Periya Thirumadal

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரியதிருமடல்

தனியன்

(பிள்ளை திருநறையூர்அரையர் அருளிச்செய்தது)

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்*

நல்நுதலீர்! நம்பிநறையூரர்* – மன்னுலகில்

என்னிலைமை கண்டும் இரங்காரேயாமாகில்*

மன்னுமடலூர்வன்வந்து.

மன்னிய பல்பொறி சேர் ஆயிரவாய் வாளரவின் *

சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் *

மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலை போல் *

மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் *

துன்னிய தாரகையின் பேரொளி சேர் ஆகாசம் *

என்னும் விதானத்தின் கீழால் * இருசுடரை

மன்னும் விளக்காக ஏற்றி. 1

மறிகடலும்

பன்னு திரைக் கவரி வீச * நிலமங்கை

தன்னை முனநாள் அளவிட்ட தாமரை போல்

மன்னிய சேவடியை. 2

வானியங்கு தாரகை மீன் *

என்னும் மலர்ப் பிணையலேய்ந்த * மழைக் கூந்தல்

தென்னனுயர் பொருப்பும் தெய்வ வடமலையும் *

என்னும் இவையே முலையா வடிவமைந்த *

அன்ன நடைய அணங்கே * அடியிணையைத்

தன்னுடைய அங்கைகளால் தான் தடவத் தான் கிடந்து 3

ஓர்

உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்ட

பின்னை * தன் நாபி வலயத்துப் பேரொளி சேர் *

மன்னிய தாமரை மாமலர் பூத்து * அம்மலர் மேல்

முன்னம் திசைமுகனைத் தான் படைக்க * மற்றவனும்

முன்னம் படைத்தனன் நான்மறைகள். 4

அம்மறை தான்

மன்னும் அறம் பொருள் இன்பம் வீடென்று உலகில் *

நன்னெறி மேம்பட்டன நான்கன்றே. 5

நான்கினிலும்

பின்னையது பின்னைப் பெயர் தருமென்பது. 6

ஓர்

தொன்னெறியை வேண்டுவார் * வீழ்கனியும் ஊழிலையும்

என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித் *

துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் * வெஞ்சுடரோன்

மன்னும் அழல் நுகர்ந்தும் வண்தடத்தி னுட்கிடந்தும் *

இன்னதோர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டெழுந்து *

தொன்னெறிக்கண் சென்றாரெனப் படும் சொல்லல்லால் *

இன்னதோர் காலத்து இனையார் * இதுபெற்றார்

என்னவும் கேட்டறிவதில்லை. 7

உளதென்னில்

மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் *

அன்னதோ ரில்லியினூடு போய் * வீடென்னும்

தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள். 8

சொல்லாதே

அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து ஆங்கு

அன்னவரைக் * கற்பிப்போம் யாமே. 9

அது நிற்க

முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற *

அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் *

பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செப்ப * பொங்கொளி சேர்

கொல்நவிலும் கோளரிமாத் தான் சுமந்த கோலம் சேர் *

மன்னிய சிங்காசனத்தின் மேல். 10

வாள் நெடுங்கண்

கன்னியரால் இட்ட கவரிப் பொதி யவிழ்ந்து * ஆங்கு

இன்னிளம் பூந்தென்ற லியங்க. 11

மருங்கிருந்த

மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார்* வெண்முறுவல்

முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா * வந்தரும்ப

அன்னவர்தம் மானோக்கமுண்டு ஆங்கணி மலர்சேர் *

பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம் *

மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை *

இன்னிசை வண்டமரும் சோலை வாய் * மாலை சேர்

மன்னிய மாமயில் போல் கூந்தல் * மழைத் தடங்கண்

மின்னிடையாரோடும் விளையாடி வேண்டிடத்து *

மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் *

மின்னினொளி சேர் பளிங்கு விளிம்படுத்த *

மன்னும் பவளக்கால் செம்பொன்செய் மண்டபத்துள் *

அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த *

இன்னிசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று. 12

இருவிசும்பில்

மன்னு மழை தவழும் வாணிலா நீள்மதி தோய் *

மின்னினொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் *

மன்னு மணி விளக்கை மாட்டி. 13

மழைக்கண்ணார்

பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளி மேல் *

துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப *

அன்னம் உழக்க நெரிந்துக்க வாள் நீலச் *

சின்ன நறுந்தாது சூடி. 14

ஓர் மந்தாரம்

துன்னு நறுமலரால் தோள் கொட்டி. 15

கற்பகத்தின்

மன்னு மலர்வாய் மணிவண்டு பின்தொடர *

இன்னிளம் பூந்தென்றல் புகுந்து ஈங்கிள முலைமேல் *

நன்னறுஞ் சந்தனச் சேறு புலர்த்த. 16

தாங்கருஞ்சீர்

மின்னிடை மேல் கைவைத் திருந்து ஏந்திள முலைமேல் *

பொன்னரும் பாரம் புலம்ப * அகங் குழைந் தாங்கு

இன்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார் *

அன்னவர் தம் மானோக்க முண்டு ஆங்கு அணிமுறுவல் *

இன்னமுதம் மாந்தியிருப்பர். 17

இதுவன்றே

அன்ன அறத்தின் பயனாவது. 18

ஒண்பொருளும்

அன்ன திறத்தே யாதலால் * காமத்தின்

மன்னும் வழி முறையே நிற்றும் நாம். 19

மானோக்கின்

அன்ன நடையார் அலரேச * ஆடவர் மேல்

மன்னு மடலூரா ரென்பதோர் வாசகமும் *

தென்னுரையில் கேட்டறிவதுண்டு. 20

அதனை யாம் தெளியோம். 21

மன்னும் வடநெறியே வேண்டினோம். 22

வேண்டாதார்

தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் *

அன்னதோர் தன்மை அறியாதார். 23

ஆயன் வேய்

இன்னிசை யோசைக்கு இரங்காதார். 24

மால் விடையின்

மன்னு மணி புலம்ப வாடாதார். 25

பெண்ணை மேல்

பின்னும் அவ்வன்றிற் பேடைவாய்ச் சிறுகுரலுக்கு *

உன்னி யுடலுருகி நையாதார். 26

உம்பர் வாய்த்

துன்னுமதி யுகுத்த தூநிலா நீள் நெருப்பில் *

தம்முடலம் வேவத் தளராதார். 27

காமவேள்

மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்தெய்யப் *

பொன்னெடு வீதி புகாதார். 28

தம் பூவணை மேல்

சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும் *

இன்னிள வாடை தடவத் தாம் கண்துயிலும் *

பொன்னனையார் பின்னும் திருவுறுக. 29

போர்வேந்தன்

தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து *

பொன்னகரம் பின்னே புலம்ப வலங் கொண்டு *

மன்னும் வளநாடு கைவிட்டு * மாதிரங்கள்

மின்னுருவில் விண்தேர் திரிந்து வெளிப்பட்டுக் *

கல்நிறைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று *

பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா *

கொன்னவிலும் வெங்கானத்தூடு * கொடுங் கதிரோன்

துன்னு வெயில் வறுத்த வெம்பரல் மேல் பஞ்சடியால் *

மன்னன் இராமன் பின் வைதேவி யென்றுரைக்கும் *

அன்ன நடைய அணங்கு நடந்திலளே? 30

பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணை நோக்கின் *

மின்னனைய நுண்மருங்குல் வேகவதி யென்றுரைக்கும்

கன்னி * தன் இன்னுயிராம் காதலனைக் காணாது * அங்கு

தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று * அங்கு

அன்னவனை நோக்காது அழித்துரப்பி * வாளமருள்

கல்நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்ப் *

பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?   31

பூங்கங்கை

முன்னம் புனல் பரக்கும் நல்நாடன் * மின்னாடும்

கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை *

தன்னிக ரொன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் *

பன்னாக ராயன் மடப்பாவை * பாவை தன்

மன்னிய நாணச்சம் மடமென்றிவை யகலத் *

தன்னுடைய கொங்கை முகம் நெரியத் * தான் அவன் தன்

பொன் வரை யாகம் தழீஇக் கொண்டு போய்த் * தனது

நல்நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் *

முன்னுரையில் கேட்டறிவ தில்லையே? 32

சூழ்கடலுள்

பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும் *

மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்

தன்னுடைய பாவை * உலகத்துத் தன்னொக்கும்

கன்னியரை யில்லாத காட்சியாள் * தன்னுடைய

இன்னுயிர்த் தோழியால் * எம்பெருமானீன் துழாய்

மன்னு மணி வரைத்தோள் மாயவன் * பாவியேன்

என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரைத்தோள் *

மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய்க் *

