04-01 12000/36000 Padi

ஸ்ரீ:

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பகவத் விஷயம்

திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள்

வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும்,

நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும்

முதல் திருவாய்மொழி

ஒருநாயகமாய்: ப்ரவேசம்

******

பன்னீராயிரப்படி

மூன்றாம்பத்தில், இப்படி பகவச்சேஷபூதனான சேதநனுடைய ததேகாநுபவத்வத்தை ப்ரதிபாதித்த அநந்தரம், ததேகப்ரியத்வத்தை நாலாம்பத்தாலே ப்ரதிபாதிப்பதாக; அஸ்திரமாய் அல்பமான ஐஸ்வர்யகைவல்யங்களிற்காட்டில் பகவத்ப்ராப்தியினுடைய உத்கர்ஷோபதேஶத்தாலே சேதநனுடைய அநந்யபோக்யத்வத்தையும், அவனுடைய பஹுவித போக்யத்வத்தாலே இவனுக்குப்பிறந்த விப்ரக்ருஷ்டார்த்த போகேச்சையையும், இவனுடைய ஆத்மாத்மீயங்கள் தனக்கு போக்யமாம்படி ஈஸ்வரன்தான் இவனோடுகலந்த ப்ரணயத்தையும், அநுபவாலாபத்தில் துல்யஸம்பந்தி வஸ்துதர்சநத்திலும் ஸ்மாரகத்வேந ஆர்த்தி பிறக்கும்படியையும், ஆர்த்தி சமிக்கும்படி ஸம்ஸ்லேஷித்த போக்யவிஷயத்தில் ஸ்தோத்ரத்தாலே போக்தாவுக்கு உண்டான ஹர்ஷோத்கர்ஷத்தையும், அவஸந்நதசையிலும் அந்யஸ்பர்சம்பொறாதபடியான ததநுபந்தமே ஆஸ்வாஸகரமென்னு மிடத்தையும், போக்யபூதனுடைய குணாநுபவேச்சையாலே தீவ்ரசைதில்யம் பிறக்கும்படியையும், அவன் ஆதரியாத ஆத்மாத்மீயங்கள் அஸஹ்யங்களாகையாலே அநாதரணீயங்களென்னுமிடத்தையும், அதிதுஸ்ஸஹ ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்ரிய:பதிசரணங்களே அதிசயிதபுருஷார்த்த மென்னுமிடத்தையும், ஸர்வாதிக சேஷியானவனுடைய கைங்கர்யமே உத்கர்ஷமாய் உசிதமான ப்ராப்யமென்னுமிடத்தையும் அருளிச்செய்து, சேஷபூதனுடைய ததேகப்ரியத்வத்தை உபபாதிக்கிறார்.

அதில் முதல்திருவாய்மொழியில், சேதநனுடைய அநந்யபோக்யத்வத்தை ப்ரதிபாதிப்பதாக, போக்யபூதனுடைய நிருபாதிகஸம்பந்தத்தையும், ஸர்வாதிகத்வஸூசகமான ஸ்ரிய:பதித்வத்தையும், போக்யத்வ விசிஷ்டமான ஸௌலப்யத்தையும், போகப்ரதிபந்தக விரோதிநிவர்த்தகத்வத்தையும், விலக்ஷண விக்ரஹாதி யோகத்தையும், அவதாரபோக்யதைக்கு மூலமான அர்ணவசாயித்வத்தையும், அதுக்குமடியான பரத்வோத்கர்ஷத்தையும், ஆஸ்ரித ஸம்ஸ்லேஷ ஸ்வபாவத்தையும், பலப்ரதத்வ ஸூசகமான கருடத்வஜத்வத்தையும், நிரவதிக நியந்த்ருத்வத்தையும் அருளிச்செய்து, இப்படி ப்ராப்யபூதனான ஈஸ்வரனை, அஸ்திரமாயும் அல்பமாயுமுள்ள ஐஸ்வர்யகைவல்யங்களில் அகப்படாதே ஆஸ்ரயியுங்கோள் என்கிற உபதேச முகத்தாலே ஆத்மாவினுடைய அநந்யபோக்யதையை அருளிச்செய்கிறார்.

ஈடு முப்பத்தாறாயிரப்படி

த்வயத்தில் உத்தரகண்டார்த்தத்தை அருளிச்செய்தார், கீழ் மூன்றுபத்தாலும்.  இனி மேல் மூன்றுபத்தாலே அதில் பூர்வகண்டார்த்தத்தை அருளிச்செய்கிறார்.  கீழ் மூன்றுபத்தாலுஞ் சொன்ன புருஷார்த்தத்துக்கு உபாயத்தை அடியிலே அறுதியிடுகிறார்.  இவ்வடியறியாதாரிறே உபாயாந்தரங்களாகிற விலக்கடிகளிற் போகிறவர்கள்.  இவர்க்கு நிரவதிகப்ரீதியோடேயிறே, கீழில் திருவாய்மொழியிற் சென்றது.  தாமும் குறைவற்று, பற்றினார் குறையும் தீர்க்கவல்லராம்படியிருந்தார் கீழ்.  ஸம்ஸாரிகளைப்பார்த்து, `நீங்கள் பற்றின விஷயங்கள் தண்ணிதானபின்பு அவற்றைவிட்டு ஸ்ரிய:பதியைப் பற்றுங்கோள்’ என்று பரோபதேச ப்ரவ்ருத்தராகிறார்.  “வீடுமின் முற்ற*த்திலும் பரோபதேசம் பண்ணினார்; “சொன்னால் விரோத*த்திலும் பரோபதேசம் பண்ணினார்; இத்திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருந்தது; இவையெல்லாவற்றிலும் எல்லாவர்த்தங்களும் உண்டேயாகிலும் ஒன்றுக்கு ஓரர்த்தத்திலே நோக்காயிருக்கும்.  “வீடுமின்முற்ற*த்தில் `இதரவிஷய வைராக்யபூர்வகமாக பகவத்பக்தியைப் பண்ணுங்கோள்’ என்றார்; “சொன்னால்விரோத*த்தில் ‘பகவதர்ஹமான கரணங்களைக்கொண்டு பிறரை ஸ்துதியாதே ஸர்வேஸ்வரனை ஸ்துதிக்கப் பாருங்கோள்’ என்றார்; இதில் ‘இவர்கள்தான் இதரஸ்தோத்ரம் பண்ணுகிறது சிலப்ரயோ ஜநத்துக்காகவாயிருக்குமிறே’ என்று அவற்றினுடைய அல்பாஸ்த்திரத்வாதி தோஷபூயஸ்தையை அருளிச்செய்கிறார்.  ஐஸ்வர்யம் அல்பாஸ்திரத்வாதி தோஷத்தை யுடைத்தாகையாலே தண்ணிது; ஆத்மலாபம் அபுருஷார்த்தமாய்க்கொண்டு நிலைநிற்குமாகையாலே தண்ணிது; இப்படி ஐஸ்வர்ய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச் சொல்லி, `ஸர்வேஸ்வரனாகிறான் ஸமஸ்தகல்யாணகுணாத்மகனாய் ஸர்வாபேக்ஷிதப்ரதனாயிருப்பானொருவன்; ஆனபின்பு, அவற்றைவிட்டு பகவத்பஜநம் பண்ணப்பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவத்ஸமாஸ்ரயணத்துக்கு உண்டான நன்மையை உபபாதியாநின்றுகொண்டு, பரோபதேசப்ரத்ருத்தராகிறார்.  இவர்தாம், ஸம்ஸாரிகள் தாந்தராய் வந்து `எங்களுக்கு ஹிதஞ்சொல்லவேணும்’ என்ன, சொல்லுகிறாரன்றே; பிராட்டியும் ஸ்ரீவிபீஷணாழ்வானும் ராவணனை நோக்கி ஹிதஞ்சொன்னாற்போலேயிருப்பதொன்றிறே; (ப்ரதீ3ப்தம்  சரணம் யதா2) – வெந்து அற்ற க்ருஹத்திலே `ஒருகம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப்போலே.

முதல் பாட்டு

ஒருநாயகமா யோடவுலகுடனாண்டவர்
கருநாய்கவர்ந்தகாலர் சிதைகியபானையர்
பெருநாடுகாண விம்மையிலேபிச்சைதாங்கொள்வர்
திருநாரணன்தாள் காலம்பெறச்சிந்தித்துய்ம்மினோ.

: முதற்பாட்டில், ஏகாதிபத்யம் நடத்தின ராஜாக்களே பிக்ஷுக்களாய் க்லேசிப்பர்கள். ஆதலால் நிருபாதிக ஸம்பந்தயுக்தனாய் நித்யஸ்ரீயான நாராயணன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

ஒருநாயகமாய் – மண்டலநாதத்வரூபமான ஏகாதிபத்யத்தையுடையராய்க்- கொண்டு,  ஓட – (நெடுங்காலம்) நடக்கும்படி, உலகு – லோகத்தோடே, உடன் – பொருந்தி, ஆண்டவர் – ராஜ்யரக்ஷணம் பண்ணிப்போந்தவர்கள், (அந்த ஐஸ்வர்யம் பக்நமானவாறே லஜ்ஜித்து ராத்ரியிலே பிக்ஷைபுகத்தேடி), கரு – (இருளிற்காட்டில் வாசியறக்) கறுத்த, நாய் – நாயாலே, கவர்ந்த – கத்வப்பட்ட, காலர் – காலையுடையராய், சிதைகிய – (உபயோகார்ஹமன்றியே) பொளிந்துபோகட்ட, பானையர் – பானையைப் பாத்ரமாகக்கொண்டு, பெருநாடு –  (தாங்கள் நிர்வஹித்த) மஹாப்ருதிவியிலுள்ளா ரெல்லாரும், காண – காணும்படியாக, இம்மையிலே – இந்த ஜந்மந்தன்னிலே, பிச்சை – பிக்ஷையை, தாம் – (லஜ்ஜையையும்விட்டுச் சென்று அர்த்தித்து), கொள்வர் – கொள்வர்; (இப்படி ஐஸ்வர்யம் அஸ்திரமாதலால்), திரு – நித்யஸ்ரீயாய், நாரணன் – (நிருபாதிகசேஷியான) நாராயணனுடைய, தாள் – திருவடிகளை, காலம்பெற – காலவிளம்பம் பிறவாமல் சடக்கென, சிந்தித்து – அநுஸந்தித்து, உய்ம்மின் – உஜ்ஜீவியுங்கோள்.

ஸ்ரிய:பதியான நாராயணன் திருவடிகளிறே ஆஸ்ரயணீயமும், ப்ராப்யமும்.

