பெரிய திருமொழி
ஐந்தாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
கையிலங்காழி சங்கன், கருமுகில் திருநிறத்தன் *
பொய்யிலன் மெய்யன், தன்தாளடைவரேல் அடிமை யாக்கும் *
செய்யலர் கமலமோங்கு, செறிபொழில் தென் திருப்பேர் *
பையரவணையான், நாமம் பரவி நானுய்ந்தவாறே ! 5.9.1 திருப்பேர்நகர்
வங்கமார் கடல்களேழும், மலையும் வானகமும் மற்றும் *
அங்கண்மா ஞாலமெல்லாம், அமுது செய்துமிழ்ந்த எந்தை *
திங்கள் மாமுகிலணவு, செறிபொழில் தென் திருப்பேர் *
எங்கள் மால் இறைவன், நாமம் ஏத்தி நானுய்ந்தவாறே ! 5.9.2 திருப்பேர்நகர்
ஒருவனை உந்திப்பூமேல், ஓங்குவித்து ஆகந்தன்னால் *
ஒருவனைச் சாபம் நீக்கி, உம்பராளென்று விட்டான் *
பெருவரை மதிள்கள் சூழ்ந்த, பெருநகரரவணைமேல் *
கருவரை வண்ணன், தென்பேர் கருதி நானுய்ந்தவாறே ! 5.9.3 திருப்பேர்நகர்
ஊனமர் தலையொன்றேந்தி, உலகெலாம் திரியும் ஈசன் *
ஈனமர் சாபம் நீக்காயென்ன, ஒண்புனலை யீந்தான் *
தேனமர் பொழில்கள் சூழ்ந்த, செறிவயல் தென்திருப்பேர் *
வானவர் தலைவன், நாமம் வாழ்த்தி நானுய்ந்தவாறே ! 5.9.4 திருப்பேர்நகர்
வக்கரன் வாய் முன்கீண்ட மாயனே ! என்று வானோர்
புக்கு * அரண் தந்தருளா யென்னப், பொன்னாகத்தானை *
நக்கரி யுருவமாகி, நகம் கிளர்ந்திடந்துகந்த *
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன், தாளடைந்துய்ந்தேனே. 5.9.5 திருப்பேர்நகர்
விலங்கலால் கடலடைத்து, விளங்கிழை பொருட்டு வில்லால் *
இலங்கை மாநகர்க் கிறையவன், இருபது புயம் துணித்தான் *
நலங்கொள் நான்மறை வல்லார்கள், ஓத்தொலி ஏத்தக் கேட்டு *
மலங்கு பாய் வயல் திருப்பேர், மருவி நான் வாழ்ந்தவாறே ! 5.9.6 திருப்பேர்நகர்
வெண்ணெய் தானமுதுசெய்ய, வெகுண்டு மத்தாய்ச்சியோச்சிக் *
கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட, வெட்டென்றிருந்தான் *
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த, தென்திருப்பேருள் * வேலை
வண்ணனார், நாமம் நாளும் வாய் மொழிந்துய்ந்தவாறே ! 5.9.7 திருப்பேர்நகர்
அம்பொனாருலக மேழு மறிய, ஆய்ப்பாடி தன்னுள் *
கொம்பனார் பின்னை கோலம், கூடுதற்கு ஏறு கொன்றான் *
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த,தென் திருப்பேருள் * மேவும்
எம்பிரான் நாமம் நாளும், ஏத்தி நானுய்ந்தவாறே ! 5.9.8 திருப்பேர்நகர்,
திருவாய்ப்பாடி (கோகுலம்)
நால்வகை வேதம் ஐந்து வேள்வி, ஆறங்கம் வல்லார் *
மேலை வானவரில் மிக்க, வேதியர் ஆதிகாலம் *
சேலுகள் வயல் திருப்பேர், செங்கண் மாலோடும் வாழ்வார் *
சீலமா தவத்தர் சிந்தையாளி, என் சிந்தையானே. 5.9.9 திருப்பேர்நகர்
வண்டறை பொழில் திருப்பேர், வரியரவணையில் * பள்ளி
கொண்டுறைகின்ற மாலைக், கொடிமதிள் மாடமங்கை *
திண்திறல் தோள் கலியன், செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டு * இவை பாடியாடக், கூடுவர் நீள்விசும்பே. 5.9.10 திருப்பேர்நகர்