02-06 12000/36000 Padi

ஆறாம் திருவாய்மொழி
வைகுந்தா – ப்ரவேசம்

*****

– ஆறாம் திருவாய்மொழியில் – தம்மோடு ஸம்ஸ்லேஷித்த ப்ரீத்யதிசயத்தாலே அத்யந்தம் ஹ்ருஷ்டனான ஸர்வேஸ்வரன் “இவர் நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகலத்தேடி இத்தைக் குலைக்கில் செய்வதென்?” என்கிற அதிசங்கைபண்ணி, தன் விஸ்லேஷபீ4ருத்வத்தை இவருடைய திருவுள்ளத்திலே ப்ரகாசிப்பிக்க, “நம்முடையவளவில் இவன் அபிநிவேசமிருந்தபடியென்!” என்று அத்யந்த ஹ்ருஷ்டராய், இவனுடைய அதிசங்காநிவ்ருத்த்யர்த்தமாக – தாம் அவனைச் சிக்கெனப்பற்றினமையையும், அவன்தான் அநந்யபரனாய்த் தம்மோடே கலந்தபடியையும், ஸ்வாநுபவத்தைக் கொடுத்த ஔதார்யாதிசயத்தையும், அவ்வௌதார்யமடியாகத் தாம் விடமாட்டாமையையும், லப்தபோகரான தமக்கு விட யோக்யதையில்லை என்னுமிடத்தையும், இவ்வநுபவஸித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும், அந்த லாபம் தம்மளவில் நில்லாமல் ஸம்பந்தி ஸம்பந்தி பர்யந்தமானபடியையும், இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்குண்டான அபேக்ஷையையும், க்ருஷிபண்ணினவன்தான் இத்தைக் குலையான் என்னுமிடத்தையும், அவன் குலைக்கிலும் தாம் விட க்ஷமரல்லர் என்னுமிடத்தையும் அருளிச்செய்து, அவனுடைய விஸ்லேஷாதிஶங்கையை நிஸ்சேஷமாக நிவர்த்திப்பித்தருளுகிறார்.

ஈடு – ‘ஆடியாடி’யில் (24) ஆர்த்திதீர வந்து ஸம்ஸ்லேஷித்தபடி சொல்லிற்று ‘அந்தாமத்தன்பு’ (2-5); அந்த ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ப்ரீதி அவனதென்னுமிடம் சொல்லுகிறது – இத்திருவாய்மொழி.  “ப்ரணயிப்ரீத்யநுஸந்தா4நங்காண் இது” என்று ஆளவந்தார் அருளிச்செய்யும்படி;  ஆழ்வார் விஷயமாக ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதி சொல்லுகிறது இதில்.  ‘ஊனில்வாழுயிரிலே’ (23) – ஆழ்வார் தாம் ப43வத3நுப4வம் பண்ணித் தமக்கு அவன் பக்கலிலே உண்டான ப்ரேமம் அவனளவில் பர்யவஸியாதே,  “அடியார்கள் குழாங்களை  உடன்கூடுவதென்று கொலோ” (23-10) என்று – ததீ3யரளவும் சென்றபடி சொல்லிற்று; இத்திருவாய்மொழியில் ஸர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல் பண்ணின ப்ரேமம் இவரொருவரளவன்றிக்கே,  ஸம்ப3ந்தி4ஸம்ப3ந்தி4களளவும் வெள்ளமிடுகிறபடி சொல்லுகிறது.   இரண்டு தலைக்கும் ரஸம் அதிசயித்தால், ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4களளவும் செல்லுமிறே; “எமர் கீழ்மேல் எழுபிறப்பும் விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல் மாறினர்” (2-6-7)  என்கிறாரிறே.

உப4யவிபூ4தியுக்தனாய், ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகனாய், ஸர்வ ப்ரகாரபரிபூர்ணனான தான் தன்படிகள் ஒன்றும் குறையாதபடி வந்து, இவரோடே ஸம்ஸ்லேஷித்து, அந்த ஸம்ஸ்லேஷந்தான் “தன்பேறு” என்னுமிடந்தோற்ற ஹ்ருஷ்டனாய், “அநாதி3காலம் எதிர்சூழல் புக்குத் (2-7-6) திரிந்த வஸ்துவை
ஒருபடி ப்ராபிக்கப்பெறுவோமே; இவர் தாம் இனி நம்மை விடில் செய்வதென்?” என்று அதிசங்கைபண்ணி அவன் அலமாக்கிறபடியைக்கண்டு, “நீ இங்ஙன் படவேண்டா” என்று அவன் அதிசங்கையைப் பரிஹரித்து அவனை உளனாக்குகிறார்.

“வைதே3ஹி! ரமஸே கச்சிச்சித்ரகூடே மயா ஸஹ” என்றாற்போலேயாயிற்று இதில் ரஸமும்; மைதி2லி! உன்னையறிந்தாயே, நம்மையறிந்தாயே, கலக்கிற தே3சமறிந்தாயே என்றாரிறே பெருமாள்.

முதல் பாட்டு

வைகுந்தா! மணிவண்ணனே! என்பொல்லாத் திருக்குறளா! என்னுள் மன்னி*
வைகும் வைகல்தோறும் அமுதாய வானேறே! *
செய்குந் தாவருந் தீமைஉன் னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா!* உன்னைநான் பிடித்தேன்கொள் சிக்கெனவே.

– முதற்பாட்டில் – நிரதிசயபோக்யனாய், அநிஷ்டநிவர்த்தகனான உன்னை நான் சிக்கெனப் பற்றியிருக்கிறேன் என்று திருவுள்ளம்பற்று என்கிறார்.

வைகுந்தா – பரமபதநிலயத்வத்தாலே அஸாதாரணஶேஷியாய், மணிவண்ணனே – நீலரத்நம்போன்ற வடிவையுடையனாகையாலே ஸுலபனாய், என்பொல்லாத் திருக்குறளா – தர்சநீயமான வாமனவிக்ரஹத்தையுடையனாகையாலே – போக்யனாய், (இவ்வாகாரத்ரயத்தையும் ப்ரகாஶிப்பித்துக் கொண்டு) என்னுள் – என் நெஞ்சுக்குள்ளே, மன்னி – ஸ்திரஸம்ஸ்லேஷம்பண்ணி, வைகும் – இருக்கிற, வைகல்தோறும் – காலந்தோறும், அமுதாய – நித்யபோக்யமாய்க்கொண்டு, வானேறே – நித்யஸூரி ஸமாநமாம்படி அநுபவிப்பிக்கிற மேன்மையையுடையனாய், செய் – தானே செய்துகொள்ளப்பட்டு, குந்தா – ப2லப்ரதாநத்தில் குந்தாதே, அரும் – பரிஹரிக்க அரிதான, தீமை – கொடிய பாபங்களை, உன்னடியார்க்கு – உன்னோடு சேஷத்வ ஸம்பந்தமுடையார்க்கு, தீர்த்து – தீர்த்து, (அவை ப்ரதிகூலரான அஸுரப்ரக்ருதிகள் பக்கலிலேயாம்படி) அசுரர்க்கு – அவர்களுக்கு, தீமைகள் – அநர்த்தத்தை, செய் – விளைக்கும், குந்தா – குந்தமாகிற ஆயுதத்தையுடையவனே! உன்னை – (இப்படி போக்யபூதனாய், அநிஷ்டநிவர்த்தகனாய், ஆஸ்ரிதபக்ஷபாதியான) உன்னை, நான் – (உன் இனிமையை அறிந்து உன்னையொழியச் செல்லாத) நான் (இனி), சிக்கென – விடாதபடி ஸ்திரமாக, பிடித்தேன் – பற்றினேனாக, கொள் – திருவுள்ளம்பற்று.

“செய்கும், தாவரும்” என்று சொல்லாய் – செய்யப்பட்டுக் கடக்கவரிய என்றுமாம்.  “குந்தமென்று – மரமாய், அதின் வெளுப்பையிட்டு ஸுத்தியைக் காட்டுகிறது” என்றும் சொல்லுவர்.  “பொல்லா” என்று – விபரீதலக்ஷணையாலே அழகைச்சொல்லுகிறது.  “என்பொல்லா” என்று தம்மை அநந்யார்ஹராக்கிற்று அவ்வழகாலே என்று கருத்து.

ஈடு – முதற்பாட்டில் – ‘அந்தாமத்தன்பிலே’ (2-5) – ஆழ்வாருடனே வந்து கலந்து தான் பெறாப்பேறு பெற்றானாயிருக்கச்செய்தே, இவர், “அல்லாவியுள் கலந்த” (2-5-5) என்றும், “என்முடிவு காணாதே என்னுள் கலந்தான்” (2-5-8) என்றும் தம்முடைய நைச்யத்தை அநுஸந்தி4த்தவாறே, “வளவேழுலகு (1-5) தலையெடுத்து இன்னம் இவர் நம்மை விடில் செய்வதென்?” என்று எம்பெருமானுக்குப் பிறந்த அதிசங்கையை நிவர்த்திப்பிக்கிறார்.

(வைகுந்தா) “நித்யவிபூ4தியுக்தன் தம்முடனே வந்து கலந்தான்” என்று ஹ்ருஷ்டராகிறார் என்னுமிடம் தோற்றுகிறது.  அவனுடைய முதற்பேரைச் சொல்லுகிறார்.  ஸ்ரீஜநகராஜன்திருமகள் “ஆர்யபுத்ர” என்னுமாபோலேயும், திருவாய்ப்பாடியில் பெண்கள் “க்ருஷ்ண” என்னுமாபோலேயும் (வைகுந்தா) என்கிறார்.  போ43ம் உத்கூலமானால் பரஸ்பரநாம க்3ரஹணத்தாலே த4ரிப்பதொன்று உண்டிறே.