ஈடு: முதற்பாட்டில், ஸார்வபௌமராய்ப் போந்த ராஜாக்கள் அந்த ராஜ்யஸ்ரீயை யிழந்து இரந்து ஜீவிக்கவேண்டும்படி துர்க்கதராவர்கள்; ஆனபின்பு, (ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ:) என்கிறபடியே நித்யஸ்ரீயான ஸர்வேஸ்வரனைப் பற்றப் பாருங்கோள் என்கிறார்.

(ஒருநாயகமாய்) – நிலைநில்லாத ஐஸ்வர்யத்தைப்பற்றி நீர்க்குமிழிபோலே உடைந்துபோகிற மநுஷ்யர், (பதிம் விஸ்வஸ்ய) என்கிற ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யத்தை அநுகரிக்கும்படி சொல்லுகிறதிறே, பௌண்ட்ரகவாஸுதேவனைப்போலே; ஏகா தபத்ரமாக.  (ஓட) – இப்படி யாளுவது எத்தனை காலமென்றால், நெடுங்காலம்.  “அறுபதினாயிரமாண்டு, எழுபதினாயிரமாண்டு” என்கிறபடியே நெடுக.  இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவென்னில், – (உலகு) – கடல்சூழ்ந்த பூமிப் பரப்படங்கலும்; “மாந்தா4து: க்ஷேத்ரமுச்யதே*என்கிறபடியே முந்திரிகைநிலமுடையவனைப் போலேயாயிற்று ஆள்வது.  (உடனாண்டவர்) – இப்பரப்பில் ஓரிடம் குறை கிடவாதபடி ஆண்டவரென்னுதல்.  (அகார்யசிந்தாஸமகாலமேவ ப்ராது3ர்ப4வம்ஸ்சாபத4ர: புரஸ்தாத்) என்கிறபடியே பாபசிந்தனைபண்ணினார்முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக்கொண்டு போந்த கார்த்தவீர்யார்ஜுநாதிகள்படியைப் பற்றச் சொல்லுதல்.  இப்படி ஏகாதிபத்யமாக நெடுநாள் லோகத்தை ஆண்டுபோந்தவர்கள் பின்னை யென்செய்வர்களென்னில்? – (ராஜ்யம் நாம மஹாத்யாதி4ரசிகித்ஸ்யோ விநாசந: |ப்4ராதரம்வா ஸுதம்வாபி த்யஜந்திக2லுபூ4மிபா:) என்கிறபடியே, அவற்றையிழந்து க்லேசிப்பரென்கிறார், மேல்.  (கருநாய்கவர்ந்தகாலர்) – இப்படி நெடுநாள் மதிப்போடே ஜீவித்துப்போந்தவன் `எளிமைப்பட்டு ஜீவிக்கிறதென்? ஒருபட்டினிவிடுவோம்’ என்றிருக்கமாட்டானே; ஜீவிக்கையிலுண்டான நசையாலே பிக்ஷைபண்ணப் பார்க்கும்; முன்பு குறைவற ஜீவித்துப்போந்தவனாகையாலே, பலர்காண வெளியில் புறப்படமாட்டானே; நிலாநாளில் இருட்டுப்புரைகளிலும் இருட்டுநாளிலுமாயிற்றுப் புறப்படுவது; இருள் ஓரிடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதறியாதே அவற்றின்வாயிலே காலையிடும்; அவை கடிக்கும்.  (கருநாய்) – கருமை சீற்றமாய், வெட்டிய என்னவுமாம்.  கருநாய் – கருவையுடைத்தான நாய்; குட்டியிட்ட நாய் என்றும் குட்டியைத் காத்துக்கிடக்கிறதாகையாலே ‘அதுக்கு ஏதேனும் தீங்குவருகிறதோ’?  என்று கண்டாரை ஓடிக்கடிக்குமே, அத்தைச்சொல்லுதல்.  (காலர்) – “வீரக்கழலிட்ட கால்” என்றிறே முன்பு நிரூபிப்பது; இப்போது “நாய்கடித்த கால்” என்றாயிற்றுச் சொல்லுவது. (சிதைகியபானையர்) – கண்டவிடமெங்கும் பொளிந்து உபயோகயோக்யமன்றிக்கே போகட்டுக்கிடந்ததொன்றை எடுத்துக்கொள்ளும்.  முன்பு பொற்கலத்திலே ஜீவித்தவன் இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று.  இட்டது உண்டாகில் ஒருமூலையிலே கீழேபோம்படியாயிற்று இருப்பது.  (பெருநாடுகாண) – முன்பு பச்சைகொண்டுவந்தவர்கள் ஓராண்டு ஆறுமாசமும் உள்ளும்புகப்பெறாதே நின்று உலரு மித்தனையிறே; அதுக்கும் போர இப்போது தடையற்று இருந்ததே குடியாகக் காணும்படியாக.  முன்பு போர ஜீவித்து எளிமைப்பட்டவனாகையாலே எல்லாருங்காண வருவர்களே.  இப்படி செய்வது ஒருஜந்மம் ஜீவித்து மற்றொருஜந்மத்திலேயோ வென்னில்? (இம்மையிலே) – அப்படிஜீவித்த இந்த ஜந்மந்தன்னிலே.  (பிச்சை) – முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கினானாயிறே போருவது; இப்போது ஒரு பிக்ஷைமாத்ரமேயாயிற்று இவன் அபேக்ஷிப்பது.  (தாம்கொள்வர்) – முன்பு ராஜாக்கள் கொண்டுவந்த பச்சை ஆளிட்டிறே வாங்குவது, சிலரிடக் கொண்டாராகாமைக்கு; இப்போது இடுகிறவர்கள்பக்கல் நினைவின்றிக்கே பாதிஸம்வாதமே உள்ளது.

ராஜ்யஸ்ரீ இங்ஙனேயானபின்பு, (திருநாரணன்தாள்) – “இடர்கெடுத்த- திருவாளனிணையடி*. ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போருங்கோள்.  (தத்ர நாராயணஸ்ஸ்மாந்  மயா பி4க்ஷாம் ப்ரயாசித:) என்னக்கடவதிறே.  ஓடுகொண்டு இரப்பார்க்கெல்லாம் இவனையொழியக் கதியில்லை; “ஓட்டூணொழித்த” (பெ.திரு. 3.4.2) வனிறே.   (தாள்) – (யாவந்ந சரணௌ ப்4ராது: பார்த்தி2வத்யஞ்ஜ- நாந்விதௌ) – `பிள்ளாய்! உன்உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன; ‘நானும் எனக்குவகுத்தமுடி சூடி அவரும் வகுத்தமுடி சூடின அன்றே’ என்றானிறே; அப்படி தலையாக ப்ரார்த்திக்கப்பட்ட திருவடிகளை.  “அடிசூடுமரசு” (பெரு.திரு. 10.7) என்னக்கடவதிறே.  (காலம்பெற) – அரைநாழிகையாகிலும் முற்பட்டது உடலாக.   (ஜீவிதம் மரணாந்தம்ஹி ஜராந்தே ரூபயௌவநே |ஸம்பத3 ஸ்சவிநாசாந்தா ஜாநந்கோ த்4ருதிமாப்நுயாத்) ஆகையால், “நாளைச்செய்கிறோம்” என்னுமதன்று; (யந்முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதே3வோ ந சிந்த்யதே |ஸா ஹாநி:) – அதுவே இவனுக்கு “அஸந்நேவ” என்னும்படி வருகிற அநர்த்தமாகிறது.  (தந்மஹச்சி2த்3ரம்) – அநர்த்தம் வருகைக்கு அவகாசமும் அதுவே.  (ஸா ப்4ராந்தி:) விபரீதஜ்ஞாநமாகிறதும் அதுவே.  (ஸா ச விக்ரியா)  நிஷித்தாநுஷ்டாநமாகிறதும் அதுவே.  (சிந்தித்து) – இனி “பரிகரமில்லை” என்று கண்ணழிவுசொல்லவேண்டா; அவன் தந்த கரணங்களை அவனுக்காக்க அமையும்; நெஞ்சிலேயடிபட அநுஸந்திக்க அமையும்; (ஸ்ம்ருதோ யச்ச2திசோப4நம்).  (உய்ம்மினோ) – அத்வநுஸந்தாநம் பலத்தோடே த்யாப்தம்.  “பேறு எல்லார்க்கும் வேணும்” என்றிருக்கையாலே எல்லார்க்குமாக அருளிச்செய்கிறார்.  (உய்ம்மினோ) – அடியற்றால் வாடுமத்தனை கிடிகோள்; அடியைப்பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.

இரண்டாம் பாட்டு

உய்ம்மின் திறைகொணர்ந்தென்றுலகாண்டவ ரிம்மையே
தம்மின்சுவைமடவாரைப் பிறர்கொள்ளத்ததாம்விட்டு
வெம்மினொளிவெயிற்கானகம்போய்க் குமைதின்பர்கள்
செம்மின்முடித்திருமாலை விரைந்தடிசேர்மினோ.

: அநந்தரம், ஐஸ்வர்யபங்கமே யன்றிக்கே அபிமதவியோகமும் பிறக்குமாதலால், ஸர்வாதிகசேஷியான ஸ்ரிய:பதியை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

திறை – திறையை, கொணர்ந்து – கொண்டுவந்து, உய்ம்மின் – உஜ்ஜீவியுங் கோள், என்று – என்று (இந்த உக்திமாத்ரத்தாலே), உலகு – லோகத்தை, ஆண்டவர் – ஆண்டவர்கள், இம்மையே – இப்படிவாழ்ந்த ஜந்மந்தன்னிலே, தம் – தங்களுக்கு அஸாதாரணைகளாய், இன் – அபிமதைகளாய், சுவை – போகரஸத்தையுடையராய், மடவாரை – (தங்களை யொழியச்செல்லாத பாரதந்த்ர்யத்தை யுடையரான) ஸ்த்ரீகளை, பிறர் – அந்யர், கொள்ள – பரிக்ரஹிக்கும்படி, தாம் – தாங்களே, விட்டு – கைவிட்டு, (அத்தேசத்திலுமிருக்கப்பெறாதே), வெம் – வெத்வியதாய், மின்ஒளி – (பார்த்தவர் கண் வெறியோடி) மின்னொளி பரக்கும், வெயில் – வெயிலையுடைய, கானகம் – காட்டுள்ளே, போய் – போய், குமைதின்பர்கள் – (அங்கும் அந்யராஜாக்களாலே) பீடிதராவர்கள்: (ஆதலால்), செம் மின் – அப்ரதிஹததேஜஸ்ஸான, முடி – அபிஷேகத்தையுடைய, திருமாலை – ஸ்ரிய:பதியை, விரைந்து – ஸத்வரராய்க் கொண்டு, அடிசேர்மின் – பதாஸ்ரயணம் பண்ணுங்கோள்.