கன்னி தன் பால் வைக்க மற்றவனோடு எத்தனையோ *

மன்னிய பேரின்ப மெய்தினாள். 33

மற்றிவை தான்

என்னாலே கேட்டீரே ? ஏழைகாள் ! என்னுரைக்கேன்? 34

மன்னு மலை யரையன் பொற்பாவை * வாள் நிலா

மின்னு மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும் *

அன்ன நடைய அணங்கு, நுடங்கிடை சேர் *

பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகலத் *

தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து * ஆங்கு

அன்ன அருந் தவத்தினூடு போய் * ஆயிரந்தோள்

மன்னு கரதலங்கள் மட்டித்து * மாதிரங்கள்

மின்னி யெரி வீச மேலெடுத்த சூழ்கழற்கால் *

பொன்னுலக மேழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப *

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும் *

தன்னினுடனே சுழலச் சுழன்றாடும் *

கொல்நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடியாடி *

அன்னவன் தன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே. 35

பன்னி யுரைக்குங்கால் பாரதமாம். 36

பாவியேற்கு

என்னுறு நோய் யான் உரைப்பக் கேண்மின். 37

இரும்பொழில்சூழ்

மன்னு மறையோர் திருநறையூர் மாமலை போல் *

பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு *

என்னுடைய கண்களிப்ப நோக்கினேன். 38                  திருநறையூர்

நோக்குதலும்

மன்னன் திருமார்பும் வாயும் அடியிணையும் *

பன்னு கரதலமும் கண்களும் * பங்கயத்தின்

பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல் *

மின்னி யொளி படைப்ப வீழ்நாணும் தோள்வளையும் *

மன்னிய குண்டலமும் ஆரமும் நீள்முடியும் *

துன்னு வெயில் விரித்த சூளாமணி யிமைப்ப *

மன்னு மரதகக் குன்றின் மருங்கே * ஓர்

இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான் *

அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே *

மின்னாய் இளவே யிரண்டாய் இணைச் செப்பாய் *

முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலமிரண்டாய் *

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே *

என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும் *

பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு *

மன்னு மறி கடலும் ஆர்க்கும். 39

மதியுகுத்த

இன்னிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும். 40

தன்னுடைய தன்மை தவிரத் தானென் கொலோ?   41

தென்னன் பொதியில் செழுஞ் சந்தின் தாதளைந்து *

மன்னிவ் வுலகை மனங் களிப்ப வந்தியங்கும் *

இன்னிளம் பூந்தென்றலும் வீசும் எரி எனக்கே. 42

முன்னிய பெண்ணை மேல் முள்முளரிக் கூட்டகத்துப் *

பின்னும் அவ்வன்றில் பேடைவாய்ச் சிறுகுரலும் *

என்னுடைய நெஞ்சுக்கு ஓரீர் வாளாம் என்செய்கேன்? 43

கல்நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளையக் *

கொல்நவிலும் பூங்கணைகள் கோத்துப் பொதவணைந்து *

தன்னுடைய தோள் கழிய வாங்கித் * தமியேன் மேல்

என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் *

பின்னிதனைக் காப்பீர் தாம் இல்லையே. 44

பேதையேன்

கல்நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடிமலரின் *

நல்நறு வாசம் மற்றாரானும் எய்தாமே *

மன்னும் வறுநிலத்து வாளாங்குகுத்தது போல் *

என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும் *

மன்னும் மலர்மங்கை மைந்தன் * கணபுரத்துப்

பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்

என்னிவை தான்? வாளா எனக்கே பொறையாகி *

முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர் *

மன்னு மருந்தறிவீ ரில்லையே? 45            திருக்கண்ணபுரம்

மால்விடையின்

துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு * வன்தொடரால்

கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு * மாலைவாய்த்

தன்னுடைய நாவொழியாது ஆடும் தனிமணியின் *

இன்னிசை யோசையும் வந்து என் செவி தனக்கே *

கொல்நவிலும் எஃகின் கொடிதாய் நெடிதாகும். 46

என்னிதனைக் காக்குமா? சொல்லீர். 47