(மணிவண்ணனே) அணைத்தபோதை ஸ்பர்சத்தாலே திமிர்த்துச் சொல்லுகிறார்.  நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவையுடையவனே! (என் பொல்லாத் திருக்குறளா) மஹாப3லிபக்கலிலே இரப்பாளனாய் நின்றாற்போலேகாணும் இவரைப் பெறுகைக்குச் சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை.  “அழகிது” என்னில் – நாட்டொப்பமென்று, அழகில் விஸஜாதீயதையைச் சொல்லுதல்; கண்ணெச்சில் வாராமைக்குக் கரிபூசுகிறார் என்னுதல்.  “வைகுந்தா” என்று – மேன்மை சொல்லிற்று; “மணிவண்ணனே” என்று – வடிவழகு சொல்லிற்று; “என் பொல்லாத் திருக்குறளா” என்று – ஸௌலப்4யம் சொல்லிற்று; இம்மூன்றும் கூடினதாயிற்று பரத்வமாவது.

(என்னுள் மன்னி) இந்த்3ரன் ராஜ்யலாப4ம் பெற்றுப்போனான்; மஹாப3லி ஔதா3ர்யலாப4ம் பெற்றுப்போனான்; அவ்வடிவழகுக்கு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலேயாயிற்று.  என்னுடைய ஹ்ருத3யத்தே வந்து நித்யவாஸம்பண்ணி.  (வைகும் வைகல்தோறும் அமுதாய) கழிகிற காலந்தோறும் எனக்கு அபூர்வாம்ருதவத் போ4க்3யனானான்.  (வானேறே) நித்யஸூரிகளோடே கலந்து அவர்களைத் தோற்பித்து மேனாணித்திருக்குமாபோலேயாயிற்று, இவரோடே கலந்து இவரைத் தோற்பித்திருந்த இருப்பு.  “ஏறு” என்கிறது – பின்பும் அவன் ஏற்றமே விஞ்சியிருக்கை.  தம்முடைய அநுப4வ விரோதி4களைப் போக்கினபடி சொல்லுகிறார் – (செய் குந்தா வரும் தீமை) செய்யப்பட்டு, குந்தாவாய் – தப்பாவாய், இருக்கும் தீமை என்னுதல்; அன்றிக்கே, செய்கும் – செய்யப்பட்டு, தாவரும் தீமை – கடக்க அரிதான தீமை என்னுதல்.  (உன்னடியார் இத்யாதி3) உன் பக்கலிலே நிக்ஷிப்தப4ரராயிருப்பார்க்கு வாராதபடி பரிஹரித்து, ஆஸுரப்ரக்ருதிகளின் மேலே பொகடும்படியான ஸுத்3தி4யையுடையவனே! முன் ப்ராதிகூல்யம் பண்ணினவர்கள் அநுகூலித்து நாலடி வரநின்றவாறே, பின்னை அவர்கள் சத்ருக்கள்மேலே பொகடுமாயிற்று.  “த்3விஷந்த: பாபக்ருத்யாம்” என்கிறபடியே; கடலுக்குத்தொடுத்த அம்பை, அவன் முக2ங்காட்டினவாறே மருகாந்தாரத்தில் அஸுரர்கள்மேலே விட்டாற்போலே.  அங்ஙன் ஒரு போக்கடி கண்டிலனாகில் “உரஸா தா4ரயாமாஸ பார்த்த2ம் ஸஞ்சா2த்3ய மாத4வ:” என்று ப433த்தன் விட்ட சக்தியை, அர்ஜுனனைத்தள்ளித் தன் அந்த:புரத்திலே ஏற்றாற்போலே, தான் ஏறிட்டுக்கொண்டு அநுப4வித்தல் செய்யுமித்தனை.  பாபங்களாவனதான் – அசேதநமாயிருப்பன சில க்ரியாவிசேஷங்களாய், அவை, செய்தபோதே நசிக்கும்; கர்த்தா அஜ்ஞனாகையாலே மறக்கும்; ஸர்வஜ்ஞன் உணர்ந்திருந்து ப2லாநுப4வம் பண்ணுவிக்க அநுப4விக்குமித்தனையிறே.  அவன் மார்விலே ஏற்றுக்கொள்ளுகையாவது – “பொறுத்தேன்” என்னத் தீருமித்தனையிறே.

“அபூர்வங்காண், சக்திகாண், ப2லாநுப4வம் பண்ணுவிக்கிறது” என்பதில், ஒரு ஸர்வஜ்ஞன் செய்விக்கிறான் என்கை;  அழகு இதிறே.  குந்தமென்று – குருந்தம் என்றபடியாய், அதின் பூ வெளுத்தாயிற்று இருப்பது.  அவ்வழியாலே ஸுத்3தி4யை நினைக்கிறது.  அன்றிக்கே, “குந்தா” என்று திருநாமம்; “குமுத3: குந்த3ர: குந்த3:” என்கிறபடியே.  (உன்னை) ஆஸ்ரிதபக்ஷபாதியான உன்னை.  (நான்) ‘ஆடியாடி’ (24)யில் விடாய்த்த நான்.  நீ உஜ்ஜீவிப்பிக்க, உன்னாலே உளேனான நான்.  (பிடித்தேன் கொள்) பிடித்தேனாகவே திருவுள்ளம்பற்று.  முன்பும் சொல்லிப்போரும் வார்த்தையன்றோ இது? என்ன; அங்ஙனல்ல (சிக்கனவே பிடித்தேன் கொள்) என்னைப் பெறுகைக்குப் ‘பூர்வஜ’ (ஜிதந்தே 1-1)னான நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம்பற்றவேணும்.  அவனை “மா ஸுச:” என்கிறார்.

இரண்டாம் பாட்டு

சிக்கெனச் சிறிதோ ரிடமும் புறப்படாத் தன்னுள்ளே* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்*
மிக்கஞான வெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய்* எங்கும்
பக்கநோக் கறியான்என் பைந்தா மரைக்கண்ணனே.

– அநந்தரம், தம்முடைய பக்கல் கலந்து அவன் உஜ்ஜ்வல ஸ்வரூபனாய்க் கொண்டு ஓரிடத்தில் அந்யபரதையற்று இராநின்றான் என்கிறார்.

சிறிதோர் – அல்பமான, இடமும் – தேசமும், புறப்படா – புறம்பு போகாதபடி, உலகுகள் – உலகுகளை, தன்னுள்ளே – தன் ஸங்கல்பத்துக்குள்ளே, ஒக்கவே – ஏகப்ரகாரமாக, விழுங்கி – அடக்கி, சிக்கென – இனி ஒருகாலும் புறப்படாதபடி, புகுந்தான் – (என்னுள்ளே) புகுந்தான்; புகுந்ததற்பின் – புகுந்தபின், மிக்க – மிகுத்து வருகிற, ஞானவெள்ளம் – ஜ்ஞாநபூர்த்தியாகிற, சுடர் – ப்ரபைக்கு ஆஸ்ரயமான, விளக்காய் – (ஸ்வரூபமாகிற) தேஜோத்ரவ்யமாய், துளக்கு – (நான் சிக்கெனப் பிடித்த பின்பு விஸ்லேஷாதிசங்கையால் வந்த) நடுக்கமும், அற்று – தீர்ந்து, அமுதமாய் – நிரதிசயபோக்யபூதனுமாய், என் – என்னையே பார்த்திருக்கிற, பைம் – அழகிய, தாமரை – தாமரைபோன்ற, கண்ணன் – கண்ணையுடையவன், எங்கும் – ஓரிடத்திலும், பக்கம் – பக்கத்தில், நோக்க – நோக்க, அறியான் – அறிகிறிலன்.

என்பக்கல் அபிநிவேசம் பத்நீபரிஜநாதிகள் பக்கலிலும் காண்கிறிலன் என்று கருத்து.  ஸ்வரூபாதிகளில் அவனுக்குண்டான ஸ்புரிதப்ரகாசமும் ஸ்வஸம்ஸ்லேஷமடியாக என்று நினைக்கிறார்.

ஈடு – இரண்டாம் பாட்டு.  அவன், “இவர் நம்மை விடில் செய்வதென்?” என்று அதிசங்கை பண்ண படியைச் சொல்லிற்று – கீழிற்பாட்டில்; இவர், “விடேன்” என்றபின்பு அவனுக்கு வடிவிற்பிறந்த பௌஷ்கல்யம் சொல்லுகிறது இப்பாட்டில்.

(சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிச் சிக்கெனப் புகுந்தான்) “நாம் ஆழ்வாரை அநுப4விக்கும்போது, செருப்பு வைத்துத் திருவடிதொழப்புக்காற்போலே ஆகவொண்ணாது” என்று பார்த்து, ஜக3த்4 ரக்ஷணத்துக்கு வேண்டும் ஸம்விதா4நமெல்லாம் பண்ணி, அநந்யபரனாய் அநுப4வித்து, போகமாட்டாதேயிருந்தான்; ராஜாக்கள் அந்த:புரத்திற் புகுவது, நாட்டுக்கணக்கற்றபின்பிறே.  அத்யல்பமாயிருப்பதொரு பதா3ர்த்த2மும் தன் பக்கல் நின்றும் பிரிகதிர்ப்பட்டு நோவுபடாதபடியாகத் தன் ஸங்கல்ப ஸஹஸ்ரைகதே3சத்திலே லோகங்களை ஒருகாலே வைத்து இனிப்பேராதபடி புகுந்தான்.  (சிக்கெனப் புகுந்தான்) அநந்யப்ரயோஜநமாகப் புகுந்தான் என்றுமாம்.