செம்மி னென்கிறது – சிவந்த வொளி யென்றுமாம்.

ஈடு: இரண்டாம்பாட்டு. ராஜ்யத்தை யிழக்கையேயன்றிக்கே, ராஜ்யம்பண்ணுகிற நாளில் போக்யைகளாகப் பரிக்ரஹித்த ஸ்த்ரீகளையும் சத்ருக்களுக்குக் கொடுத்து எளிமைப்படுவர் என்கிறார்.

(உய்ம்மின் திறைகொணர்ந்து) – எதிரிகளுடைய ராஜ்யத்தைத் தனக்காக்கக் கோலினால் பொருதாக்கிக் கொள்ளுகையன்றிக்கே, `நீ உன் ப்ராணனை நோக்கிக்கொள்ள வேண்டியிருந்தாயாகில், உன் ஸர்வஸ்வத்தையும் நம்பக்கலிலே கொண்டுவந்து தந்து உன்னைக்கொண்டு பிழைத்தோடிப் போ’ என்கிற உக்தியாலேயாயிற்றுத் தனக்காக்குவது.  படையும் குதிரையுங் கொண்டு பொருது தனக்காக்கிக் கொள்ளவேண்டா; திறையைக்கொண்டுவந்து ஜீவித்துப்போகுங்கள் என்கிற சொல்லாலே லோகத்தை யாண்டவர்கள்.  (இம்மையே) – இப்படி யாண்ட இந்தஜந்மந்தன்னிலே. (தம் இன் சுவைமடவாரைப் பிறர்கொள்ள) – தான் ராஜ்யம் பண்ணுகிற நாளில் அந்த ராஜ்யத்திலுள்ள ஸ்த்ரீரத்நங்களையெல்லாம் திரட்டுமே; இவன் திரட்டினபடியே வேறொருவன் வந்து கைக்கொள்ளும்; இது நரகபுரமழிந்தவன்று கண்டதிறே; பாண்டவர்களுடைய ராஜஸூயமும் செருக்குமெல்லாங் கிடக்க, த்ரௌபதி ஸதஸ்ஸிலே பரிபூதையானவதுவேயிறே இதில் ப்ரமாணம்.  தந்தாமுக்கு நிரதிசயபோக்யைகளான ஸ்த்ரீகளை சத்ருக்கள் பரிக்ரஹிக்க.  (தாம்விட்டு) – தன்ப்ராணரக்ஷணத்திலுண்டான நசையாலே, ஸஹ்ருதயமாகத் தானே கூறைப்பையும் சுமந்துகொண்டுபோய் விட்டுப்போரும்.  (ஆபத3ர்த்த2ம் த4நம் ரக்ஷேத்) என்கிறபடியே.  (வெம்மின் இத்யாதி) – “பின்னையும் இவன் இங்கேகாணில் நலியும்” என்று, ஜலவர்ஜிதமுமாய் மநுஷ்யஸஞ்சாரங்களில்லாத காடேறப்போம்.  பேய்த்தேரையும் வெயிலையுமுடைத்தான காட்டிலே போம்; வெத்விய மின்னினொளிபோலே யிருந்துள்ள வெயிலையுடைத்தான காட்டிலே போ யென்னவுமாம்.  (குமைதின்பர்கள்) – அர்த்தவானுக்கு எங்கும் ஆளோடுமே; “அவன்போனவிடத்தே போய்க் கொன்று வருகிறோம்; எங்களுக்கு வெற்றிலையிட்டருளீர்” என்பர்கள்; அருகே நின்று, “அப்படிசெய்து வாருங்கோள்” என்று அவர்களுக்கு வேண்டுவதெல்லாங் கொடுத்துவிடும்; அங்கும்போய்க் கொலை தப்பாது.  (குமைதின்பர்கள்) – நலிவுபடுவர்கள்.  அடியிலே நாய் அடியிட்டு நலியத்தொடங்கிற்றிறே.  நாய் முதலிலே காற்கூறு கொண்டதிறே.

ஆனபின்பு, (செம்மின் இத்யாதி) – சிவந்து மின்னாநின்றுள்ள முடியையுடைய ஸ்ரிய:பதி திருவடிகளைக் கடுக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்.  தன்னையாஸ்ரயித்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான முடியுண்டு; கொடுப்பிக்கைக்கு அருகே யிருப்பாருமுண்டு; விரையாமையாலுள்ள இழவே உள்ளது.  (அடிசேர்மினோ) – அவன் முடியைத் தரிலும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்.  நீங்கள் உங்களடிவிடாதே கொள்ளுங்கோள்.

மூன்றாம் பாட்டு

அடிசேர்முடியினராகி அரசர்கள்தாந்தொழ
இடிசேர்முரசங்கள் முற்றத்தியம்பவிருந்தவர்
பொடிசேர்துகளாய்ப்போவர்க ளாதலில்நொக்கெனக்
கடிசேர்துழாய்முடிக் கண்ணன்கழல்கள்நினைமினோ.

: அநந்தரம், காலில்விழுந்த ராஜாக்களையும் மதியாதிருந்தவர்கள், ஒருவன் காலிலேதட்டினால் ஒருவஸ்துப்ரதிபத்திபிறவாதபடி யாவர்கள்; ஆதலால், போக்யனான க்ருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

அடி – தங்கள்காலோடே, சேர் – சேர்ந்த, முடியினராகி – முடியையுடையராய்க் கொண்டு, அரசர்கள் – ராஜாக்கள்; தாம் – (இந்த ஆஸத்திதான் தரமாக அவர்கள் அநாதரித்திருக்கச் செய்தே) தாங்களே, தொழ – தொழாநிற்க, இடிசேர் – இடியோடு ஒத்த, முரசங்கள் -முரசங்கள், முற்றத்து – முற்றவெளியிலே, இயம்ப – சப்திக்க, இருந்தவர் – (அதிலே செவிமடுத்து அந்யபரதை) பாவித்திருக்குமவர்கள், பொடி – ஒருபதார்த்தைகதேஶத்தோடு, சேர் – சேர்ந்த, துகளாய் – பரமாணுவாம்படி, போவர்கள் – மதிப்பற்றுப்போவர்கள்; ஆதலில் – ஆதலால், நொக்கென – சடக்கென, கடி சேர் – பரிமளஸமவாயத்தை யுடைய, துழாய் – திருத்துழாயாலே அலங்க்ருதமான, முடி – திருமுடியையுடைய, கண்ணன் – க்ருஷ்ணனுடைய, கழல்கள் – திருவடிகளை, நினைமின் – நினையுங்கோள்.

ஈடு: மூன்றாம்பாட்டு. ராஜாக்கள் தங்கள் காலிலே விழுந்துகிடந்தால் அநாதரித்திருக்கும் மதிப்பையுடையவர்கள், `ஒருசேதநன்’ என்று நினையாதபடி மதிப்பறுவர்கள் என்கிறார்.

(அடிசேர் முடியினராகி) – தன்னோடொக்க `அரசு’ என்றிருந்த ராஜாக்கள் தன் காலிலே சேர்க்கப்பட்ட முடியை யுடையராய்.  (அரசர்கள்) – ராஜாக்கள்.  (தாம்தொழ) – தாங்கள் அறிந்ததாகத் தொழுமித்தனை போக்கி, `இவன் இப்படி தொழுதான்’ என்னும் ப்ரதிபத்தி அவனுக்கில்லை.  `இன்று ஸ்ரீபாதத்திலே தலைதாக்கத் தெண்டனிடப்- பெற்றோம்’ என்று இவன்தான் நினைத்திருக்குமித்தனை.  (சிரஸாயாசதஸ்தஸ்ய வசநம் நக்ருதம்மயா) என்று ‘பிள்ளை தலையாலேயிரக்க, நாம் மறுத்துப்போந்தோம்’ என்று புண்பட்டுத் தலைசீய்க்கும் விஷயத்தைத் தொழுகிறாரன்றே.  இவன் இப்படி தொழ, அவன் செய்ததென்?  என்னில், – (இடிசேர் இத்யாதி) – ‘இன்னராஜா காணப்புகுகிறான்’ என்று ஓலக்கமிருந்து, நாடகச்சாலையிலுள்ளாரை அழைத்து அருளப்பாடிட்டு நாட்டில் மரங்களையடையத்தொளைத்துத் தோலைமேவி அத்தை இடியையொக்க த்வநிப்பித்து அநாதரித்திருக்கும்.  `இன்னான் வந்து காலிலே விழுந்துகிடந்தான்; அவன், இத்தை அநாதரித்துக் கூத்துக்காண்பது பாட்டுக்கேட்பதானான்’ என்று லோகத்திலே ப்ரஸித்தமாம்படியிருக்கவேணும்’ என்றாயிற்று இவனிருப்பது.  (இருந்தவர்) – அங்குநிற்கிற ஸ்தம்பத்திற்காட்டில் ஒரு வாசியில்லைகாணும் இவருடைய நினைவால்.  இப்படியிருந்தவர்கள் என்செய்வ ரென்றால், – பொடிபடுவ ரென்கிறார் மேல்.  (பொடி- சேர்துகளாய்ப்போவர்கள்) – `தனக்கு’ என்றோராகாரமின்றிக்கே, `பொடியோடே சேர்ந்த தூளி’ என்று வேறொன்றோடே சேர்த்து நிரூபிக்கவேண்டும்படி யாவர்கள்.  தன்காலிலே ஒருவன் குனிந்தால் அநாதரிக்கும்படியான மதிப்பையுடையவன், தன் தலையிலே ஒருவன் அடியிட்டால் `நாம் இவன்தலையிலே அடியிட்டோம்’ என்று நினைக்கவேண்டாதபடி க்ஷுத்ரதூளியாய்ப் போவர்கள்.

(ஆதலில்) – அர்த்ததத்வம் இதுவானபின்பு.  (நொக்கென) -சடக்கென. (கடி இத்யாதி) – முடிகொடுத்தால் மாலையுங்கொடுக்க வேணுமே! திருமேனியின் ஸ்பர்சத்தாலே நாட்செல்ல நாட்செல்லப் பரிமள மேறிவாராநின்றுள்ள திருத்துழாய்மாலையைத் திருவபிஷேகத்திலேயுடையனாய் ஆஸ்ரித ஸுலபனான க்ருஷ்ணன் திருவடிகளை அநுஸந்திக்கப் பாருங்கோள்.  நினைக்கவே கொண்டு முழுகுமிறே திருவடிகளின் போக்யதை.  இவ்வடியை நினைக்கவே ஸம்ஸாரம் அடியறுமே.  (மது4ஸூத3நப்ரபந்நாந்) என்று யமாதிகள் அஞ்சும் மதிப்பைப் பெறுவர்.