இது விளைத்த

மன்னன் நறுந்துழாய் வாழ்மார்பன் * மாமதி கோள்

முன்னம் விடுத்த முகில்வண்ணன் * காயாவின்

சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் * வண்ணம் போல்

அன்ன கடலை மலை யிட்டணை கட்டி *

மன்ன னிராவணனை மாமண்டு வெஞ்சமத்துப் *

பொன் முடிகள் பத்தும் புரளச் சரம் துரந்து *

தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை. 48

ஆயிரக்கண்

மன்னவன் வானமும் வானவர்தம் பொன்னுலகும் *

தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனைப் *

பின்னோ ரரி யுருவமாகி எரி விழித்து *

கொல்நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே * வல்லாளன்

மன்னுமணிக் குஞ்சி பற்றி வரவீர்த்துத் *

தன்னுடைய தாள் மேல் கிடாத்தி * அவனுடைய

பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த *

மின்னிலங்கும் ஆழிப் படைத் தடக்கை வீரனை. 49

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர்தான் விழுங்கப் *

பின்னும் ஓரேனமாய்ப் புக்குவளை மருப்பில் *

கொல்நவிலும் கூர்நுதிமேல் வைத்தெடுத்த கூத்தனை. 50

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் *

மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் *

தன்னினுடனே சுழல மலை திரித்து * ஆங்கு

இன்னமுதம் வானவரை யூட்டி * அவருடைய

மன்னும் துயர் கடிந்த வள்ளலை. 51

மற்றன்றியும்

தன்னுருவம் ஆரும் அறியாமல் தானங்கோர் *

மன்னும் குறளுருவின் மாணியாய் * மாவலி தன்

பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து * போர்வேந்தர்

மன்னை மனங் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி *

என்னுடைய பாதத்தால் யானளப்ப * மூவடி மண்

மன்னா ! தருகென்று வாய் திறப்ப * மற்றவனும்

என்னால் தரப்பட்டது என்றலுமே * அத்துணைக்கண்

மின்னார் மணிமுடி போய் விண் தடவ * மேலெடுத்த

பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க் கடந்து * அங்கு

ஒன்னா அசுரர் துளங்கச் செல நீட்டி *

மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் *

தன்னுலக மாக்குவித்த தாளானை. 52

தாமரை மேல்

மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையை 53             திருவிண்ணகர்

பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை. 54            திருக்குடந்தை (கும்பகோணம்)

தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை. 55                  திருக்குறுங்குடி

மன்னிய தண் சேறை வள்ளலை. 56       திருச்சேறை

மாமலர்மேல்

அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி

என்னுடைய இன்னமுதை * எவ்வுள் பெருமலையைக் *

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை *

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்

பொன்னை * மரதகத்தைப் புட்குழி யெம் போரேற்றை *

* மன்னு மரங்கத்து எம்மாமணியை. 57                        திருவரங்கம்,

திருவெள்ளறை,

திருவாலி,

திருக்கண்ணமங்கை,

திருப்புட்குழி,

திருவெவ்வுள்

வல்லவாழ்ப்

பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை *

தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச்சுடரை

என் மனத்து மாலை இடவெந்தை யீசனை *

மன்னுங் கடல்மல்லை மாயவனை. 58 திருப்பேர்நகர்,

திருவல்லவாழ்,

திருவிடைவெந்தை,

திருக்கடல்மல்லை

வானவர்தம்

சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியைத் *

தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை * முத்தினை

அன்னத்தை மீனை அரியை அருமறையை *

முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியை. 59     ஆதனூர் -,

திருத்தண்கால்

கோவலூர்

மன்னும் இடைகழி யெம் மாயவனைப் * பேயலறப்

பின்னும் முலையுண்ட பிள்ளையை. 60                        திருக்கோவலூர்

அள்ளல் வாய்

அன்னம் இரைதேர் அழுந்தூ ரெழுஞ்சுடரைத் *

* தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை. 61             திருவழுந்தூர்,

