பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
பத்தாம் திருமொழி
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்
தீவினைகள் போயகல * அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழுலகத்தவர் பணிய, வானோர்
அமர்ந்தேத்த இருந்த இடம் * பெரும்புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ *
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.1 அரிமேயவிண்ணகரம்
வென்றிமிகு நரகனுரமது அழிய விசிறும்
விறலாழித் தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று
குன்றுகொடு குரைகடலைக் கடைந்து அமுதமளிக்கும்
குருமணி என்னாரமுதம் குலவியுறை கோயில் *
என்றும் மிகு பெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் *
அன்றுலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.2 அரிமேயவிண்ணகரம்
உம்பருமிவ் வேழுலகும் ஏழ்கடலுமெல்லாம்
உண்ட பிரான், அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த *
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக், கஞ்சன்
குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் * மருங்கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம் பல புன்னை காட்டப்
பலங்கனிகள் தேன் காட்டப் * படவரவேரல்குல்
அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.3 அரிமேயவிண்ணகரம்
ஓடாத ஆளரியின் உருவமது கொண்டு, அன்று
உலப்பில் மிகு பெருவரத்த இரணியனைப் பற்றி *
வாடாத வள்ளுகிரால் பிளந்து, அவன் தன் மகனுக்கு
அருள் செய்தான் வாழுமிடம் * மல்லிகை செங்கழுநீர்
சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலினூடே *
ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.4 அரிமேயவிண்ணகரம்
கண்டவர்தம் மனம் மகிழ மாவலிதன் வேள்விக்கு
அளவில் மிகு சிறுகுறளாய் மூவடி யென்றிரந்திட்டு *
அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளுமெல்லாம்
அளந்த பிரான் அமருமிடம் * வளங்கொள் பொழிலயலே
அண்டமுறு முழவொலியும் வண்டினங்களொலியும்
அருமறையினொலியும் மடவார் சிலம்பினொலியும் *
அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.5 அரிமேயவிண்ணகரம்
வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா, இலங்கை
மன்னன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர *
தாள்நெடுந்திண் சிலைவளைத்த தயரதன் சேய், என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் * தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழுமுத்தம் *
வாள்நெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.6 அரிமேயவிண்ணகரம்
தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனை தனாருயிரும் செகுத்தான் *
காமனைத் தான் பயந்த கருமேனி யுடையம்மான்
கருதுமிடம், பொருது புனல் துறைதுறை முத்து உந்தி *
நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம், ஐந்து
வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று * அங்கு
ஆமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.7 அரிமேயவிண்ணகரம்
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன் காலிகள் முன் காப்பான் *
குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன்
குலவுமிடம் * கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள் *
துன்றுமணி மண்டபங்கள் சாலைகள், தூமறையோர்
தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை *
அன்றலர்வாய் மதுவுண்டு அங்கு அளிமுரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.8 அரிமேயவிண்ணகரம்
வஞ்சனையால் வந்தவள் தன் உயிருண்டு, வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமுதுண்டு * வலிமிக்க
கஞ்சனுயிரதுவுண்டு இவ்வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி *
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம்கொடுப்ப, மாமறையோர் மாமலர்கள் தூவி *
அஞ்சலித்து அங்கு அரி சரணென்று இறைஞ்சு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.10.9 அரிமேயவிண்ணகரம்
சென்று சினவிடையேழும் பட அடர்த்துப், பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில் *
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் அமர்ந்த செழுங்குன்றைக் *
கன்றிநெடு வேல்வலவன் மங்கையர் தம் கோமான்
கலிகன்றி ஒலிமாலை ஐந்தினொடு மூன்றும் *
ஒன்றினொடு மொன்றும் இவை கற்று வல்லார், உலகத்து
உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே. 3.10.10 அரிமேயவிண்ணகரம்
*************