நான்காம் பாட்டு

நினைப்பான்புகின் கடலெக்கலின்நுண்மணலிற்பலர்
எனைத்தோருகங்களும் இவ்வுலகாண்டுகழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால் மற்றுக்கண்டிலம்
பனைத்தாள்மதகளிறட்டவன் பாதம்பணிமினோ.

: அநந்தரம், மதிப்புக்கேடேயன்றியே ஆயுஸ்ஸும் நிலைநில்லாதாகையாலே விரோதிநிவர்த்தகனான க்ருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கோள் என்கிறார்.

நினைப்பான் – (பகவதநுபவத்தை விட்டுச் செத்த ராஜாக்களை) நிரூபிக்க, புகில் – இழியில், எனைத்தோருகங்களும் – அநேகயுகங்களும், இ உலகு – இந்த லோகத்தை, ஆண்டு – ஆண்டு, கழிந்தவர் – கழிந்துபோனவர்கள், கடல் எக்கலில் – கடல் எக்கலிட்ட, நுண்மணலில் – நுண்மணலிற்காட்டில், பலர் – அநேகர்; (இவர்கள் முடியுமளவில்), மனைப்பால் – (தாங்களிருந்த) க்ருஹப்ரதேசத்துக்கும், மருங்கு – அதின்பரிஸரத்துக்கும், அற – வாசி தெரியாதபடி, மாய்தல் அல்லால் – அழியுமதொழிய, மற்று – வேறு அவசேஷிப்பதொன்று உண்டாக, கண்டிலம் – கண்டிலோம் : (ஆதலால்), பனை – பனைபோலே பருத்த, தாள் – அடிப்பரப்பையுடைத்தான, மத களிறு – மத்தகஜத்தை, அட்டவன் – அழித்தவனுடைய, பாதம் – திருவடிகளை, பணிமின் – வணங்குங்கோள்.  `நுண்மணலிற்பல’ரென்று, ஐந்தாம்வேற்றுமை – உவமைப்பொருவாய், நுண்மணல் போலே அஸங்க்யாத ரென்றுமாம்.

ஈடு: நாலாம்பாட்டு. ஐஸ்வர்யத்தின் நிலையாமையும் மதிப்பறுகையும் கிடக்கச்செய்தே, போக்தாக்களுடைய நிலையாமையாலும் அவனைப் பற்றவேணும் என்கிறார்.

(நினைப்பான்புகில்) – நினைக்கப்புக்கால்.  கடலிலேயிழிவாரைப்போலே, நினைத்ததாய்த் தலைகட்ட வொண்ணாதபடியா யிருக்கிற இருப்பும், தாம் லோகயாத்ரை நினையாரென்னுமிடமும் தோற்றுகிறது; ஆனாலும், பரஹிதமாக அநுஸந்திக்குமது உண்டிறே.  (கடலெக்கலில் நுண்மணலிற் பலர்) – அலைவாயிலெக்கலில் நுண்ணிய மணலிற்காட்டில் அநேகர்.  இப்படி யாண்டுமுடிந்துபோகிறவர்கள் தாங்கள் ஆரென்னில், – க்ஷுத்ரமநுஷ்யரல்லர், (ஸஹஸ்ரயுக3பர்யந்த மஹர்யத்3ப்3ரஹ்மணோ விது3🙂 என்கிறபடியே ஆயிரம் சதுர்யுகங் கூடிற்று ஒருபகலாய், இப்படி ராத்ரியாய், இங்ஙனே நூறாண்டிருந்து த்விபரார்த்தகாலம் ஜீவித்து முடிந்துபோம் ப்ரஹ்மாதிகள்.  அநேகயுகங்களும் இவ்வுலகாண்டு இது குறியழியாதேயிருக்க, இவர்கள் `என்னது’ என்று அபிமாநித்து முடிந்துபோவர்கள்.  (எனைத்தோருகங்களும் இத்வுலகாண்டுகழிந்தவர் – நினைப்பான் புகில் கடலெக்கலில் நுண்மணலிற்பலர்) (க3ங்கா3யாஸ்ஸிகதா3தா4ரா யதா2வர்ஷதி வாஸவே |சக்யா க3ணயிதும் லோகே ந த்யதீதா: பிதாமஹா:).  (மனைப்பால்மருங்கற) – சிறுகஜீவித்தானாகில் தன்னளவிலே போம்; பரக்க ஜீவித்தானாகில் தன்னயலிலுள்ளாரையுங் கொண்டுபோம்; பெருமரம் முறிந்தால் அருகுள்ளவற்றையும் கொண்டுபோமிறே.  மனைப்பால் – மனையிடம்.  மருங்கு – அயல்.  அசலிட்டுப் பார்ஸ்வஸ்தருக்கும் நாசமாம்.  (மாய்தலல்லால் மற்றுக்கண்டிலம்) – இப்படி முடியுமதொழிய ஸ்திரராயிருப்பாரொருவரையும் கண்டிலோம்.  ஆனால், செய்ய அடுப்பதென்?  என்னில், – (பனைத்தாள் இத்யாதி) – பனைபோலேயிருக்கையாலே பயாவஹமான காலையுடைத்தான மத்தகஜமுண்டு, குவலயாபீடம்; அத்தை முடித்தவன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்.  அவன் உங்கள் ப்ரபலப்ரதிபந்தகத்தைப் போக்க, நீங்கள் அவன்காலிலே தலைசாய்க்கப் பாருங்கோள்.  கீழிற்பாட்டில் `மா’ மின் அர்த்தம் சொல்லிற்று; இதில் – `அஹ’ மின் அர்த்தம் சொல்லுகிறது.

ஐந்தாம் பாட்டு

பணிமின்திருவருளென்னும் அஞ்சீதப்பைம்பூம்பள்ளி
அணிமென்குழலா ரின்பக்கலவியமுதுண்டார்
துணிமுன்புநாலப் பல்லேழையர்தாமிழிப்பப்செல்வர்
மணிமின்னுமேனி நம்மாயவன்பேர்சொல்லிவாழ்மினோ.

: அநந்தரம்,  அபிமதைகளான அங்கநைகளோடு ஸம்ஸ்லேஷமும் அஸ்திரமாதலால், அபிரூபனான ஸர்வேஸ்வரன் திருநாமத்தைச் சொல்லி வாழப் பாருங்கோள் என்கிறார்.

அம் – அழகியதாய், சீதம் – சீதளமாய், பை – பரந்த, பூ பள்ளி – பூப்படுக்கையிலே, திருவருள் – திருவருளை, பணிமின் – பண்ணியருளவேணும், என்னும் – என்னும் ஆதரத்தையுடைய, அணி – அலங்காரோத்தரமாய், மெல் – ம்ருதுதரமான, குழலார் – குழலையுடையவர்களுடைய, இன்பக்கலவியமுது – ஆநந்தாத்மகஸம்ஸ்லேஷாம்ருதத்தை, உண்டார் – புஜித்தவர்கள், – துணி – துணிச்சீலையானது, (பின்னுக்கெட்டாமையாலே), முன்பு – முன்னளவிலே, நால – நாலும்படியாக, பல் – பலவகைப்பட்ட, ஏழையர் – முன்பு சபலைகளான அந்த ஸ்த்ரீகள், தாம் – தாங்களே, இழிப்ப – அநாதரோக்தியைப்பண்ணச் செய்தே, செல்வர் – (ஆசாபலத்தாலே பின்னையும் அங்கே) செல்லுவார்கள்; (ஆதலால்), மணி – நீலரத்நம்போலே, மின்னு – ஒளியையுடைத்தான, மேனி – திருமேனியையுடையவனாய், நம் – (ஆஸ்ரிதரான) நமக்குத் தன்னையநுபவிப்பிக்கும், மாயவன் – ஆஸ்சர்யபூதனுடைய, பேர் – திருநாமங்களை, சொல்லி – சொல்லி, வாழ்மின் – ஆநந்திகளாகுங்கோள்.

ஈடு: அஞ்சாம்பாட்டு. செல்வக்கிடப்போபாதி அங்கநாபரிஷ்வங்கமும் அஸ்திரம் என்கிறார்.

`பணிமின்திருவருளென்னும் – அஞ்சீதப்பைம்பூம்பள்ளியணி மென் குழலார்’ என்று ஸ்த்ரீகளோடேசேர்த்து நிர்வஹிப்பார்கள் முன்புள்ள முதலிகள்; பட்டர், அங்ஙனன்றிக்கே, `பணிமின்திருவருளென்னும்’ என்கிற இத்தை – `இன்பக்கலவியமுதுண்டார்’ என்கிறவர்களோடே சேர்த்து அருளிச்செய்வர்.  தான் ராஜ்யம்பண்ணுகிற நாளில் தன்ராஜ்யத்தை அவர்களுக்குப் படுக்கைப்பற்றாக்கி, அவர்களைப்படுக்கையிலே வைத்துத் தான் தாழ நின்று : (பணிமின் திருவருளென்னும்) – `திருவுள்ளத்திற் கிடக்கிறத்தை அருளிச்செய்யலாகாதோ?’ என்னும்.  தன்னையநுவர்த்திப்பார் புறம்பே யுண்டே; இனி, ரஸிகத்வமாவது – தான் இவர்களுக்குத் தாழநிற்கையிறே.  (அஞ்சீதப்பைம்பூம்பள்ளி) – தர்சநீயமாய்க் குளிர்ந்து பரந்து பூவாலே செய்த படுக்கையிலே.  அவன் இப்படுக்கையிலே வைத்து `திருவருள்பணிமின்’ என்னாநின்றால், அவர்கள் செய்வதென்?  என்னில், (அணிமென்குழலார்) – அவர்கள் கொண்டாட்டத்தை அநாதரித்து, ஆபரணத்தைத் திருத்துவது குழலைப் பேணுவதாகாநிற்பர்கள்.  (இன்பக்கலவியமுதுண்டார்) – அவர்கள் அந்த அநங்கீகாரப்ரமுகமான ஸம்ஸ்லேஷத்தால் வந்த ஆநந்தாம்ருதத்தை புஜித்தவர்கள்.  அநாதராம்ருதபாநம் பண்ணினவர்க ளென்றுமாம்.  “அல்லிமலர்மகள்போகமயக்கு” (3.10.8)க்களை அநுகரிக்கிறார்களிறே.  வேறொருவன்வந்து அவர்களை ஸ்வீகரித்து இன்பக்கலவியமுதுண்ணாநிற்குமே; இவன் பின்னைத் தன்னுடைய சரீரதாரணத்துக்காக அவர்கள்பக்கலிலே போய் இரக்கத்தொடங்கும்.  (துணிமுன்புநால) – “சாடீம் ஆச்சா2த்3ய து3ஸ்சதா3ம்” என்கிறபடியே பின்பு கொண்டு வந்து இணைக்க எட்டம் போராமையாலே முன்னே நாலாநிற்கும்.  (பல்லேழையர்தாமிழிப்ப) – தாங்கள் பலராயிருப்பர்களே; இவன்பக்கல் தங்களுக்கு உண்டான சாபலந் தோற்றச் செத்துக் காட்டுவர்கள் முன்பு; இப்போது, தங்களை ஸ்வீகரித்தவனுக்கு ப்ரியமாக, இவனுக்கு போகயோக்தையில்லாமையையும் க்ருபணதையையுஞ் சொல்லி உபேக்ஷாவாதங்கள் பண்ணாநிற்பர்கள்.  (செல்வர்) – `நம்மோட்டை பா43ந்தமிறே சொல்லுகிறது இங்ஙன்’ என்று அத்தையும் புத்திபண்ணாதே செல்வர். முன்பு  “பணிமின் திருவருள்” என்றபோதை அநாதரத்தோபாதியாக இத்தையும் நினைத்துச் செல்வர்.  (த்ருஷ்ணைகா நிருபத்3ரவா) இறே.