(புகுந்த இத்யாதி3) இவரோடே வந்து கலந்து, அக்கலவியில் அதிசங்கையும் தீர்ந்தபின்பாயிற்று விகஸித ஸஹஜஸார்வஜ்ஞ்யனுமாய் விஜ்வரனுமாயிற்றது.  தனக்கு நித்யத4ர்மமான ஜ்ஞாநத்தையுடைத்தான ஆத்மவஸ்து, கர்மநிப3ந்த4நமாக ஒரு தே4ஹத்தைப் பரிக்3ரஹித்து, இந்த்3ரியத்3வாரத்தை அபேக்ஷித்துக்கொண்டு ப்ரஸரிக்க வேண்டும்படி போந்தது; ஒருநாள் வரையிலே ப43வத்ப்ரஸாத2மும் பிறந்து ஜ்ஞாந ஸங்கோசமும் கழியக்கடவதாயிருக்குமிறே; அங்ஙனொரு ஹேதுவுமின்றிக்கேயிருக்கிறவனும் இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு ஸங்குசித ஜ்ஞாநனாய், இவரோடே கலந்தபின்பு விகஸிதமான ஜ்ஞாநவெள்ளத்தையு முடையனானான்; தி3வ்யமங்க3ளவிக்3ரஹமும் புகர்பெற்றது இப்போது. (துளக்கற்று) ‘ஆடியாடி’ (24)யில் ஆற்றாமையால் வந்த உள்நடுக்கமும் தீர்ந்தானாயிராநின்றான்; “விஜ்வர:” என்னக்கடவதிறே.  “இவர் நம்மை விடில் செய்வதென்?” என்கிற உள்நடுக்கமும் அற்றது இப்போது.

(அமுதமாய்) “ப்ரமுமோத3 ஹ” என்கிறபடியே, அவன் தம்மை விரும்பி போ4க்3யமாக நினைத்திருக்கிற இருப்பு, தமக்கு போ4க்3யமாயிருக்கிறபடி.

(எங்கும் பக்கநோக்கறியான்) “ஆழ்வார்பக்கல் இவனுக்குண்டான அதி மாத்ரப்ராவண்யத்தைத் தவிர்க்கவேணும்” என்று நாய்ச்சிமார் திருமுலைத் தடத்தாலே நெருக்கிலும், அவர்கள் பக்கல் கண்வைக்கமாட்டுகிறிலன்.  இங்கே, ஆளவந்தார்க்குக் குருகைக்காவலப்பன் அருளிச்செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை – “அப்பன் ஸ்ரீபாத3த்திலேஒரு ரஹஸ்யவிசேஷமுண்டு” என்று மணக்கால்நம்பி அருளிச்செய்ய, அது கேட்கவேணும் என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கைகொண்ட சோழபுரத்தேற, அப்பனும் அங்கே ஒரு குட்டிச்சுவரிலே யோக3த்திலே எழுந்தருளியிருக்க, ‘இவரை ஸமாதி44ங்க3ம் பண்ணவொண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க, அப்பனும் யோக3த்திலே  எழுந்தருளியிருக்கிறவர் திரும்பிப்பார்த்து, “இங்குச் சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தாருண்டோ?” என்று கேட்டருள, “அடியேன்” என்று ஆளவந்தாரும் எழுந்தருளிவந்து கண்டு, “நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க, இங்ஙன் அருளிச்செய்கைக்கு ஹேதுவென்?” என்ன, “நானும் தானுமாக அநுப4வியாநின்றால், பெரியபிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருக்கியணைத்தாலும் அவள் முக2ங்கூடப் பாராத ஸர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலுமூன்றுதரம் அங்கே எட்டிப்பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும்போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தாருண்டாகவேணும் என்றிருக்கவேணும் என்றிருந்தேன் காணும்” என்று அருளிச்செய்தார்.  (என் பைந்தாமரைக் கண்ணனே) ‘ஆடியாடி’யில் (24) ஆற்றாமையால் வந்த தாபமும் தீர்ந்து திருக்கண்களும் குளிர்ந்தது.

மூன்றாம் பாட்டு

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை* துழாய் விரைப்
பூமருவு கண்ணிஎம் பிரானைப் பொன்மலையை*
நாமருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்து ஆட*நாவலர்
பாமருவி நிற்கத்தந்த பான்மையே(ய்) வள்ளலே.

– அநந்தரம், தன்னைக் கரணத்ரயத்தாலும் நிரந்தராநுபவம் பண்ணுவித்த மஹோதாரனானவன் என்னையொழிய அறிகிறிலன் என்கிறார்.

தாமரை – தாமரைபோன்ற, கண்ணனை – கண்களையுடையனாய், (அவ்வழகாலே) விண்ணோர் – நித்யஸூரிகள், பரவும் – நிரந்தரமாகப் புகழும்படியான, தலைமகனை – மேன்மையையுடையவனாய், விரை – விரையும், பூ – பூவும், மருவு – மருவின, துழாய்க்கண்ணி – துழாய்மாலையையுடையனாய்க்கொண்டு, எம் – எங்களுக்கு, பிரானை – ஸ்வாமியாய், பொன்மலையை – (எங்களோட்டைச் சேர்த்தியாலே) பொன்மலைபோல் ஓங்கி உஜ்ஜ்வலனான தன்னை, நாம் – நாங்கள் (நிகர்ஷம் பார்த்து அகலாதே), மருவி – மருவி, நன்கு – (ஸூரிகளோபாதி அங்குத்தைக்குத் தகுதியாம்படி) நன்றாக, ஏத்தி – ஏத்தி, உள்ளி – அவர்கள் சிந்தையுள் வைக்குமாபோலே நினைத்து, வணங்கி – (“வணங்கி வழிபடும்” என்கிறபடியே) திருவடிகளிலே விழுந்து, (இப்படி கரணத்ரயத்தாலுமுண்டான அநுபவத்தாலே) நாம் – நாங்கள், மகிழ்ந்து – ஆநந்திகளாய், ஆட – ஸஸம்ப்ரமந்ருத்தம்பண்ணும்படியாக, நா – நாவிலே, அலர் – அலருகிற, பா – பாவிலே, மருவி – மருவி, நிற்க – திருவாய்மொழி பாடிநிற்கும்படி, தந்த – உபகரித்த, பான்மை – ஸ்வபாவத்துக்கு, ஏய் – பொருந்தின, வள்ளல் – ஔதார்யகுணவிஶிஷ்டனானவன் – “எங்கும் பக்கநோக்கறியான்” என்று அந்வயம்.

பான்மைஸ்வபாவம்.

ஈடு – மூன்றாம் பாட்டு. நித்யஸூரிகளுக்கும் அவ்வருகானவன்தன்னை நான் தே3சிகனாய் அநுப4விக்கும்படி பண்ணின இதுவும் ஓரௌதா3ர்யமேதான்! என்கிறார்.

(தாமரைக் கண்ணனை இத்யாதி3) ஒருகால் திருக்கண்களாலே குளிர நோக்கினால், அதிலே தோற்று ஜ்வரஸந்நிபதிதரைப்போலே அடைவுகெட ஏத்தா நிற்பர்களாயிற்று நித்யஸூரிகள்; “ஸ்ருதோ‍யமர்த்தோ2 ராமஸ்ய ஜாமத3க்3ந்யஸ்ய ஜல்பத:” என்கிறபடியே.  (தலைமகனை) இவர்கள் ஏத்தாநின்றாலும், “நிரவத்3ய: பர: ப்ராப்தே:” என்று அவன் பரனாயிருக்கும்.  (துழாய் இத்யாதி3) நித்யஸூரிகளைக் கண்ணழகாலே தோற்பித்தான்; இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான்.  மார்வில் மாலையைக் காட்டி மாலாக்கினான்; விரை -பரிமளம். விரையும் பூவும் மருவியிருந்துள்ள துழாய்க்கண்ணியெம்பிரானை.  (பொன்மலையை) என்னோட்டைக் கலவியாலே அபரிச்சி2ந்நமான அழகையுடையனாய், கால்வாங்கமாட்டாதேயிருக்கிறவனை.  நான் ஏத்தப் பெற்றபடியாலே வளர்ந்தபடி என்னவுமாம்.  ஆக, இத்தால் – இவரைப் பெற்றபின்பு வளர்ந்து புகர்பெற்றபடி.

(நாம் மருவி) “அருவினையேன்” (1-5-1) என்று அகலக்கடவ நாம் கிட்டி.  (நன்கேத்தி) நித்யஸூரிகள் ஏத்தக்கடவ விஷயத்தை நன்றாக ஏத்தி; “வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை, எந்தையே என்பன்” (1-10-7) என்று அகன்றவரிறே;  “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று வேத3ங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்தி என்றுமாம்.  (உள்ளி) “நினைந்து” (1-5-1) என்று – அநுஸந்தா4நத்துக்கு ப்ராயஸ்சித்தம் பண்ணத்தேடாதே அநுஸந்தி4த்து.  (வணங்கி) கு3ணப3லாத்க்ருதராய் நிர்மமராய் வணங்கி; “வணங்கினால், உன் பெருமை மாசூணாதோ” (1-5-2) என்னும் நாம் வணங்கி.  (நாம் மகிழ்ந்தாட) ப43வத3நுபவத்தால் வந்த ப்ரீதிதத்வம் கனாக்கண்டறியாத நாம் ஹ்ருஷ்டராய், அதுக்குப் போக்குவிட்டு ஆட.  (நாவலர் இத்யாதி3) நாட்பூ அலருமாபோலே ஜிஹ்வாக்3ரத்திலே விகஸியாநின்றுள்ள ச2ந்த3ஸ்ஸானது என் பக்கலிலே நிற்கும்படியாகத் தந்த இதுதன்னை ஸ்வபா4வமாகவுடையையாயிருக்கிற பரமோதா3ரனே! (நாவலர் பா) மநஸ்ஸஹகாரமும் வேண்டாதபடியாயிருக்கை.

