திருவாய்மொழி
பத்தாம் பத்து
ஆறாம் திருவாய்மொழி
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு * ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே *
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் *
மருளொழி நீ மடநெஞ்சே ! வாட்டாற்றான் அடி வணங்கே. 10.6.1 திருவாட்டாறு
வாட்டாற்றான் அடி வணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் *
கேட்டாயே மடநெஞ்சே ! கேசவன் எம்பெருமானைப் *
பாட்டாய பலபாடிப் பழ வினைகள் பற்றறுத்து *
நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே. 10.6.2 திருவாட்டாறு
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி *
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று *
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே *
எண்ணின வாறாகா இக் கருமங்கள் என்னெஞ்சே ! 10.6.3 திருவாட்டாறு
என்னெஞ்சத்துள் இருந்து இங்குஇருந்தமிழ் நூலிவைமொழிந்து *
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான் *
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காய் படை தொட்டான் *
நல்நெஞ்சே ! நம்பெருமான், நமக்கு அருள் தான் செய்வானே. 10.6.4 திருவாட்டாறு
வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே *
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே ! *
தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் * செழும் பறவை
தானேறித் திரிவான் அத்தாளிணை என் தலை மேலே. 10.6.5 திருவாட்டாறு
தலை மேல தாளிணைகள் தாமரைக் கண் என்னம்மான் *
நிலை பேரான் என்னெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான் *
மலைமாடத் தரவணை மேல் வாட்டாற்றான் * மதம் மிக்க
கொலை யானை மருப்பொசித்தான் குரை கழல்கள் குறுகினமே. 10.6.6 திருவாட்டாறு
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான் *
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன *
வரை குழுவு மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல் *
விரை குழுவு நறுந் துளவம் மெய்ந் நின்று கமழுமே. 10.6.7 திருவாட்டாறு
மெய்ந் நின்று கமழ் துளவ, விரை யேறு திருமுடியன் *
கைந்நின்ற சக்கரத்தன், கருதுமிடம் பொருது புனல் *
மைந்நின்ற வரை போலும், திருவுருவ வாட்டாற்றாற்கு *
எந்நன்றி செய்தேனா, என்னெஞ்சில் திகழ்வதுவே ? 10.6.8 திருவாட்டாறு
திகழ்கின்ற திருமார்பில், திருமங்கை தன்னோடும் *
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம், தண்வாட்டாறு *
புகழ்கின்ற புள்ளூர்தி, போரரக்கர் குலம் கெடுத்தான் *
இகழ்வின்றி என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே. 10.6.9 திருவாட்டாறு
பிரியாது ஆட்செய்யென்று, பிறப்பறுத்து ஆளறக் கொண்டான் *
அரியாகி, இரணியனை ஆகங் கீண்டான் அன்று *
பெரியார்க்கு ஆட்பட்டக்கால், பெறாத பயன் பெறுமாறு *
வரிவாள் வாயரவணை மேல், வாட்டாற்றான் காட்டினனே. 10.6.10 திருவாட்டாறு
காட்டித் தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த *
வாட்டாற்றெ ம்பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன் *
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள், இப்பத்தும்
கேட்டு * ஆரார் வானவர்கள், செவிக்கினிய செஞ்சொல்லே. 10.6.11 திருவாட்டாறு