ஆனபின்பு, (பக்தாநாம்) என்றிருக்கிற உடம்பைப் பற்றப்பாருங்கோள்.  (மணி இத்யாதி) – நீலரத்நம் போலே காந்தியையுடையத்தாய் அதிற்காட்டில் விஞ்சின அழகை யுடைத்தான திருமேனி. (ஏஷ ஸர்வஸ்வபூ4தஸ்து பரிஷ்வங்க3🙂 என்று கொடுக்கும்படியிறே.  `ஏஷ:’ – தான் அநுபவித்து “தனக்கு ரஸித்தது” என்று பிறர்க்குக்கொடுப்பாரைப்போலே; (இச்சா2க்3ருஹீதாபி4மதோரு தே3ஹ:) என்னக்கடவதிறே.  `இச்சா2க்3ருஹீதம்’ என்கையாலே, கர்மநிபந்தநமல்ல வென்று தோற்றுகிறது: `அபி4மதம்’ என்கையாலே, தனக்கும் போக்யமென்று தோற்றுகிறது.  (ஸர்வஸ்வபூத:) – இதொழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாதத்தால் வரும் குறை கிடக்குமே! திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே; ஸர்வ அபாஸ்ரயமாயிறே திருமேனிதான் இருப்பது; மற்றுக்கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான த்யாத்ருத்தி தோற்றியிருக்கிறது (பரிஷ்வங்கோ3ஹநூமத:) – அம்ருதா–க்குப் புல்லையிடவொண்ணாதே! “ஸ்நேஹோ மே பரம:” என்று இத்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.  (மயா காலமிமம் ப்ராப்ய த3த்த:) – “இவன் ஒன்றுகொள்வா னொருவனல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப்பெறுவது காண்” என்று குறைப்பட்டிருந்தவர், இவன்விலக்காததொரு ஸமயம் பெற்று இப்படி கொடுத்துக் கொண்டு நின்றார்.  “(தஸ்ய மஹாத்மந:) – ஒருபடி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனைபோக்கி, இரண்டு உடம்புகொடுத்தவனுக்கு ஓருடம்பு தரமன்றிறே.  வேண்யுத்க்ரதநத்திலே பிராட்டி ஒருப்பட்டவன்று அவளை உளளாக்கினான்; (அவகா3ஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு கொடுத்தானிறே அவன்.  அவன் பல ‘படி’ உபகரிக்கையாலே இவர் ஒரு ‘படி’ உபகரித்தார்.  (நம்மாயவன்) – ஆஸ்ரிதவிஷயத்தில் அவனிருக்கும்படி எல்லைகாணப்போமோ?  இப்பேற்றுக்குச் செய்யவேண்டுவதென்?  என்னில், – (பேர்சொல்லி) – நேர்த்தி இத்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும்.  வாழ்க்கைக்கு ஒருபேரோ! “அச்சுவைபெறினும் வேண்டேன்” (திருமாலை 2) என்னும்படியிறே இதுதன்னுடைய போக்யதையிருப்பது.

ஆறாம் பாட்டு

வாழ்ந்தார்கள்வாழ்ந்ததுமாமழைமொக்குளின்மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தாரென்றல்லால் அன்றுமுதலின்றறுதியா
வாழ்ந்தார்கள்வாழ்ந்தேநிற்ப ரென்பதில்லைநிற்குறில்
ஆழ்ந்தார்கடற்பள்ளி யண்ணலடியவராமினோ.

: அநந்தரம்,  நிலைநின்ற ஜீவநமில்லாமையாலே, ஸ்திரஜீவநம் வேண்டியிருப்பார் க்ஷீரார்ணவசாயிக்கு சேஷபூதராகுங்கோளென்கிறார்.

வாழ்ந்தார்கள் – வாழ்ந்தார்களாகத் தந்தாமைநினைத்திருக்கிறவர்கள், வாழ்ந்தது – ஜீவித்தது, மா மழை – பெருமழையில், மொக்குளின் – குமிழிபோலே, மாய்ந்துமாய்ந்து – நசித்துநசித்து, ஆழ்ந்தார் – அத:பதித்தார்கள், என்று அல்லால் – என்னுமித்தனையொழிய, அன்றுமுதல் – உத்பத்திவேளைதொடங்கி, இன்று அறுதியா – இன்றெல்லையாக, வாழ்ந்தார்கள் – ஜீவித்தார்கள், வாழ்ந்தேநிற்பர் – ஏகரூபமாக ஜீவித்தேநிற்பர், என்பது – என்கிற அர்த்தந்தான், இல்லை – இல்லை: நிற்குறில் – நிலைநின்றவாழ்வு கிட்டவேண்டில், ஆழ்ந்து – ஆழ்ந்து, ஆர் – நிறைந்த, கடல் – கடலை, பள்ளி – படுக்கையாகவுடைய, அண்ணல் – ஸர்வஸ்வாமிக்கு, அடியவர் – அடியார், ஆமின் – ஆகுங்கோள்.  ஆர்தல் – இடமுடைமையுமாம்.

ஈடு: ஆறாம்பாட்டு. வைத்யர்கள் பிழைத்தாரையெண்ணுமாபோலே முடிந்தவர்களை யெண்ணுகிறதென்?  ஜீவித்தவர்களும் சிலரில்லையோ?  என்ன, அது இருந்தபடி கேட்கலாகாதோ பின்னை?  என்கிறார்.

(வாழ்ந்தார்கள் இத்யாதி) – ஜீவித்தாராயிருக்கிறவர்கள் ஜீவித்ததெல்லாம்.  அவர்கள் வாழ்ந்தாராக நினைத்திருக்கிறார்கள்:  இவர் `விநாசம்’ என்று இருக்கிறார்.  அவர்கள் வாழ்வாக நினைத்திருக்கிற இத்தையிறே, * *இன்னங்கெடுப்பாயோ” (6.9.8) என்று கேடாகவே நினைத்திருக்கிறது.  (மாமழை மொக்குளின்) – பெருமழைக்குமிழிபோலே; (ஜலபு3த்3பு33வத்ஸமம்).  `மாமழை’ என்கிறது – அநந்தரம் விழுந்த துளியோடே நசிக்குமென்கைக்காக.  `மாய்ந்துமாய்ந்து’ – நசித்துநசித்து.  (ஆழ்ந்தாரென்றல்லால்) – ஜீவித்தநாள்பண்ணின பாபத்தாலே அதோகதியிலே விழுந்து தறைப்படுமதொழிய.  (அன்று இத்யாதி) – ஸ்ருஷ்டி காலந்தொடங்கி இற்றை யளவும் அவர்கள் ஜீவித்தவர்கள் ஒருபடிப்பட ஜீவித்தேபோந்தார்களென்னுமித்வர்த்தந்தானும் முதலிலே யில்லை.  (நிற்குறில்) – நிலைநின்ற புருஷார்த்தம் வேண்டியிருந்திகோளாகில்.  (ஆழ்ந்தார் இத்யாதி) – ஆழ்ந்துபரந்த கடலைப் படுக்கையாகவுடைய ஸர்வேஸ்வரன்.  திருமேனியின் ஸௌகுமார்யத்துக்கீடாக உறுத்தாதபடியான ஆழத்தையுடைத்தாய், திவ்யாவயவங்களைப் பரப்பிக்கொண்டு கண்வளருகைக்கு ஈடான பரப்பையுடைத்தாகை.  திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறது கர்மவஸ்யனாயன்றிறே, ஆஸ்ரயணீயனாகைக்கிறே; ஆனபின்பு,  அவன் நினைவோடே சேர ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பற்றுங்கோள்.  (அடியவராமினோ) – அவன் சேஷியாயிற்ற பின்பு நீங்கள் உங்களுடைய சேஷத்வத்தை இசையப்பாருங்கோள். அதவா, (அடியவராமினோ) – அடிமையல்லாததொரு வஸ்துவை இன்று அடிமையாக்கிக்கொடுத்ததாக நினைத்திருக்கும் பகவதபிப்ராயத்தாலே சொல்லிற்றாகவுமாம்.

ஏழாம் பாட்டு

ஆமின்சுவையவை யாறோடடிசிலுண்டார்ந்தபின்
தூமென்மொழிமடவார் இரக்கப்பின்னுந்துற்றுவார்
ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவராதலின்
கோமின்துழாய்முடி யாதியஞ்சோதிகுணங்களே.

: அநந்தரம், தேஹபோஷணஹேதுவான அந்நபாநாதிபோகமும் அநித்யமாகையாலே ஸர்வகாரணபூதனான ஸர்வஸ்மாத்பரனுடைய குணங்களை அநுஸந்தியுங்கள் என்கிறார்.

