திருவாய்மொழி
ஏழாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி
கங்குலும் பகலும் கண் துயிலறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும் *
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும் *
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு ? என்னும்
இருநிலம் கை துழாவிருக்கும் *
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் !
இவள் திறத்து என் செய்கின்றாயே ? 7.2.1 திருவரங்கம்
என் செய்கின்றாய் ? என் தாமரைக் கண்ணா !
என்னும், கண்ணீர் மல்க இருக்கும் *
என்செய்கேன் ? எறிநீர்த் திருவரங்கத்தாய் !
என்னும், வெவ்வுயிர்த் துயிர்த்துருகும் *
முன் செய்த வினையே முகப்படாயென்னும்
முகில்வண்ணா ! தகுவதோ ? என்னும் *
முன்செய்து இவ்வுலக முண்டுமிழ்ந் தளந்தாய் !
என் கொலோ முடிகின்றது இவட்கே? 7.2.2 திருவரங்கம்
வட்கிலள் இறையும் மணிவண்ணா ! என்னும்
வானமே நோக்கும் மையாக்கும் *
உட்குடை யசுரருயிரெல்லா முண்ட
ஒருவனே ! என்னும், உள்ளுருகும் *
கட்கிலீ ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா கண்ணனே ! என்னும் *
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் !
இவள் திறத்து என் செய்திட்டாயே ? 7.2.3 திருவரங்கம்
இட்ட காலிட்ட கையளா யிருக்கும்
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும் *
கட்டமே காதலென்று மூர்ச்சிக்கும்
கடல் வண்ணா ! கடியை காணென்னும் *
வட்டவாய் நேமி வலங்கையா ! என்னும்
வந்திடா யென்றென்றே மயங்கும் *
சிட்டனே ! செழுநீர்த் திருவரங்கத்தாய் !
இவள் திறத்து என் சிந்தித்தாயே? 7.2.4 திருவரங்கம்
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாய் ! என்னும்
வந்திக்கும் * ஆங்கே மழைக்கண் நீர்மல்க
வந்திடா யென்றென்றே மயங்கும் *
அந்திப் போது அவுணனுடலிடந்தானே !
அலைகடல் கடைந்த ஆரமுதே ! *
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய்தானே ! 7.2.5 திருவரங்கம்
மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே !
என்னும், மாமாயனே ! என்னும் *
செய்ய வாய் மணியே ! என்னும், தண்புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் ! என்னும் *
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும்
விண்ணோர் முதல் ! என்னும் *
பைகொள் பாம்பணையாய் ! இவள் திறத்தருளாய்
பாவியேன் செயற்பாலதுவே. 7.2.6 திருவரங்கம்
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் !
பற்றிலார் பற்ற நின்றானே ! *
கால சக்கரத்தாய் ! கடலிடம் கொண்ட
கடல் வண்ணா ! கண்ணனே ! என்னும் *
சேல் கொள் தண்புனல் சூழ் திருவரங்கத்தாய் !
என்னும், என் தீர்த்தனே ! என்னும் *
கோல மாமழைக் கண் பனிமல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே. 7.2.7 திருவரங்கம்
கொழுந்து வானவர்கட்கு ! என்னும், குன்றேந்திக்
கோநிரை காத்தவன் ! என்னும் *
அழும் தொழும் ஆவியனல வெவ்வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே ! என்னும் *
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலளிருக்கும்
எங்ஙனே நோக்குகேன் ? என்னும் *
செழுந்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய் !
என்செய்கேன் என் திருமகட்கே ? 7.2.8 திருவரங்கம்
என் திருமகள் சேர் மார்வனே ! என்னும்
என்னுடை யாவியே ! என்னும் *
நின் திருவெயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே ! என்னும் *
அன்றுரு வேழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகளன்பனே ! என்னும் *
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே !
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே. 7.2.9 திருவரங்கம்
முடிவு இவள் தனக்கு ஒன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியே ! என்னும் *
கடிகமழ் கொன்றைச் சடையனே ! என்னும் *
நான்முகக் கடவுளே ! என்னும் *
வடிவுடை வானோர் தலைவனே ! என்னும்
வண்திருவரங்கனே ! என்னும் *
அடியடையாதாள் போல் இவளணுகி
அடைந்தனள் முகில்வண்ணனடியே. 7.2.10 திருவரங்கம்
முகில் வண்ணனடியை யடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய் புனல் பொருநல் *
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குருகூர்ச் சடகோபன் *
முகில் வண்ணனடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார் *
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே. 7.2.11 திருவரங்கம்