திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஐந்தாம் திருவாய்மொழி
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற *
கைம்மாவுக்கு அருள்செய்த கார்முகில்போல் வண்ணன் கண்ணன் *
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் * கருமமென்? சொல்லீர் தண்கடல் வட்டத்துள்ளீரே! 3.5.1
தண்கடல் வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத் தடிந்துண்ணும் *
திண்கழற் காலசுரர்க்குத் தீங்கிழைக்கும் திருமாலைப் *
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழலாதார் *
மண்கொளுலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே. 3.5.2
மலையை யெடுத்துக் கல்மாரி காத்துப், பசு நிரை தன்னைத் *
தொலைவு தவிர்த்த பிரானைச், சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் *
தலையினோ டாதனம் தட்டத், தடுகுட்டமாய்ப் பறவாதார் *
அலைகொள் நரகத் தழுந்திக் கிடந்து உழைக்கின்ற, வம்பரே. 3.5.3
வம்பவிழ் கோதை பொருட்டா, மால்விடை யேழும் அடர்த்த *
செம்பவளத் திரள் வாயன், சிரீதரன் தொல் புகழ் பாடிக் *
கும்பிடு நட்டமிட்டாடிக், கோகு உகட்டு உண்டுழலாதார் *
தம் பிறப்பால் பயனென்னே? சாது சனங்களிடையே. 3.5.4
சாது சனத்தை நலியும், கஞ்சனைச் சாதிப்பதற்கு *
ஆதியஞ் சோதியுருவை, அங்கு வைத்து இங்குப் பிறந்த *
வேத முதல்வனைப் பாடி, வீதிகள் தோறும் துள்ளாதார் *
ஓதி யுணர்ந்தவர் முன்னா, என் சவிப்பார் மனிசரே? 3.5.5
மனிசரும் மற்றும் முற்றுமாய், மாயப் பிறவி பிறந்த *
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக் *
கனியைக் கரும்பினின் சாற்றைக், கட்டியைத் தேனை அமுதை *
முனிவின்றி யேத்திக் குனிப்பார், முழுதுணர் நீர்மையினாரே. 3.5.6
நீர்மையில் நூற்றுவர் வீய, ஐவர்க்கு அருள் செய்து நின்று *
பார் மல்கு சேனை யவித்த, பரஞ்சுடரை நினைந்தாடி *
நீர்மல்கு கண்ணினராகி, நெஞ்சம் குழைந்து நையாதே *
ஊன் மல்கி மோடு பருப்பார், உத்தமர்கட்கு என் செய்வாரே? 3.5.7
வார் புனலந் தண்ணருவி, வடதிரு வேங்கடத்தெந்தை *
பேர்பல சொல்லிப் பிதற்றிப், பித்தரென்றே பிறர் கூற *
ஊர்பல புக்கும் புகாதும், உலோகர் சிரிக்க நின்றாடி *
ஆர்வம் பெருகிக் குனிப்பார், அமரர் தொழப் படுவாரே. 3.5.8 திருவேங்கடம் திருப்பதி
அமரர் தொழப் படுவானை, அனைத்துலகுக்கும் பிரானை *
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து, அவன் தன்னோடு ஒன்றாக *
அமரத் துணிய வல்லார்களொழிய, அல்லாதவரெல்லாம் *
அமர நினைந்தெழுந்தாடி, அலற்றுவதே கருமமே. 3.5.9
கருமமும் கரும பலனுமாகிய, காரணன் தன்னைத் *
திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத், தேவ பிரானை *
ஒருமை மனத்தினுள் வைத்து, உள்ளம் குழைந்தெழுந்தாடிப் *
பெருமையும் நாணும் தவிர்ந்து, பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே. 3.5.10
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல *
ஆர்ந்த புகழச்சுதனை, அமரர் பிரானை எம்மானை *
வாய்ந்த வளவயல் சூழ், தண் வளங் குருகூர்ச் சடகோபன் *
நேர்ந்த ஓராயிரத்து இப்பத்து, அருவினை நீறு செய்யுமே. 3.5.11