“தாமரைக்கண்ணனாய், விண்ணோர்பரவும் தலைமகனாய், துழாய் விரைப்பூமருவு கண்ணியெம்பிரானாய், பொன்மலையாயிருக்கிற தன்னை, நாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாடும்படி, நாவலர் பாமருவி நிற்கத் தந்த பான்மை ஏய்ந்த வள்ளலே” என்று சொல்லுகிறாராகவுமாம்.  அன்றியே “தாமரைக் கண்ணனை” என்கிற ஐகாரத்தை அவ்யயமாக்கி, “தாமரைக் கண்ணனாய் – பொன்மலையாயிருக்கிற நீ, நாம் மருவி நாவலர் பாமருவி நிற்கத் தந்த பான்மையே! – இதுவும் ஒரு ஸ்வபா4வமே! வள்ளலே! – பரமோதா3ரனே!” என்கிறாராகவுமாம்.

நான்காம் பாட்டு

வள்ளலே! மதுசூதனா! என்மரகத மலையே!* உனை நினைந்து
எள்கல்தந்த எந்தாய்உன்னை எங்ஙனம் விடுகேன்*
வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக்களித்து உகந்துகந்து*
உள்ளநோய்க ளெல்லாம்துரந்து உய்ந்து போந்திருந்தே.

– அநந்தரம், ஸர்வப்ரகாரோபகாரகனான உன்னை விடப்போமோ? என்கிறார்.

வள்ளலே – (அர்த்தித்வ நிரபேக்ஷமாக உபகரிக்கும்) மஹோதாரனாய், மதுசூதனா – உபகாரங்கொள்ளுகிற என் விரோதியை மதுவை அழித்தாப்போலே அழிக்குமவனாய், என் – (நிவ்ருத்தவிரோதிகனான) எனக்கு, மரகத மலையே – (உத்துங்கமாய், உஜ்ஜ்வலமான) மரதகமலைபோலேயிருக்கிற வடிவை அநுபவிப்பிக்குமவனாய், (“மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு” என்கிறபடியே), உன்னை – உன்னை, நினைந்து – அநுஸந்தித்து, எள்கல் – (இதர விஷயங்களை) இகழும் ஸ்வபாவத்தை, தந்த – தந்த, எந்தாய் – ஸ்வாமியே! வெள்ளமேபுரை – பெருங்கடல்போலே அபரிச்சிந்நமான, நின் – உன்னுடைய, புகழ் – குணங்களை, குடைந்து – அவகாஹித்து அநுபவித்து, ஆடிப் பாடி – (அந்த ப்ரீதியாலே) ஆடுவது பாடுவதாய், களித்து – களித்து, உகந்துகந்து – (அது ஓரளவில் நில்லாதே) மேன்மேலென உகந்து, உள்ளநோய்களெல்லாம் – (அஹங்காரார்த்தகாமங்கள், அநுபவ விஸ்லேஷம், நிகர்ஷாநுஸந்தாநம் முதலாக) உள்ள நோய்களையெல்லாம், துரந்து – தூரப்போம்படி அகற்றி, உய்ந்து – லப்தஸத்தாகனாய், போந்து – (ஸம்ஸாரஸ்திதி குலைந்து) உன்னளவும் போந்து, இருந்து ‘காயந்நாஸ்தே’ என்று அநுபவித்துக் கொண்டிருக்கப்பெற்றுவைத்து, உன்னை – (இப்படி உபகாரகனான) உன்னை, எங்ஙனம் – எங்ஙனே, விடுகேன் – விடுவேன்?

ஈடு – நாலாம் பாட்டு. “நாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட” (2-6-3) என்று – தம்முடைய நைச்யத்தை அநுஸந்தி4த்தவாறே, “இவர் நம்மை விடில் செய்வதென்?” என்று அவன் அதிசங்கைபண்ண, நிர்ஹேதுகமாக உன் வடிவழகை நீ என்னை அநுப4விப்பிக்க அநுப4வித்து, அத்தாலே ஸிதி2லனான நான் உன்னை விட ஸம்பா4வனையுண்டோ?” என்கிறார்.

(வள்ளலே) நிர்ஹேதுகமாக உன்னை எனக்குத்தந்த பரமோதா3ரனே! (மதுசூதனா) நீ உன்னைத் தருமிடத்தில் நான் ஸ்வீகரியாதபடி பண்ணும் விரோதி4களை, மது4வாகிற அஸுரனை நிரஸித்தாற்போலே நிரஸித்தவனே! (என் மரதக மலையே) உன்னை நீயாக்கும்படி உன்னிலும் சீரியதாய், ஸ்ரமஹரமாய், அபரிச்சே2த்3யமான வடிவழகையன்றோ எனக்கு ஔதா3ர்யம் பண்ணிற்று.  (உனை நினைந்து எள்கல் தந்த எந்தாய்) உன்னை அநுஸந்தி4த்தால், இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே! என்னுதல்; அன்றிக்கே, எள்கலாவது – ஈடுபாடாய், உன்னை அநுஸந்தி4த்தால், “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி –34) என்கிறபடியே அள்ளியெடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயனே! என்னுதல்.  (உன்னை எங்ஙனம் விடுகேன்) “உதா3ரனல்லை” என்று  விடவோ? “விரோதி4நிரஸநனல்லை” என்று விடவோ? “உனக்கு வடிவழகில்லை” என்று விடவோ? உன் விஷயத்திலே இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட ஸம்பா4வனையுண்டோ? என்னுதல்; உன்னை அநுஸந்தி4த்தால், இதர விஷயங்களில் விரக்தனான நான் விட ஸம்பா4வனை உண்டோ? என்னுதல்.

இனி, மேலெல்லாம் அவன் அதிசங்கையைத் தீர்க்கிறார் (வெள்ளமே இத்யாதி3) கடலோடு ஒத்திருந்துள்ள உன்னுடைய கல்யாணகு3ணங்களை நாலு மூலையும் புக்கு வ்யாபித்து, நான் மறுநனைந்து ப்ரீதிப்ரேரிதனாய்க் கொண்டு பாடி, அத்தாலே செருக்கி, மிகவும் ப்ரீதனாய்.  (உள்ள நோய்களெல்லாம் துரந்து) கர்ம நிப3ந்த4நமாக வருமவை, உன்னைப் பிரிந்து படுமவை, “அயோக்3யன்” என்று அகன்று வருமவை இத்யாதி3கள் எல்லாவற்றையும் ஓட்டி. (உய்ந்து)  “ஸந்தமேநம் ததோ விது3:” என்கிறபடியே உஜ்ஜீவித்து. (போந்து) ஸம்ஸாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்.  (இருந்து) நிர்ப்ப4ரனாயிருந்து – வள்ளலே! மதுசூதனா! – உன்னை எங்ஙனம் விடுகேன்?

ஐந்தாம் பாட்டு

உய்ந்து போந்துஎன் னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ் செய்து*உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ?*
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப்பாற்கடல் யோக நித்திரை*
சிந்தைசெய்த எந்தாய்உன்னைச் சிந்தை செய்துசெய்தே.

– அநந்தரம், த்வதநுபவஜநித கைங்கர்ய போ43த்தைப் பெற்ற நான் விடும்படியென்? என்கிறார்.

பாற்கடல் – திருப்பாற்கடலிலே, ஐந்து – ஐந்து வகையாய், பை – விரிந்த, தலை – பணங்களையுடையவனாய், ஆடு – அசைந்து வருகிற, அரவணை – திருவரவணையின் மேலே, மேவி – பொருந்தக் கண் வளர்ந்து, யோகம் – ஜகத்ரக்ஷணயோகத்தில் நிப்ருததையாலே, நித்திரை – உறங்குவாரைப்போலே, சிந்தை செய்த – (ரக்ஷணப்ரகார) சிந்தை பண்ணின, எந்தாய் – என் ஸ்வாமியே! உன்னை – (இப்படி ரக்ஷகத்வத்தை ப்ரகாஶிப்பித்த) உன்னை, சிந்தை செய்து செய்து – நிரந்தராநுஸந்தாநம் பண்ணி, உய்ந்து – லப்தஸ்வரூபனாய், போந்து – அந்யபரரான ஸம்ஸாரிகளில் வ்யாவ்ருத்தனாய், என் – நானே எனக்குத் தேடிக்கொண்டு, உலப்பிலாத – அஸங்க்யாதமாய், வெம் – க்ரூரமாய், தீ – அக்நிகல்பமான, வினைகளை – பாபங்களை, நாசஞ்செய்து – நசிக்கும்படிபண்ணி, உனது – (ப்ராப்தனான) உன்னுடைய, அந்தமில் – அபரிச்சிந்நமான, அடிமை – கைங்கர்ய போகத்தை, அடைந்தேன் – கிட்டப்பெற்ற நான், விடுவேனோ – விட க்ஷமனல்லன்.

ஆஸ்ரிதவிஷயத்தில் உனக்குப் பொருத்தமில்லாமல் விடுகிறேனோ? அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தையில்லாமல் விடுகிறேனோ? உன் அநுபவத்தில் எனக்கு ஸீலநமில்லாமல் விடுகிறேனோ? என் ஸ்வரூபம் ப்ரகாசியாமல் விடுகிறேனோ? விஷயாஸக்தரான ஸம்ஸாரிகளோடு பொருத்தமுண்டாய் விடுகிறேனோ? ப்ரதிபந்தகமான பாபமுண்டாய் விடுகிறேனோ? ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடறியாமல் விடுகிறேனோ? இப்படி லப்தாபீஷ்டனான நான் விடுவேனோ? என்று கருத்து.

ஈடு – அஞ்சாம் பாட்டு. ஆத்மாந்த தா3ஸ்யத்திலே அதி4கரித்த நான் உன்னை விட ப்ரஸங்க3முண்டோ? என்கிறார்.

