திருவாய்மொழி
ஏழாம் பத்து
நான்காம் திருவாய்மொழி
ஆழியெழச், சங்கும் வில்லுமெழத் * திசை
வாழியெழத், தண்டும் வாளுமெழ * அண்டம்
மோழையெழ, முடி பாதமெழ * அப்பன்
ஊழியெழ, உலகம் கொண்ட வாறே. 7.4.1
ஆறு மலைக்கு, எதிர்ந்தோடு மொலி * அர
ஊறு சுலாய், மலை தேய்க்கு மொலி * கடல்
மாறு சுழன்று, அழைக்கின்ற வொலி * அப்பன்
சாறுபட, அமுதம் கொண்ட நான்றே. 7.4.2
நான்றில, ஏழ் மண்ணும் தானத்தவே * பின்னும்
நான்றில, ஏழ் மலை தானத்தவே * பின்னும்
நான்றில, ஏழ் கடல் தானத்தவே * அப்பன்
ஊன்றி யிடந்து, எயிற்றில் கொண்ட நாளே. 7.4.3
நாளுமெழ, நில நீருமெழ * விண்ணும்
கோளுமெழ, எரி காலுமெழ * மலை
தாளுமெழச், சுடர் தானுமெழ * அப்பன்
ஊளியெழ, உலக முண்ட வூணே. 7.4.4
ஊணுடை மல்லர், ததைந்த வொலி * மன்னர்
ஆணுடைச் சேனை, நடுங்கு மொலி * விண்ணுள்
ஏணுடைத் தேவர், வெளிப்பட்ட வொலி * அப்பன்
காணுடைப் பாரதம், கையறை போழ்தே. 7.4.5
போழ்து மெலிந்த, புன்செக்கரில் * வான் திசை
சூழு மெழுந்து, உதிரப் புனலா * மலை
கீழ்து பிளந்த, சிங்கமொத்ததால் * அப்பன்
ஆழ்துயர் செய்து, அசுரரைக் கொல்லுமாறே. 7.4.6
மாறு நிறைத்து இரைக்கும், சரங்கள் * இன
நூறு பிணம், மலை போல் புரளக் * கடல்
ஆறு மடுத்து, உதிரப் புனலா * அப்பன்
நீறு பட, இலங்கை செற்ற நேரே. 7.4.7
நேர் சரிந்தான், கொடிக்கோழி கொண்டான் * பின்னும்
நேர் சரிந்தான், எரியும் அனலோன் * பின்னும்
நேர் சரிந்தான், முக்கண் மூர்த்தி கண்டீர் * அப்பன்
நேர் சரி, வாணன் திண்தோள் கொண்ட வன்றே. 7.4.8
அன்று மண் நீரெரி கால், விண் மலை முதல் *
அன்று சுடர், இரண்டு பிறவும் * பின்னும்
அன்று, மழை உயிர் தேவும் மற்றும் * அப்பன்
அன்று முதல், உலகம் செய்ததுமே. 7.4.9
மேய் நிரை கீழ் புக, மாபுரளச் * சுனை
வாய் நிரை நீர், பிளிறிச் சொரிய * இன
ஆநிரை பாடி, அங்கே யொடுங்க * அப்பன்
தீமழை காத்துக், குன்ற மெடுத்தானே. 7.4.10
குன்ற மெடுத்த பிரான், அடியாரொடும் *
ஒன்றி நின்ற, சடகோபனுரை செயல் *
நன்றி புனைந்த, ஓராயிரத்துள் இவை *
வென்றி தரும் பத்தும், மேவிக் கற்பார்க்கே. 7.4.11