ஆம் – ப்ரக்ருத்யநுகுணமாய், இன் – ஹ்ருத்யமாய், அவை – லோகப்ரஸித்தமான, ஆறுசுவையோடு – (மதுர அம்ல லவண திக்த கடு கஷாய மாகிற) ஆறுரஸத்தோடே கூடின, அடிசில் – (விலக்ஷணமான) அந்நத்தை, உண்டு – புஜித்து, ஆர்ந்தபின் – பூர்ணரானபின்பு, தூ – (பரிவாலுண்டான ஸஹ்ருதயத்வத்தாலே) சுத்தமாய், மென் – (ஸ்ராவ்யமாம்படி) ம்ருதுவான, மொழி – பாஷணத்தையுடைய, மடவார் – (பத்யைகளான) ஸ்த்ரீகள், இரக்க – அபேக்ஷிக்கையாலே, (அதுமறுக்கமாட்டாமல்), பின்னும், துற்றுவார் – வருந்தி புஜித்துப்போருமவர்கள், (அந்த ஸம்பத்துநசித்தவாறே அந்தஸ்த்ரீகளிருந்த விடத்தே சென்று, நீங்களெல்லீருங்கூட), எமக்கு – எங்களுக்கு, ஒரு துற்று – ஒரு பிடிசோறு, ஈமின் – இடவேணும், என்று – என்று அபேக்ஷித்து, இடறுவர் – (அதுகிடையாதொழியிலும் வாசல் தோறும்) தட்டித்திரிவர்:  ஆதலில் – ஆதலால், துழாய் – திருத்துழாயாலே அலங்க்ருதமான, முடி – திருமுடியையுடையனாகையாலே நிரதிசயபோக்யனாய், ஆதி – ஸர்வகாரணபூதனாய், அம் – தர்சநீயமாய், சோதி – தேஜோமயமான திவ்யவிக்ரஹத்தையுடையனான ஸர்வேஸ்வரனுடைய, குணங்கள் – குணங்களை, கோமின் – (*ஸர்வாந் காமாந் – அஸ்நுதே*என்கிறபடியே) சேர்த்து புஜியுங்கோள்.

கோத்தல் – சேர்த்தல்.  எமக்கு என்னும் பன்மையால் – அத்வவஸ்தையிலும் ஸ்வபஹுமாநம் தோற்றுகிறது.

ஈடு: ஏழாம்பாட்டு. `ஐஸ்வர்யத்துக்கு நீர் சொல்லுகிற தோஷம் உண்டேயாகிலும், அந்நபாநாதிகள் தாரகமுமாய் போக்யமுமாயிருக்கிற ஆகாரமுண்டே’ என்ன, `அதுவும் நிலை நில்லாது’ என்கிறார்.

(ஆமின்சுவை) – ஆன இனியசுவை; நன்றான நல்ல ரஸம்.  (அவையாறோடு) – “ஷட்ரஸம்” என்று ப்ரஸித்தமானவற்றோடேகூட.  (அடிசிலுண்டு) – முன்பு இரந்துண்டு திரிந்தவன், நாழியரிசிபெற்று ஜீவிக்கப்புக்கவாறே ஒருவெள்ளாட்டியையும் ஸம்பாதித்து `முதலியார்’ என்னவும்பண்ணி `அடிசிலுண்ணாநின்றார்’ என்னவும்பண்ணும்.  (ஆர்ந்தபின்) – கண்டதடைய இட்டு வயிற்றைநிரப்பி, உதிரங்குடித்து வாய்விட்ட அட்டைபோலே பெயரவும் திரியவும் மாட்டாதே கிடந்து புரளாநிற்குமே; அத்வளவிலே இவனுக்கு ஸ்நேஹிகளாயிருப்பார் சில ஸ்த்ரீகள் வந்து, `உடம்பு பதர்போலேயிருந்தது; இதுகொண்டு எங்ஙனே ரக்ஷ்யவர்க்கமான எங்களை நோக்கப் பார்க்கிறது?’ என்பர்கள்; அத்தைக்கேளா, `நாம் உண்டிலோமோ?’ என்று இவன்தானும் ப்ரமிக்கும்.  முன்பு இவர்கள் அபேக்ஷித்தால் மறுக்குமே; ஒருதிரளையைத் திரட்டி, `இதுஎன்? பிடி’ என்பர்கள்.  பின்னை புஜியாதொழியமாட்டானே; அப்பேச்சின் இனிமையிலே துவக்குண்டு பின்னையும் புஜியாநிற்கும்.  இவர்களை இக்கட்டளையிலே வேறே யொருவன் கைக்கொள்ளுமே; அவர்களையும் முன்புத்தையவனைப்போலே இரந்துஊட்டாநிற்பர்களே இவர்கள்; அங்கே, தன் வயிறுவாழாமல் சென்று `நீங்களெல்லாருமாக எனக்கு ஒருபிடி தரவேணும்’ என்னும்.  (எமக்கு) பண்டு நல்லது கண்டால் தன்வாயில் இடாதே இவர்களுக்கு ஆக்கிப்போந்தவன், தன் செல்லாமையாலே எனக்கு என்கிறானிறே.  அப்போதையவனுக்கு ப்ரியமாக அவர்கள் முகம்பாரார்களிறே.  (இடறுவர்) – பின்னையும் தட்டித்திரிவர்கள்.

(ஆதலின்) – ஆனபின்பு, ஜீவநத்தின் நிலையாமை இதுவானபின்பு.  (கோமின் இத்யாதி) – ஸர்வைஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலேயுடையனாய், ஜகத்காரணபூதனாய்,  நிரவதிகதேஜோரூபமான விக்ரஹத்தையுடையனாயிருந்துள்ளவனுடைய குணங்களைக் கோமின்.  (ஆதியஞ்சோதிகுணங்களைக் கோமின்) – ஸ்வரூபகதமாயும் விக்ரஹகதமாயுமுள்ள கல்யாணகுணங்களைச் சேர்த்து அநுபவியுங்கோள், (அஹமந்நாத3:), (ஸோஸ்நுதே) என்று.  “ஓவாதவூணாகவுண்” (பெரிய திருவ. 78) என்கிறபடியே அநுபவியுங்கோள்.

எட்டாம் பாட்டு

குணங்கொள்நிறைபுகழ்மன்னர் கொடைக்கடன்பூண்டிருந்து
இணங்கியுலகுடனாக்கிலும் ஆங்கவனையில்லார்
மணங்கொண்டபோகத்துமன்னியும் மீள்வர்கள் மீள்வில்லை
பணங்கொளரவணையான் திருநாமம்படிமினோ.

: அநந்தரம், பகவத்ப்ரஸாதமில்லாதபோது லப்தமான ராஜ்யமும் நிலைநில்லாதாதலால் அநந்தசாயி திருநாமங்களை அப்யஸியுங்கோள் என்கிறார்.

குணம் – சீலாதிகுணங்களுக்கு, கொள் – ஆகரபூதராய், நிறை – (இக்குணங்களை யடைய லோகமெல்லாம் கொண்டாடுகையாலே) பூர்ணமான, புகழ் – புகழையுடையராய், மன்னர் – அபிஷிக்தக்ஷத்ரியபுத்ரர்களாய், கொடை – (ஸ்வஸம்பத்தை லோகோபஜீத்யமாக்கும்) ஔதார்யமாகிற, கடன் – ஸ்வபாவத்தை, பூண்டு – ஏறிட்டுக்கொண்டு, இருந்து – ப்ரதிஷ்டிதராய், இணங்கி – “அர்தி2தோ த்3ருஷ்ட்வா ஸமேத்ய” என்கிறபடியே பொருந்தி, உலகு – லோகம், உடன் ஆக்கிலும் – உடன்படும்படி ரக்ஷித்துப்போரிலும், ஆங்கு – அந்த ஐஸ்வர்யவிஷயமாக, அவனை – (ஐஸ்வர்யப்ரதனான) ஸர்வேஸ்வரனை, இல்லார் – ஆஸ்ரயித்துக்கொண்டுபோருகை யில்லாதவர்கள், – மணம் – நித்யோத்ஸவமான செவ்வியை, கொண்ட – உடைத்தான, போகத்து – ஐஸ்வர்ய போ43த்திலே, மன்னியும் – இப்படி நிலைநின்றார்களேயாகிலும், மீள்வர்கள் – நிவ்ருத்தைஸ்வர்யராவர்கள்; மீள்வு இல்லை – புநராத்ருத்தியில்லாத புருஷார்த்தம் ஸித்திக்கும்: பணம் கொள் – (ஸ்வஸ்பர்சத்தாலே) விரிகிற பணங்களையுடைய, அரவு – திருவநந்தாழ்வானை, அணையான் – அணையாகவுடையனாகை யாலே ஆஸ்ரித ஸம்ஸ்லேஷ ஸ்வபாவனானவனுடைய, திருநாமம் – திருநாமங்களை, படிமின் – (*அநந்தாநந்த சயந புராண புருஷோத்தம*என்னுங்கணக்கிலே) அப்யஸியுங்கோள்.

ஈடு: எட்டாம்பாட்டு.  ராஜ்யஸ்ரீ நிலைநில்லாதொழிவது, நாட்டோடுபொருந்தி வர்த்தியாதொழியிலன்றோ?  அவர்களோடு பொருந்திவர்த்திக்கவே அது நிலைநிற்குமே என்ன, – பொருந்திவர்த்தித்தாலும் எம்பெருமானை ஆஸ்ரயியாவிடில் கிடையாது.  அவனை ஆஸ்ரயித்துப் பெற்றாலும் அவற்றின் ஸ்வபாவத்தாலே நிலைநில்லா; ஆனபின்பு, அவன்தன்னையே ப்ரயோஜநமாக ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

(குணங்கொள் இத்யாதி) – குணங்கொண்டிருப்பாராய் – குணாதிகராயிருப்பாராய்: நிறைந்தபுகழையுடையராய்; பூர்ணையான குணவத்தாப்ரதையை யுடையராய்.  இப்படியிருந்தாலும் உபேக்ஷிப்பார்கள் அப்ராப்தனாகில்; (மன்னர்) – அபிஷிக்தக்ஷத்ரிய புத்ரர்களாவது.  ப்ராப்தராகிலும் கிட்டுவாரில்லையே லுப்த4னாகில்; கொடுக்கையே ஸ்வபாவமாயிருப்பது.  உதாரனானாலும் ப்ரதாபியாயிருக்குமாகில் கிட்டுவாரில்லையிறே; (இணங்கி) – ஸுலபனாய் எல்லாரோடும் பொருந்தி. (உலகுடன் ஆக்கிலும்) – லோகத்தைத் தங்களோடே சேர்த்துக்கொண்டார்களேயாகிலும்; (ராமோ ராஜ்யமுபாஸித்வா) என்கிறபடியே சேர்த்துக்கொள்வது.  (ஆங்கவனையில்லார்) – அவ்வர்த்தத்தில் அவன் ப்ரஸாதமில்லையாகில் அந்த ராஜ்யஸ்ரீதான் கிடையாது.  (மணங்கொண்ட இத்யாதி) – பகவத்ப்ரஸாதத்தாலே ஐஸ்வர்யத்தை ப்ராபிப்பது.  (மணங்கொண்டபோகம்) – செவ்வியையுடைத்தான ஐஸ்வர்யம்.  அந்த ஐஸ்வர்யம் கிட்டினாலும் அது தன்னின் ஸ்வபா4வத்தாலே மீளுவர்கள்.

