4வித்த பதார்த்தங்களினுடைய உத்பத்திக்கு முன்பும் உளனாய், அழிந்தாலும் உளனாய், என்றுமொக்க உணர்ந்திருந்து ஸ்ரஷ்டாக்களும் ஸம்ஹர்த்தாக்களும் ஸ்ருஜ்யருமான இத்தையடையத் தன் புத்த்யதீநமாக நியமிக்கிறானொருவனே! _ஸத்யமித்யாதி_ – பகவத் விஷயத்தில் அர்த்தவாதமில்லை; தன்னை ‘ஆப்தன்’ என்று விஸ்வஸித்தவனுக்குப் பொய்சொல்வாரில்லை_ ‘சென்று’ என்கிறது பூத காலத்தை. ‘செல்லாதன’ என்கிறது பவிஷ்யத்காலத்தை. ‘முன்னிலாங்காலம்’ என்கிறது-முன்னே வர்த்திக்கிற வர்த்தமாந காலத்தை. (காலமே) காலத்ரயத்தையும் நீயிட்ட வழக்காகவுடையவனே! (உன்னை இத்யாதி) – வடிவழகும் குணங்களும் விடலாயிருந்ததில்லை; காலக்கழிப்புச் சொல்ல வொண்௰தபடியாயிருந்தது. ஆனபின்பு, ‘நான் உன்னைக் காண்பது என்று?, சொல்லாய்.’ *பூர்ணே சதுர்த்தசே வர்ஷே பஞ்சம்யாம்* என்றாற்போலே ‘நீயும் நம்மை இந்நாள் காணக்கடவை’ என்று சொல்லாய்.’

ஒன்பதாம் பாட்டு

கொள்வன்நான்மாவலி! மூவடிதாவென்ற

கள்வனே!* கஞ்சனைவஞ்சித்து வாணனை

உள்வன்மைதீர* ஓராயிரம்தோள்துணித்த

புள்வல்லாய்!* உன்னைஎஞ்ஞான்றுபொருந்துவனே?

– அநந்தரம், ஸமஸ்தப்ரதிபந்தக நிவர்த்தகனான உன்னை நான் ப்ராபிப்பது என்று? என்கிறார்.

‘மாவலி – மாவலீ!, நான் – நான், மூவடி கொள்வன் – மூவடி கொள்வன், தா – தா ’ என்ற – என்று (முக்தோக்தியாலே அவனை வசீகரித்த), கள்வனே – க்ருத்ரிமனாய், கஞ்சனை வஞ்சித்து – கம்ஸனுடைய வஞ்சநம் அவன்தன்னோடேபோம்படிபண்ணி, வாணனை – வாணனை, உள் வன்மை தீர – நெஞ்சுவலி அழியும்படி, ஓர் தோள் ஆயிரம்  – அத்விதீயமான தோள் ஆயிரத்தையும், துணித்த – துணித்துப்பொகட்ட, புள்வல்லாய் – கருடவாஹநனே!  உன்னை – (இப்படி ஆஸ்ரிதவிரோதிநிவர்த்தநஸமர்த்தனான) உன்னை, எஞ்ஞான்று பொருந்துவன் – என்று சேர்வது?

ஈடு: – ஒன்பதாம்பாட்டு. ‘ரக்ஷணோபாயஜ்ஞனுமாய் விரோதிநிரஸந
சீலனுமான உன்னை நான் கிட்டுவது என்று?’ என்கிறார்.