(உய்ந்து போந்து) நான் உளேனாய், ஸம்ஸாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து. (என் உலப்பிலாத இத்யாதி3) என்னுடைய, முடிவின்றிக்கேயிருந்துள்ள கொடிய பாபங்களை வாஸநையோடே போக்கி, உன் திருவடிகளிலே ஆத்மாந்த தா3ஸ்யத்திலே அதி4கரித்த நான், இனி விட ப்ரஸங்க3முண்டோ? (விடுவேனோ) விஷயாந்தரங்களை விரும்பினேனோ விடுகைக்கு? ஸ்வரூபஸித்3தி4யின்றிக்கேயொழிந்து விடுகிறேனோ? தா3ஸ்ய பரிமளத்தில் சுவடறியாமல் விடுகிறேனோ? எனக்குத் தெகு(வி)ட்டி விடுகிறேனோ? (ஐந்து இத்யாதி3) அடிமையில் சுவடறிந்த திருவனந்தாழ்வான் உன்னை விடிலன்றோ நான் உன்னை விடுவது.  பெருவெள்ளத்துக்குப் பல வாய்த்தலைகள்போலே ப43வத3நுப4வத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாகப் பல தலைகளையுடையனாய், மது4பாநமத்தரைப் போலே ஆடாநிற்பானாய், ஶைத்யஸௌகுமார்ய ஸௌக3ந்த்4யங்களை யுடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற்கடலிலே, “ஸகல ப்ராணிகளும் கரைமரஞ்சேர்ந்ததாம் விரகென்?” என்று யோக3நித்3ரையிலே திருவுள்ளம் செய்த என் நாயனானவனே!

(யோகநித்திரை) “ஆத்மாநம் வாஸுதே3வாக்2யம் சிந்தயந்” என்கிறபடியே தன்னை அநுஸந்தி4த்தல். (எந்தாய்) நீர்மையைக் காட்டி என்னை அநந்யார்ஹனாக்கினவனே!  (உன்னைச் சிந்தைசெய்துசெய்து) நான் நினைக்கைக்கு க்ருஷிபண்ணின உன்னை நினைத்துவைத்து விட ப்ரஸங்க3முண்டோ?

ஆறாம் பாட்டு

உன்னைச் சிந்தை செய்துசெய்து உன்நெடு மாமொழிஇசை பாடியாடி*என்
முன்னைத் தீவினைகள் முழுவே ரரிந்தனன்யான்*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம் கீண்ட*என்
முன்னைக் கோளரியே! முடியாத தென்எனக்கே?

– அநந்தரம், இந்தக் கைங்கர்யலாபத்தாலே தம்முடைய ஸர்வாபீஷ்டமும் தலைக்கட்டிற்று என்கிறார்.

உன்னை – (வகுத்த ஸ்வாமியுமாய் உபகாரகனுமான) உன்னை, சிந்தையினால் – நெஞ்சாலே, இகழ்ந்த – அநாதரித்த, இரணியன் – ஹிரண்யனுடைய, அகல் – பேரிடமுடைத்தான, மார்வம் – மார்வை, கீண்ட – அநாயாஸேந கிழித்தவனாய், என் – விரோதிநிவ்ருத்திக்கு நிதர்சநபூதனாய், முன்னை – (ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் நினைவுக்கு) முற்கோலின, கோளரியே – நரஸிம்ஹமானவனே! உன்னை – (இப்படி ஆபத்ஸகனாய், ப்ராப்தனாய், போக்யனான) உன்னை, சிந்தை செய்துசெய்து – நிரந்தராநுஸந்தாநம்பண்ணி, நெடு – (அந்த ப்ரீதியாலே) உத்துங்கமான, உன் – உன்னுடைய குணவாசகமான, மொழி – திருவாய்மொழியை, மா – (அவ்விஷயத்துக்கு ஈடான) பெருமையுடைய, இசை – இசையோடே, பாடி – பாடி, ஆடி – (அப்பாட்டுக்கு ஈடான அபிநயம் தோற்றும்படி) ஆடி, (இப்படி கரணத்ரயத்தாலுமுண்டான போகத்தாலே) என் – என்னுடைய, முன்னைத் தீவினைகள் – அநாதிகாலார்ஜிதபாபங்களை, ‘நோபஜநம் ஸ்மரந்’ என்னும் கணக்கிலே, யான் – நான், முழு வேரரிந்தனன் – ஒன்றொழியாமல் வேரோடே அரிந்தேன்.  (போக்த்ருத்வம் இத்தலையிலே ஆனவோபாதி, விரோதிநிவர்த்தகத்வமும் இங்கேயாகக் குறையில்லையிறே – ஸ்வரூபம் தத்ப்ரகாரமானபின்பு), எனக்கு – எனக்கு, முடியாதது – தலைக்கட்டாதது, என் – எதுதான்? ஸர்வாபீஷ்டமும் ஸித்தமன்றோ? என்று கருத்து.

ஈடு – ஆறாம் பாட்டு. ஆஸ்ரிதனுடைய ப்ரதிஜ்ஞாஸமகாலத்திலே தோற்று வானொருவனான பின்பு எனக்கு ஒரு கர்த்தவ்யாம்சமுண்டோ? என்கிறார்.

(உன்னைச் சிந்தைசெய்து செய்து) இனிமையாலே விடவொண்ணாதிருக்கிற உன்னை மாறாதே அநுஸந்தி4த்து. (உன்னை) போ4க்3யனுமாய், ப்ராப்தனுமான உன்னை.  (சிந்தை செய்து செய்து) “நிதி3த்4யாஸிதவ்ய:” என்கிற விதி4ப்ரேரிதனாயன்றிக்கே, போ4க்3யதையாலே விடமாட்டாதே அநவரத பா4வநை பண்ணி.  (உன் இத்யாதி3) நெடுமையும், மஹத்தையும் – மொழிக்கும், இசைக்கும் விசேஷணம்; இயலில் பெருமையும், இசையில் பெருமையும் சொல்லுகிறது.  இயலும் இசையும் கரைகாணவொண்ணாதபடியிருக்கிற மொழியைப்பாடி, அது இருந்தவிடத்தில் இருக்கவொட்டாமை ஆடி.

(என் இத்யாதி3) என்னுடைய ப்ராக்தநமான கர்மங்களை வாஸநையோடே போக்கினேன்.  முழுவேர் – வேர்முழுக்க என்றபடி.  பக்கவேரோடே என்றபடி.  அவன் விரோதி4யைப் போக்கச்செய்தேயும், ப2லாந்வயம் தம்மதாகையாலே (அரிந்தனன் யான்) என்கிறார்.  (உன்னை இத்யாதி3) எனக்குப் பண்டே உபகரித்தவனே! (உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த) உக்திமாத்ரமன்றிக்கே, நெஞ்சாலே இகழ்ந்தானாயிற்று.  இத்தால் – அவன் விடுவது, பு3த்3தி4பூர்வம் ப்ராதிகூல்யம் பண்ணினாரை; கைக்கொள்ளுகைக்கு மித்ரபா4வம் அமையும்.

(இரணியன் அகல்மார்வங்கீண்ட) வரப3லபு4ஜப3லம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திருவுகிர்க்கு இரை போராமையாலே, அநாயாஸேந கிழித்துப் பொகட்டானாயிற்று.  (என்முன்னைக் கோளரியே) நரஸிம்ஹமாய் உதவிற்றும் தமக்கு என்றிருக்கிறார்.  கோளென்று – மிடுக்காதல், தேஜஸ்ஸாதல்.  “மஹா விஷ்ணும்” என்கிற மிடுக்காதல், “ஜ்வலந்தம்” என்கிற தேஜஸ்ஸாதல்.  ஆஸ்ரிதரிலே ஒருவனுக்குச் செய்ததும் தனக்குச் செய்ததாக நினைத்திராதவன்று ப43வத்ஸம்ப3ந்த4மில்லையாமித்தனை.  (முடியாதது என்எனக்கே) நீ ப்ரதிஜ்ஞாஸமகாலத்திலே வந்து தோற்றுவாயாயிற்றபின்பு எனக்கு முடியாததுண்டோ?

ஏழாம் பாட்டு

முடியாத தென்எனக் கேல்இனி முழுவேழுலகும் உண்டான்* உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி*
செடியார் நோய்க ளெல்லாம் துரந்துஎமர் கீழ்மே லெழுபிறப்பும்*
விடியாவெந் நரகத்துஎன்றும் சேர்தல் மாறினரே.

– அநந்தரம், என் பக்கல் பண்ணின உபகாரம் என் குலத்தில் ஸம்பந்தித்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படியாயிற்று என்கிறார்.

முழுவேழுலகும் – ஸமஸ்த லோகமும், உண்டான் – (தன் செல்லாமையாலே தனக்குள்ளேயாம்படி அவற்றை) அமுது செய்தவன், உகந்து – (அச்செல்லாமை தனக்கு என்பக்கலிலே உண்டாய், அதுக்குமேலே) ஆதராதிசயத்தையுடையனாய்க்கொண்டு, அடியேன் – என்னுடைய சேஷத்வ ஸம்பந்தமே பற்றாசாக, உள் – உள்ளே, வந்து – வந்து, புகுந்தான் – புகுந்தான்; இனி – இனி, (அந்த லோகங்கள் போலே) அகல்வானும் – புறம்பு போமவனும், அல்லன் – அல்லன்; (இதடியாக) கீழ் – கீழும், மேல் – மேலும், எழுபிறப்பும் – எழு பிறப்பிலும், எமர் – என்னோடு ஸம்பந்தமுடையார், செடி – செடிபோலே, ஆர் – செறிந்த, நோய்களெல்லாம் – (அவித்யா கர்ம வாஸநாதிகளான) ஸமஸ்த வ்யாதிகளையும், துரந்து – கடக்க ஓட்டி, விடியா – ஒருகால் முடிந்து வெளிச்சிறப்பதன்றியே, வெம் – நிரதிசயதாபகரமான, நரகத்து – (ஸம்ஸாரமாகிற) நிரயத்திலே, என்றும் – யாவதாத்மபா4வி, சேர்தல் – கிட்டுகை, மாறினர் – தவிர்ந்தார்கள், இனி – இப்படி குலஸம்பந்தி பர்யந்தமாக என்னைப் பக்ஷபதித்த பின்பு, எனக்கேல் – எனக்காகில், முடியாதது – முடியாதது, என் – உண்டோ?