(மீள்வில்லை) – ஆனபின்பு (ந ச புநராவர்த்ததே) என்கிற பேற்றைப் பெற அமையும்.  எத்தாலேயென்னில், – (பணங்கொள் இத்யாதி) – ஸ்வஸ்பர்ஶத்தாலே விகஸிதமான பணங்களையுடைய திருவநந்தாழ்வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே அவகாஹியுங்கோள்.  திருநாமத்திலே அவகாஹித்தாரைத் திருவநந்தாழ்வானோபாதி விடானென்கை.  அன்றிக்கே, (ஏவம்வித் பாதே3நாத்4யா ரோஹதி) என்கிறபடியே துகைத்தேறலாம்படியான படுக்கையையுடையவனென்னுதல்.  பலாபிஸந்திரஹிதமாக தாநதர்மத்தை அநுஷ்டித்து எம்பெருமானை உத்தேஸ்யமாக்காதே, பலாபிஸந்தியுக்தமாக அநுஷ்டித்து ஸ்வர்க்காதிபோகங்களைப் பற்றினால் நிலைநில்லா என்றுமாம்.

ஒன்பதாம் பாட்டு

படிமன்னுபல்கலன் பற்றோடறுத்துஐம்புலன்வென்று
செடிமன்னுகாயம்செற்றார்களும் ஆங்கவனையில்லார்
குடிமன்னுமின்சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள் மீள்வில்லை
கொடிமன்னுபுள்ளுடை அண்ணல்கழல்கள்குறுகுமினோ.

: அநந்தரம், இப்படி பாரலௌகிகமான ஸ்வர்க்காதிஸுகமும் நிலைநில்லாமையாலே, நிலைநின்ற புருஷார்த்தத்தைக் கொடிகட்டிக்கொடுக்கும் ஈஸ்வரனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

படி – க்ஷேத்ரத்தையும், மன்னு – (கழற்றாமல்) என்றும் பூண்டுபோந்த, பல்-பலவகைப்பட்ட, கலன் – ஆபரணங்களையும், பற்றோடு – ஸங்கத்தோடேகூட, அறுத்து – விட்டு, ஐம்புலன் – (விஷயாந்தரப்ரவணமான) இந்த்ரியங்களைந்தையும், வென்று – (ஸ்வவசமாம்படி) வென்று, செடி மன்னு – (தீர்க்ககாலம் தபஸ்ஸுபண்ணுகையாலே) தூறுமண்டிக்கிடக்கிற, காயம் – சரீரத்தை, செற்றார்களும் – (உபவாஸாதிகளாலே) ஒறுத்துப்போந்தவர்களும், மன்னும் – (இந்தத்தப:பலமாய் கல்பாவஸாந) ஸ்தாயியான, குடி – குடியிருப்பையுடைத்தாய், இன் – ஸுகோத்தரமான, சுவர்க்கம் – ஸ்வர்க்கத்தை, எய்தியும் – பெற்றார்களேயாகிலும், (அந்த போகஸ்தைர்யத்துக்கு உறுப்பாக), அவனை – (பலப்ரதனான) அவனை, ஆங்கு – அங்குமிருந்து, இல்லார் – ஆஸ்ரயிக்கையில்லாதவர்கள், மீள்வர்கள் – நித்ருத்தராய்ப்போவர்கள்; மீள்வில்லை – நித்ருத்தியில்லாத பலமுண்டாகைக்கு, கொடி – த்வஜத்திலே, மன்னு – நித்யஸந்நிதிபண்ணும், புள் – பெரியதிருவடியை, உடைய – உடைய, அண்ணல் – ஸர்வேஸ்வரனுடைய, கழல்கள் – திருவடிகளை, குறுகுமின் – கிட்டப்பாருங்கோள்.  படிமன்னு என்று – சரீரத்தோடு பொருந்தின என்றுமாம்.

ஈடு: ஒன்பதாம்பாட்டு.  கீழெட்டுப்பாட்டாலே – ஐஹிகபோகம் அஸ்திர மென்றார்; இதில் காயிகக்லேசாத்மகமான தபஸ்ஸைப் பண்ணி அந்தத்தப:பலம் ஸ்வர்க்கமாகக் கொண்டு ஸ்வர்க்கத்தை ப்ராபிக்கும்போது பகவத்ப்ரஸாதம் வேணும்; அது உண்டாய் ப்ராபித்தாலும் அதுதன்னின் ஸ்வபாவத்தாலே நிலைநில்லாது என்கிறார்.

(படி) – இவன் தபஸ்ஸிலே அந்வயிக்கும்போது விடுமவை சொல்லுகிறது.  படி – பூமி.  (மன்னுபல்கலன்) – க்ரமாகதமாயிருக்கிற ஆபரணஜாதம்.  அன்றியே, (படிமன்னுபல்கலன்) – தன்வம்சத்திலுள்ளார் பரம்பரையாகப் பூண்டுபோருகிற ஆபரண மென்னுதல்.  (பற்றோடு அறுத்து) – அவற்றைவிட்டு வர்த்திக்கையன்றிக்கே வாஸநையும்போகை.  (ஐம்புலன்வென்று) – அவற்றில் ருசிக்கு அடியான ஸ்ரோத்ராதிகள் விஷயங்களிற் போகாதபடிவென்று; (இந்த்3ரியாணி புரா ஜித்வா).  (செடிமன்னுகாயம் செற்றார்களும்) – தபஸ்ஸுக்காக நெடுங்காலம் ஓரோ ஆஸநங்களிலே யிருந்தால் சலியாமையாலே உடம்பிலே தூறுமண்டும்படி சரீரத்தையொறுத்துத் தபஸ்ஸுபண்ணினவர்களும்; “நெறியார்குழற்கற்றை முன்னின்றுபின் தாழ்ந், தறியாதிளங்கிரியென்றெண்ணிப் – பிறியாது, பூங்கொடிக்கள்வைகும்” (இர.திரு. 53) என்னக்கடவதிறே.  (ஆங்கவனையில்லார்) – அவன் ப்ரஸாதமில்லையாகில் தானே ஸித்தியாது.  அவன் ப்ரஸாதமுண்டாய்ப் பெற்றதாகில், (குடிமன்னும் இன்சுவர்க்கமெய்தியும்) “இதுக்கும் ஆள்பற்றுவதே!” என்று பட்டர்.  குடிநெருக்கத்தையுடைத்தாய், நரகாத் வ்யாவ்ருத்தமான இனிமையையுடைத்தான ஸ்வர்க்கத்தை ப்ராபித்தாலும்.  (மீள்வர்கள்) – மீளுவர்கள்.  புண்யக்ஷயம்பிறந்தவாறே “த்வம்ஸ” என்று தள்ளுவர்களிறே.

(மீள்வில்லை) – அங்ஙனொருமீட்சியில்லை.  அவனுடைய புண்யத்துக்கு க்ஷயமில்லையே அப்படி; “புணைக்கொடுக்கிலும் போகவொட்டாரே.” (பெரியா திரு.4.5.2)  (கொடிமன்னுபுள்) – கொடியாய் மன்னா நின்றுள்ள புள்.  தன்னையாஸ்ரயித்தாரையும் தனக்கு த்யாவர்த்தகவிசேஷணமாகக் கொள்ளுமவனென்கை.  அவன் தன்னை த்யாவர்த்தக விசேஷணமாகக் கொள்ளவேண்டுவானென் அல்லாதாரிற்காட்டில்?  என்னில்; – அவனுடைய மூக்குவலியும் அவன்பக்கல் பக்ஷபாதமும் அதுக்குஅடி.  (புள்ளுடையண்ணல்) – ஸ்ரிய:பதி:” என்னுமாபோலே ஈஸ்வரனுக்கு நிரூபகமிறே அவன்.  (அண்ணல்) – சேஷி.  (கழல்கள்குறுகுமினோ) – உங்கள்ஸம்ஸாரம்கழல அவன்கழல்களைக் குறுகுங்கோள்.  “திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்துய்ம்மினோ” என்றார் முதற்பாட்டில்; இங்கே புள்ளுடை யண்ணல்கழல்கள் குறுகுமினோ என்கிறார் காணும், அவளோபாதி இவனும் அங்குத்தைக்கு நிரூபகதர்மமென்று.

பத்தாம் பாட்டு

குறுகமிகவுணர்வத்தொடுநோக்கி எல்லாம்விட்ட
இறுகலிறப்பென்னும்ஞானிக்கும் அப்பயனில்லையேல்
சிறுகநினைவதோர்பாசமுண்டாம் பின்னும்வீடில்லை
மறுகலிலீசனைப்பற்றி விடாவிடில்வீடஃதே.

: அநந்தரம், இப்படி அஸ்திரமன்றியே ஸ்திரமான கைவல்யமும் பரமபுருஷார்த்தத்தைப்பற்றப் பசையற்றிருக்கையால் நியந்தாவான ஸர்வேஸ்வர பகவத்ப்ராப்தியே  அதிசயிதபுருஷார்த்தம் என்கிறார்.

குறுக – (விஷயாந்தரங்களில் அகலப்போகாதபடி ப்ரத்யக்விஷயத்திலே) ஆஸந்நமாக, உணர்வத்தொடு – ஜ்ஞாநைகநிருபணீயமான ஆத்மவஸ்துவோடேகூடி, மிகநோக்கி – (தர்சநஸமாநாகாரமாம்படி) மிக அநுஸந்தித்து, எல்லாம் – (ஆத்மத்யதிரிக்த) ஸகலபுருஷார்த்தங்களையும், விட்ட – விட்டவனாய், இறுகல் – ஆத்மமாத்ரத்திலே பர்யவஸித்த, இறப்பு – மோக்ஷத்தை, என்னும் – புருஷார்த்த மென்றிருக்கும், ஞானிக்கும் – ஜ்ஞாநிக்கும், அப்பயன் – (ஸ்வயம்ப்ரயோஜநரூபமான ஸர்வேஸ்வரனை) உபாயமாகப்பற்றுகை,  இல்லையேல் – இல்லையாகில், சிறுக – அபக்ருஷ்ட புருஷார்த்தங்களை, நினைவது – ஸ்மரிக்கைக்கடியான, ஓர் பாசம் – ஸங்கம், உண்டாம் – உண்டாம்; பின்னும் – அதுக்குமேலே, வீடு – (ஆத்மப்ராப்திரூபமான) மோக்ஷமும், இல்லை – ஸித்தியாது; (ஆனபின்பு), மறுகல் இல் – ஸ்வபாவபேதாதிரூபஸமஸ்தஹேயப்ரதிபடனாய், ஈசனை – (ஸ்வாபாவிக) ஸமஸ்தநியந்த்ருத்வாதி ஸமஸ்தகல்யாண குணாத்மகனான ஸ்வாமியை, பற்றி – (ப்ராப்யத்வேநவும் ப்ராபகத்வேநவும்) ஸமாஸ்ரயித்து, விடாவிடில் – (அதிகார்யந்தரங்களைப் போலே ப்ரயோஜநாந்தரங்களைக்கொண்டு) அகலாதொழியில், அஃதே – அதுவே, வீடு – பரம புருஷார்த்தம்.