(கொள்வன்) மலையாளர் வளைப்புப்போலே, ‘கொண்டல்லது போகேன்’என்றானாயிற்று. அன்றியே, இவனுடைய விநீத வேஷத்தைக்கண்டு ‘இவன் நம்பக்கலிலே ஒன்றைக் கொள்வதுகாண்!’ என்று நினைந்தமை தோற்ற இருந்தானாயிற்று மஹாபலி; அவன் நினைத்தத்தை அறிந்து, ‘நான் கொள்வன்’ என்கிறான். அன்றியே, இவன்வடிவில் நைரபேக்ஷ்யத்தைக்கண்டு, ‘இவன் நம்கை ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான்; ‘நீ அங்ஙன் நினைக்கவேண்டா; நான் ஸாபேக்ஷன்’ என்கிறார். (நான்) உன்பக்கல் பெற்றாலன்றி ஓரடியிடாத நான். (மாவலி) – பிறந்தவன்றே பி4க்ஷையிலே அதிகரிக்கையாலே ப்ரபுக்களையுபசரித்து வார்த்தை சொல்லியறியானே. முன்பு சிலர்க்குத் தாழ்வு சொல்லியறியான்; பிறந்த பின்பு வாஸனை பண்ணுகைக்கு நாளில்லை; அத்தாலே, ‘மாவலி’ என்கிறான். எல்லாரும் தன்னை உயரச்சொல்லுமதொழிய இப்படிச் சொல்லக் கேட்டறியாமையாலே, இவன், ஒரு பா3லன்,  தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைத்தவாறே இனியனாய் முகத்தைப் பார்த்து, ‘உனக்கு வேண்டுவதென்?’ என்றான். (மூவடி) – தன்பக்கல் கொள்ளுமவர்களில், இப்படி சிறுக அர்த்திப்பாரில்லாமையாலே அநாதரித்திருந்தான்; _அந்யபரதை பண்ணாதே, ‘தா’ _ என்கிறான். (என்ற கள்வனே) – இந்த்ரன் சரணம்புக்கு நின்றான். உதாரனாயிருப்பானொருவன் அவனுடைய ராஜ்யத்தைப் பறித்துக்கொண்டான்; _ராவணாதிகளைப் போலே அழியச்செய்யப் போயிற்றில்லை,  ஒரு தர்மாபா4ஸத்தை யேறிட்டுக்கொண்டு நிற்கையாலே. இவனோ சரணம் புக்குநின்றான்; இனிப்போம் வழியென்?_ என்று பார்த்துத் தன்னை இரப்பாளனாக்கி. சுக்ராதிகள் ‘இவன் தேவகார்யஞ் செய்ய வந்தான்’ என்னச் செய்தேயும் அவன் நெஞ்சில் படாதபடி அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய்மாளப் பண்ணின வஞ்சநங்களெல்லாவற்றையும் நினைத்து ‘கள்வனே’ என்கிறார். (கஞ்சனை வஞ்சித்து) – கம்ஸன் மாதுலனாய், ப்ரமாதத்தாலே புகுந்ததாகத் தானும் து:க்கியாய்க் கண்ண நீர் பாய்த்துவானாக வாசலிலே குவலயாபீடத்தையும் மல்லரையும் நிறுத்திவைக்க, அத்தையடைய நிரஸித்து, கம்ஸன் கோலின வஞ்சநத்தை அவன் தன்னோடே போக்கினவனே! (வாணன் இத்யாதி) – க்ஷுத்ரதேவதையைப்பற்றி *அதஸோணபயங்கதோ பவதி* என்றிருக்குமாபோலே இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போம்படியாகப் பெரிய திருவடியின்மேலேயேறிச் சாரிகைவந்தவனே! (ஆயிரந்தோள் துணித்த) – ‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கைகழியவிட்டான். (புள்வல்லாய்) – ‘வாள்வல்லாய்’, ‘தோள்வல்லாய்’ என்றாப்போலே. (உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே) அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலேயிருக்கிறது காணும், ஸ்வரூபஜ்ஞாநம் பிறந்தவாறே. *அநந்யாராகவேணாஹம்* என்கிற பிராட்டி அசோகவநிகையிலே பிரிந்திருந்தாப்போலேயிருக்கிறது காணும், ஸ்வரூபஜ்ஞாநம் பிறந்தவாறே உடம்புடனிருக்கும் இருப்பு. ஸ்வரூபஜ்ஞாநம் பிறந்தவாறே அநாதிகாலம் ஸம்ஸாரியாய் நின்றநிலை வந்தேறியாய்த் தோற்றிற்று. _ஸர்வஜ்ஞனாய், ஸர்வ சக்தியாய், சீலாதிகுணங்களையுடைய உன்னைப் பார்த்தால் இழக்கவேண்டுவதில்லை; நான் இழக்கமாட்டாதவனாயிருந்தேன்; ஆனபின்பு, உன்னைக் கிட்டுங்காலம் சொல்லாய்_ என்கிறார். _ஸர்வாத்மாக்களுக்கும் சேஷத்வம் அவிசிஷ்டமாயிருக்கச்செய்தேயும், பத்தரும் முக்தரும் நித்யருமென்கிற பிரிவோபாதியிறே மஹிஷிகளும்; ‘அநந்யா’ என்கிற பிராட்டியினுடைய வார்த்தை எல்லார்க்குஞ் சொல்லலாம்படியிறே ஸ்வரூபத்தை உணர்ந்தால் இருப்பது; ஈஸ்வரனில் பிராட்டிமார்க்கு பே4தஞ்சொல்லுகிற ப்ரமாணங்களெல்லாம் – அல்லாதாரோபாதி பிரிவுண்டென்னுமிடம் சொல்லுகிறன; ஐக்யஞ்சொல்லுகிற விடமெல்லாம் – பாரதந்த்ர்ய காஷ்ட்டையைப்பற்றச் சொல்லுகிறன_ என்று ப்ராஸங்கிகமாக ஓருருவிலே அருளிச்செய்தார். (ஆயிரந்தோள் இத்யாதி) – ‘கரபா3தையிறே இவனை இப்படி கலங்கப்பண்ணிற்று’ என்று அடுத்தேறாக வந்த கரத்தைக்கழித்து ப்ராப்தகரத்திலே நிறுத்தினவனே! _ஆயிரங்கரங்கழித்த ஆதிமால்_ (திருச்சந்த.53) இறே. (உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே) – ‘வாணனுடைய கைப்பற்றையுங்கழித்து இறையிலியாக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவன்?’ என்கிறார்.