என்னோடு அநுபந்தித்ததாகில் எல்லாக் காரியமும் தலைக்கட்டும் என்று கருத்து.

ஈடு – ஏழாம் பாட்டு. என்னளவில் விஷயீகாரம் என்னுடைய ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4களளவும் சென்றதுகிடீர்! என்கிறார்.

(முடியாததென் எனக்கேல் இனி) எனக்காகில் இனி முடியாததுண்டோ? – எனக்கு இனி முடியாததுண்டோ? – எனக்கு இனி அநவாப்தமாயிருப்பதொன்றுண்டோ? நீர் இது என்கொண்டு சொல்லுகிறீர்? என்ன (முழு இத்யாதி3) ப்ரளயாபத்திலே அகப்பட்ட பூ4மி, தன் வயிற்றிலே புகாதபோது படும் பாடடங்க, தான் என்பக்கல் புகுராதபோது படுவானாய் வந்து புகுந்தான்; எனக்கு இனி முடியாததுண்டோ? (அடியேன் உட்புகுந்தான்) ஸம்ப3ந்த4த்தைப் பார்த்துப் புகுந்தான்.  (உட்புகுந்தான்) ஒரு நீராகக் கலந்தான்; தன்பக்கல் ஜக3த்துப் புக்காற் போலன்றியே, உகந்து புகுந்தான்.  இவனுக்கும் ஜக3த்துக்கும் செல்லாமை ஒக்கும்; உகப்பே இவ்விஷயத்தில் தன்னேற்றம்.

(அகல்வானும் அல்லன் இனி) அந்த பூ4மிக்கு, ப்ரளயம் கழிந்தவாறே அகலவேணும்; இவனுக்கு அதுவுமில்லை.  முதலிலே பிரிவை ப்ரஸங்கி3க்க வொட்டுகிறிலன்.  சேதநரைப்போலே பாபத்தாலே அகன்று, ஒரு ஸுக்ருதத்தாலே கிட்டுமதில்லையே இவனுக்கு.  உம்மை அவன் இப்படி விரும்பினானாகில், பனை நிழல்போலே உம்மை நோக்கிக்கொண்டுவிட அமையுமோ? என்ன (செடியார் இத்யாதி3) செடி – பாபம்.  பாபத்தாலே பூர்ணமான து3:க்க2ங்கள். தூறுமண்டின நோய்களெல்லாம் துரந்து.  விஷயப்ராவண்யத்தாலே வந்த நோய், அயோக்3யதாநுஸந்தா4நத்தாலே வந்த நோய், ப43வத3நுப4வ விஸ்லேஷத்தாலே வந்த நோய், இவையெல்லாம் வாஸநையோடே ஓட்டி.  “உள்ள நோய்களெல்லாம் துரந்து” (2.6.4) என்கிறவிடத்திலும் சொல்லிற்றில்லையோ இது? என்னில்; அங்குச் சொல்லிற்று தம்மளவு; இங்கு – தம் ஸம்ப3ந்தி4ஸம்ப3ந்தி4கள் விஷயமாயிற்று.  இப்படி இவர்கள் ஓட்டிற்று எத்தாலே? என்னில் (எமர்) வேறொன்றாலன்று; என்னோட்டை ஸம்ப3ந்த4மே ஹேதுவாக.  ஸம்ப3ந்த4ம் எவ்வளவென்னில் (கீழ்மேல் எழு பிறப்பும்) கீழ் ஏழுபடிகாலும், மேல் ஏழுபடிகாலும், தம்மோடே ஏழுபடிகாலுமாக இருபத்தொரு படிகால்.

(விடியாவெந்நரகத்து) ஒருநாள் வரையிலே கர்மக்ஷயம் பிறந்தவாறே விடியுமதிறே யமன்தண்டல்.  இது விடியாவெந்நரகமிறே.  “நரகம்” என்று பு3த்3தி பிறக்கும் அதில்; தண்மை தோற்றாத நரகம் இது.  (என்றும் சேர்தல் மாறினரே) என்றும் கிட்டக்கடவதான தண்மை தவிர்ந்தார்கள்.  நானும் ப்ரார்த்தி3க்க வேண்டிற்றில்லை, அவனும் நினைப்பிட வேண்டிற்றில்லை.  எத்தாலே யென்னில்; என்பக்கல் அவன்பண்ணின பக்ஷபாதராஜகுலத்தாலே மாறிக்கொண்டுநின்றார்கள்; முடியாததென் எனக்கேல் இனி? என்று அந்வயம்.

எட்டாம் பாட்டு

மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்துஅடியை யடைந் துள்ளம்தேறி*
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்*
பாறிப் பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ* பாய்பறவையொன்று
ஏறிவீற்றிருந் தாய்உன்னை என்னுள் நீக்கேல்எந்தாய்.

– அநந்தரம், இப்பேறு எனக்கு விச்சேதியாதொழியவேணும் என்கிறார்.

பலபிறப்பும் – (தேவதிர்யங்மநுஷ்யஸ்தாவராதிகளான) நாநாஜந்மங்களிலும், மாறிமாறிப் பிறந்து – (ஒருகால் பிறந்ததிலே) மீண்டும் மீண்டும் பிறந்துபோரச் செய்தே, அடியை – உன் திருவடிகளை, அடைந்து கிட்டி (ஶேஷத்வ ஜ்ஞாநத்தையுடையேனாய்), உள்ளம் தேறி – (“நீயே உபாயபூதன்” என்கிற) நெஞ்சில் தோற்றத்தையுடையேனாய், (உன்னுடைய அநுபவத்தாலே ஜநிதமான) ஈறு – முடிவு, இல் – இல்லாத, இன்பம் – ஆநந்தமாகிற, இரு – பெரிய, வெள்ளம் – வெள்ளத்திலே, யான் – (அஹமர்த்தபூதனான) நான், மூழ்கினன் – அவகாஹித்தேன், அசுரர்தம் – அஸுரர்களுடைய, பல் – பலவகைப்பட்ட, குழாங்கள் – குழாங்களானவை, பாறிப்பாறி – ப3ஹுமுகமாக ஸிதிலமாய், நீறு – தூளியாய், எழ – கிளரும்படி, பாய் – (அவர்களுடைய ஸேநாமத்யத்திலே) பாயக்கடவனான, ஒன்று – அத்விதீயனாயுள்ள, பறவை – பெரியதிருவடியின்மேலே, ஏறி – ஏறி, வீறு – உன் மேன்மை தோன்றும்படி, இருந்தாய் – இருந்த, எந்தாய் – என் நாதனே! உன்னை – (ப்ராப்தனுமாய், சரண்யனுமாய், போக்யனுமாய், விரோதிநிவர்த்தகனுமான) உன்னை, என்னுள் – (உனக்கு ஸர்வப்ரகார பரதந்த்ரனான) என்னுள்ளினின்றும், நீக்கேல் – அகற்றாதொழியவேணும்.

ஈடு – எட்டாம் பாட்டு.  இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸுக்ருதமென்? என்ன; ஒரு ஸுக்ருதத்தால் வந்ததல்ல;  நான் பிறந்து படைத்தது என்கிறார்.  அதுவுமொன்றுண்டு; அந்தாதி3யாகப் பிறந்து போந்தேன் என்கிறார்.

(மாறிமாறி இத்யாதி3) ஸபரிகரமாக உம்மை விஷயீகரிக்க நீர் செய்ததென்? என்ன; கடலுக்குள்ளே கிடந்ததொரு துரும்பு திரைமேல் திரையாகத் தள்ள வந்து கரையிலே சேருமாபோலே, மாறிமாறிப் பிறந்துவாராநிற்க,  திருவடிகளிலே கிட்டிக்கொண்டு நிற்கக்கண்டேனித்தனை.  அநுப4வித்து மீளுதல், ப்ராயஸ்சித்தம் பண்ணி மீளுதல், செய்யக்காலமில்லையாயிற்று.  (அடியையடைந்து உள்ளம் தேறி) உள்ளம் தேறி அடியையடைந்தவரல்லர்; அடியையடைந்தாயிற்று உள்ளம் தேறிற்று.  (உள்ளம் தேறி) நெடுநாள் விஷயவாஸநையாலும், ப43வத3 லாப4த்தாலுமுள்ள அந்த:கரணகாலுஷ்யம் போய் ஹ்ருத3யம் தெளிந்து.  தெளிந்தவளவேயன்றியே – (ஈறில் இன்பத்திருவெள்ளம் யான் மூழ்கினன்) முடிவின்றிக்கே யிருக்கிற பெரிய ஆநந்த3 ஸாக3ரத்திலே அவகா3ஹித்தேன். திருவடி, திருவனந்தாழ்வான், இவர்கள் குமிழிநீருண்கிற விஷயத்திலேயிறே நான் அவகா3ஹிக்கப் பெற்றது.

