திருவாய்மொழி
ஒன்பதாம் பத்து
எட்டாம் திருவாய்மொழி
அறுக்கும் வினையாயின, ஆகத்து அவனை *
நிறுத்தும் மனத்தொன்றிய, சிந்தையினார்க்கு *
வெறித்தண் மலர்ச் சோலைகள் சூழ், திருநாவாய் *
குறுக்கும் வகை யுண்டு கொலோ ? கொடியேற்கே! 9.8.1 திருநாவாய்
கொடியேரிடைக், கோகனகத்தவள் கேள்வன் *
வடிவேல் தடங்கண், மடப்பின்னை மணாளன் *
நெடியானுறை சோலைகள் சூழ், திருநாவாய் *
அடியேன் அணுகப் பெறு நாள், எவை கொலோ ? 9.8.2 திருநாவாய்
எவை கொல் அணுகப் பெறு நாள் ? என்று எப்போதும் *
கவையில் மனமின்றிக், கண்ணீர்கள் கலுழ்வன் *
நவையில் திருநாரணன் சேர், திருநாவாய் *
அவையுள் புகலாவது, ஓர் நாள் அறியேனே. 9.8.3 திருநாவாய்
நாளேலறியேன், எனக்குள்ளன, நானும் *
மீளா அடிமைப் பணி, செய்யப் புகுந்தேன் *
நீளார் மலர்ச் சோலைகள் சூழ், திருநாவாய் *
வாளேய் தடங்கண், மடப்பின்னை மணாளா ! 9.8.4 திருநாவாய்
மணாளன், மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் *
கண்ணாளன், உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம் *
விண்ணாளன் விரும்பியுறையும், திருநாவாய் *
கண்ணாரக் களிக்கின்றது, இங்கு என்று கொல் கண்டே ? 9.8.5 திருநாவாய்
கண்டே களிக்கின்றது, இங்கு என்று கொல்? கண்கள் *
தொண்டே உனக்காய் ஒழிந்தேன், துரிசின்றி *
வண்டார் மலர்ச் சோலைகள் சூழ், திருநாவாய் *
கொண்டே உறைகின்ற, எங்கோவலர் கோவே ! 9.8.6 திருநாவாய்
கோவாகிய மாவலியை நிலங் கொண்டாய் ! *
தேவாசுரம் செற்றவனே திருமாலே ! *
நாவா யுறைகின்ற, என் நாரண நம்பீ ! *
ஆவா ! அடியான் இவனென்று, அருளாயே. 9.8.7 திருநாவாய்
அருளா தொழிவாய், அருள் செய்து * அடியேனைப்
பொருளாக்கி, உன் பொன்னடிக் கீழ்ப்புக வைப்பாய் *
மருளே யின்றி, உன்னை என் நெஞ்சத்து இருத்தும் *
தெருளே தரு, தென் திருநாவா யென் தேவே. 9.8.8 திருநாவாய்
தேவர் முனிவர்க்கு, என்றும் காண்டற்கரியன் *
மூவர் முதல்வன், ஒரு மூவுலகாளி *
தேவன் விரும்பி யுறையும், திருநாவாய் *
யாவர் அணுகப் பெறுவார் ? இனி யந்தோ ! 9.8.9 திருநாவாய்
அந்தோ ! அணுகப் பெறு நாள் என்று, எப்போதும் *
சிந்தை கலங்கித், திருமால் ! என்றழைப்பன் *
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ், திருநாவாய் *
வந்தே யுறைகின்ற, எம் மாமணி வண்ணா ! 9.8.10 திருநாவாய்
வண்ணம் மணிமாட, நல்நாவா யுள்ளானைத் *
திண்ணம் மதிள், தென் குருகூர்ச் சடகோபன் *
பண்ணார் தமிழ், ஆயிரத்து இப்பத்தும் வல்லார் *
மண்ணாண்டு மணம் கமழ்வர், மல்லிகையே. 9.8.11 திருநாவாய்