இறுகல் – ஸங்கோசமும், சிக்கெனவும்.  மறுகல் – ஸ்வபாவபேதம்.

ஈடு. – பத்தாம்பாட்டு.  பூமியில் ஐஸ்வர்யம், ஸ்வர்க்காநுபவம் இவை நிலைநில்லா என்றார், கீழ்; இவைபோலன்றிக்கே ஆத்மலாபம் நிலைநின்ற புருஷார்த்தமே யென்னில்; – கீழ்ச்சொன்னத்தைக் குறித்து ஒருநன்மை யுண்டேயாகிலும் பகவதாநந்தத்தைப்பற்ற இது ஏகதேசமாயிருக்கையாலே அதுவும் தண்ணிது; ஆனபின்பு, அவனைப்பற்றப் பாருங்கோள் என்கிறார்.

(குறுக இத்யாதி) – முதல்தன்னிலே ப்ரத்யாஹ்ருதேந்த்ரியனுக்கிறே ஆத்மப்ராப்தியில் அதிகார முள்ளது.  பாஹ்யவிஷயங்களிலே தூரப்போய் க்ரஹிக்கும் மநஸ்ஸை ப்ரத்யகர்த்த விஷயமாக்குவது.  அதாவது – கண்ணையிட்டுக் கண்ணைப் பார்த்தாற்போலேயிருப்பதொன்றிறே. சிலகாலம் பாஹ்யவிஷயங்களில் பண்ணிப்போந்த வாஸநையுடைய ஆத்மாவிலேயாம்படி விசததமமாக அநுஸந்தித்து.  (எல்லாம்விட்ட) – ஸ்ரிய:பதி பெரியதிருவடி திருத்தோளிலே தோளும் தோள்மாலையுமாய் வந்து நின்றாலும் சாணகச்சாற்றோபாதி சுத்திமாத்ரத்தையே உபஜீவித்து, போக்யதையில் நெஞ்சுசெல்லாதபடி அவனையும் விடுவது.  (இறுகலிறப்பென்னும் ஞானிக்கும்) – ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற ஆத்மஜ்ஞானிக்கும்.  இவ்வருகுள்ளத்தைப்பற்ற `விஸ்த்ருதம்’ என்றிருந்தானேயாகிலும், அவ்வருகுங்கண்டவ ராகையாலே `ஸங்கோசம்’ என்றிருக்கிறார், இவர்.  இறப்பு – மோக்ஷம்.  (அப்பயனில்லையேல்) – அந்த பகவதுபாஸநமில்லையாகில் ஆத்மாநுஸந்தாநம் பண்ணவொண்ணாது.  உபாஸநந்தான் ஸுகரூபமாயிருக்கையாலே, பயனென்கிறது.  அவனுடையஸாதநம் இவருக்கு ப்ரயோஜநமாயிருக்கிறது.  (சிறுக இத்யாதி) தன்னை முன்புத்தையிற்காட்டில் அதிக்ஷுத்ரனாக நினைக்கும்படி, பந்தகமான அவித்யாதிகள் சதசாகமாகப்பணைக்கும்; “தேவோஹம், மநுஷ்யோஹம்” என்கைக்கு அடியான பந்த முண்டாம்.

(பின்னும்வீடில்லை மறுகலிலீசனைப்பற்றிவிடாவிடில்) – இந்த்ரியநியமநாதி-களுண்டாய், பின்பு பகவதுபாஸநத்தைப் பண்ணிக் கர்மக்ஷயத்தைப்பிறப்பித்து ஆத்மாவை லக்ஷிக்கப்பார்க்குமன்றும், ஸர்வேஸ்வரன்பக்கல் அந்திமஸ்ம்ருதிபண்ணி இஸ்சரீரத்தைவிடப் பாரானாகில் அந்த மோக்ஷந்தானில்லை.  (மறுகல் இல் ஈசனை) – ஹேயப்ரத்யநீகனான ஸர்வேஸ்வரனை.  அன்றியே, (மறுகலில்) – மறுகுகிறஸமயத்தில்; ப்ராணவியோகஸமயத்தில் வருங் கலக்கத்தி லென்னுதல்.  (ஈசனைப் பற்றி விடாவிடில்) – அந்திமஸ்ம்ருதியில்லையாகில்; ஆதிபரதனைப்போலே மானாதல் மரையாதலா மித்தனை.  (வீடுஅஃதே) – “திருநாரணன்தாள்காலம் பெறச்சிந்தித்துய்ம்மினோ” என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.

பதினொன்றாம் பாட்டு

அஃதேஉய்யப்புகுமாறென்று கண்ணன்கழல்கள்மேல்
கொய்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்குற்றேவல்
செய்கோலத்தாயிரம் சீர்த்தொடைப்பாடலிவைபத்தும்
அஃகாமல்கற்பவர் ஆழ்துயர்போய்உய்யற்பாலரே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

: அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு பலமாக து:கநிவ்ருத்தி பூர்வகமான ஆத்மோஜ்ஜீவநத்தை அருளிச்செய்கிறார்.

உய்ய – உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக, புகும் – கிட்டும், ஆறு – உபாயம், அஃதே – அதுவே, (என்று அறுதியிட்டு), கண்ணன் – க்ருஷ்ணனுடைய, கழல்கள்மேல் – திருவடிகளின்மேலே, கொய் – கொய்யப்படும், பூ – புஷ்பஸம்ருத்தியையுடைத்தான, பொழில் – பொழிலையுடைத்தான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், குற்றேவல்கள் – அந்தரங்கமான கைங்கர்யரூபங்களாக, செய் – செய்த, கோலம் – அலங்காரபூர்ணமாய், ஆயிரம் – ஸஹஸ்ரஸங்க்யாதமாம், சீர்த் தொடை – சீருந் தொடையுமுடைய, பாடல் – பாடலான திருவாய்மொழியில், இவைபத்தும் – இவைபத்தையும், அஃகாமல் – நழுவாதபடி, கற்பவர் – கற்பவர், ஆழ் – (ஐஸ்வர்யகைவல்யங்களிலே) ஆழங்காற்பட்டு வரும், துயர் – து:கம், போய் – போய், உய்யற்பாலர் – (பகவத்பக்திரூபமான) ஆத்மோஜ்ஜீவநப்ரகாரத்திலேயாவர்கள்.

இது – கலித்துறை.

வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே சரணம்

ஈடு. – நிகமத்தில் – இத்திருவாய்மொழி பத்துங்கற்றார், ஐஸ்வர்யாதி க்ஷுத்ர புருஷார்த்தத்தைத் தவிர்ந்து பகவத்கைங்கர்யைகபோகராவர் என்கிறார்.

(அஃதேஉய்யப்புகுமாறென்று) – “திருநாரணன்தாள்” என்று நான்சொன்ன அதுவே உஜ்ஜீவிக்கைக்கு உபாயமும் உபேயமு மென்று.  (கண்ணன்கழல்கள்மேல்) – * “கண்ணனைத்தாள் பற்றி” (3.10.10) என்று தாமுஞ்சொல்லி, “கண்ணன்கழல்கள்நினைமினோ” என்று பிறர்க்கும் உபதேசித்துநின்றாரே; அதுதன்னையே சொல்லுகிறார்.  `இப்படி அடியுடையார் புறம்பில்லை” என்றிறே இவ்வடிகளைத்தாம் பற்றிற்று.  “துயரறுசுடரடிதொழுதெழு” (1.1.1) என்று தம்திருவுள்ளத்துக்கு அருளிச்செய்தார், “வண்புகழ்நாரணன்திண்கழல்சேர்” (1.2.10) என்று பரோபதேசம் பண்ணினார் அங்கு; இங்கே “கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலன்” (3.10.10) என்றார், “கண்ணன் கழல்கள் நினைமினோ” என்று பரோபதேசம் பண்ணினார்; இதுஎன்னஅடிப்பாடுதான்! “கண்ணனல்லாலில்லைகண்டீர்சரண்” (6.1.6) என்றிறே பரோபதேசம் நிகமிக்கிறதும்.  (கொய்பூ இத்யாதி) – நித்யவஸந்தமான திருச்சோலைசூழ்ந்த திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார், ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே அந்தரங்கவ்ருத்தி பண்ணினவை இவைதான்.  செய் – செய்த கவியென்னுதல்; `குற்றேவல் செய்’ – என்று கீழேகூட்டி, வாசிகமான அடிமையென்னுதல்.  (கோலத்தாயிரம்) – கவிக்குச்சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம்.  (சீர்இத்யாதி) – அவன்குணங்களைத்தொடுத்துப்பாடின இவற்றில் ஒன்றுங் குறையாமே கற்றவர்கள் பகவத்த்யதிரிக்த புருஷார்த்தங்களான ஐஸ்வர்யகைவல்யங்களாகிற அநர்த்தங்கள் போய் உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவராவர்.  அஃகல் – சுருங்கல்.  (உய்யற்பாலர்) – உஜ்ஜீவநமே ஸ்வபாவமாகவுடையராவர்.  “காலம்பெறச் சிந்தித்துய்மினோ” என்று தாம்சொன்னபடியையுடையராகை.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்ரமிடோபநிஷத் ஸங்கதிஒருநாயகமாய்

ஆத்யேசதுர்தஶதகேதஶகேஶடாரி:

துஷ்டஸ்ததாபரஹிதம்தயயாவிவ்ருண்வந்|

ராஜ்யஸ்வராத்மபரிபோகசலால்பபாவௌ

ஸம்யக்ப்ரஸாத்யஹரிமேவபுமர்தமாஹ||  ||31||

த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி —- ஒருநாயகமாய்

ஶ்ரீமாந்நாராயணஸ்ஸ்வாம்யநுகுணமகுடோவீரதாமாங்கமௌளி: துர்தாந்தாராதிஹந்தாऽத்புதநியததநு:கல்பபாதோதிதல்ப: ।

விஶ்வாத்யஜ்யோதிருர்வீதரபணிஶயநோவேதரூபஸ்வகேது: நிர்தூதாஶேஷதோஷ: ப்ரபுரத கதிதஸ்ஸுதிரைஶ்வர்யஸீமா ||          4-1

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒருநாயகமாய் உலகுக்குவானோர்

இருநாட்டிலேறி  உய்க்கும்இன்பம் -திரமாகா

மன்னுயிர்ப்போகம்தீது  மாலடிமையேஇனிதாம்

பன்னியிவைமாறனுரைப்பால். ||31||

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

******

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.