ஆனால் உம்முடைய விரோதிக4ள் செய்ததென்? என்ன; அதுக்குக் கடவாரைக் கேளிகோள் என்கிறார் (பாறி இத்யாதி3) அஸுரவர்க்க3த்தினுடைய பலவகைப்பட்ட குழாங்களானவை, பாறிப்பாறி நீறெழுந்துபோம்படியாக ப்ரதிபக்ஷத்தின்மேலே பாயாநின்றுள்ள அத்3விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்ற இருந்தவனே! பெரியதிருவடிக்கு அத்3விதீயத்வம் – அவன் கருத்தறிந்து நடக்கையில் தலைவனாகை.  அவன் ப்ரதிபக்ஷ நிரஸநத்துக்குப் பண்ணின வ்யாபாரம் பெரியதிருவடி திருத்தோளிலே பேராதேயிருந்தவித்தனை.  (உன்னை இத்யாதி3) ஸ்வாமியான நீ இனியொரு காலமும் உன்னை என்பக்கலில் நின்றும் பிரித்துக்கொண்டு போகாதொழிய வேணும்.  (உன்னை என்னுள் நீக்கேல்) என்னோடே இப்படி கலந்த உன்னை, உன்னுடைய கலவியால் வந்த ரஸமறிந்த என்பக்கல்நின்றும் நீக்க நினையாதொழியவேணும்.  தம்முடைய இனிமையாலே அதிசங்கை பண்ணுகிறார்.  தம்முகப்பு அவனை எதிரிட்டபடி. (எந்தாய்) விரோதி4யைப் போக்கிக் கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்லுகிறது.

ஒன்பதாம் பாட்டு

எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய்!* மராமரம்
பைந்தா ளேழுருவ ஒருவாளி கோத்தவில்லா!*
கொந்தார் தண்ணந் துழாயினாய் அமுதே!உன்னை என்னுள்ளே குழைத்தஎம்
மைந்தா!* வானேறே! இனியெங்குப் போகின்றதே?

– அநந்தரம், நீயே க்ருஷிபண்ணிக் கலந்து இனி எங்கேறப்போவது? என்கிறார்.

எந்தாய் – எனக்கு நிருபாதிகஸ்வாமியாய், தண் – ஸ்ரமஹரமான, திருவேங்கடத்துள் – திருமலையிலே, நின்றாய் – எழுந்தருளிநின்று ஸுலபனாய், இலங்கை – (ஆஸ்ரிதவிரோதிகளுக்கு வாஸஸ்தாநமான) லங்கையை, செற்றாய் – அழித்தவனாய், மராமரம் – மராமரங்களினுடைய, பைம் – பருத்த, தாள் – அடி, ஏழு – ஏழும், உருவ – உருவும்படி, ஒரு வாளி – ஒரு வாளியை, கோத்த – (அநாயாஸேந) கோத்த, வில்லா – வில்லையுடையனாய், கொந்து – கொத்தாய், ஆர் – செறிந்து, தண் – குளிர்ந்த, அம் துழாயினாய் – திருத்துழாயாலே அலங்க்ருதனாய், எம் அமுதே – நித்யபோக்யனாய்க் கொண்டு, உன்னை – ஏவம்விதனான உன்னை, என்னுள்ளே – என்னுள்ளே, குழைத்த – ஏகத்ரவ்யமாம்படி கலசின, மைந்தா – நித்யயௌவந ஸ்வபாவனாய், (இந்நிலையாலே) வான் – ஸூரிகளுக்கும், ஏறே – செருக்கனாம்படி நின்றவனே! (அஸாதாரண ஸம்பந்தத்தையும், ஸௌலப்யத்தையும், விரோதி நிவர்த்தகத்வத்தையும் காட்டி மஹாராஜரைப்போலே என்னையும் விஸ்வஸிப்பித்து, ஒப்பனையழகைக்காட்டி எனக்கு நித்யபோக்யனாய், பிரிக்கவொண்ணாதபடி கலந்து, அத்தாலே இளகிப்பதித்து, இத்தாலே நித்யவிபூதிக்கும் மேலான மேன்மையையுடைய நீ), இனி – இனி, (இந்த ஸம்ஸ்லேஷத்தை விட்டு) எங்கு – எங்கே, போகின்றது – போகிறது? இனிப் போகாதே என்று கருத்து.

ஈடு – ஒன்பதாம் பாட்டு.  முதலிலே உன்னை அறியாதிருக்கிற என்னை, உன்னையும், உன் போ4க்3யதையையும் அறிவித்து, உன்னாலல்லது செல்லாதபடி ஆக்கின நீ, இனி என்னைவிட்டுப் போகாதொழியவேணும் என்கிறார்.

(எந்தாய்) ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை சேஷத்வத்திலே நிறுத்தினவனே! (இலங்கை செற்றாய்) பிராட்டியோட்டை ஸம்ஸ்லேஷ விரோதி4யைப் போக்கினாற்போலே, என்னுடைய சேஷத்வ விரோதி4யைப் போக்கினவனே! (மராமரம் இத்யாதி3) ஆஸ்ரித விஷயத்தில் மழுவேந்திக்கொடுத்துக் கார்யம் செய்யும்படி.  பரந்த அடியையுடைத்தான மராமரங்கள் ஏழும் மறுபாடுருவும்படியாக, பண்டே தொளையுள்ளதொன்றிலே ஓட்டினாற்போலே அம்பைக்கோத்த வில்வலியை யுடையவனே! (கொந்தார் தண்ணந்துழாயினாய்) வைத்த வளையத்தோடே நின்றாயிற்று மராமரம் எய்தது.  அவதாரத்துக்குச் சேர ஏதேனும் ஒன்றாலே வளையம் வைக்கிலும், திருத்துழாயல்லது தோற்றாது இவருக்கு.  கொந்தார் – தழைத்திருக்கை.  (அமுதே) மராமரம் எய்கிறபோது இலக்குக் குறித்து நின்ற நிலை இவர்க்கு போ4க்3யமாயிருந்தபடி.

(உன்னை இத்யாதி3) கலக்கிறவிடத்தில் “ஏகதத்த்வம்” என்னலாம்படி கலந்து, இனி “போவேன்” என்றால், போகப்போமோ? போகிலும் கூடப்போமித்தனை.  (மைந்தா) என்னோடே கலந்த இத்தாலே நவீக்ருதமான யௌவநத்தையுடையவனே! (வானேறே) தன் போ4க்3யதையை நித்யஸூரிகளை அநுப4விப்பித்து, அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்குமாபோலேயாயிற்று, இவரை அநுப4விப்பித்து மேன்மை தோற்ற இருந்தபடி.  (இனி எங்குப் போகின்றதே) உன்னாலல்லது செல்லாதபடியான என்னைவிட்டு, உன்னையொழியக் காலக்ஷேபம் பண்ணவல்லார் பக்கல்போகவோ? நித்யஸூரிகளை விடிலன்றோ என்னை விடலாவது.  “இவர் நம்மை விடில் செய்வதென்?” என்ற அவனுக்குண்டான அதிஶங்கையைப் பரிஹரியா நிற்க, “நீ என்னைவிட்டுப் போகாதேகொள்” என்கிறதுக்குக் கருத்தென்? என்னில்; விலக்ஷணவிஷயம், தானும் காற்கட்டி, எதிர்த்தலையையும் காற்கட்டப் பண்ணுமாயிற்று.

(எந்தாய்) நீ சேஷியல்லாமல் போகவோ? (தண் திருவேங்கடத்துள் நின்றாய்) தூ3ரஸ்த2னாய் போகவோ? (இலங்கை செற்றாய்) விரோதி4 நிரஸந சீலனல்லாமல் போகவோ? (மராமரம் இத்யாதி3) ஆஸ்ரிதவிஷயத்திலே மழுவேந்திக்கொடுத்துக் கார்யம் செய்யுமவனல்லாமல் போகவோ? (கொந்தார் தண்ணந்துழாயினாய்) ஆஸ்ரிதரக்ஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ? (அமுதே) போ4க்3யபூ4தனல்லாமல் போகவோ? (உன்னை என்னுள்ளே குழைத்த) ஒரு நீராகக் கலந்திலையாய் போகவோ? (என் மைந்தா) நவீக்ருதஸ்வபா4வனல்லாமல் போகவோ? (வானேறே) மேன்மையனல்லாமல் போகவோ? (இனி எங்குப் போகின்றதே) போகிலும் கூடப்போமித்தனையொழிய, ஏகதத்த்வம் என்னலாம்படி கலந்து தனித்துப் போகலாமோ?

பத்தாம் பாட்டு

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகுகாலங்கள்* தாய் தந்தையுயி
ராகின்றாய் உன்னைநான் அடைந்தேன் விடுவேனோ?*
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா!* தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்துழாய் விரைநாறு கண்ணியனே!

– அநந்தரம், உன் உபகாரங்களைக் கண்ட நான் உன்னைப் பெற்றுவைத்து விட க்ஷமனோ? என்கிறார்.

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகுகாலங்கள் – வர்த்தமாநமாயும், பூதமாயும், ஆகாமியாயுமுள்ள காலத்திலும், தாய் தந்தை உயிராகின்றாய் – தாயும், தந்தையும், தன் ஆத்மாவும் தனக்குப் பண்ணும் பரிவைப் பண்ணாநிற்பானாய், பாகின்ற – இப்படி ஸர்வதோமுகமான ரக்ஷணத்தாலே பரக்கிற, தொல் – அநாதிஸித்தமான, புகழ் – குணப்ரதையையுடையனாய்க்கொண்டு, மூவுலகுக்கும் – த்ரிவிதசேநாசேதநங்களுக்கும், நாதனே – நாதனாய், பரமா – இப்பெருமைக்குத் தனக்கு மேலில்லாதவனாய், (இம்மேன்மை யன்றியே) தண் – ஸ்ரமஹரமான, வேங்கடம் – திருமலையிலே, மேகின்றாய் – மேவிநிற்கிற ஸௌலப்யத்தையுடையனாய், (இப்பரத்வ ஸௌலப்யங்களுக்கும் போக்யதைக்கும் ஸூசகமாய்), தண் – குளிர்ந்த, துழாய் – திருத்துழாயையுடைத்தாய், விரை – பரிமளம், நாறு – ப்ரவஹிக்கிற, கண்ணியனே – மாலையையுடையவனே! உன்னை – ஏவம்விதனான உன்னை, அடைந்தேன் – ஸம்ஸ்லேஷிக்கப்பெற்ற, நான் – நான், விடுவேனோ – விட க்ஷமனோ?