பத்தாம் பாட்டு

பொருந்தியமாமருதினிடைபோய எம்

பெருந்தகாய்!* உன்கழல்காணியபேதுற்று*

வருந்திநான் வாசகமாலைகொண்டு* உன்னையே

இருந்திருந்து எத்தனைகாலம்புலம்புவனே?

– அநந்தரம், ப்ரதிபந்தகத்தை அநாயாஸேந போக்கும் உன் திருவடிகளைக் காணஆசைப்பட்டு எத்தனைகாலம் கூப்பிடக்கடவேன்? என்கிறார்.

பொருந்திய – (தன்னில்தான்) செறிந்துநிற்கிற, மா மருதின் இடை – பெரிய மருதுகளின் நடுவே, போய – (அநாயாஸேந) போய் அத்தை முறித்து, எம்பெருந்தகாய்-(உன்னை) எங்களுக்கு  ஸ்வாமியாகத் தந்த பெரியவனே! உன் – உன்னுடைய, கழல் – (அக்காலத்திலே மறியவிட்ட) சிவந்த திருவடிகளை, காணிய-காணவேணுமென்கிற, பேது- ஈடுபாட்டை, உற்று – உடையேனாய், வருந்தி – க்லேசத்து, நான் – (விளம்பாக்ஷமனான) நான், வாசகம் – (உன்னுடைய) குணவாசகமான, மாலைகொண்டு – சப்தஸந்தர்ப்பத்தைக் கொண்டு, உன்னையே-(நிரதிசயபோக்யனான) உன்னையே நோக்கி, இருந்து இருந்து – இளைத்திருந்திருந்து, எத்தனைகாலம் – எத்தனைகாலம், புலம்புவன் – கூப்பிடக்கடவேன்? காணிய – காண்கைக்கு.

ஈடு: – பத்தாம்பாட்டு. உன்னைக் காணப்பெறாத வ்யஸநத்தாலே க்லேசப்படுகிற நான் இன்னம் எத்தனை காலம் கூப்பிடக் கடவேன்? என்கிறார்.

