பெரிய திருமொழி
ஆறாம் பத்து
எட்டாம் திருமொழி
மான் கொண்ட தோல் மார்வில், மாணியாய் * மாவலி மண்
தான் கொண்டு, தாளாலளந்த பெருமானைத் *
தேன் கொண்ட சாரல், திருவேங்கடத்தானை *
நான் சென்று நாடி, நறையூரில் கண்டேனே. 6.8.1 திருநறையூர்,
திருவேங்கடம் திருப்பதி
முந்நீரை, முன்னாள் கடைந்தானை * மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை *
தென்னாலி மேய திருமாலை, எம்மானை *
நன்னீர் வயல் சூழ், நறையூரில் கண்டேனே. 6.8.2 திருவாலி,
திருநறையூர்
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறை வேழம் *
மூவாமை நல்கி, முதலை துணித்தானை *
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை *
நாவாயுளானை, நறையூரில் கண்டேனே. 6.8.3 திருநறையூர்,
திருநாவாய்
ஓடா அரியாய், இரணியனை ஊனிடந்த *
சேடார் பொழில் சூழ், திருநீர்மலையானை *
வாடா மலர்த்துழாய் மாலை, முடியானை *
நாடோறும் நாடி, நறையூரில் கண்டேனே. 6.8.4 திருநறையூர்,
திருநீர்மலை
கல்லார் மதிள்சூழ், கடியிலங்கைக் காரரக்கன்
வல்லாகம் கீள, வரிவெஞ்சரம் துரந்த
வில்லானை * செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி, நறையூரில் கண்டேனே. 6.8.5 திருநறையூர்
உம்பருலகோடு, உயிரெல்லாம் * உந்தியில்
வம்புமலர் மேல் படைத்தானை, மாயோனை *
அம்பன்ன கண்ணாள், அசோதை தன் சிங்கத்தை *
நம்பனை நாடி, நறையூரில் கண்டேனே. 6.8.6 திருநறையூர்
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தை, தீ மூட்டி
விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை *
மட்டேறு கற்பகத்தை, மாதர்க்காய் * வண்துவரை
நட்டானை நாடி, நறையூரில் கண்டேனே. 6.8.7 திருநறையூர்,
திருமெய்யம்,
துவாரகை (துவரை)
மண்ணின் மீபாரம் கெடுப்பான் * மறமன்னர்
பண்ணின் மேல் வந்த, படையெல்லாம் பாரதத்து *
விண்ணின் மீதேற, விசயன் தேரூர்ந்தானை *
நண்ணி நான் நாடி, நறையூரில் கண்டேனே. 6.8.8 திருநறையூர்
பொங்கேறு நீள்சோதிப், பொன்னாழி தன்னோடும் *
சங்கேறு கோலத் தடக்கைப், பெருமானைக் *
கொங்கேறு சோலைக், குடந்தைக் கிடந்தானை *
நங்கோனை நாடி, நறையூரில் கண்டேனே. 6.8.9 திருக்குடந்தை (கும்பகோணம்),
திருநறையூர்
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை *
நன்னறையூர், நின்ற நம்பியை * வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான், கலியனொலி வல்லார் *
பொன்னுலகில் வானவர்க்குப், புத்தேளிராகுவரே. 6.8.10 திருநறையூர்,
வடமதுரை