ஈடு – பத்தாம் பாட்டு.  ‘நாம் போகாதொழிகிறோம்; நீர் நம்மை விடாதொழிய வேணுமே’ என்ன; ‘நீ பண்ணின உபகாரங்களைக் கண்டுவைத்து விட ஸம்பா4வநையுண்டோ?’ என்கிறார்.  காலத்ரயத்திலும் ஸர்வவித43ந்துவுமான உன்னைவிட ஸம்பா4வநையில்லை என்கிறார்.

(போகின்ற இத்யாதி3) காலத்ரயத்திலும் பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதகாமனான தமப்பன் செய்வதும் செய்து, “ஸ பித்ரா ச பரித்யக்த:” என்று – அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி ஸர்வப்ரகாரத்தாலும் ப்ராப்தனுமாய், உபகாரகனுமான உன்னை, உபகார ஸ்ம்ருதியையுடைய நான் கிட்டப்பெற்றுவைத்து, விட ஸம்பா4வனையுண்டோ? (பாகின்ற இத்யாதி3) “விதி3த:” என்கிறபடியே ஸத்ருகோ3ஷ்டி2யிலும் ப்ரஸித்34மாம்படி பரம்பியிருப்பதாய், ஸ்வாபா4விகமான கல்யாண கு3ணங்களையுடையையாய், த்ரைலோக்யத்துக்கும் நிர்வாஹகனானவனே! (பரமா) கு3ணங்களுக்கும் ரக்ஷணத்துக்கும் உன்னை எண்ணினால் பின்னை எண்ணலாவார் இல்லாதபடி ஸர்வாதி4கனாயிருக்குமவனே! இப்படி ஸர்வாதி4கனாயிருந்துவைத்து, என்னை அடிமை கொள்ளுகைக்காக, ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து ஸந்நிஹிதனானவனே! உன்னை நான் அடைந்தேன், விடுவேனோ? என்று அந்வயம்.

(தண் துழாய் விரை நாறு கண்ணியனே) இவருடைய ஆர்த்தியெல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்துத் தன்னை அநுப4விப்பித்து, “இவர் தன்னை விடில் செய்வதென்?” என்கிற அதிசங்கையும் தீர்ந்து, தோளிலிட்ட மாலையும் பரிமளிதமாய், பிடித்துமோந்த இலைத்தொடைமாலையும் தானுமாய் நின்றபடி.

பதினொன்றாம் பாட்டு

*கண்ணித் தண்ணந் துழாய்முடிக் கமலத் தடம்பெருங் கண்ணனை* புகழ்
நண்ணித் தென்குருகூர்ச் சடகோபன் மாறன்சொன்ன*
எண்ணில் சோர்வி லந்தாதி ஆயிரத் துள்ளிவையும்ஓர் பத்திசை யொடும்*
பண்ணில் பாட வல்லாரவர் கேசவன்தமரே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாக பகவச்சேஷத்வ ஸித்தியை அருளிச்செய்கிறார்.

கண்ணி – மாலாகாரமாய், தண் – குளிர்ந்த, அம் துழாய் – திருத்துழாயாலே அலங்க்ருதமான, முடி – திருமுடியையும், கமலம் – கமலம்போலே தர்சநீயமாய், தடம் – விசாலமாய், பெரும் – நீண்ட, கண்ணனை – திருக்கண்களையுடையவனை, புகழ் – (அவனுடைய ஆஸ்ரிதஸம்ஸ்லேஷகாரிதமான) குணப்ரதையை, நண்ணி – கிட்டி, தென் – அழகிய, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகராய், மாறன் – “மாறன்” என்கிற குடிப்பேரையுடைய, சடகோபன் – ஆழ்வார், சொன்ன – அருளிச்செய்த, எண்ணில் – பகவதபிப்ராயத்தை, சோர்வில் – தப்பாத, அந்தாதி – அந்தாதியாய் (அடைவு குலைக்க வொண்ணாத), ஆயிரத்துள் – ஆயிரத்துள், ஓர் – அத்விதீயமான, இவை பத்தும் – இவை பத்தையும், இசையொடும் – இசையோடேகூட, பண்ணில் – பண்ணிலே, பாடவல்லாரவர் – பாடவல்லாரான அவர்கள், கேசவன்தமர் – ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரனோடு அவ்யவஹித ஸம்பந்தயுக்தராவர்கள்.

எண்ணென்று – ஜ்ஞாநமாய், ‘தத்வஜ்ஞாநத்தைத் தப்பாத ஆயிரம்’ என்றுமாம்.  பண்ணென்று – ஸ்வரம்; இசையென்று – கீதிப்ரகாரம். இது, முதலடியும் மூன்றாமடியும் அறுசீராய், அயலடியும் ஈற்றடியும் நாற்சீரான ஆசிரியத்துறை.

ஈடு – நிக3மத்தில், இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லார் ஆரேனுமாகவு மாம், அவர்களுக்குக் குலசரணகோ3த்ராதி3கள் அப்ரயோஜகம்; இவ்வாகாரத்தாலே அவர்கள் ப43வதீ3யர் என்கிறார்.

(கண்ணி இத்யாதி3) இப்போதாயிற்று வளையம் செவ்விபெற்றதும், முடி நற்றரித்ததும், திருக்கண்கள் விகஸிதமாயிற்றதும்.  (புகழ் நண்ணி) அவன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹ கு3ணத்திலே அவகா3ஹித்து.  (தென் குருகூர்ச் சடகோபன் மாறன்) ஒன்று திருநாமம்; ஒன்று ஸத்ருவர்க்க3த்துக்கு ம்ருத்யுவாயுள்ளவர் என்கிறது.

(எண்ணில் சோர்வில் அந்தாதி) அவன் தம்பக்கல் பண்ணின வ்யாமோஹாதிஶயத்தை அநுஸந்தி4த்து, அவற்றிலொன்றும் குறையாமே அருளிச்செய்த ஆயிரத்தில் இப்பத்து.  (இசையொடும் பண்ணில் பாடவல்லார்) இதில் அபி4நிவேசத்தாலே இசையோடும் பண்ணோடும் பாடவல்லவர்கள்.  பண்ணாகிறது – கா3நம்.  இசையாகிறது – கு3ருத்வ  லகு4த்வாதி3கள் தன்னிலே நெகிழ்ந்து பொருந்துகை.  த்4வநியிலே, நிறத்திலே என்றபடி.  (அவர் கேசவன் தமரே) அவர்கள் ஆரேனுமாகவுமாம், குலசரணகோ3த்ராதி3கள் அப்ரயோஜகம்; “விண்ணப்பம் செய்வார்கள்” என்னுமாபோலே, இவ்வாகாரத்தாலே அவர்கள் ப43வதீ3யர்.

முதற்பாட்டில், எம்பெருமான் “இவர் நம்மைவிடில் செய்வதென்?” என்கிற அதிசங்கையைப் போக்கினார்; இரண்டாம் பாட்டில், அது போனபின்பு அவனுக்குப் பிறந்த புதுக்கணிப்பைச் சொன்னார்; மூன்றாம் பாட்டில், தமக்கு அவன் பண்ணின ஔதா3ர்யத்தை அநுஸந்தி4த்து வித்34ரானார்; நாலாம் பாட்டில், ‘அவன்  உமக்குப் பண்ணின ஔதா3ர்யமேது?’ என்ன, இதரவிஷய வைராக்3யம் என்றார்; அஞ்சாம் பாட்டில், ‘இதரவிஷய வைராக்3ய பூர்வகமாக ஆத்மாந்த தா3ஸ்யத்திலே அதி4கரித்த நான் இனி ஒருநாளும் விடேன்’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘ஆஸ்ரிதர்க்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ?’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘என்னுடைய ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4களுக்கும் ஒரு குறையில்லை’ என்றார்; எட்டாம் பாட்டில், இதுக்குத் தாம் அநுஷ்டி2த்த உபாயம் இன்னது என்றார்; ஒன்பதாம் பாட்டில், “இவர் அகவாய் அறியவேணும்” என்று ஓர் அடி பேரநிற்க, ‘இனிப்போக வொண்ணாது’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘நாம் போகாதொழிகிறோம்; நீர்தாம் போகாதொழியவேணுமே’ என்ன, ‘காலத்ரயத்திலும் ஸர்வவித4, ப3ந்து4வுமான உன்னை விட ஸம்பா4வநையில்லை’ என்றார்; இது கற்றார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– வைகுந்தா

நீசம் து மாமதி43தோ யமிதி ஸ்வஸூக்த்யா
ஜாதாம் ஹரேஸ் ஸ்வவிரஹாக3மநே‍திஶங்காம் |
ஷஷ்டே2 நிரஸ்ய த்3ருட4ஸங்க3கி3ரா ஶடா2ரி:
ஆத்மாந்வயிஷ்வபி ததா33ரதோ‍ப்4யநந்த3த் ||              16

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிவைகுந்தா

ஸ்வாஸ்வாத3க்2யாபகத்வாச்ச்2ரிதநியதத்3ருஶேர் நைகபோ43ப்ரதா3நாத்
த்யாகா3நர்ஹப்ரகாஶாத் ஸ்தி2ரபரிசரணஸ்தா2பனாத் பாபப4ங்கா3த் |
துஸ்ஸாதா4ர்த்த2ஸ்ய ஸித்3தே4ர்விரஹப4யக்ருதேர் து3ர்விபே4தா3த்மயோகா3த்
நித்யாநேகோபகாராத் ஸ்வவிரஹசகிதம் ப்ரைக்ஷதாம்போ4ருஹாக்ஷம் || 18

திருவாய்மொழி நூற்றந்தாதி

வைகுந்தன்  வந்து கலந்ததற்பின் வாழ்மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து-நைகின்ற
தன்மைதனைக் கண்டுன்னைத் தான்விடே னென்றுரைக்க
வன்மையடைந் தான்கே சவன். 16

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

****

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.