பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
எட்டாம் திருமொழி
நந்தாவிளக்கே ! அளத்தற்கு அரியாய் ! *
நரநாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! * எமக்கே அருளாயென நின்று
இமையோர் பரவுமிடம் * எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே
களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து *
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே ! 3.8.1 மணிமாடக் கோயில்
முதலைத் தனி மா முரண் தீர, அன்று
முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழமுய்ய *
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி
வினைதீர்த்த அம்மானிடம் * விண்ணணவும்
பதலைக் கபோதத்தொளி மாட நெற்றிப்
பவளக் கொழுங்கால பைங்கால் புறவம் *
மதலைத் தலைமென் பெடை கூடு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே ! 3.8.2 மணிமாடக் கோயில்
கொலைப்புண் தலைக்குன்ற மொன்று உய்ய, அன்று
கொடுமா முதலைக்கு இடர் செய்து * கொங்கார்
இலைப் புண்டரீகத் தவளின்பம், அன்போடு
அணைந்திட்ட அம்மானிடம் * ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
அணிமுத்தும் வெண்சாமரையோடு * பொன்னி
மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே ! 3.8.3 மணிமாடக் கோயில்
சிறையார் உவணப் புள்ளொன்று ஏறி, அன்று
திசை நான்கும் நான்கும் இரியச் * செருவில்
கறையார் நெடுவேலரக்கர் மடியக்
கடல் சூழிலங்கை கடந்தான் இடந்தான் *
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
ஐவேள்வி யாறங்கர் ஏழினிசையோர் *
மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே ! 3.8.4 மணிமாடக் கோயில்
இழையாடு கொங்கைத்தலை நஞ்சமுண்டிட்டு
இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து *
தழைவாட வன்தாள் குருந்தம் ஒசித்துத்
தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான் *
குழையாட வல்லிக் குலமாட மாடே
குயில் கூவ நீடு கொடிமாடம் மல்கு *
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே ! 3.8.5 மணிமாடக் கோயில்
பண்ணேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச, வஞ்சப்
பகுவாய்க் கழுதுக் கிரங்காது * அவள்தன்
உண்ணாமுலை மற்றவளாவியோடும்
உடனே சுவைத்தானிடம் * ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக்
கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து *
மண்ணேந்து இளமேதிகள் வைகு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே ! 3.8.6 மணிமாடக் கோயில்
தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத்
தடம்புக்கு, அடங்கா விடங்கால் அரவம் *
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன்மேல்
அடிவைத்த அம்மானிடம் * மாமதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
செழுமுத்து வெண்ணெற்கெனச் சென்று * முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே ! 3.8.7 மணிமாடக் கோயில்
துளையார் கருமென்குழல் ஆய்ச்சியர்தம்
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் * முற்றா
இளையா விளையாட்டொடு, காதல் வெள்ளம்
விளைவித்த அம்மானிடம் * வேல் நெடுங்கண்
முளை வாளெயிற்று மடவார் பயிற்று
மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல் *
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே ! 3.8.8 மணிமாடக் கோயில்
விடையோடவென்று ஆய்ச்சி மென்தோள் நயந்த
விகிர்தா ! விளங்கு சுடராழியென்னும் *
படையோடு சங்கொன்று உடையாய் ! என நின்று
இமையோர் பரவுமிடம் * பைந்தடத்துப்
பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத்
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் *
மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே ! 3.8.9 மணிமாடக் கோயில்
வண்டார் பொழில் சூழ்ந்தழகாய நாங்கூர்
மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு * என்றும்
தொண்டாய தொல்சீர் வயல் மங்கையர் கோன்
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *
கண்டார் வணங்கக் களியானை மீதே
கடல் சூழுலகுக்கு ஒரு காவலராய் *
விண்தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ்
விரிநீருலகாண்டு விரும்புவரே. 3.8.10 மணிமாடக் கோயில்