(பொருந்திய மாமருது) – மருது, மாமருது, பொருந்திய மாமருது. மருதென்கையாலே – மரத்தைச் சொல்லி; _மரங்கள்போல் வலிய நெஞ்சம்_ (திருமாலை-27) என்று வன்மைக்கு மரத்தையிறே சொல்லுவது; அத்தாலே – நெஞ்சின் வன்மையைச் சொன்னபடி. மாமருது என்கையாலே, மாவென்று – கறுப்பாய், இத்தால் – சீற்றத்தைச் சொன்னபடி. அன்றியே, மஹத்தையாய், வேறுவினை செய்யாதே மேலேவிழ அமைந்திருக்கை. நினைத்த காரியத்துக்குப் பொருந்திய மாமருது. இவற்றின் நெஞ்சில் பொருத்தம். ஆக, இப்படி க்ருதஸங்கேதராய், சீற்றத்தையுடையராய், க்ருஷ்ண தர்சநத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையவை. (இடைபோய) இப்படி நிற்கிறவற்றின் அருகே போகையுங்கூட பயங்கரமாயிருக்க, இவற்றின் நடுவே ஒன்றிலே வெளிகண்டு போவாரைப் போலே போனானாயிற்று. (போய எம்பெருந்தகாய்) – அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப்போய் எனக்கு சேஷியான உன்னைத் தந்த பெரியோனே! (உன் கழல் இத்யாதி) *தத: கடாசப்தஸமாகர்ணநதத்பர:* என்று அவை முறிந்து விழுகிறபோதை ஓசை கேட்டுப்புரிந்து பார்த்து, அபூர்வதர்சநத்தாலே விகஸிதமான அக்கண்போலே சிவந்திருக்கிற திருவடிகளைக் காணவேணுமென்று ஆசைப்பட்டு. *ஜகாம கமலேக்ஷண:* – புரிந்துபார்த்த கண்களைக்காண ஆசைப்பட்டான் ருஷி; தவழ்ந்துபோகிற போதைத் திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர். எல்லா அவஸ்தையிலும் அவனை அடிவிடாரே. தந்தாம் ஜீவநத்தை நோக்கத்  தேடு மித்தனையிறே எல்லாரும்; இவரும் தம்முடைய ஜீவநத்தை நோக்கத்தேடுகிறார். (பேதுற்று) அறிவுகெட்டு. (வருந்தி) இழந்த விஷயத்துக்குத் தக்கபடியிறே க்லேசமும் இருப்பது. (நான்) – அடியேபிடித்து ஜீவித்துப் போந்த நான். _நின்செம்மாபாதபற்புத்தலை சேர்த்தொல்லை_ (2-9-1) என்கிறபடியே அத்திருவடிகள் பெறில் தலையாக ஜீவித்து, அதில்லையாகில் இல்லையாம் நான். (வாசகமாலைகொண்டு) – ஒருமலையெடுத்தாற் போலேயாயிற்று, இவர்க்கு ஒருசொற்கொண்டு சொல்லுகை. (உன்னை) – பேசித் தலைக்கட்டவொண்ணாத உன்னை. *யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ* இறே. (இருந்து இருந்து) – ஒருகால் ஒன்று சொல்லப் புக்கால் அது தலைக்கட்டுங்காட்டில் நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணுங்காணும். (எத்தனை காலம் புலம்புவனே) – ‘ஸாதநபுத்த்யா சொல்லமாட்டார், ப்ராப்யபுத்த்யா தவிரமாட்டார்; இதுக்கு முடிவு என்?’ என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

புலம்புசீர்ப் பூமியளந்தபெருமானை*

நலங்கொள்சீர் நன்குருகூர்ச்சடகோபன்சொல்*

வலங்கொண்டவாயிரத்துள் இவையுமோர்பத்து*

இலங்குவான் யாவரும்ஏறுவர்சொன்னாலே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாகப் பரமபதப்ராப்தியை அருளிச்செய்கிறார்.

புலம்பு  சீர் – (எல்லாரும்) கொண்டாடும்படியான குணங்களையுடையனாய்க் கொண்டு, பூமி – பூமியை, அளந்த – அளந்த, பெருமானை – ஸர்வேஸ்வரனை, நலம் கொள் – (அநுபவாபிநிவேஶமாகிற) நன்மையுடைய, சீர் – ஜ்ஞாநாதிகுண விசிஷ்டராய், நல் – நன்றான, குருகூர்-திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, வலம் கொண்ட ஆயிரத்துள் – அர்த்தப்ரதிபாதநப2லத்தையுடைத்தான ஆயிரந்திருவாய்மொழிக்குள்ளும், ஓர் – அத்விதீயமான, இவைபத்தும் – இப்பத்தையும், சொன்னால் – சொன்னால், யாவரும் – எல்லாரும், இலங்கு வான் – அத்யுஜ்ஜ்வலமான பரமபதத்திலே, ஏறுவர் – ஏறப்பெறுவர்கள். இது கலிவிருத்தம்.