சித்திரகூடம்

மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக் *

கொல்நவிலும் ஆழிப் படையானை. 62 திருமாலிருஞ்சோலை,

திருவேங்கடம் திருப்பதி

கோட்டியூர்

அன்ன வுருவினரியைத் * திருமெய்யத்து

இன்னமுத வெள்ளத்தை இந்தளூ ரந்தணனை *

மன்னு மதிள் கச்சி வேளுக்கை யாளரியை *

மன்னிய பாடகத்து எம் மைந்தனை. 63                        இந்தளூர்,

திருக்கோட்டியூர்,

திருமெய்யம்,

வேளுக்கை,

பாடகம்

வெஃகாவில்

உன்னிய யோகத் துறக்கத்தை * ஊரகத்துள்

அன்னவனை அட்டபுயகரத் தெம்மானேற்றை *

என்னை மனங் கவர்ந்த ஈசனை. 64        ஊரகம்,

திருவெ:கா,

அட்டபுயகரம்

வானவர் தம்

முன்னவனை மூழிக்களத்து விளக்கினை *

அன்னவனை ஆதனூ ராண்டளக்கும் ஐயனை. 65                        திருமூழிக்களம்

நென்னலை இன்றினை நாளையை. 66

நீர்மலைமேல்

மன்னுமறை நான்குமானைப் * புல்லாணித்

தென்னன் தமிழை வடமொழியை * நாங்கூரில்

மன்னு மணிமாடக் கோயில் மணாளனை *

நல்நீர்த் தலைச்சங்க நாண்மதியை. 67 தலைச்சங்கநாண் மதியம்,

திருப்புல்லாணி,

திருநீர்மலை

நான் வணங்கும்

கண்ணனைக் கண்ணபுரத்தானைத் * தென்னறையூர்

மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் *

கல்நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கை தொழுது *

என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான் *

தன் அருளும் ஆகமும் தாரானேல். 68  திருக்கண்ணபுரம்,

திருநறையூர்,

மணிமாடக் கோயில்

தன்னை நான்

மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் *

தன்னடியார் முன்பும் * தரணி முழுதாளும்

கொல்நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் *

தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன். 69

தான் முனநாள்

மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண் *

துன்னு படல் திறந்து புக்குத் * தயிர் வெண்ணெய்

தன் வயிறார விழுங்க. 70

கொழுங் கயற்கண்

மன்னு மடவோர்கள் பற்றி யோர் வான் கயிற்றால் *

பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும். 71

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் *

துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை *

முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும். 72

மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த் *

தன்னை யிகழ்ந்துரைப்பத் தான் முனநாள் சென்றதுவும். 73

மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண்களிப்ப *

கொன்னவிலும் கூத்தனாய்ப் பெயர்த்தும் குடமாடி *

என்னிவன் ! என்னப் படுகின்ற ஈடறவும். 74

தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை *

மன்ன னிராவணன் தன் நல்தங்கை * வாளெயிற்றுத்

துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி *

பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்

தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து *

மன்னிய திண்ணெனவும். 75

வாய்த்த மலை போலும்

தன்னிக ரொன்றில்லாத தாடகையை * மாமுனிக்காத்

தென்னுலக மேற்றுவித்த திண்திறலும். 76

மற்றிவை தான்

உன்னி யுலவா வுலகறிய ஊர்வன் நான் 77

முன்னி முளைத்தெழுந்து ஓங்கி யொளி பரந்த *

மன்னிய பூம் பெண்ணை மடல். 78

பெரியதிருமடல் முற்றும்

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.