பெரிய திருமொழி
பதினோராம் பத்து
ஏழாம் திருமொழி
நீணாகம் சுற்றி, நெடுவரை நட்டு * ஆழ்கடலைப்
பேணான் கடைந்து, அமுதம் கொண்டுகந்த பெம்மானைப் *
பூணார மார்வனைப், புள்ளூரும் பொன் மலையைக் *
காணாதார் கண் என்றும் கண்ணல்ல, கண்டாமே. 11.7.1
நீள்வான் குறளுருவாய், நின்று * இரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட, தக்கணைக்கு மிக்கானைத் *
தோளாத மாமணியைத், தொண்டர்க் கினியானைக் *
கேளாச் செவிகள் செவியல்ல, கேட்டாமே. 11.7.2
தூயானைத், தூய மறையானைத் தென்னாலி
மேயானை * மேவாளுயிருண்டு அமுதுண்ட
வாயானை * மாலை வணங்கி, அவன் பெருமை
பேசாதார் * பேச்சு என்றும் பேச்சல்ல, கேட்டாமே. 11.7.3 திருவாலி
கூடா இரணியனைக், கூருகிரால் மார்விடந்த *
ஓடா அடலரியை, உம்பரார் கோமானைத் *
தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்
பாடாதார் * பாட்டு என்றும் பாட்டல்ல, கேட்டாமே. 11.7.4
மையார் கடலும், மணிவரையும் மாமுகிலும் *
கொய்யார் குவளையும் காயாவும் போன்று, இருண்ட
மெய்யானை * மெய்ய மலையானைச், சங்கேந்தும்
கையானைக் * கை தொழாக் கையல்ல, கண்டாமே. 11.7.5 திருமெய்யம்
கள்ளார் துழாயும், கணவலரும் கூவிளையும் *
முள்ளார் முளரியும், ஆம்பலும் முன் கண்டக்கால் *
புள்ளாய் ஓரேனமாய்ப், புக்கிடந்தான் பொன்னடிக் கென்று *
உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக், கொள்ளோமே. 11.7.6
கனையார் கடலும், கருவிளையும் காயாவும்
அனையானை * அன்பினால், ஆர்வத்தால் * என்றும்
சுனையார் மலரிட்டுத், தொண்டராய் நின்று *
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல, கண்டாமே. 11.7.7
வெறியார் கருங் கூந்தல், ஆய்ச்சியர் வைத்த *
உறியார் நறுவெண்ணெய், தானுகந்து உண்ட
சிறியானைச் * செங்கணெடியானைச், சிந்தித்து
அறியாதார் * என்றும் அறியாதார், கண்டாமே. 11.7.8
தேனொடு வண்டாலும், திருமாலிருஞ்சோலை *
தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய் *
ஆன்விடை யேழன்றடர்த்தாற்கு ஆளானா ரல்லாதார் *
மானிடவ ரல்லரென்று, என் மனத்தே வைத்தேனே. 11.7.9 திருமாலிருஞ்சோலை
மெய்ந்நின்ற பாவம், அகலத் * திருமாலைக்
கைந்நின்ற ஆழியான், சூழும் கழல் சூடிக் *
கைந்நின்ற வேற்கைக், கலியனொலி மாலை *
ஐயொன்று மைந்தும், இவை பாடி யாடுமினே. 11.7.10