ஈடு: – நிகமத்தில், ‘இத்திருவாய்மொழியில் சப்தமாத்ரத்தாலே இதில் ப்ரார்த்தித்தபடியே அநுபவிக்கலான பரமபதத்தைச் செல்லப்பெறுவர்’ என்கிறார்.

(புலம்புசீர்) இவர்புகழுமாபோலே லோகமடையப் புகழும்படியாயிற்று அவன் குணங்கள். (பூமியளந்த பெருமானை) பூ4மியையளந்து அந்யசேஷத்வ ஸ்வஸ்வாதந்தர்யத்தைச் தவிர்த்த ஸர்வஸ்வாமியையாயிற்றுக் கவிபாடிற்று. (நலங் கொள்சீர்) – காரணங்களும் சேதநஸமாதியாலே விடாய்த்து, அவைதான் ஓரிந்த்ரியத்ருத்தியை ஓரிந்த்ரியம் ஆசைப்பட்டு, இவையெல்லாவற்றின் வ்ருத்தியையும் தாம் ஆசைப்பட்டு, இப்படி பகவத்விஷயத்திலே விடாய்க்கும்படியான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை யுடைய ஆழ்வார். அநுபவாபிநிவேசமாகிற நன்மையையுடைய ஜ்ஞாநாதிகுண விசிஷ்டராய் நன்றான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல். (வலங்கொண்ட இத்யாதி) – ப்ரதிபாத்யத்தை வலம்வந்து விளாக்குலைகொண்ட என்னுதல், ப்ரதிபாதநஸாமர்த்த்யத்தையுடைய என்னுதல்: (இலங்கு வான் இத்யாதி) – அத்விதீயமான இப்பத்தைச் சொன்னால், இன்னாரினையாரென்னாதே, பகவதநுபவத்துக்கு விச்சேதமில்லாத வைலக்ஷண்யத்தையுடைய பரமபதத்தை ப்ராபிக்கப்பெறுவர் *ஸ ஏகதா4 ப4வதி* என்று ஓதுகிறபடியே அநேகசரீரங்களைப் பரிக்ரஹித்து, அவ்வோசரீரங்களில் கரணங்களும் பூர்ணாநுபவம் பண்ணலாம்படியான தேசத்திலே புகப்பெறுவர் என்றபடி.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்

வடக்கு திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

த்ரமிடோபநிஷத் ஸங்கதி

அத்யுத்‌கடைஹி இஹ மநோரதஜாலபூரைஹி

நீதொ முநிர்பகவதா ஸஹ ஸம்ககாம: | ஸர்வெம்த்ரியே: அபி ச கிம்கரபாவஸக்த:

ஶ்ரீ காம்தமேவ ஸுகுணாம்புதிம் ஆப்தும் ஐச்சது||

 

த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ

41 சித்தாக்ருஷ்டிப்ரவீணை: அபிலபநஸுகை: ஸ்பர்ஶவாஞ்சாம் துஹாநை:

ஆதந்வாநை: தித்ருக்ஷாம் ஶ்ருதிஹிதஸஹிதை: ஆத்மநித்யாதரார்ஹை: ।

விஶ்லேஷாக்ரோஶக்ருத்பி: ஸ்மரதரதிகரை: தத்தஸாயுஜ்யஸங்கை:

குர்வாணை: பாலலௌல்யம் மிலிதகுணகணை: நித்யத்ருஶ்யாங்கமாஹ|| (3-8)

திருவாய்மொழி நூற்றந்தாதி

முடியாத ஆசைமிக  முற்றுகரணங்கள்*

அடியார்தம்மைவிட்டவன்பால் படியா* ஒன்

றொன்றின்செயல்விரும்ப  உள்ளதெல்லாம் தான்விரும்ப*

துன்னியதே மாறன்தன் சொல். 28

ஆழ்வார் திருவடிகளே ஶரணம். எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்.

ஜீயர் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.